2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“உங்க பொண்ணுக்கு ஜாதகத்துல அரசு வேலை இல்லை. அதனால அதுக்காக முயற்சி எடுக்காம அவ படிச்ச துறையில் எதாவது வேலைக்கு முயற்சிக்கலாம்”
ஜோசியர் இப்படி கூறியதும் அமிர்தாவின் அம்மா லட்சுமிக்கு மனம் உடைந்தது
“இரண்டு வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கா.. இப்போ எப்படி அவகிட்ட வேணாம்னு சொல்றது”
“நீங்க சொல்லிடுங்க.. பொண்ணு ஜாதகத்துல அரசு வேலை கிடைக்கும் யோகம் இல்லை”
“எதாவது பரிகாரம் பண்லாமா சாமி..”
“நவகிரகங்களுக்கு செவ்வாய் சுக்கிரனுக்கு திங்கட்கிழமைல விளக்கு போடுங்க.. பொண்ணு மனம் மாறி வேற வேலைக்கு போவ”
“அப்போ அரசாங்க உத்தியோகம்”
“பொண்ணு ஜாதகத்துக்கு கிடைக்காது. திருமணம் முடிஞ்சி கணவர் ஜாதக பலன்ல இருக்கானு அப்புறம் தான் பார்க்க முடியும்”
அமிர்தவிடம் இதை எப்படி கூறுவது லட்சுமி பரிதவித்தாள்.
“அடுத்து எக்ஸாம் எப்போ அமிர்தா?” வீட்டிற்கு வந்த லட்சுமி தன் மகளிடம் மெல்ல பேச ஆரம்பித்தாள்
“இன்னும் நாலு மாசத்துல வருதுமா”
“உன்னால முடிலைன்னா நீ கஷ்டப்பட்டுலாம் படிக்க வேண்டாம். வேற வேலை பார்த்துக்கலாம்” இப்படி லட்சுமி கூறியதும் அமிர்தா அதிர்ந்தாள்.
“என்னம்மா இப்படி சொல்லிட்ட…. அரசு வேலைய என் லட்சியமா நினைச்சி நான் அதுக்காக போராடிட்டு இருக்கேன். உனக்கும் தெரியும்ல, இப்போ என்னமா இப்படி சொல்ற”
“எழுதுற எல்லார்க்கும் வேலை கிடைக்கும்னு சொல்ல முடியாதுல அமிர்தா. இன்னிக்கு கூட செய்தில சொன்னாங்க நூத்துல எட்டு பேருக்கு தான் வேலை கிடைக்குதாம்”
“அதெல்லாம் சும்மா எழுதறவங்க.. நான் இதுக்காக முழுநேரம் முயற்சி பண்றேன் எனக்கு கிடைக்கும்மா”
“இல்லை அமிர்தா உனக்கு ஜாதகம் பார்த்தேன். உன் ஜாதகபடி பார்த்தா உனக்கு அரசு வேலை இல்லன்னு சொல்றாங்க”
அமிர்தா கலங்கினாள்.
“என்னம்மா சொல்ற.. எதுக்கு நீ இப்போ ஜாதகம் பாத்துட்டு வந்த”
“எனக்கு அது மேல நம்பிக்கை.. நீயும் ரெண்டு வருஷமா எழுதிட்டே இருக்க.. ஒன்னும் நடக்கலையே”
“ரெண்டு வருஷம் தானா மா ஆச்சு.. ஒவ்வொருத்தரும் எத்தனை வருஷம் முயற்சி பண்ணி வேலை வாங்கிறாங்கன்னு உனக்கு தெரியுமா.. அதும் நான் போன எக்ஸாம்ல கம்மி மார்க் வித்தியாசத்துல தான் விட்டேன். அடுத்தமுறை எழுதி கண்டிப்பா வாங்கிடுவேன் மா.. இன்னொரு எக்ஸாம்க்கு இன்னும் ரிசல்ட் வரல அதும் நல்லா பண்ணிருக்கேன்.. பாக்கலாம் மா”
“எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பணை இருக்கனும் அமிர்தா. உன் ராசிப்படி உனக்கு அமையாதுன்னு சொல்றாங்க”
“அந்த கிரகங்கள் நம்ல ஆட்டி படைக்கிறதாவே இருக்கட்டும். ஜாதகம் உண்மையாவே இருக்கட்டும். எல்லாத்தையும் மீறி என் உழைப்புன்னு ஒன்னு இருக்குல்ல மா..”
“உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும் அமிர்தா”
“மொத்தத்துல என் மேல நம்பிக்கை இல்ல உனக்கு”
“உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனால் நம்ல மீறி ஒரு சக்தி இருக்குல்ல.. நம்ம விதில இருக்கனும் அமிர்தா”
“அந்த விதி மேல எனக்கும் நம்பிக்கை இருக்கு. இதுதான் உன் விதின்னு இன்னொரு மனுஷன் சொல்றது தான் நம்ப முடில”
“ஜாதகபலன் உண்மை அமிர்தா”
“நல்லதா சொல்லிருந்தா உண்மைன்னு நம்பிருப்பேன். இப்போ நம்பிக்கை இல்லை”
“அமிர்தா.. அதெல்லாம் பேசாத.. நீ தேர்வுக்கு முயற்சி பண்ணது போதும்”
இருவரும் விவாதித்து கொண்டிருக்கும்பொழுது அமிர்தாவின் அலைபேசி ஒலித்தது. மூன்று மாதத்திற்கு முன் எழுதிய தேர்வின் முடிவு வெளியானது என்று கூறினாள் அமிர்தாவின் தோழி
அமிர்தா வேக வேகமாக இணையத்தில் தன்னுடைய தேர்வு எண்ணைப் போட்டுப் பார்த்தாள். கைகள் நடங்கியது. பரபரப்பாக தேடினாள். இணையம் வேறு மெதுவாக வேலை செய்தது. அவளால் இருப்பு கொள்ள முடியவில்லை. அலைபேசியுடன் போராடினாள். வழக்கமாய் பார்ப்பதை விட வேகமாக பார்த்தாள்.
கண்டு கொண்டாள். அமிர்தாவின் எண்ணை சரிபார்த்தபொழுது ‘கங்கிராஜூலேசன்’ என்றிருந்தது. தேவையான கட் ஆஃப் மதிப்பெண்ணை விட அதிகமாகப் பெற்று அவள் தேர்வில் வென்று அவளுக்குப் பிடித்த வேலையை உழைத்து வாங்கி விட்டாள்.
அம்மாவிடம் ஓடிச் சென்று இதை கூறிவிட்டு கட்டியணைத்து கொண்டு அழுதாள் அமிர்தா லட்சுமியின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து ஓடியது.
‘இந்நேரம் தவறான முடிவு எடுத்திருப்போமே. எப்படி இரவு பகல் பாராமல் படித்த தன் மகளையே நம்பாமல் செய்து விட்டது ஜோசியம். நல்லவற்றிற்காக பார்க்கலாம் இப்படி என் பெண்ணின் திறமையை சந்தேகப்பட்டு பார்த்து விட்டேனே’ என நினைத்து அழுதாள். தன் தவறை உணர்ந்தாள் லட்சுமி.
அமிர்தாவை இறுக அணைத்துக் கொண்டாள். இருவருமே அந்த நொடி வெற்றி பெற்றவர்கள் ஆனார்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings