ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உந்தன் சொக்கும் பார்வையில் சிவந்து போகாது..
கரங்களின் பிடியில் கரைந்து போகாது..
மீசைக் குறுகுறுப்பில் மயங்கிப் போகாது..
உடையவளின் இன்னுயிர்க்கும் உய்வுண்டோ அன்பனே?
செழியனும், அபிரதியும் காரின் முன்புறம் அமர்ந்து கொள்ள, லயாவிடம் பேசி அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் பொருட்டு, துளசியும் லயாவுடன் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார் .
வாகனத்தினுள் இருந்த அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க.. ரொம்பத் தூரம் வரையிலும் கார் அமைதியாகவே சென்றது.
எதையோ மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த லயா, பின்பு ஏதோ முடிவெடுத்தவளாகத் துளசியின் மடியில் கண்மூடிப் படுத்தாள்.. அதை ரியர் வியூ கண்ணாடியில் கண்ட அபியோ, ‘பேசுங்க…’ என்பது போல் ஜாடை காட்டிட,
தான் பார்த்துக் கொள்வதாய்க் கண்ணசைத்தார் துளசி. பின்பு சிறிது நேரம் கழித்து மெல்ல லயாவிடம் பேசத் துவங்கியவர், மிருதுவாக அவளது சிகையை வருடியவாறே, “என்ன லயாம்மா.. கொஞ்சம் டல்லா இருக்கிற மாதிரி இருக்கு? என்னாச்சு? உனக்கு ஏதாவது பிரச்சனையா டா? இல்ல காலையில நேரமா எழுந்தது தலை வலிக்குதா?” என்று அடுக்கடுக்காய் அவர் வினா எழுப்பினார்.
அவரது அந்த அக்கறையில் லயாவிற்கு உள்ளம் குளிர்ந்தாலும், மனதில் கொண்ட முடிவு மாறாது, “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நான்.. நான் வந்து.. இல்ல.. நீங்க மட்டும் அங்க போயிட்டு வாங்களேன்.. நான் நம்ம அனிதா வீடு கோயமுத்தூர்ல தான இருக்கு. நான் அங்கேயே தங்கிக்கறேனே.. என்ன ரெண்டு வாரம் தான? அவளும் சரின்னு சொல்லிட்டா..” என்று திணறித் திணறிக் கூறிட
“ஏன் என்னாச்சு? காருல ஏறும் போது கூட நீ எதுவும் சொல்லல, இவ்ளோ நேரம் சாதாரணமா இருந்துட்டு இப்போ வந்து அனிதா வீட்டுல தங்கிக்கறேன்னு சொல்ற? என்னாச்சு?” என்று கேட்டார் துளசி.
“இல்லம்மா நீங்களே ரொம்ப வருஷம் கழிச்சு உங்க அப்பா, அம்மாவோட சேரப் போறீங்க. இதுல நடுவுல நான் ஏன் வந்து என்னால ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சுன்னா?” என்று விளக்கினாள் மகள்.
“உன்ன பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சா அவங்க ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைக்கறயா டா?” என்று துளசி கேட்கவும், அவள் ‘ஆமாம்’ என்பது போல் தலை அசைத்தாள்.
“இங்க பாருடா.. நீ எங்க பொண்ணு.. உன்னைப் பத்தி வேறெந்த விவரமும் அவங்களுக்குத் தேவை இல்ல. ஒருவேளை அப்படி உன்ன பத்தி அவங்ககிட்டச் சொல்லியே தீரவேண்டிய சூழ்நிலை வந்துச்சுன்னா சொல்லிடலாம். அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல நமக்கு. எனக்கு எல்லாரையும் விட.. நீதான் முக்கியம். எனக்கு மட்டும் இல்ல… எங்க எல்லாருக்கும் நீ மட்டும் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். என்னோட அம்மா அப்பாவை பிரிஞ்சு நான் இவ்வளவு நாள் தனியா இருந்துட்டேன், ஆனா என்னால் உன்னைப் பிரிஞ்சு இருக்கவே முடியாது டா. எங்க யாராலயும் இருக்க முடியாது டா” என்று அவர் கூறினார்.
இருந்தாலும் மனம் தெளியாத லயாவோ, “அம்மா என்ன தான் இருந்தாலும் அப்பா, அம்மான்னு இவ்வளவு வருஷம் கழிச்சு உங்க சொந்தம் உங்களுக்குத் திரும்பக் கிடைச்சுருக்கு. நீங்க எனக்காக அவங்கள இழக்காதீங்கம்மா..” என்று மேலும் வாதிட்டவளைச் செழியனின் குரல் தேக்கியது.
“ஹோ அப்படியா லயா… எல்லாரையும் விடச் சொந்த அப்பா அம்மா தான் முக்கியம் இல்லையா? அப்போ வருங்காலத்துல உன்னோட ரத்த சொந்தம் வந்துட்டா, நீ எங்களை விட்டுட்டு போய்டுவ இல்லையா?” என்று சற்றுக் கோபமாகக் கேட்கவும், துளசியின் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள்.
“என்னப்பா நீங்க இப்படிப் பேசறீங்க? எனக்கு இன்னைக்கு மட்டும் இல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தலும் நீங்க மட்டும் தான் அப்பா அம்மா” என்று கூறியவளிடம்,
“ஹ்ம்ம்… இப்படிச் சமத்துக்குட்டி சக்கரக் கட்டியா இருக்கணும்” எனச் சொல்லியபடியே அவள் கன்னம் தொட்டு முத்தமிட்டாள் துளசி.
அவர் அவளுக்கு முத்தமிடவும், “சோ ஸ்வீட் மம்மி நீங்க..” என்று கூறியவாறே அவருக்குத் தானும் முத்தமிடப் பக்கவாட்டில் நோக்கியவள்… “அம்மாஆஆஆஆ….” என்று அலறினாள்.
அவள் அலறல் முடிவதற்குள் பக்கவாட்டிலிருந்து வந்து மோதிய லாரியால் அவர்களது கார் பலமுறை உருண்டு, உருண்டு பலப்பல அடிகள் பட்டு ஒரு பள்ளத்தில் விழுந்து நொறுங்கி அப்பளமானது.
இவ்வளவு பெரிய விபத்து நடந்த சத்தம் கேட்டு அருகிலிருக்கும் ஊர்க்காரர்கள் அடித்துப் பிடித்து ஓடி வந்து மரணத்தின் பிடியில் இருந்தவர்களை மீட்டு காரினுள் இருந்து வெளியே வரவழைத்து, அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வெகுநேரம் வரையில் அரசு மருத்துவமனையின் வைத்தியர்கள், பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடோடிச் சென்று உயிர்களைக் காக்க முனைந்து கொண்டிருந்தனர்.
மயக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எழுந்த லயாவோ, ஏதோ கெட்ட கனவு கண்டது போல அலறி அடித்துக்கொண்டு எழ, அவளைச் சாந்தப்படுத்தினர் மருத்துவர்களும், நர்ஸுகளும்.
“என் அம்மா எங்க.. என் அப்பா எங்க? என் அபிக்கு என்னாச்சு.. அவங்களை நான் இப்போவே பார்க்கணும்” என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவளை அடக்க அவர்கள் பெரும்பாடு படவேண்டியதாய்ப் போயிற்று.
அவளை ஒருவாறு சமாதானப்படுத்திவிட்டு, அவளிடம் ஒரு கைப்பேசியை அளித்து அதில் பதிவு செய்ததைக் கேட்கும்படி பணித்துவிட்டு மற்றவர்கள் சற்றுத் தொலைவில் நிற்க, நடுங்கும் கரங்களால் அதை வாங்கிக் கேட்டாள் லயா.
அதில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டு மீண்டும் மயங்கி விழுந்தவள், சிறிது நேரம் சென்ற பின்பே விழி திறந்தாள்.
கண் விழித்த காரிகையோ, நடந்த விஷயமெல்லாம் மீண்டும் நினைவில் ஆட, “நான் இப்போ என் குடும்பத்தைப் பார்க்கணும்” என்று அவளைச் சோதித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் கெஞ்சினாள்.
வேறு வழியின்றி மருத்துவரும் அவளைச் சக்கர நாற்காலியில் வைத்து அவள் குடும்பத்தைக் காண ஓர் இடத்திற்குத் தனது மனதைக் கல்லாக்கியவாறு அழைத்துச் சென்றார்.
அங்கே.. அவள் தந்தையும், தனது உயிரினும் மேலான உடன் பிறவாத சகோதரியும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்க, மெல்ல முதலில் தந்தையையும், பின்பு தனது சகோதரியையும் முகம் போர்த்தியிருந்த துணியை விலக்கிக் கண்டவள், “அப்பா..” என்று அந்த மருத்துவமனையே அதிரும்படி வீரிட்டாள்.
“அப்பா.. அப்பா… இன்னைக்குத் தான நான் உங்களை முதல் முதல்ல அப்பான்னு கூப்பிட்டேன் அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே.. சே இந்த ராசி கெட்டவளுக்கு அப்பான்ற உறவே இருக்கக் கூடாதுனா கடவுள் என்ன எடுத்திருக்கலாமே.. உங்களைப் போய்..” என்று வார்த்தையை முடிக்க இயலாமல் கதறியவள்,
அவரருகே கிடத்தப்பட்டிருந்த அபியைப் பார்த்து, “ஹையோ அபி.. அபி.. எழுந்திரு டி.. ப்ளீஸ் டி.. என்ன விட்டுப் போகாத அபி.. நீ இல்லாம நான் இருக்க மாட்டேன் அபி..” என்று கதறவும் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த டாக்டருக்கும், நர்ஸுக்குமே கண் கலங்கி விட்டது.
பின்பு அவர்களிடம் திரும்பியவள், “அம்மா.. அம்மா எங்க இருக்காங்க..” என்று பேசும் திராணியற்று கேட்டாள். அவளை அவர்கள் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குத் துளசியோ தலையில் பெரிய கட்டுடன், உடல் முழுதும் வயர்களால் சுற்றப்பட்டுப் பல்வேறு மருத்துவ எந்திரங்களின் ஓசையோடு படுத்திருந்தார்.
“அம்மாக்கு என்னாச்சு டாக்டர்?” என்று லயா வினவ
“அவங்களுக்குத் தலையில பலமா அடி பட்டுடுச்சு மா.. அதனால கோமாக்கு போய்ட்டாங்க.. எப்படியும் குணமாகிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.. ஆனா எப்போ சரியாவாங்கன்னு தான் சரியா சொல்ல முடியாது ” என்று கூறினார்.
அழுவதற்குக் கூடச் சக்தியின்றி அப்படியே கீழே சரிந்து விட்டாள் அவள்.
அதன் பின்பு அவளை மேலும் சமாதானப்படுத்தும் வகையறியாதவர்கள், அவளைப் படுக்கைக்கு அழைத்து வந்தனர். அந்த நேரம் பார்த்து விபத்து பற்றிய விவரம் அறிய அங்கே வந்த காவலர், லயாவிடம் விவரம் கேட்டார்.
எப்படி, எப்பொழுது விபத்து நடந்ததெனக் கேட்டவர், அவர்களது முகவரியைக் கேட்டறிந்து கொண்டார். பின்பு அவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து எங்கு யார் வீட்டுக்குப் பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்று வினவியருக்குப் பதிலளிக்கச் சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டாள் லயா.
“சார் நாங்க கோயமுத்தூர்ல அரங்கநாதன் வீட்டுக்கு போறோம்னு மட்டும் தான் தெரியும். முழுவிலாசமும் தெரியாது. அப்பாவுடைய போனுல தான் அவங்க விலாசம் இருக்கும்?” என்று அவள் கூறி முடிப்பதற்குள், சற்று அதிர்ந்து போய், “நீ.. நீ அரங்கநாதன் ஐயா வீட்டுப் பொண்ணா?” என்று கேட்டவர்.. மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று சில விவரங்கள் கூறினார்.
அதன் பின்பு அங்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று எதுவுமே புரியவில்லை லயாவிற்கு. அவளும் அம்மாவும் உடனே வேறு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையிலோ லயா ஒரு நோயாளியைப் போல அல்லாது, ஏதோ அவர்களுக்குப் படியளக்கும் மகாராணியே வந்தாற் போல அவ்வளவு கவனிக்கப்பட்டாள்.
ஆனால் அதையெல்லாம் ஊன்றிக் கவனிக்கும் மனநிலையில் லயா இல்லை. அவளுக்குக் கை எலும்பு முறிந்திருந்ததால், தனது கைக்கட்டுடனே தாயின் அறையில் சென்று அவருக்கு அருகில் அமர்ந்தவள், மெல்ல அவரது கையை எடுத்து தன் கன்னத்துடன் வைத்துக் கொண்டு அமைதியாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து அங்கே வந்த நர்ஸ் ஒருவர், “மிஸ். அபிரதி” என்று விளிக்கவும், கண்களை ஒருகணம் இறுக்க மூடியவள், ‘அபி இது உனக்காகத் தான்.. நீ சொன்னதுக்குக் கட்டுப்பட்டுத் தான் நான் இத சொல்றேன்’ என மனதிற்குள் எண்ணினாள் . பின்பு விழி திறந்து,..
“எஸ்… நான் தான் அபிரதி.. சொல்லுங்க” எனக் கேட்டாள்.
அதற்கு அந்த நர்ஸோ, “உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்துருக்காங்க” என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
‘யாரது? யார் எதற்காகத் தன்னைப் பார்க்க வேண்டுமென’ யோசித்தவாறே அவனுக்காகக் காத்திருக்கலானாள் அவள்.
அவளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல், தனது ஆறடி உயரத்தால் அந்த அறையை அளந்து கொண்டு கருநிற சர்ட்டும், காக்கி நிற பான்ட்டுமாகக் கண்ணிலிருக்கும் கூலரை இடக்கையால் கழற்றியபடி, உள்ளே வந்தான் அவன்.
அவன் உள்ளே வந்ததும், யாரை இனி வாழ்நாள் முழுதும் பார்க்கக் கூடாது என்று எண்ணினாளோ, அப்படி அவனைப் பார்க்காது இருப்பதினாலேயே அனுதினமும் அவன் நினைப்பிலே உயிர் கரைகிறாளோ, அவனே அவள் முன் வந்து காட்சி தரவும், அதிர்ந்து போய் மயங்கி விழுந்தாள் பேதையவள்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
அச்சோ இப்படியா ஆகணும் லயா என்ன பாவம் செஞ்சா 😔😔😔😔😔😔😔