in

காதல் என்பது எது வரை? (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“வரவேற்பு எப்படி இருக்குமோ” என்ற சஞ்சலத்துடன் திவாகர் தனது பெற்றோர்களுடன் கலாவின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவைத் திறந்தவரைப் பார்த்தவுடன் அவர் கலாவின் தந்தை என்று புரிந்தது. ஒரு இளைஞன் முதிய தம்பதியருடன், பூ, பழம் முதலியவற்றுடன் வந்திருப்பதைப் பார்த்து, மரியாதை நிமித்தம் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் கலாவின் தந்தை.

“நீங்கள் யார்? இதற்கு முன் உங்களைப் பார்த்த ஞாபகமில்லை” என்று இழுத்தார்.

தயங்கியபடியே, “நான் கலாவின் கணவன். மூன்று மாதங்களுக்கு முன்னால் எங்கள் திருமணம் பெங்களூரில் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பெங்களூரிலிருந்து கிளம்பி சென்னை வந்த கலா உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கலா எங்கே?”” என்று கேட்டான் திவாகர்.

“என்ன உளறுகிறீர்கள்? கலா பெங்களூரில் இருந்தாளா?” என்று பெருத்த குரலில் கேட்டபடியே தாம் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்தார் கலாவின் தந்தை. கணவரின் சத்தத்தைக் கேட்ட கலாவின் அம்மா ஓடோடி வந்தாள். திவாகரைப் பார்த்தவுடன் திகைத்து நின்றாள்.

“நீங்கள் திவாகர் இல்லையா?”” என்று கேட்டாள்.

“உனக்கு இவரைத் தெரியுமா?”” என்று வினவினார் கலாவின் தந்தை.

“மாலா கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டது இவரைத்தான். எனக்கு இவருடைய போட்டோவைக் காண்பித்திருக்கிறாள். உங்களுடைய வரட்டுப் பிடிவாதத்தால் மாலாவை இழந்து நிற்கிறோம்”

திவாகரின் மனம் சற்றே பின் நோக்கிச் சென்றது.

*******

திவாகரும், மாலாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரி நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. சாதி அவர்கள் காதலில் வில்லனாகத் தலை நீட்டியது. மாலாவின் தந்தை பழமைவிரும்பி. சொந்த சாதியில் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார். திவாகர் வீட்டில் முதலில் எதிர்ப்பு இருந்தாலும், அவனுடைய பிடிவாதத்தால் சம்மதித்தனர்.

“வீட்டை விட்டு ஓடி கோவிலில் மணம்முடித்து கல்யாணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்” என்ற மாலாவின் கருத்தை திவாகர் ஒத்துக் கொள்ளவில்லை. பெற்றோர்  மனத்தை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். என்றான்.

இதனிடையில் மாலாவின் பெற்றோர் வரன் பார்த்துக் கல்யாணத் தேதியையும் குறித்தனர். மனமுடைந்த மாலா தூக்க மாத்திரை சாப்பிட்டு மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்தாள். மாலாவின் தற்கொலைக்குத் தானும் ஒரு காரணம் என்று வருந்தினான் திவாகர். சென்னையில் பார்க்கும் இடம் எல்லாம் மாலாவை நினைவூட்ட, திவாகர் பெங்களூருக்கு குடி பெயர்ந்தான்.

******

“என்ன சார். சொல்றீங்க நீங்க. ஏற்கெனவே உங்களை காதலித்து என்னோட மாலா தற்கொலை பண்ணிக்கிட்டாள். என்னோட இன்னொரு மகள் கலாவை மூன்று மாதத்திற்கு முன்னால பெங்களூரில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஒரு புதுக் கதையைச் சொல்றீங்க. எப்படி இருக்க முடியும். கலா ஆறு மாதமாக மயக்க நிலையில இருக்கிறாள். வந்து பாருங்கள்”” என்றார் கலாவின் தந்தை.

ஒரு தனி அறையில் கலா கட்டிலில் மயக்க நிலையில் படுத்திருந்தாள். அவள் அருகில் ஒரு நர்ஸ். படுக்கையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த டிரிப்ஸ் பாட்டிலில் இருந்த திரவம் கலாவின் உடம்பிக்குச் சொட்டு சொட்டாகச் சென்று கொண்டிருந்தது.

என்ன நடக்கிறது என்பது திவாகருக்கும் அவருடைய பெற்றோர்க்கும் புதிராக இருந்தது. கலாவுடன் வாழ்வதைத் தடுக்க அவளுடைய தந்தை நாடகம் ஆடுகிறாரோ என்று திவாகருக்குத் தோன்றியது. திவாகரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போல கலாவின் தந்தை சொன்னார். 

“வாருங்கள். எல்லோரும் கூடத்திற்குச் செல்வோம். நடந்த விவரங்களைச் சொல்கிறேன்.” மாலாவின் மனம் மாறும் என்று நினைத்தேன். என்னுடைய பிடிவாதத்தால் மாலாவை இழந்தேன். மாலாவிற்கும், கலாவிற்கும் நெருக்கம் அதிகம். அவளின் மரணம், கலாவை வெகுவாகப் பாதித்தது.”

ஒரு நாள் கலா திடீரென்று மயங்கி விழுந்தாள். கலா ஆரோக்கியமான பெண். உடல் நலக்குறைவு ஒன்றுமில்லை. அவளை மருத்துவமனையில் சேர்த்தோம். எல்லா விதமான மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் அவளின் மயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. இது கோமா என்ற நீண்ட தூக்கம். எப்பொழுது பழைய நிலையை அடைவாள் என்பதை அறிய முடியாது என்று கை விரித்தனர் மருத்துவர்கள். அவர்களின் அறிவுரைப்படி வீட்டில் நர்ஸ் அமர்த்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

கலாவின் அம்மா சொன்னார். “ஆயுர்வேதம், ஜோஸ்யம், மாந்த்ரீகம், குறி பார்ப்பது, கூட்டுப் ப்ரார்த்தனை என்று எல்லாவற்றையும் செய்து பார்த்து விட்டோம். தானாகவே வந்த மயக்கம், அதுவாகவே போய் விடும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று சொல்கிறார்கள்.”

பெங்களூரில் கலாவைப் பார்த்தது முதல் நடந்த விவரங்களை எல்லாம் திவாகர் கூறினான்.

******

“அன்று சனிக்கிழமை. பெங்களூர் வைட்ஃபீல்டில் உள்ள வி.ஆர்.மால் வணிக வளாகத்தில் நடந்து கொண்டிருந்தேன். எதிர்ப்புறம் வந்த பெண்ணைப் பார்த்து திகைத்து நின்றேன். அந்தப் பெண் மாலாவைப் போலவே இருந்தாள். அவள் நடையும், முகஅமைப்பும் மயக்கும் கண்களும் அப்படியே மாலா, என்னால் நம்ப முடியவில்லை. வேகமாக நடந்து வந்த அந்தப் பெண்ணும் என்னைப் பார்த்து திடுக்கிட்டு நின்றாள்.”

“நீ, நீ… நீங்க……”” தடுமாறினான் திவாகர்.

“நான் கலா. மாலாவின் தங்கை”” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள் அந்தப் பெண்.

“மாலா உங்கள் போட்டைவைக் காட்டியிருக்கிறாள். உங்களைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறாள்”” என்றாள்.

“மாலா சொல்லியிருக்கிறாள். என்னுடைய தங்கை என்னைப் போலவே இருப்பாள் என்று. நீங்கள் எங்கே பெங்களூரில்” இழுத்தான் திவாகர்.

“நான் இங்கு கல்லூரியில் நிர்வாகஇயல் படிக்கிறேன். விடுதியில் தங்கிப் படிக்கிறேன். என் சினேகிதிகளுடன் ஷாப்பிங்க் வந்தேன். அவர்களைத் தேடிக் கொண்டு போய் கொண்டிருக்கிறேன்.” நீங்கள் சென்னையில் வேலை செய்வதாக அல்லவா மாலா சொன்னாள். ஆபிஸ் வேலையாக வந்திருக்கிறீர்களா?”” என்று கேட்டாள்.

“இல்லை, மாலா போனதற்கப்புறம் எனக்கு சென்னை பிடிக்கவில்லை. பெங்களூரில் வேலை மாற்றிக் கொண்டு வந்து விட்டேன்”” என்றான் திவாகர்.

இருவர் மனதிலும் ஓராயிரம் கேள்விகள். கேட்பதற்கும், பேசுவதற்கும் தயக்கம். இருவர் இடையிலும் சங்கடமான மௌனம்.

“என் சினேகிதிகள் என்னைத் தேடுவார்கள். நான் வருகிறேன்”” என்று வந்த வேகத்திலேயே சென்று விட்டாள் கலா.

கலா அங்கிருந்து சென்ற பின் தான் ‘கலா எந்தக் கல்லூரியில் படிக்கிறாள். அவள் கைபேசி எண் என்ன?” என்று எந்த விவரங்களையும் கேட்கவில்லையே’ என்று திவாகருக்குத் தோன்றியது.

‘ஆனால், விவரங்கள் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாளா? மாலாவின் மரணத்திற்கு நானும் ஒருவகையில் காரணம் அல்லவா? என் மேல் அவளுக்குக் கோபம் இருக்கலாம்’” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான் திவாகர்.

கலாவைப் பார்த்ததிலிருந்து திவாகர் மனம் அவளையே வட்டமிட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்று மனம் விழைந்தது. ஒரு முறை எம்.டி.ஆர். உணவு விடுதியில் அவளைப் பார்த்தான். அதற்கப்புறம் அவன் எங்கு சென்றாலும், சற்றும் எதிர்பாராமல் கலாவும் அங்கு வருவாள்.

ஒரு முறை கலா கேட்டாள். “திவாகர், நீங்கள் ஜி.பி.எஸ். மூலம் என்னைக் கண்காணிக்கிறீர்களா என்ன? அது எப்படி நான் போகும் இடமெல்லாம் நீங்களும் வருகிறீர்கள்?””

கைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்ட அவர்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர்.

“திவாகர், என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதோ, விடுதியில் இறக்கி விட்டுச் செல்வதோ கூடாது”” என்று சொன்ன கலா, அவன் குறிப்பிட்ட இடத்திற்கு நேரம் தவறாமல் வந்து விடுவாள்.

மாலாவின் துர்மரணத்தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்திருந்த  திவாகர், சிறிது சிறிதாக பழைய நிலைக்குத் திரும்பினான். கலாவிடம் கொண்டிருந்த நட்பு காதலாக மாறியது.

‘மாலாவைப் போலவே இருக்கும் கலாவை மணம் செய்து கொண்டால் என்ன. நான் செய்த தவறுக்கு அது பிராயச்சித்தமாக இருக்காதா?’” என்று அவனுடைய உள் மனம் கேள்வி எழுப்பியது. கலாவிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டான்.

“திவாகர், அப்பா மனம் மாறி விட்டாரா என்று தெரியவில்லை. மாலாவைப் போல நான் என் வாழ்வை இழக்க விரும்பவில்லை. உங்கள் வீட்டில் கல்யாணத்திற்கு சம்மதம் கிடைக்குமா என்று தெரியாது. ஆகவே, நண்பர்கள் முன்னிலையில் நாம் மணம் செய்து கொள்வோம். கால நேரம் பார்த்து நம்முடைய பெற்றோர்க்குத் தெரிவிப்போம். இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்வதாக இருந்தால் தான் நம்முடைய திருமணம்”

பிடிவாதத்தால், மாலாவை இழந்தது போல கலாவை இழக்கக் கூடாது என்று தீர்மானித்த திவாகர் கலாவின் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டான். திருமணம் நடந்து, மணவாழ்க்கை தொடங்கியது. மூன்று மாதத்திற்குப் பிறகு திவாகர் பெற்றோர்களிடம் தெரிவித்தான். முதலில் அதிர்ந்த பெற்றோர், பின்பு சமாதானம் அடைந்து, பெங்களூர் சென்று திவாகர், கலாவுடன் தங்கினார்கள்.

சில நாட்கள் கழித்து திவாகரின் தந்தை கூறினார். “கலா, நடந்தது நடந்தாகி விட்டது. இனியும் உன் பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பது தவறு. ஆகவே, நாம் எல்லோருமாக சென்னை சென்று உன் பெற்றோரைச் சந்தித்து நடந்த விவரங்களைச் சொல்வோம்.”

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நான் முன்னால் சென்று பக்குவமாக விவரங்கள் தெரிவிக்கிறேன். நீங்கள் இரண்டு நாட்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்தால் நல்லது.” என்று சொல்லி. கலா சென்னை புறப்பட்டுச் சென்றாள்.

******

“இது தான் நடந்தது. இது எங்கள் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்கள்.” என்றான் திவாகர். புகைப்படத்தில் இருந்த பெண் கலாவைப் போலவே இருந்தாள்.

‘கலா, மாலாவைப் போன்றே இன்னொரு பெண்ணா? அது எப்படி சாத்தியமாகும்? எதற்கு அந்தப் பெண் தன்னை மாலாவின் தங்கை கலா என்று அறிமுகம் செய்து கொண்டாள்? எதற்கு திவாகர் பின்னால் அலைந்து அவனை மணம் செய்து கொண்டாள். இதனால் அவளுக்கு என்ன இலாபம். சென்னை செல்வதாகச் சொல்லிச் சென்ற அந்தப் பெண் இப்போது எங்கே?”’ எல்லோர் மனதிலும் ஆயிரம் கேள்விகள். விடைதான் தெரியவில்லை.

“என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கிறார். அவரை அணுகி ஆலோசனை கேட்போம்.” என்றார் திவாகரின் தந்தை.

“நீங்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. உங்களுடைய சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன்.” என்று பெண் குரல் கேட்டது.

கூடத்தின் வாசலில் திவாகர் மணந்து கொண்ட கலா நின்று கொண்டிருந்தாள்.

“கலா, இது என்ன நாடகம்? இரண்டு நாட்கள் எங்கிருந்தாய்? உன் உண்மையான பெயர் என்ன?”” என்றான் திவாகர்.

“வாசல் கதவு தாளிடப்பட்டுள்ளது? நீ யார்? எப்படி உள்ளே நுழைந்தாய்?” என்று கேட்டார் கலாவின் தந்தை.

“நீங்கள் எல்லோரும் அமைதியாக அமருங்கள். நான் சொல்வதைக் கேட்டு பயப்படாதீர்கள் அதிர்ச்சி அடையாதீர்கள். எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வதற்காகத் தான் திவாகர், அவரது பெற்றோர்கள் அனைவரையும் இங்கு வரவழைத்தேன்.”

நான் மாலாவின் ஆவி. கலாவின் உடலில் இருக்கிறேன். ஆவியானதால் என்னால் எங்கும் செல்ல முடியும். வாகனங்கள் தேவையில்லை. பூட்டிய கதவுகள் என்னைத் தடுக்காது.”

தற்கொலையால் என் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. திவாகரை மனதாரக் காதலித்த எனக்கு காதலிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. என்னுடைய உயிர் இங்கே அவரைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. .அவருடன் சிறிது காலமாவது மண வாழ்க்கை வாழ்ந்தால் தான் இந்த உலகிலிருந்து எனக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் என்று புரிந்தது.”

திவாகரையே சுற்றி வந்த நான் அவருக்குப் பெண் பார்க்க முயற்சி செய்த போதெல்லாம் தடங்கல் செய்தேன். திவாகர் மற்றொரு பெண்ணை மணப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை..”

திவாகரை மணந்து வாழ எனக்கு உடல் வேண்டும். ஆகவே கலாவின் உடலில் புகுந்தேன். அதனால் தான் அவள் மயக்கத்தில் ஆழ்ந்தாள். நான் சில மாதங்கள் திவாகருடன் வாழ்ந்ததால் என் மனதிற்கு நிம்மதி. இனி நான் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாகச் செல்ல முடியும்.”

“கலா பிழைத்துக் கொள்வாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டனர் கலாவின் பெற்றோர்.

“நிச்சயமாக. நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்தால். மாலாவின் தங்கை கலா என்று கூறித்தான் திவாகரை மணந்து கொண்டேன். ஆகவே, கலாவை ஊரறிய திவாகருக்கு மணம் முடிக்க வேண்டும். இதற்கு உங்கள் எல்லோருடைய சம்மதம் கிடைத்தால், நான் இந்த உலகை விட்டுப் போவதுடன், என்னால் உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராது”” என்றாள் மாலா.

எல்லோரும் சம்மதம் சொல்ல, சிரித்தபடியே மாலாவின் உருவம் மறைந்தது.

“அப்பா, அம்மா” என்று கலா கூப்பிடுவது கேட்டது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்பாவின் சொத்து (சிறுகதை) – ✍ ராஜன்

    அம்மாவின் அருமை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்