எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இரவு மணி ஒன்பதரை. சமையலறை வேலைகளை முடித்து, மேடையை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு அப்போதுதான் வந்து உட்கார்ந்தேன். மொபைல் அடித்தது. இந்த நேரத்தில் யாரிடமிருந்து ஃபோன் என்று சந்தேகத்தோடு எடுத்தால், பக்கத்து வீட்டில் குடியிருந்து, தற்சமயம் ஹைதராபாத்திற்கு மாற்றலாகிச் சென்றுள்ள ரம்யாதான் ஃபோன் செய்கிறாள்.
‘அட, பக்கத்து வீட்டு ரம்யா இந்த நேரத்துல எதுக்குக் கூப்பிடறாங்க.’ சந்தேகத்தோடு ஃபோனை எடுத்தேன்.
இரண்டு வருடம் பக்கத்து வீட்டில் இருந்த பழக்கத்தால், அந்த இரவு நேரத்திலும் மிகுந்த ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தேன்.
“சொல்லுங்க ரம்யா, புது இடத்தில் வீடு எல்லாம் ஓரளவுக்கு செட் ஆயிடுச்சா? எப்படி இருக்கீங்க? குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தாச்சா? நீங்க இல்லாம பக்கத்து வீடே வெறிச்சோடி இருக்கு,” என்று வழக்கமான உற்சாகத்துடன் நான் பேச ஆரம்பித்தேன்.
ஆனால் எதிர்முனையில் ரம்யா கோபத்தோடு கத்தினாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் தேவகி. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்னோட ஃபோன் நம்பரை யார் கேட்டாலும் குடுப்பீங்களா? என் பர்மிஷன் இல்லாம நீங்க எப்படி என் ஃபோன் நம்பரைக் கொடுத்தீங்க? மத்தவங்க ஃபோன் நம்பரைக் குடுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுக் கொடுக்கற நாகரீகம்கூட உங்களுக்குத் தெரியாதா?”
அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை எனக்கு. அடுத்த வீட்டில் ஒரு நல்ல தோழிபோல் இரண்டு வருடங்களாகப் பழகிய ரம்யா, ஒரே வாரத்தில் இப்படிப் பேசுகிறாளே.
“என்னாச்சு ரம்யா, எதுக்கு இவ்வளவு கோவமா பேசறீங்க? யார் ஃபோன் நம்பரை யார்கிட்ட நான் கொடுத்ததுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம்?”
“என்ன தேவகி, செய்யறதையும் செஞ்சுட்டு எதுவுமே தெரியாத மாதிரி பேசறீங்க? கீரைக்காரி வருவாளே விமலா, அவளுக்கு என் ஃபோன் நம்பரை நீங்க கொடுத்தீங்களா?”
“ஆமா, அவங்க கேட்டாங்க, அதான் கொடுத்தேன்.”
“அவ என்ன பெரிய கலெக்டரா? அவ கேட்டா உடனே என் ஃபோன் நம்பரைக் கொடுத்துடுவீங்களா? இன்னைக்குக் காலைல இருந்து விடாம ஃபோன் பண்ணிட்டு இருக்கா. நான் இங்கே வீட்டை எல்லாம் செட் பண்ணுவேனா, குழந்தைகளுக்குத் தேவையானதை ரெடி பண்ணுவேனா, இல்ல அவ ஃபோனை அட்டென்ட் பண்ணுவேனா இனிமே என்கிட்ட கேட்காம என் ஃபோன் நம்பரை யாருக்கும் கொடுக்காதீங்க.”
“என்ன ரம்யா, அவங்க வயசுல பெரியவங்க. பேரன், பேத்தி எல்லாம் எடுத்துட்டாங்க. அவங்களைப் போய் இப்படி மரியாதை இல்லாம பேசிட்டு. பாவம், உங்களை அவங்க மகளா நினைச்சு பேசணும்னு ஃபோன் பண்ணியிருப்பாங்க. அதுக்குப் போய் இந்த மாதிரி பேசறீங்களே.”
“என்னவா வேணா இருக்கட்டுமே. ஒரு நாகரீகம் தெரிய வேண்டாம். அது சரி, உங்களுக்கே தெரியல. அப்புறம் கீரை விக்கறவளுக்கு எங்கே தெரியப் போகுது. இனிமே வேற யார் கேட்டாலும் என் பர்மிஷன் இல்லாம என் ஃபோன் நம்பர் கொடுக்காதீங்க. அதைச் சொல்றதுக்குத்தான் ஃபோன் பண்ணினேன்.”
பட்டென்று ஃபோனை வைத்தாள் ரம்யா. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கீரை கொண்டு வரும் விமலாம்மாவிற்கு 65 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களைப் போய் இப்படி ஏக வசனத்தில் பேசுகிறாள். இன்று காலை கீரை கொண்டு வந்தபோது, விமலாம்மா என்னிடம் கேட்டார்.
“அம்மாடி, பக்கத்து வீட்டிலிருந்த பாப்பா வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்களா? சொல்லவே இல்லையே. உன்கிட்ட ஃபோன் நம்பர் இருந்தா குடு மா. நான் பேசறேன்,” என்றார்.
சரி, வழக்கமாக கீரை வாங்கி நல்ல பழக்கம் என்பதால், என்னைப் போலவே ரம்யாவுக்கும் விமலாம்மாவிடம் நல்ல பழக்கம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு விமலாம்மாவிடம் ரம்யாவின் ஃபோன் நம்பரைக் கொடுத்தேன்.
அதற்குத்தான் எனக்கு இவ்வளவு பேச்சு. ஒன்றும் புரியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு அரைகுறையாகத் தூங்கி எழுந்தேன்.
மறுநாள் காலை கீரையுடன் வந்த விமலாம்மாவிடம் ரம்யா ஃபோன் செய்து என்னைத் திட்டிய விஷயத்தைச் சொன்னேன்.
“நீங்க சாதாரணமா ஃபோன் நம்பர் கேட்டீங்கன்னு நினைச்சு கொடுத்திட்டேன். நீங்க அவங்களுக்குத் தொடர்ந்து ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ணீங்களா? ரம்யா ஃபோன் போட்டு என்னைத் திட்டறாங்க. என்ன விஷயம்? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?”
“ஒரு பிரச்சனையும் இல்ல மா. ஒரு மூணு வாட்டி ஃபோன் பண்ணேன் மா. மூணேமூணு வாட்டிதான் ஃபோன் பண்ணேன். முதல் தடவை பண்ணப்பவே அவங்க ஃபோன் எடுத்திருந்தா நான் ஏன்மா திரும்பவும் கூப்பிடப் போறேன்? எடுக்கல. மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன். அப்பவும் எடுக்கல.
அப்புறம் நான் சாயந்தரம் ஒரு வாட்டி முயற்சி பண்ணலாம்னு கூப்பிட்டேன். ஃபோன் எடுத்துட்டு என்கிட்டயும் அந்த அம்மா இப்படித்தான் கத்தினாங்க. என்ன பண்றது மா, என் பொழப்பு அப்படி.
அந்தம்மா கீரை வாங்கின கையோட காசு கொடுத்தா பரவால்ல. ஒரு மாசத்துக்கு சேர்த்து மொத்தமாக தரேன்னு சொல்லிட்டாங்க. போன மாசம் முழுக்க வாங்கின கீரைக்கு 200 ரூபாய் பாக்கி இருக்கு. அந்த 200 ரூபாயைக் கொடுத்துட்டுப் போயிருக்கலாமில்ல. சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலி பண்ணிட்டுப் போய்ட்டாங்க.
அந்த அம்மா தர 200 ரூபாயை நம்பி நான் நிறைய செலவை யோசிச்சு வச்சிருக்கேன். இப்ப அந்த 200 ரூபா துண்டு விழுந்துச்சுன்னா நான் யார்கிட்ட கேட்கறது? அவங்களுக்கு வேணா 200 ரூபா சாதாரணமா இருக்கலாம். ஆனா நாலணாவா இருந்தாலும் அது என்னோட உழைப்புக்குக் கிடைச்ச கூலி இல்லம்மா. அது எனக்கு பெருசு தானேம்மா.
வேற யார்கிட்டயாவது இந்த மாதிரி காசு பாக்கி வச்சுட்டு ஊரைக் காலி பண்ணிப் போக முடியுமா? அவங்க குடியிருந்த இந்த வீட்டு ஓனர்கிட்ட இப்படி பணத்தை பாக்கி வெச்சிருந்தா, வீட்டைக் காலி பண்ண விட்டிருப்பாரா? இல்ல, உங்க அபார்ட்மெண்ட்ல சுத்த பத்தமா பராமரிக்க மாசாமாசம் கொடுக்கறீங்களே, அந்தப் பணத்தை பாக்கி வச்சிருந்தா அவங்க சும்மா விட்டிருப்பாங்களா?
வயித்துப் பொளப்புக்கு அல்லாடறவங்களா இருக்கப் போய்தானே மா எங்கிட்ட பாக்கி வச்ச காசப் பத்தி கொஞ்சம்கூட யோசிக்காம, இப்படி சொல்லாம கொள்ளாம காலி பண்ணிட்டுப் போயிருக்காங்க.
அவங்க வீட்டைக் காலி பண்ற அவசரத்துல என்னைப் பாத்து கொடுக்க நேரம் இல்லன்னா, உங்ககிட்டயாவது கொடுத்துட்டுப் போயிருக்கலாம் இல்ல. அதைக் கேக்கறதுக்குத்தான் ஃபோன் பண்ணேன் மா.
இத்தனைக்கும் நான் கறாரா எல்லாம் பேசவே இல்ல. அவங்களைப் பத்தி எல்லாம் விசாரிச்சுட்டு, 200 ரூபாய் பாக்கி வச்சுட்டு போயிட்டீங்களே ரம்யாம்மான்னு சொன்னேன். அதுக்குப் போய் கண்டபடி கத்தி விட்டுருச்சு மா. இதே நான் காசு கொடுக்காம இருந்தா, அந்த அம்மா என்னை சும்மா விட்டிருக்குமா? இந்த நியாயத்தை நீங்களே சொல்லுங்க மா. வாங்கின பொருளுக்கு காசு கேட்டா கோவப்படுது. என்னால உனக்கும் மனக்கஷ்டம். மன்னிச்சுக்க தாயீ.”
விமலாம்மா சொல்லி முடிப்பதற்குள் எனக்கு கண்கள் குளமாகி விட்டன. எதுவும் பேசாமல் உள்ளே சென்று 200 ரூபாயைக் கொண்டு வந்து விமலாம்மாவிடம் கொடுத்தேன்.
“யம்மா, நீங்க எதுக்குமா தரணும்? விடுங்க மா, நான் எப்படியோ சமாளிச்சுக்கறேன்.”
“இல்ல மா, ரம்யா கொடுத்தா என்ன, நான் கொடுத்தா என்ன. உங்களுக்குச் சேர வேண்டிய பணம். வச்சுக்கோங்க.”
தயக்கத்துடன் 200 ரூபாயை முந்தானையில் முடிச்சு போட்டுக் கொண்டே கிளம்பினார் விமலாம்மா.
“கால் காசா இருந்தாலும் உழைச்சு சம்பாதிக்கணும். நாலணாவா இருந்தாலும் எனக்குச் சேர வேண்டியது என்னோடதுதான். படிச்சிருந்தும் நிறைய பேருக்கு இது புரிய மாட்டேங்குது. ரம்யாம்மா வூட்டு ஐயா வேலை பார்க்கற கம்பெனில அவுகளுக்கு ஒரு மாசம் சம்பளம் கொடுக்காம விட்டா சும்மா இருப்பாங்களா.?”
தனியே புலம்பியபடியே போனார் விமலாம்மா.
விமலாம்மாவுக்காக மனம் வாடிய சமயத்தில், ரம்யாவின் செயலை நினைத்து சலிப்பும் வந்தது எனக்கு.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings