in ,

காதல் ஒழிக (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மறுநாள் காலை ஓடிப்போக திட்டமிட்டிருந்தது அந்தக் காதல் ஜோடி.  “ரேவதி… மறக்காம காலைல அஞ்சு மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்துல மூணாவது தளத்துல நில்லு” என்றான்.

       “சரி திவாகர்” என்றவள் நெஞ்சில் கை வைத்து, “பயமா இருக்கு” என்றாள்.  கண் பார்வை நாலாப்புறமும் சுழன்று கொண்டேயிருந்தது.

       “பயப்படாத ரேவதி!.. என் சிநேகிதர்கள் நாலு பேர் கூட வர்றாங்க… எனக்காக உசுரைக் கூடக் குடுப்பானுக!… அவங்கதான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறாங்க” என்றான் அவள் கையைப் பற்றிக் கொண்டு.

      அரை மனதோட தலையாட்டி விட்டு, தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

வரிசையில் முதலாவதாக இருந்த ஆட்டோவில், ஏறியமர்ந்தாள்.

“எங்கேம்மா போகணும்?” ஆரம்பகால விஜயகாந்த் போலிருந்த அந்த ஆட்டோக்காரன் கேட்க,

“மேலத் தெரு” என்றாள்.

உள்ளுக்குள் இனம் புரியாத படபடப்பு. இதயம் அதிவேகமாய்த் துடித்தது.  “பெத்து வளர்த்த பெற்றோர்களை ஏமாத்திட்டு, காதலன் கூட ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கத் துணிஞ்சிட்டோமே?… இது சரியா?… திவாகர் என்னைக் கடைசி வரை வெச்சுக் காப்பாத்துவானா?…” மனசாட்சி கேட்க,  “நிச்சயம் காப்பத்துவான்!… ஏன்னா ஒரு வருஷம் ரெண்டு வருஷமல்ல… நாலு வருஷமா அவன் உன்னைக் காதலிச்சிட்டிருக்கான்..” அதே மனசாட்சி பதிலும் சொல்லிக் கொண்டது.

“கடவுளே… எல்லாம் நல்லபடியா நடக்க நீதான் கருணை வைக்கணும்” கண்களை மூடி, சத்தமில்லாமல் சாமியை வேண்டிக் கொண்டாள்.

      மித வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ, பூட்டப்பட்டிருந்த ரயில்வே கேட்டில் நின்றது.

      சலிப்பாய் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ரேவதி.

அப்போதுதான் ரேவதியின் பார்வையில் அவன் பட்டான்.  கிட்டத்தட்ட பதினெட்டு… பத்தொன்பது வயதிருக்கும்.  கலைந்த பரட்டைத்தலை.  அழுக்கான பேண்ட் சட்டை.  கையில் ஒரு கரித்துண்டை வைத்துக் கொண்டு சுவர்களிலெல்லாம் “காதல் ஒழிக… காதல் ஒழிக” என்று எழுதிக் கொண்டிருந்தான்.  அவ்வப்போது மேலே பார்த்து “அம்மா… அப்பா” என்றும் கத்தினான்.

”யாரிவன்?… எதுக்கு இப்படி எழுதிட்டிருக்கான்?” யோசனையுடன் ஆட்டோக்காரரிடம் கேட்டாள் ரேவதி.  “யார் இந்தக் காதல் கிறுக்கன்?…”

       “அவனா?… பேரு அருண்… போன வருஷம் வரை பக்கத்துக் காலேஜ்ல பி.இ. படிச்சிட்டிருந்தான்… நல்லா படிப்பானாம்… ஜாலியா சந்தோஷமா இருந்தவன் வாழ்க்கை காதலால் இப்படி ஆயிடுச்சு… பாவம்” உண்மையான பரிதாபத்தோடு சொன்னான் ஆட்டோக்காரன்.

       “ஓ… காதல் தோல்வியா?” என்றாள் ரேவதி.

       “இல்லை… காதல் வெற்றி”

       “புரியலியே” என்றாள் ரேவதி கரியால் சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அந்தக் காதல் கிறுக்கனைப் பார்த்தவாறே.

       “இவனோட ரொம்ப ஆச்சாரமான குடும்பம்!… அப்பா ஊருக்குள்ளார கௌரவமான மனுஷன்!… அம்மா ஸ்டூல் டீச்சர்!… இவனுக்கு ஒரு அக்கா இருந்தா… யாரோ ஒரு வேற ஜாதிப் பையனைக் காதலிச்சிட்டிருந்தா… அந்த விஷயம் வீட்டுக்குத் தெரியப் போக… பெத்தவங்க அவசர அவசரமா வேற மாப்பிள்ளைப் பையனை தேடியிருக்காங்க!.. அதனால இவ என்ன பண்ணுனா…?… ஒரு நாள் லெட்டர் எழுதி வெச்சிட்டு… அவன் கூட ஓடிப் போயிட்டா… அந்த அவமானத்துல இவனோட அம்மாவும் அப்பாவும் ஒண்ணா ரயில் முன்னாடி பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க!… அவ்வளவுதான் ரயில் பாதைல துண்டு துண்டாக் கிடந்த அம்மா அப்பாவோட பொணத்தைப் பார்த்த அந்த நிமிஷமே… இவன் பைத்தியமாயிட்டான்…”

       “அந்தப் பொண்ணு….?” தயங்கித் தயங்கிக் கேட்டாள் ரேவதி.

       “அந்தச் சனியனுக்கு என்ன கேடு?… போன வேகத்துல கோயில்ல வெச்சு அந்தக் காதலனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு… பெத்தவங்க சாவு ஊர்வலம் நடந்திட்டிருக்கற நேரத்துல… புதுப் புருஷன் கூட முதலிரவு கொண்டாடிட்டு இருந்திருக்கா!… ஹும்… அவளெல்லாம் நல்லாவே இருக்க மாட்டா!… ஆண்டவன் சரியான நேரத்துல அவளுக்கு சரியான தண்டனையைக் குடுப்பான்” என்ற ஆட்டோக்காரன் தன் வெறுப்பைக் காட்டும் விதமாய் ஆட்டோவுக்கு வெளியே “த்தூ” என்று காறித் துப்பினான்.

      ”ஹக்”கென்று அதிர்ந்தாள் ரேவதி.  அந்த ஆட்டோக்காரன் தன் முகத்தில் துப்பியது போலிருந்தது அவளுக்கு.

திரும்பி அந்த இளைஞனைப் பார்த்தாள்.  அவள் பார்வையில் அங்கே அவளுடைய தம்பி முத்து தெரிய,  தலையை வேகமாய்ச் சிலுப்பி அதை அழித்தாள்..  “ஒருவேளை நான் ஓடிப் போயிட்டா என் குடும்பத்திலும் இதுதான் நடக்குமா?.. என் தம்பியும் இப்படிக் காதல் கிறுக்காயிடுவானா?… இந்த ஆட்டோக்காரன் துப்புற மாதிரி ஊர் ஜனங்க எல்லோரும் என்னைத் துப்புவாங்களோ?”

      ரயில் போனதும் கேட் திறக்கப்பட, ஆட்டோ நகரத் தொடங்கியது.

கண் பார்வையிலிருந்து மறையும் வரை அந்தக் கிறுக்கனையே பார்த்துக் கொண்டிருந்த ரேவதி, சிறிது தூரம் சென்றதும், தன் மொபைலை எடுத்து திவாகருக்கு கால் செய்தாள். “ஸாரி திவா… ஓடிப் போவதில் எனக்கு விருப்பமில்லை… முடிஞ்சா நேரடியா வந்து என் வீட்டுல பெண் கேளு… பெரியவங்க சம்மதத்தோட நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

எதிர் முனையில் அந்த திவாகர் “ஹலோ…ஹலோ” என்று கத்திக் கொண்டிருக்கவே மொபைலை ஆஃப் செய்தாள் ரேவதி.

அவள் பேச்சு ஆட்டோக்காரன் காதிலும் விழ, அவன் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு திரும்பி அவளைப் பார்த்தான்.

அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, “எனக்கும் ஒரு தம்பி இருக்கான்” என்றாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 8) – வைஷ்ணவி

    அம்மா என்ற வார்த்தை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்