எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம்; அதில் நதியா என்ற பன்னிரெண்டு வயதுச் சிறுமி வசித்து வந்தாள். அவளின் குடிலை ஒட்டி ஒரு சிற்றோடை; எப்போதும் அதில் தண்ணீர் அதிகச் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கும். நதியா படித்துறையில் அமர்ந்து ஓடையுடன் மணிக்கணக்கில் பேசுவாள். ஓடை நீரை கைகளால் அளைந்து விளையாடுவாள்.
அன்றைக்கு பௌர்ணமி நாள். முழுநிலவு வானில்; வலம் வந்து கொண்டிருந்தது. நிலவின் ஒளியில் சிற்றோடையின் நீர் வெள்ளியை உருக்கி விட்டது போல் தகதகவென்று மினுமினுக்கும். ஓடையில் தெரிந்த நிலவின் பிம்பத்தை பார்த்தாள்.
நிலவு வழக்கத்திற்கு மாறாக சற்று உற்சாகம் குன்றி இருப்பது போல் தென்பட்டது. நதியா நிலவிடம் “ஏன் சோர்வா இருக்குற?” – என்று கேட்டாள்.
“நான் பால் மாதிரி குளிர்ச்சியான ஒளியை காடு முழுவதும் வீசிக்கிட்டிருக்கேன்! ஆனா இதை ரசிக்க அனுபவிக்க என்னை ரெண்டு வார்த்தை பாராட்டுறதுக்கு இங்க யாருமில்லை! இதுக்கு காட்டுப் பக்கம் நான் வராம இருந்தாலே தேவலைனு தோணுது!” – என்றது நிலா. இதைக் கேட்ட நதியா ஆச்சரியப்பட்டாள். நிலா தொடர்ந்து பேசியது.
“இதுவே ஊருக்குள்ளனா என்னோட வெளிச்சத்துல சிறுவர்கள் நிலாச் சோறு சாப்பிடுவாங்க! பெரியவங்க கயத்துக் கட்டில்ல உக்காந்துக்கிட்டு தாம்பூலம் தரிப்பாங்க! கவிஞர்கள் என்னைப் புகழ்ந்து பாடுவாங்க! நான் முழுசா மறைஞ்சாலும் முழுசா வெளிப்பட்டாலும் அமாவாசை பௌர்ணமினு என்னைக் கொண்டாடுவாங்க!” – என்றது அது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் அனைவருக்கும் நிலா தன் ஒளியைத் தந்து கொண்டிருக்கிறது என நதியா நினைத்தாள். நிலவின் இந்த மனக்குறை அவளுக்கு வியப்பைத் தந்தது.
நதியா சிறுமி என்றாலும் நல்ல மனமுதிர்ச்சி உடையவள். நிலவின் எதிர்பார்ப்பு அர்த்தமற்றது என்பதை அதற்குப் புரிய வைக்க எண்ணினாள். அப்போது தொலைவில் நரிகள் ஊளையிட்டன.
“எதுக்காக இரவு நேரத்துல நரிகள் ஊளையிடனும்?” – நதியா கேட்டாள்.
“ஆமா! எதுக்காக ஊளையிடனும்! இப்படி ஊளையிடறது நல்லாவா இருக்கு?” -என்றது நிலா.
“ஒரு முழு நிலவுப்பொழுதுல மொட்டைப்பாறை மேல கூட்டமா நின்னுக்கிட்டு இப்படி நரிகள் ஊளையிடுவது அந்தப் பொழுதுக்குத் தேவையான அமானுஷயம் இல்லையா?” – என்றாள் நதியா.
அவளின் இந்த மாற்றுச் சிந்தனை நிலாவை ஆச்சரியப்படுத்தியது. அது நதியாவை உற்றுப் பார்த்தது.
“பகற்பொழுதுல நடமாடுற பறவைகள் மிருகங்களுக்கு ராத்திரில கண்ணு தெரியாது! தங்களை வேட்டையாடுற உயிரினங்கள்கிட்ட இருந்து பாதுகாத்துக்க உன்னோட வெளிச்சம்தான உதவுது!” – என்றாள் நதியா.
நிலாவிற்கு நதியாவின் இந்த வார்த்தைகள் மேலும் ஆச்சரியத்தை உண்டு செய்தது. அது நதியாவை உற்றுப் பார்க்க அவள் தொடர்ந்து பேசினாள்.
“இரவில் மட்டுமே மலரும் பூக்கள் நறுமணம் வீசும் பூக்கள் இருக்குது! உன்னேட பால் ஒளி இல்லைனா அதுக எப்படி மலரும்? எப்படி நறுமணம் வீசும்?” – என்றாள். அவளே தொடர்ந்து
“இதோ இந்த மரத்துல மந்திங்க எவ்வளவு சொகுசாத் தூங்குது பாரு! உன்னோட இதமான வெளிச்சம் அதுகளுக்குப் பாதுகாப்பான உணர்வைத் தர்றதுனாலதான் இந்த நிம்மதியான தூக்கம்!” – என்றாள்.
மேலும் “பகல் முழுக்க பச்சையம் தயாரிக்குறதுல சுறுசுறுப்பா இருக்குற தாவரங்கள் ராத்திரிலதான் சுவாசிக்குது! அதுக நிலவொளிலதான் தங்களைப் புதுப்பிச்சிக்குது!” – என்று அவள் சொன்னபோது நிலா ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது.
பார்ப்பதற்கு எந்தவிதச் சலனமும் இல்லாமல்; காடு அமைதியாக இருக்கிறது. ஆனால் அதில் நிறைய இயக்கம் தனது ஒளியை நம்பி நடைபெறுவதை நிலா புரிந்து கொண்டது. அதற்கு தனது அறியாமையை எண்ணி வெட்கம் வந்தது.
அது நதியாவிடம் “என்னோட ஒளியை நம்பி இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குறத நான் தெரியாம இருந்துட்டேன்! என்னை மன்னிச்சிரு நதியா! நான் இனிமேல் காட்டிற்கு எந்த விதத் தயக்கமும் இல்லாம ரொம்ப சந்தோஷமா எனது ஒளியைத் தருவேன்!” – என்றது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings