in ,

காசித்துண்டு ❤ (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

                             மும்பை குர்லா பாந்ரா காம்ப்ளெக்ஸ் பரபரப்பான பகுதி.

                             அதுல அந்த கவர்ண்மென்ட் குவார்டர்ஸ் மிகப் பெரிய குடியிருப்பு

                             மத்ய அரசு அதிகாரிகளுக்காக ஒதுக்கப் பட்ட வசதியான ஃபிளாட்டுகள். அதில் C-31 ல்தான் நம்ம ரகுராமன் குடும்பம் குடியிருந்தது.

                             அதென்ன நம்ம ரகுராமன் ,அதானே யோசிக்கிறீங்க?

                             இவர் குடும்பத்தில சிலரை நீங்க சில வருஷங்களுக்கு முன்னால் சந்திச்சிருக்கீங்க, அதான் அப்படி சொன்னேன்.

                            யாருன்னு தெரியணுமா? சொல்றேன்…கோவிலை ஒட்டின அந்த கம்பி தடுப்பு போட்ட வீடு, அந்த கம்பிகளை பிடித்துக் கொண்டு மழையை வேடிக்கை பாக்கற மாதிரி ,என்னை கேலிப் புன்னகையோடு பார்க்கும் அந்தப் பெண்.சுமின்ற சுமலதா, அவ பாட்டி, ஞாபகம் இருக்கா?

                            மதுரைல இருந்து டிரான்ஸ்பர்ல போன சுமியோட அப்பா ரகுராமன் ஜெய்பூர்ல நாலு வருஷம், இப்ப நாலு வருஷமா மும்பைக்கு புரொமோஷன்ல வந்திருக்கார். சுமி இப்ப ஒரு ஸ்டார்ட்அப் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறா.

                          மும்பையை பத்தி உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இங்கே ஜூன் மாசம் 7, இல்லை 8 தேதிக்கு ஏதோ ஒப்பந்தம் போட்ட மாதிரி மழை ஆரம்பிச்சா குறைஞ்சது ரெண்டு மாசம் விடாம மழை கொட்டும். மும்பை மக்கள் மழையை நேசிப்பவர்கள்.விதவிதமான வண்ணங்களில் மழைக் கோட்டுடன் தண்ணீரில் நனைய பிடிக்கும்.சூடா வடா பாவ், வெங்காய பஜ்ஜி தெருவுக்கு தெரு கைவண்டிகளில் போட்டு விற்பார்கள்.

                          இதோ இந்த ஜூன் மாதம் கூட சுதந்திரமா மும்பைக்குள் மழை நுழைந்தது. சுமி ஆபீஸ் பக்கத்துல நடை தூரம்தான்.இன்னிக்கு குடையும் கொண்டு வரலை. சாயந்தரம் 4 மணிக்கு எல்லாரும் கிளம்பியாச்சு, லோகல் டிரெயின், பஸ் பிடிச்சு மழைல வீடு போய் சேரணுமே. தலைமுடியை தூக்கிக் கட்டிட்டு சுமியும் புறப்பட்டாள்.

                         சரியா 8 நிமிஷ நடைதான், வீட்டுக்குள் நுழைஞ்சப்ப தொப்பலாய் நனைஞ்சாச்சு.

                        பாட்டிதான் கதவை திறந்தா, “ என்னடி சுமி இப்படி வந்திருக்கே இந்தா முதல்ல தலையைத் துடை” ஒரு சிவப்பு நிற காசித் துண்டை கையில் திணித்தாள்.அந்தத் துண்டு சுமிக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. நீ ரொம்ப அழகா இருக்கேனு சொன்ன அந்த பையன், காதல் தெறிக்கும் அவன் கண்கள்.ஆர்வமுடன் அவளைத் தேடும் அவனுடைய பதட்டம் கண் முன் வந்தது.

                         ஜெய்பூர் கல்லூரியில் புரொபோஸ் பண்ணின சுனில் கோஷ், மும்பை கல்லூரியில் புரொபோஸ் பண்ணின காமர்ஸ் லெக்சரர் அவர்களெல்லாம் மனசில் நிற்கவில்லை. ஆனால் இவன் மட்டும் ஏன் மனதில் வேதனை கொடுக்கிறான். இதைத்தான் முதல் காதல் என்கிறார்களோ. தலையை சிலுப்பி எண்ண ஓட்டத்தை கட்டுப்படுத்த முயன்றாள், இயல்பாய் துளிர்த்த கண்ணீரை காசித்துண்டு உறிந்து கொண்டது.

                          சுமியோட அப்பா ரகுராமன், அவர் மனைவி ஜெயா, அவர் அம்மா, சுமி இதுதான் அவர்கள் குடும்பம். அம்மா ஜெயா உடல் நலம்,மன நலம் குறைந்தவர், குடும்பத்தை நிர்வகிப்பது பாட்டிதான்.

                        “ ஏண்டா ரகு பொண்ணுக்கு வயசு ஏறிண்டே போற கவலை உனக்கு இருக்கோ?”

                         அம்மா திரும்ப ஆரம்பிக்காதே உன் புராணத்தை, எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும், நம்ம தமிழ் சங்கத்துல பதிஞ்சிருக்கேன், மும்பைல செட்டிலான பையனா பாக்கணும்.

                          அம்மா ஜெயா, “ ஆமாம் ஆமாம் அப்பதான் ஏரோப்பிளேன்ல போலாம்”

                        “ சரி,சரி நீ மாத்திரை போட்டுண்டு படுத்துக்கோ, சுமி அம்மாக்கு அந்த சிவப்பு மாத்திரை ரெண்டு கொடு”

                         ஜெயா,“ வெங்குப் பாட்டி செத்துப் போயிட்டா, குன்னக்குடில ஏரோப்பிளேன் இல்லை அதான்”

                        “சுமி…. அம்மாவை கூட்டிண்டு போய் படுக்க வை

                         சுமி அம்மாவை மாத்திரை கொடுத்து அம்மாவை படுக்க வைத்தாள். கூடத்தில் பாட்டி அப்பாவிடம் பேசுவது கேட்டது. “எப்படியும் இந்த தைக்குள்ள பையனை பாத்து முடிவு பண்ணிடு,எனக்கு கல்யாணம் பண்றப்ப 9 வயசு கார்பரேஷன் ஸ்கூல்ல 4 வது படிக்கறேன். கல்யாணம் பண்ணிண்டு அம்மா, அப்பா கூடவே இருந்தேன்.”

                                                  இனி சுமியே மீதியை சொல்வாள்

                                                                             சுஶ்ரீ

                         பாட்டி எத்தனை தடவை சொல்லி இருப்பா இதை சிரிச்சிண்டே அம்மா கிட்ட படுத்து தூங்கிப் போனேன்.மழைச் சத்தம் சோனு விடாமல் கேட்டது, லேசான இடி மின்னலுடன்.

                         மறு நாள்,மழை லேசா விட்டு தூரலோட இருந்தப்பவே ஆபீஸ் போயிட்டேன் குடையை எடுத்துட்டு. இன்னிக்கு எங்களுக்கு சாஃப்ட்வேர் அப்கிரேடேஷன் டிரெயினிங். யு.எஸ்ல இருந்து எக்ஸ்பர்ட்ஸ் வரா. 10 மணிக்கு எங்க கான்ஃபரன்ஸ் ஹால்ல நாங்க 12 பேர், எங்க டீம் லீடர். எங்க எம்.டி. அறிமுகப் பேச்சு கொடுத்துட்டு போயிட்டார். 3 பேர்,2 அமெரிகன், ஒரு இந்தியர் எங்களுக்கு பயிற்ச்சி கொடுக்க.

                                   என் ரைட்டிங் பேட்ல , கம்ப்யூடர் முன்னால உக்காந்து சில குறிப்புகளை எழுதும் போது என் இருக்கை முன்னால் என் பெயர் போர்டை தூக்கி படித்த அந்த டிரெய்னர் “நீ…ங்க மதுரை வெளி வீதி ராமர் கோவில் பக்கத்துல இருந்தீங்களா”

                                  சட்டென தலை உயர்த்தி பாத்தேன். அவனா இவன்? சின்ன பிரென்ச் தாடி, தொங்கு மீசையுடன் சட்னு புரியலை கண்களை பாத்தவுடன் தெரிஞ்சது.

                                 “ பாட்டி நல்லா இருக்காங்களா? லன்ச் டைம்ல பேசலாமா?”

                                  எனக்கு தொண்டை அடைத்தது பேச்சு வரலை, கண் கலங்கியது டிஷ்யூ எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே சரி என்றேன்.

                                 எங்க கேண்டீன் குளிர் சாதன வசதியுடன் நவீன உணவறை. பஃபே டைப். முதல் செஷன் முடிந்தவுடன் நான் முன்னால் நடக்க அவ…ர் பின்னாலேயே வந்தா…. ர்.பிளேட்ல அவரவருக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு ஒரு கார்னர் டேபிளை அடைந்தோம். என் கூட வேலை பாக்கும் சக ஊழியர்கள எங்களை ஒரு ஆர்வத்துடன் பார்த்தனர்.

                                “நீ எப்ப யு.எஸ் போனே, சாரி போனீங்க.”

                                “ மெட்ராஸ் ஐஐடில டிகிரி முடிச்சிட்டு நேரா கலிஃபோர்னியாக்கு கேம்பஸ் இன்டர்வ்யூல செலக்ட் ஆகி போனதுதான்”

                                 “நடுவுல ஏன் என்னை தொடர்பு கொள்ள முயற்சி கூட எடுக்கலை,எங்க வீட்டை 6 மாசமா சுத்தி சுத்தி வந்து என் மனசை கெடுத்துட்டு”

                                 “அது வந்து, நீ இனிமே கிடைக்க மாட்டேனு நானா தீர்மானம் பண்ணி, சென்னைல படிக்க வந்து வேலைக்கு போயி உன்னை மறக்க முயற்சி பண்ணினேன், இப்ப உன்னைப் பாத்ததுல ஒரே குஷி”

                                 “ஐய்யே ஆளைப் பாரு ஆளை, குஷியாம் குஷி ஏதாவது வெள்ளைக்காரியை பாத்திருப்பே என்னை மறந்துட்டே” என்னை அறியாமல் என் பேச்சில் சந்தோஷ மழை.

                                  “எப்ப வரலாம் உங்க வீட்டுக்கு அம்மா அப்பாவோட பொண்ணு கேக்க”

                                   முகத்தை மூடிக் கொண்டேன், இவ்வளவு மகிழ்ச்சி பொங்கி வருமா என்ன ?முகத்தில் இவ்வளவு மலர்ச்சி வருமா என்ன?

                                  “ போங்க,போங்க, எங்க அப்பாவையே கேளுங்க, இது அப்பாவோட கார்டு,ஹேண்ட் பேக்ல இருந்து எடுத்து கொடுத்தேன்.”

                                 “ இன்னிக்கு பாட்டியை பாக்க வரவா?”

                                 “ம்”

                                 சரியா அஞ்சு மணிக்கு புறப்பட்டோம் மழை கொட்டியது, காத்திருந்த காரை தவிர்த்து என்னோட குடையில் ஒட்டிக் கொண்டு வந்தான்.

                                 “பாட்டீஈஈஈஈஈ, யாரு வந்திருக்கா பாரு”

                                 “யாருடி….. ஆபீஸ் பிரண்டா ஐய்யோ சொட்ட சொட்ட நனைஞ்சு வந்திருக்கேளே” உள்ளே போய் அந்த காசித்துண்டை கொண்டு வந்தா. அந்த திருடன் துண்டை வாங்கி என்னை துவட்ட வரான்.

                                  பாட்டி, “ ஓ அவனா நீ”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாசம் ஒரு பந்தயம் (சிறுகதை) – நிவேதிகா அஜந்தன்

    சீதை தேடும் ராமன் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு