in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 10) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9

இதுவரை :

ஆராதனா சஞ்சீவ் இருவரும் தங்கள் காதலைச் சொல்லிவிட்டார்கள். இனி வீட்டில் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்வார்களா? காதல் கைகூடியதா? ஏன் பிரிந்தார்கள்? பார்க்கலாம்.

இனி:

காதல் வந்துவிட்டால் காண்பதெல்லாம் அழகாகத் தோன்றும். மனம் நிறைந்தவர் சொல்வதெல்லாம் ரசிக்கத் தோன்றும். நமக்குப் பிடிக்காததை அவர்கள் சொன்னால்கூட, அதை ஏற்றுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ளலாம் என்று கற்பனை செய்யத் தோன்றும்.

அறிவுரை சொல்பவர்கள் மேல் கோபம் வரும். காதலுக்கு குறுக்கே யாராவது வந்தால் அழுகை வரும். மொத்தத்தில் காதல் மட்டுமே உலகம், அதில் இன்ப நதி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் என்ற மாயையில் திளைக்கத் தோன்றும்.

காதல் மனதுக்குள் புகுந்ததிலிருந்து தன்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை ஆராதனாவால் உணர முடிந்தது. எப்போதும் எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாத ஆராதனா, சஞ்சீவுக்காக சில விஷயங்களில் தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்தாள்.

சஞ்சீவைப் பொறுத்தவரை தன் கருத்துகளை யார் மீதும் திணிக்க மாட்டான். அதனால் ஆராதனாவை அவன் எந்த விஷயத்திலும் கட்டாயப் படுத்தவில்லை. ஆராதனாவுக்கு அதுவே மிகவும் பிடித்திருந்தது.

அதேபோல் சஞ்சீவ் மிகவும் அக்கறையுடன் சொல்லும் சில விஷயங்களை ஆராதனா மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாள். இது சஞ்சீவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படி இருவரும் மற்றவரிடம் உள்ள நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிய முடியாது என்னும் அளவுக்கு காதலுடன் இருந்தனர்.

ஆராதனாவிற்கு இதற்குமேல் தன் பெற்றோர்களிடம் காதலைச் சொல்லாமல் மறைப்பதில் இஷ்டமில்லை. அதனால் வார இறுதியில் தன்னைப் பார்க்க வந்த அப்பா அம்மாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

அவளின் பயமெல்லாம் அம்மா கோபத்தில் ஏதாவது சொல்லி விடக்கூடாது என்பதுதான். அப்பா கண்டிப்பாகத் தன் ஆசைக்குக் குறுக்கே நிற்க மாட்டார் என்று மிகவும் உறுதியாக நம்பினாள்.

“அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.”

“சொல்லுமா, என்ன விஷயம்?”

“அப்பா, எனக்குப் பிடிச்சதை நீங்க வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க இல்ல.”

“நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு மா. அப்புறம் பார்க்கலாம்.”

“இல்லப்பா, நான் சஞ்சீவ்னு ஒருத்தரை விரும்பறேன் பா. எங்க ஆஃபீஸ் இருக்கற அதே பில்டிங்லதான் அவர் வேலை பார்க்கற ஆஃபீசும் இருக்கு. அங்கே பார்த்து, பேசி, பழகினதுல எனக்கு அவரை ரொம்பப் புடிச்சிருக்கு பா.”

“என்ன ஆராதனா, போன தடவை வந்தப்போகூட சொல்லலையே?”

“அம்மா, நீ கொஞ்சம் பேசாம இரு மா. நான் அப்பாகிட்டதான் பேசிட்டிருக்கேன்.”

“ஏம்மா ஆராதனா, சின்ன வயசுல இருந்து உனக்கு என்ன வேணும்னு எல்லாம் நான்தானே பார்த்துப் பார்த்து பண்ணிட்டிருக்கேன். நீ கேட்காமலேயே நான் செய்யறேனே மா. அப்போ உன் வாழ்க்கையை நான் நல்லவிதமா அமைச்சுத் தரமாட்டேனா? நீயா அவசரப்பட்டு வாழ்க்கையைத் தேடிட்டிருக்கியே?”

“இல்லப்பா, சஞ்சீவைப் புடிச்சிருக்கு. அதுதான் நான் உங்ககிட்ட சொல்லிட்டேனே. உங்களுக்குத் தெரியாம நான் வேற ஏதும் செய்யலையே.”

“இன்னும் என்ன செய்யணும்? ஒரே பொண்ணாச்சேன்னு செல்லமா வளர்த்ததுக்கு இப்படி முதுகுல குத்திட்டியே.”

“என்னப்பா, இப்படிப் பேசறீங்க? நீங்க என்கிட்ட கோவமா பேசினதே இல்லையே பா. எனக்குப் பிடிச்சதெல்லாம் நீங்க செஞ்சிருக்கீங்களே பா. அதே மாதிரிதானே இதுவும்.”

“அதுவும் இதுவும் ஒண்ணா ஆராதனா? இது வாழ்க்கை. உனக்குப் பிடிச்ச பொருளை எல்லாம் நீ கேட்காமலேயே வாங்கிக் கொடுத்தேன். அது சரியில்லைன்னா தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கிக்கலாம். இது அப்படி இல்லையே.”

“ஏம்பா, எடுத்த உடனேயே சரியில்லைன்னு நினைக்கறீங்க. ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போனதாலத்தானே விரும்பறோம்.”

“மனசு ஒத்துப் போனால் போதுமா ஆராதனா? அந்தப் பையன் எப்படி? அவங்க குடும்பப் பின்னணி என்ன? அந்தஸ்து என்ன? நம்ம குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் ஒத்துவருமா? உன்னோட வாழ்க்கைல எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்குமா? உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்களா? உன்னோட எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்யற அளவுக்கு அவங்களுக்கு பக்குவம் இருக்கா? இதெல்லாம் ஒத்து வரணும் இல்லையா?

நீ வெறுமனே அந்தப் பையனைப் பார்த்து, பேசினதும் புடிச்சுப் போனதால வாழ்க்கை இவன் கூடத்தான்னு முடிவு பண்ணியிருப்பே. அவங்க வீட்டுல எப்படி, என்னன்னு விவரம் தெரியுமா?”

“டீசன்ட் ஃபேமிலிதான் பா. என்னப்பா நீங்க, என்னை இன்னும் எதுவுமே தெரியாத சின்னக் குழந்தை மாதிரி நினைச்சு ட்ரீட் பண்றீங்க. இது என் வாழ்க்கை பா. நானும் சஞ்சீவும்தான் சேர்ந்து வாழப் போறோம்.

அவங்க குடும்பப் பின்னணி, அந்தஸ்து எப்படி, வீட்ல இருக்கற ஒவ்வொருத்தரும் எப்படினு இதெல்லாம் பார்த்துட்டு லவ் வராது பா.

நானும் சம்பாதிக்கறேன், சஞ்சீவும் சம்பாதிக்கறார், எங்க வாழ்க்கையை எங்களால பாத்துக்க முடியும் பா. ரெண்டு குடும்பத்துப் பெரியவங்களும் எங்க மனசைப் புரிஞ்சுகிட்டு, எங்களை சேர்த்து வச்சாப் போதும்.”

“அப்படின்னா நீ எங்ககிட்ட தகவல் சொல்றே, அனுமதி கேக்கல, அப்படித்தானே? யூ ஆர் கிவிங்க் இன்ஃபர்மேஷன், நாட் ஆஸ்கிங்க் பர்மிஷன். அப்பா மேல ரொம்பப் பாசம், அப்பா எல்லாம் பார்த்துப் பார்த்து பண்ணுவாரு அப்படின்னு சொன்னதெல்லாம் போச்சு, அப்படித்தானே ஆராதனா? இப்போ நீ வளர்ந்துட்டே. உன்னோட தேவையை நீயே முடிவு பண்ற அளவுக்கு வளர்ந்துட்டே. அப்பா தேவையில்லை உனக்கு, அப்படித்தானே?”

“அப்பா, ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? நான் என்ன திருட்டுக் கல்யாணம் செஞ்சுட்டு உங்ககிட்ட வந்து சொல்றேனா? புடிச்சிருக்குன்னு உங்ககிட்ட சொல்றேன். உங்களுக்கும், அம்மாவுக்கும் தெரியாம வேற எதுவும் பண்ணலையே.”

“மறுபடியும் மறுபடியும் அதையே பேசாதே ஆராதனா. இதுக்கு மேல என்ன பண்ணணும்? ஒரு பொண்ணோட வாழ்க்கைல முக்கியமான கட்டம் இது. அதுல முடிவு எடுக்கற உரிமை எங்களுக்கு இல்லை. நீயா முடிவு எடுத்துட்டே. இதுக்கு மேல என்ன பேசறதுக்கு இருக்கு.

ஆனா எனக்கு வருத்தம்தான். நீ என்ன வேணா சமாதானம் சொல்லு, என்னால இந்த அடியை சாதாரணமா எடுத்துக்க முடியாது. சரி, அந்தப் பையனோட அட்ரஸ் கொடு. அவங்க வீட்டுல பார்த்து பேசணும். அப்புறம் உன் தலையெழுத்து எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும்.”

“என்னங்க நீங்க, அவ மனசுல இருக்கற ஆசையை சொல்றா. பேசிப் பார்த்துட்டு, ஒத்து வருமா என்னன்னு முடிவெடுக்கறதை விட்டுட்டு, இப்படி அபசகுனமா வார்த்தைகளை விட்டுட்டே இருக்கீங்க. நம்ம பொண்ணு நல்லாயிருக்க வேண்டாமா?”

“நல்லா இருக்கணும். அதுக்குத்தான் நான் இவ்ளோ பேசறேன். அவளுக்கு நல்லது பண்றதுக்கு எனக்குத் தெரியாதா?”

“அப்பாகிட்ட என்ன கேட்டாலும் கிடைக்கும்ங்கற நம்பிக்கையை அவளுக்கு விதைச்சது நீங்கதானே? இப்போ திடீர்னு மாட்டேன்னு சொன்னா எப்படி?”

“என்ன, இதுதான் சமயம்னு குத்திக் காட்டறியா?”

“குத்திக் காட்டல, உண்மையைச் சொன்னேன். தேவையில்லாம ஆராதனா மனசை நோகடிக்காதீங்க. வரன் நாம பார்த்தா என்ன, அவளாத் தேடிகிட்டா என்ன, அவ வாழ்க்கை நல்லா இருந்தாப் போதும். அவ தவிக்கறதை என்னால தாங்கிக்க முடியல.”

“என்ன சரோ, பொண்ணு தவிக்கறது பெருசாத் தெரியுதா உனக்கு? என் மனசு என்ன பாடுபடும்னு யோசிக்கவே இல்லையில்ல.”

“இப்போ யாரோட தவிப்பு பெருசுன்னு பார்க்கற நேரமில்ல. இவ்வளவு வருஷம் அவளைக் கலங்காம பார்த்துகிட்டோம். இப்போ அவளை அழ வச்சு வேடிக்கை பார்க்க வேண்டாம். முதல்ல அவங்க வீட்ல போய் பேசிப் பாருங்க. நல்ல இடமா இருந்தா கல்யாணத்தை முடிச்சு விடலாம். நல்லபடியா இருக்கட்டும்.”

“வேற வழி, இப்படி என் மூஞ்சில கரியைப் பூசிட்டாளே.”

அப்பா தன்னிடம் முதல்முறையாக இவ்வளவு கடினமாகப் பேசியதால், ஆராதனா நிலைகுலைந்து போனாள். தன் அறைக்குள் சென்று துக்கம் தாளாமல் அழுதாள். எவ்வளவு நேரம் அழுதிருப்பாள் என்றே தெரியாது.

எப்போதும் கொஞ்சம் கண் கலங்கினால்கூட ஆறுதலாய் தலையைத் தடவி சமாதானம் சொல்லும் அப்பா, இப்போது வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. அப்பா தன்னை ஒதுக்குகிறார் என்பது புரிந்து, அழுகை இன்னும் அதிகமானது.

அம்மாதான் வந்து, அருகில் உட்கார்ந்து அவளைத் தேற்றினார்.

“ஆராதனா, இப்போ எதுக்கு அழுதுகிட்டே இருக்கே? பரவாயில்ல விடு, நீ பெரிய தப்பு எதுவும் பண்ணலையே. உனக்கு மனசுக்குப் பிடிச்சிருக்குனு சொல்றே. அவங்க வீட்ல பேசிப் பார்க்கலாம். நமக்கெல்லாம் ஒத்து வந்தா மேற்கொண்டு அடுத்த நடவடிக்கை எடுக்கலாம். நீ திடீர்னு இப்படிச் சொன்ன அதிர்ச்சில அப்பா கோவத்துல பேசறார். ஆனா அப்பா வேண்டாம்னு சொல்லலை இல்ல….

அவங்க வீட்டுல போய் பேசறேன்னு சொல்லியிருக்காரே. அதனால நீ ரொம்ப மனசைப் போட்டு குழப்பிக்காதே. உனக்கு அங்கேதான்னு முடிச்சு போட்டிருந்தா கண்டிப்பா எல்லாம் சுபமாக முடியும். இப்படி அழுதுட்டே இருந்தா தலைவலிதான் வரும்.”

ஆறூதலாக தலைகோதிய அம்மாவின் மடியில் சாய்ந்து, தன் மன சஞ்சலம் தீரும்வரை அழுது ஓய்ந்தாள் ஆராதனா.

ஆனாலும், தன்மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த தன் செல்ல மகளை, தனக்கு எதிராகவே பேசும் அளவுக்கு அவள் மனதைக் கரைத்த முகம் தெரியாத சஞ்சீவின் மேல் ஆற்ற முடியாத கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது மதனகோபால் மனதில்.

ஆராதனாவின் நிலை இப்படியிருக்க, சஞ்சீவ் தன் வீட்டிலும் தன் காதல் விவகாரத்தை மெதுவாக, பயத்துடன் சொன்னான். அப்பா கோபப்படவில்லை, ஆனால் அம்மா அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.

“என்னடா, இப்படி திடீர்னு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி என் தலைல போடறே? உனக்கு ஒரு நல்ல பொண்ணை நான் தேடி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேனா?”

“பானு… விடு, எதுக்கு அழறே? அவன் ஒண்ணும் நமக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலியே. மனசுக்குப் புடிச்சிருக்குன்னு சொல்றான். அவங்க வீட்டுல பேசிப் பார்க்கலாம். பொண்ணு நல்ல மாதிரியா இருந்தா கல்யாணம் பண்ணலாம். நமக்கு வரன் தேடற வேலை மிச்சம் தானே…”

“ஒரு பொறுப்பான அப்பா மாதிரியா பேசறீங்க? பையன் ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொல்றான். அவனை நறுக்னு நாலு கேள்வி கேட்காம, கல்யாணம் வரைக்கும் யோசிக்கறீங்க.”

“இதப் பாரு பானு, இப்போ இருக்கற பசங்க வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிட்டு, தனியா குடும்பமே நடத்தறாங்க. நம்ம பையன் நம்ம மேல மரியாதை வச்சு, எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, பார்த்து கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்றான் இல்ல, அந்த அளவுக்கு சந்தோஷம்னு நெனச்சுக்கோ.”

ஆனால் என்ன சமாதானம் செய்தும் பானுமதி அமைதியடையவே இல்லை. கத்தி அழுது, ஆர்பாட்டம் செய்தபடி இருந்தார். சங்கவிக்குத் தகவல் தெரியவே, ஊரிலிருந்து சங்கவி கிளம்பி வந்து, அவளும் சேர்ந்து பேசி அம்மாவுக்குப் புரிய வைத்தாள். கலங்கி நின்ற சஞ்சீவையும் தேற்றினாள்.

“சஞ்சீவ், நீ கவலைப்படாதே. எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ அவ்வளவு சீக்கிரம் இந்த மாதிரி எல்லாம் ஆசைப்பட மாட்டே. உன் மனசுக்குப் புடிச்சிருக்குன்னா, கண்டிப்பா அந்தப் பொண்ணு நல்ல பொண்ணாத்தான் இருக்கணும். வாழப் போறது நீ, உனக்குப் புடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தப்பே கிடையாது.

அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்றதுல நீ கலங்கிப் போகாதே. நான் இருக்கேன் உனக்கு சப்போர்ட்டுக்கு. அம்மாவை மெதுவா பேசி சமாதானம் பண்ணிடலாம்.”

ராகவனும், சங்கவியும் மாறிமாறிப் பேசி, பானுமதியை சமாதானம் செய்து, சஞ்சீவ் காதல் விவகாரத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தார்கள்.

ஆனாலும் பானுமதியின் அடிமனதில், தன் மகனை தன்னிடமிருந்து பிரித்த அந்த முகம் தெரியாத பெண்ணின் மேல் கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது.

காதலைச் சொன்னதற்கு இப்படி இரண்டு வீட்டிலும் அமைதி குலைந்தது என்றால், கல்யாணம் எப்படி நடந்திருக்கும்? மண வாழ்க்கை இனிமையாக இருந்ததா?????

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. Nan startingla irundhu indha kadhaya padichutu varen.sema super a iruku.kadhaya romba interesting a k sollitu vareenga.adhuvum Aaradhanavum Sanjeevum kalyana mandapathula meet pandra scene agattum,shopping complex munna Aaradhana wait pandra scene agattum.apdiye kannu munna vandhu poguthu.continue pannunga.I Wish you very all the best

விதியின் விளையாட்டு (சிறுகதை) – சத்தியபானு

உணர்ச்சிப் போராட்டம் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.