in ,

காத்திருந்த வாழை மரம் – (சிறுகதை) முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     “கீர்த்தனா பொறந்த நாள்ல இருந்து… இன்னிக்கு வரைக்கும், “பொண்ணு பொறந்திருச்சு… அவ கல்யாணத்துக்கு காசு பணம் சேர்த்து வைக்கணுமே?”ன்னு அவளுக்காக ஒரு ஐம்பது பவுன் நகைகளையும், அஞ்சு லட்சம் ரொக்கத்தையும் ரெடியா வெச்சுக்கிட்டு காத்திட்டிருக்கிறேன் அக்கா… ஆண்டவன்தான் கண் திறக்கவே மாட்டேங்கறான்” அதீத சலிப்பும், களைப்பும் சுந்தரத்தின் பேச்சில் தெரிந்தது.

      தம்பியின் சோக வார்த்தைகள் அக்காவின் மனதை வருத்தினாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ”நானும் சொந்தக்காரங்க கிட்டயெல்லாம்… “என் தம்பி பொண்ணு கீர்த்தனாவைத்தான் என் மகன் முருகேசனுக்குக் கட்டி வைக்கப் போறேன்!”னு சொல்லிட்டுத் திரிஞ்சேன்!… ஹும்… எனக்குக் கொடுத்து வைக்கலை உன் மகளை மருமகளா அடையறதுக்கு… இருபத்தியொம்பது  வயசாகியும் இந்தப் பாவிப் பொண்ணு சமையலை!.. இப்ப என் பையனுக்கு கல்யாணமாகி… ரெண்டு குழந்தைகள்!” சுந்தரத்தின் அக்கா தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினாள்.

      “என்னக்கா பண்றது?… எத்தனையோ டாக்டர்கிட்டக் காட்டியாச்சு!… ஒண்ணும் பிரயோஜனமில்லை!… கடைசில அந்த முருகன் மேல் பாரத்தை போட்டுட்டு  ‘அக்கடா’ன்னு உக்காந்துட்டேன்!”

      அடுத்த அறையிலிருந்து இந்த சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்களில் குற்றாலம்.

      “தெய்வமே!… நான் என்ன பாவம் செய்தேன்?… என்னை ஏன் மலராத மொட்டாகவே வைத்திருக்கின்றாய்?… என் கண்ணு முன்னாடி பொறந்த பொண்ணுகளெல்லாம் பன்னெண்டு… பதிமூணு  வயசுல பூப்படைஞ்சு… பதினெட்டு வயசுக்குள்ளார… கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு… பிள்ளையையும் பெத்துப் போட்டுட்டாங்க… நான்தான் இருபத்தியெட்டாகியும்… இன்னமும் மலராமல் இருக்கேன்!”.

      கண்ணீரை துடைத்தபடியே ஜன்னல் அருகே சென்று வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் கீர்த்தனா.

      “டேய் மாரி!… இந்த வாழை மரத்தை வெட்டித் தள்ளிடுடா” ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

       “இருக்கட்டும் ஐயா!… இன்னும் பத்து பதினைந்து நாள் பார்ப்போம்” கூலியாள் மாரி  அந்தப் பச்சை வாழை மீது பரிதாபப்பட்டான்.

       “இன்னும் என்ன பாக்குறது?… இத்தனை உயரம் வளர்ந்து என்ன பிரயோஜனம்?…ஒரு பூ விட்டுச்சா?… கொலை தள்ளிச்சா?… ஒரு எழவும் கிடையாது!… வறட்டு மரம்….  வறட்டு மரம்”.

       “ஐயா… ஒண்ணு… ரெண்டு… மரங்க அப்படி ஆகுறது உண்டு… ஆனா கொஞ்ச நாள் கழிச்சு திடீர்னு பூ விட ஆரம்பிச்சிடுங்க ஐயா” என்றான் மாரி.

      கீர்த்தனா அந்த வாழை மரத்தைப் பார்த்து விரக்தியுடன் சிரித்தாள்.  “அதுவும் என்னைப் போலத்தான் போலிருக்கு” சட்டென்று வேகமாய் வெளியே சென்று பக்கத்து வீட்டுப் பெரியவரிடம், “ஐயா பச்சை மரத்தை வெட்டாதீங்கய்யா… அது பாவம்ங்கய்யா!… கொஞ்ச நாள் விட்டுப் பாருங்க கண்டிப்பா அதுவும் குலை தள்ளிடும்” கெஞ்சினாள்.

       “என்னம்மா நீ?… இந்தக் கிறுக்கு பயல்தான்… இந்த வேலைக்காகாத மரத்துக்கு பரிஞ்சு பேசுறான்னா… நீயும் இவன் கூட சேர்ந்துட்டு பேசுறியே?” என்று சொல்லி விட்டு,  “சரி.. சரி… மாரி… விட்டுடுப்பா… ரெண்டு மூணு வாரம் கழிச்சு வெட்டிடலாம்” என்றார்.

      அவருக்கு நன்றி சொல்லி விட்டு நகர்ந்தாள் கீர்த்தனா.

       மதியம் ரெண்டு மணி வாக்கில், பக்கத்து வீட்டு பார்கவி அறைக்குள் நுழைந்தாள்.

      “வாம்மா பார்கவி…?” சிரித்தபடி வரவேற்ற கீர்த்தனா வாடிப் போயிருந்த அவள் முகத்தை கண்டதும்,  “என்ன பார்கவி.. ஏன் முகம் மாதிரியா இருக்கு?.. ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

      அவள் அமைதி காக்க, தன்னை விட பதினோரு வயது இளையவளான பார்கவியின் தோளைத் தொட்டு உலுக்கி,  “இப்பச் சொல்லப் போறியா?… இல்லையா?” கண்டிப்புக் குரலில் கேட்டாள் கீர்த்தனா.

      “வந்து… நாலு நாளைக்கு முன்னாடி என்னை வந்து பெண் பார்த்துட்டு போனாங்க!… மாப்பிள்ளைக்கும் என்னை பிடிச்சுப் போச்சு!… எனக்கும் அவரைப் பிடிச்சுப் போச்சு!… ஆனா… தேதி குறிக்கிற வரைக்கும். போயி… பத்துப் பவுன் தங்கம் குறைவாக இருக்கிறதுனால நின்னு போச்சுக்கா” கண்களில் நீர் முட்டியது பார்கவிக்கு.

      “அடப் பாவமே!… ” கீர்த்தனா அங்கலாய்த்தாள்.

      “அவங்க கண்டிப்பா ஐம்பது பவுன் வேணும்கறாங்க!… நாப்பது பவுன் அப்பா ரெடி பண்ணிட்டார்!… பத்து பவுன் தேற்ற முடியாமல் நொந்து போய்க் கிடக்கார்!”

      “அட.. ஆண்டவா!.. இது என்ன விளையாட்டு?… இருபத்தியெட்டு வயசாகியும் பருவமடையாத எனக்காக அம்பது பவுன் நகைகள் பீரோவுக்குள்ள காத்திட்டிருக்கு!.. என் கண்ணுக்கு முன்னாடி பிறந்த இந்தப் பார்கவிக்கு பருவம் வந்தும்… பவுன் போறாததால கல்யாண மார்க்கெட்டில் விற்பனை ஆகாமல் தவிக்கிறா!… இது என்ன விந்தை?…” யோசித்தாள்.

     “அப்பா சேர்த்து வெச்சிருக்கிற அந்த நகைகள் ஏன் எனக்காக காத்திருக்கணும்?… இதோ இவளுக்காவது உபயோகமா இருக்கட்டுமே?” என்று மனதிற்கு தீர்மானித்துக் கொண்டு,  “கொஞ்சம் பொறு பார்கவி” என்று கூறி விட்டு வேக வேகமாக அப்பாவின் அறைக்குச் சென்று, பீரோவைத் திறந்து லாக்கரில் உறங்கிக் கொண்டிருந்த நகைகளின் ஒரு சிலதை மட்டும் எடுத்து வந்தாள் கீர்த்தனா.

      “பார்கவி… இது கிட்டத்தட்ட 10 பவுனுக்கு மேலேயே தேறும்.. எடுத்துக்கிட்டு போய்… உங்க அப்பா கிட்டக் கொடுத்து சீக்கிரமே கல்யாணத் தேதி குறிச்சிட்டு… வேலையை ஆரம்பிக்கச் சொல்லு” என்றாள் கண்டிப்புக் குரலில்.

      ”வேண்டாம்க்கா!… உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்!… நான் மாட்டேன்!… அதே மாதிரி இதை வாங்கிட்டுப் போனா… எங்க அப்பாவும் என்னைக் கொன்னே போட்டுடுவார்!” பயந்து போய் இரண்டடி பின் வாங்கினாள் பார்கவி.

      “இல்லை பார்கவி… இதை உதவியாய்த்தான் நான் செய்யறேன்!… எங்க அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன்.. உங்க அப்பா கிட்டேயும்… நானே பேசறேன்!… எப்படியாவது கல்யாணத்தை நடத்தியே ஆகணுமில்லையா?”

      “ஆமாம்… ஆமாம்” என்று தலையாட்டிய பார்கவி அதற்கு மேல் பேசாமல் நகைகளுடன் வெளியேறினாள்.

      மாலை வீடு திரும்பிய தந்தையிடம் அந்த நகை விஷயத்தை கீர்த்தனா சொல்ல, “அம்மாடி… உன்னோட நல்ல மனசு யாருக்கும் வராதும்மா?… கல்யாணமும்… இல்லறமும் உனக்குக் கனவாய்ப் போனாலும்… அந்தச் சின்ன பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு உன்னோட நகைகளை வாரிக் கொடுத்தியே… அது பெரிய விஷயம் அம்மா!… சத்தியமா… எனக்குக் கூட இது தோணாதும்மா!… உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குதும்மா” நெகிழ்ந்து போய்ச் சொன்னார் அவர். அவரிடமிருந்து கோபத்தையும், திட்டுக்களையும் எதிர்பார்த்திருந்து பயந்து கொண்டிருந்த கீர்த்தனாவுக்கு,  “அப்பாடா…” என்றிருந்தது.

     “அப்பா… ஒரு மொக்கு அர்ச்சனைப் பூவாக மாற ஆசைப்படக் கூடாதுப்பா!… அதே மாதிரி மலர்ந்து பூவானதும்… அர்ச்சனையில் சேராமல் இருக்கக்கூடாதுப்பா!… தெய்வத்தோட பூஜைக்கு தகுதி பெற்றிருக்கிற அந்த மலரை… ஏதோவொரு சின்னக் காரணத்துக்காக மூலையில் எறிந்து விடலாமாப்பா?” விரக்தியுடன் தத்துவம் பேசிய மகளைப் பார்த்து பெருமிதம் கொண்ட அவள் தந்தை வெளியில் புன்னகைத்தாலும், உள்ளுக்குள் சிறிய வேதனையையும் அனுபவித்தார்.

     இரு தினங்களுக்குப் பிறகு,  “அம்மாடி கீர்த்தனா… உன்னோட இரக்க குணத்தினாலே அந்தப் பார்கவிப் பொண்ணுக்கு வர்ற வைகாசி இருபத்திநாலாம் தேதி கல்யாணம்னு நிச்சயமாயிடுச்சும்மா”

     “அப்பாடா… இப்பதான்ப்பா எனக்கு மனசு நிம்மதியா இருக்கு” என்றாள் கீர்த்தனா.

     “பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்” எஸ்.பி.பாலசுப்ரமணியம் பயணங்கள் முடிவதில்லைக்காக குரல் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் வானொலியில்.

     பாடலை ரசித்தவாறே ஜன்னல் அருகே வந்து நின்று கீர்த்தனாவின் கவனத்தை ஈர்த்தது அந்த விஷயம்.

      “அட… இந்த வாழை மரம் குலை விடத் தொடங்கிடுச்சு போலிருக்கே?” கூர்ந்து கவனித்தாள்.  ஆம் ஆரம்பக் குலை லேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

     மனம் சந்தோஷத்தில் துள்ள, அந்தப் பக்கத்து வீட்டு பெரியவரைக் கூட்டி வந்து அதைக் காட்டணும் என்று நினைத்தபடியே வேகமாய் வெளியே வந்தவளுக்கு அடிவயிற்றில் திடீரென்று அந்த அசுரவலி ஏற்பட்டது.

     “அ…ம்…மா” என்று கத்தியபடியே வாசற்படியிலேயே அமர்ந்து விட்டாள்.

     “என்ன ஆச்சுடி?” பதட்டத்துடன் ஓடி வந்த கீர்த்தனாவின் அம்மா முகத்தில் சற்று நேரத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

      அன்று வைகாசி இருபத்திரெண்டு அடுத்தடுத்து இரண்டு வீடுகளிலும் பச்சைத் தென்னை ஓலைகள் வாசலில் காத்துக் கிடந்தன அடுத்த நாளைய விசேஷத்திற்காக.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஞானோதயம் – (சிறுகதை) முகில் தினகரன்

    ஆகாயத்தில்… (அத்தியாயம் 1) – இரஜகை நிலவன்