எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அவசர அவசரமாய் ரயிலுக்குள் ஏறினார்கள் ஜானகியும் பத்மாவும். பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு பேத்தி மஞ்சுவும் ஏறினாள்.
பெட்டிக்குள் ஏறியதும்தான் தெரிந்தது, நடக்கும் இடத்திலெல்லாம் கூட ஜனங்கள் உட்கார்ந்திருக்கின்றனர் என்று. அத்துடன், பை, கூடை என்று நிறைய லக்கேஜ்கள் வேறு ஆங்காங்கே கிடந்தன. தாண்டித் தாண்டித்தான் போக வேண்டியிருந்தது. எங்கே இடம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டே நடந்தனர். எங்கும் இடமில்லை.
கடைசியில் ஒரு சிறுஇடைவெளி தெரிந்தது. அதுவும் அங்கே உட்கார்ந்திருந்தவர்கள் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தால்தான் ஒரு ஆள் உட்கார முடியும். மகள் பத்மாவை உட்காரச் சொல்லி சைகை காட்டினாள் ஜானகி, பத்மாவோ அம்மாவை உட்காரச் சொல்லி விட்டாள். கடைசியில் பக்கத்திலிருந்தவர்களை கொஞ்சம் நகர்ந்துகொள்ளச் செய்து பேத்தியை மடியில் உட்காரவைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள் ஜானகி.
ஜானகி கொஞ்சம் உடம்பு சதை போட்டவள். அதனால் பேத்தி மஞ்சு வழுக்கி வழுக்கிக் கொண்டு நழுவினாள்.
பாட்டியின் மடியிலிருந்தபடியே நின்றுகொண்டிருந்த அம்மாவைப் பார்த்து சிணுங்கியபடி சொன்னாள், ‘ அம்மா… ஜன்னல் சீட்டு… ’
அதே வரிசையின் ஜன்னலோர சீட்டில் ஒரு பெரியம்மா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். மஞ்சு கெஞ்சுவதை அவள் கேட்டிருக்கவேண்டும். நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டாள் அந்தம்மாள்.
எதிர்வரிசை ஜன்னலோர சீட்டில் ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. வெளியே வேடிக்கைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண், ‘ ஏ… வெளியே கையை நீட்டாதே… ’ என்று அதட்டுவதும் மொபைலை பார்ப்பதுமாயிருந்தாள்.
இதையெல்லாம் கவனித்த ஜானகியும் ஜன்னலோர சீட்டு கிடைக்காது என்று புரிந்து, பேத்தியை சமாதானப் படுத்தினாள்.
நின்றுகொண்டிருந்த பத்மாவும், ‘ குட்டிமா… அங்கே தூசி கண்ணுல படும்… அப்புறம் சளி பிடிக்கும்… பேசாம உட்கார்… ’ என்றாள்…
மஞ்சு ரொம்பவும் சிணுங்க ஆரம்பித்தாள். பத்மா ஏதேதோ சமாதானம் செய்து கொண்டே இருந்தாள். ஜானகியும் அவளை இழுத்து இழுத்து தன்னோடு சேர்த்து உட்காரவைக்க பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தாள்.
பெரியம்மா புத்தகம் படித்துக் கொண்டேயிருக்கிறாள். ஏதோ ஒரு குழந்தை ஜன்னலோர சீட்டு வேண்டும் என்று அடம் பிடிக்கிறதே என்று தெரிந்தும், கண்டும் காணாதது போல உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் இருக்கும் அந்தக் குழந்தை சந்தோஷமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது. யாரை கேட்கலாம்… ?
பெரியம்மாவை கேட்கலாமா… கொஞ்சம் இப்படி நகர்ந்தால் நம் பேத்தி ஜன்னலோரம் உட்கார்ந்து கொள்வாள். அவளோ, கண்டும் காணாததுமாய் புத்தகமே கண்ணாக இருந்தாள்.
அந்தக் குழந்தையின் பக்கம் திரும்பினாள். அதனிடம் கேட்கலாமா என்று இப்போது தோன்றியது. ஆனால் இரண்டு குழந்தைகளுக்குமே ஜன்னல் வேண்டுமே… அப்புறம் இருவரும் அடித்துக் கொண்டால்…? போட்டி போடுகிற சாக்கில் தடுமாறி கீழே விழுந்து விட்டால்… அந்த எண்ணத்தை மறுபடியும் கைவிட்டாள்.
வண்டி வேகம் குறைந்து… நின்றது. கொஞ்சம் குனிந்து பார்த்தாள் பத்மா. குளித்தலை வந்திருந்தது. சட்டென ஒரு பெரியவர் எழுந்தார். ஆனால் அங்கே ஏற்கனவே நெருக்கிக் கொண்டும் இடித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தவர்கள் இப்போது அப்படியப்படியே சரிசெய்து உட்கார்ந்து கொண்டனர். இப்போது அங்கே இன்னொருவர் உட்கார்ந்திருந்தார் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போனது.
பத்மாவும், ஒரு இடம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கடைசியில் ஏமாந்துதான் போனாள். வேறு யாரும் இறங்குவது போலவும் தெரியவில்லை. ரெயில் கிளம்பிவிட்டது.
திடீரென்று, ‘ ஏன்டி… என்னாச்சு… ‘ என்று ஒரு அதட்டல் சத்தம். அந்த ஜன்னலோரக் குழந்தை வாயைப் பொத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த அவளது அம்மாவையும் எதிர்சீட்டு பெரியம்மாவையும் மலங்க மலங்க விழித்தபடி பார்த்தாள். அந்தப் பெரியம்மா முறைப்பது போல பார்த்தாள். அந்தக் குழந்தைக்கு வாந்தி வருகிறது என்று புரிந்து போனது ஜானகிக்கு.
திடீரென, ’ உவ்வே… ’ என்றபடி கையை வாயிலிருந்து எடுத்தாள். அவ்வளவுதான், அவளது ஸ்கர்ட், சீட், ஜன்னல், எதிர் பெரியம்மாவின் கால், பக்கத்து ஜன்னல் என்று எல்லா திசையிலும் அவள் எடுத்த வாந்தி சிதறியது…
அந்தப் பெரியம்மா பதறி எழுந்து கொண்டாள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவளது அம்மாவும் பதறியபடி குழந்தையின் தலையைப பிடித்துக் கொண்டாள். மறுபடியும் வாந்தி எடுத்தாள் அந்தக் குழந்தை.
பதறினாள் ஜானகி. அதன் அம்மாவிடம் ‘ ஏம்மா… ஒரு துண்டை எடுத்து பிடிம்மா… பார்… அந்த பாப்பாவோட ஸ்கர்ட்லாம் வீணாவுது… ’ என்றாள்.
‘ தண்ணி எடுத்து முகத்தை துடைச்சி விடுமா…’ என்றாள் இன்னொரு பெண்மணி.
அந்தக் குழந்தையை அப்படியே அள்ளி தூக்கிக் கொண்டு எழுந்தாள் அவளது அம்மா. அந்த இடம் அப்படியே சகிக்க முடியாமல் கிடந்தது. எல்லோரும் கொஞ்சம் விலகி விலகி உட்கார்ந்தார்கள். லேசாய் வாடையும் அடித்தது. சிலர் முகத்தையும் சுழித்துக் கொண்டார்கள்.
அந்தப் பெரியம்மாவின் கால்வைக்கும் இடமும் அசிங்கமாகிப் போக, அதைப் பார்த்தபடியே உட்காராமல் மேலே சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டே வந்தாள். கொஞ்ச நேரத்தில் நகர்ந்து போனாள். பாத்ரூம் போகிறாளோ என்று நினைத்துக் கொண்டாள் ஜானகி.
ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். சிலநிமிடங்களில் அந்தப் பெரியம்மா கைகளைத் துடைத்தபடி திரும்பி வந்தாள். ஆனால் அந்தம்மாவுக்கு அங்கே உட்கார மனது வரவில்லை. அந்த இடம் காலியாகவே வந்தது. கால் வைக்கும் இடம் அசிங்கமாய் இருந்தது.
வண்டி வேகம் குறைந்து குலுங்கி நின்றது. ‘ சித்தலவாய் ‘ என்றது வெளியே இருந்த ஒரு மஞ்சள் போர்டு. மக்கள் முட்டிக்கொண்டு ஏறி உள்ளே வந்தனர். அந்தக் குழந்தை உட்கார்ந்திருந்த இடம் அசிங்கமாயிருந்தாலும், பக்கத்தில் அவளது அம்மா உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. ஆனாலும் அந்தப் பெண் வந்துவிடுவாள் என்று பத்மா அங்கே உட்காரவில்லை. ஆனால் கையில் இரண்டு பைகளுடன் உள்ளே வந்த ஒரு பெரியம்மா சட்டென அந்த இடந்தில் உட்கார்ந்து கொண்டாள். யாரும் எதுவும் சொல்லவுமில்லை.
மகளை சுத்தப்படுத்தி இழுத்துக் கொண்டு சாவகாசமாக உள்ளே அந்த அந்த பெண் சீட் காலியாக இல்லை என்றதும் சுரத்திழந்து நின்று கொண்டாள். அந்தக் குழந்தையும் அம்மாவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டது.
தான் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தது அந்தக் குழந்தை. பிறகு அம்மாவையும் அந்த பெரியம்மாவையும் மாறி மாறி பார்த்தது.
‘பாட்டியப் பிடிச்சுக்கோ… ‘ என்று அந்த பெரியமம்மாவிடம் தள்ளி விட்டாள் அந்த பெண். அப்போதுதான் புரிந்தது அந்தம்மாள் அந்தக் குழந்தையின் பாட்டி என்று. ஆனால் அம்மாவழி பாட்டியா அல்லது அப்பாவழி பாட்டியா என்று தெரியவில்லை. அவளோ முகத்தை சுழித்தபடி, ஒரு கையில் கம்பியையும் மறுகையில் குழந்தையையும் பிடித்துக் கொண்டு நின்றாள்.
‘ பிரயாணம் போறோம்… குழந்தைக்கு மூக்கு முட்ட சோத்தைக் ஊட்டலாமா… ’ முகத்தைச் சுழித்தாள் அந்த பெரியம்மாள்.
‘ இல்லே அத்தே… கொஞ்சமாத்தான் கொடுத்தேன்…’ என்றாள் இந்தப் பெண்.
இப்போதுதான் புரிந்தது அது அவளது மாமியாராக இருக்கவேண்டும் என்று. எல்லோரும் மூக்கைப் பிடித்துக்கொண்டே வந்தனர்.
ஜல்லலோர சீட்டு வேண்டும் என்று சிணுங்கிக் கொண்டிருந்த மஞ்சு, இப்போது சினுங்களை விட்டுவிட்டு அந்தக் குழந்தையை பார்த்துக் கொண்டே வந்தாள்.
அந்தக் குழந்தையும் மஞ்சுவைப் பார்த்துகொண்டே வந்து ஒரு சமயம் சிரித்தது. உடனே மஞ்சுவும் சிரித்தபடி, ‘ உன் பெயர் என்ன ‘ என்றாள்.
‘ ஷிவானி ‘ என்றது அந்தக் குழந்தை. உடனே ‘ உன் பெயர் என்ன ‘ என்று இவளிடம் திருப்பிக் கேட்டாள்.
‘ என் பெயர் மஞ்சு ‘ என்றுவிட்டு நிமிர்ந்து பாட்டியைப் பார்த்தாள்.
‘ பாட்டி நான் இறங்கி அம்மாவோட நின்னுக்கறேன்…. பாவம் அந்த பாப்பா… உடம்பு சரியில்லாம இருக்காள்ல… நின்னுக்கிட்டே வர்றா. நீங்க ஷிவானியைத் தூக்கி மடியில வச்சிக்கறீங்களா…’ என்றுவிட்டு மடமடவென பாட்டியின் மடியிலிருந்து இறங்கியும் கொண்டாள்.
திகைப்புடன் பார்த்த ஜானகி, ஷிவானியைப் பார்த்து கையை நீட்டினாள். அவள் தனது அம்மாவைப் பார்த்தாள். ‘போ‘ என்பது போல அவள் ஜாடை செய்ய, ஓடிவந்து ஜானகியுடன் ஒட்டிக்கொண்டாள். ஜானகி அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
கரூர் போய்ச் சேரும்வரை அம்மாவுடன் மஞ்சு சேர்ந்து நின்றுகொண்டே வர, ஜானகியின் மடியில் ஷிவானி ஹாயாக வர, அந்த இரண்டு ஜன்னலோர சீட்டுகளும் காலியாகவே வந்து சேர்ந்தன.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings