2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘என்னடா இவ்வளவு நேரமாகுது… ‘ என்றாள் காந்திமதி.
இத்துடன் ஐந்து முறையாவது புலம்பி இருப்பாள் அவள். தனக்கு பொறுமை இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் அப்படி சொல்லிக் காட்டினாள். இப்போது ராஜா கொஞ்சம் கோபப்பட்டான்.
‘அம்மா… முதல்ல கொஞ்சம் மெதுவா பேசு… சத்தமா பேசாத. நிறைய பேரு இருக்காங்கள்ல… ரெண்டாவது, ஒரு இடத்துக்கு வந்தா பொறுமையா காத்திருக்கணும்… சுடுது மடியை பிடின்னு ஓடமுடியுமா… நாம வரும்போதே ஆறு பேர் இருந்தாங்க. நாம ஏழாவது ஆளு… நீ முதல்ல அதைப் புரிஞ்சுக்கோ… ‘ என்றான் கொஞ்சம் தணிவான குரலில்.
கையில் இருந்த ஜாதகக் குறிப்பை ஒருதடவை பார்த்துக்கொண்டான். சுற்றிலும் இருந்தவகளையும் பார்த்துக்கொண்டான். ஜோசியர் உள்ளே பேசிக்கொண்டிருந்தார்.
xxxxx
ஒரு மாதமாக ராஜாவுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தெரிந்த நபர்கள் மூலமாகவும் தரகர் மூலமாகவும் ஐந்தாறு ஜாதகங்கள் வந்தன. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஜோதிடர் இருக்கிறார் என்று அவரிடம் ஜாதகங்களைக் காட்டினார்கள். ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி எல்லா ஜாதகங்களையும் நிராகரித்து கொண்டே இருந்தார் அவர்.
காந்திமதி இதுபற்றி நெருங்கிய சிநேகிதியிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான், அந்தம்மாள் ‘ எனக்கென்னவோ காந்தி, சந்தேகமா இருக்கு… அதுக்குன்னு எல்லா ஜாதகமுமேவா சரியா இல்லை. ஒண்ணுகூடவா பொருந்தாம போகுது…? பேசாம ஜோதிடரை மாத்திப் பாறேன்… ‘ என்று போட்டு வைத்தார்.
காந்திமதி முதலில் மறுத்தாள், ‘ இல்லே மாலாக்கா… நம்ம சுமதிக்கு அவர்தான் பொருத்தம் பார்த்துக் கொடுத்தார். மூணாவது ஜாதகமே பொருந்தி போச்சு. இப்போ அவ நல்லாத்தானே இருக்கா… நமக்கு சுத்த சாதகமா கிடைக்கலேன்னா ஜோதிடர் என்ன பண்ணுவார்… ‘
அந்தம்மா கொஞ்சம் பிடிவாதம் காட்டினார். ‘ இல்லே காந்தி… எனக்கென்னவோ வேற ஜோதிடரை பார்த்தா நல்லதுன்னு தோணுது… காந்திநகர்ல ஒருத்தர் இருக்கார். பேங்க்ல வேலை பண்ணிகிட்டே ஜோதிடமும் பார்த்திட்டிருந்தார். இப்போ ரிடையர் ஆகிட்டு முழுநேரமும் பார்க்கறார். பதினஞ்சு வருஷமா பார்த்துக்கிட்டிருக்கார்னா பார்த்துக்கோயேன். சிவப்பா பழுத்த பழம் மாதிரி இருப்பார். நல்லா பார்க்கறார்னு நிறைய பேர் சொல்லக் கேள்விபட்டிருக்கேன்… முடிஞ்சா ஒரு தடவையாவது போய் பாரேன்… அவர் நல்லா சொல்றாரான்னு பார்ப்போம்… அப்புறம் உன் இஷ்டம்…. ‘ என்றுவிட்டு நகர்ந்து கொண்டார் அந்தம்மா.
அதற்குப் பிறகுதான் அங்கே இங்கே விசாரித்து இந்த ஜோதிடரை தேடி வந்திருக்கிறார்கள். வருவதற்கு முன்பே ராஜா ஒரு ஐடியா கொடுத்தான், ‘அம்மா அந்த பழைய ஜாதகங்களையும் எடுத்துக்கிட்டு போகலாமாம்மா… அதையெல்லாம் இன்னொருமுறை பார்க்கலாமே… ‘
உடனே மறுத்தாள் காந்திமதி. ‘ வேண்டாம்டா… ஜாதகம் பொருந்தலைன்னு எல்லாத்துக்கும் கூப்பிட்டுச் சொல்லியாச்சு… இப்போ திரும்பவும் அதுகளை ஏன் பார்க்கணும்… போனது போனதாவே இருக்கட்டும்…’
அவனுக்கோ மனது கேட்கவில்லை. அதில் ஏதாவது பொருந்திவந்தால் தனக்கு கல்யாணம் ஆகிவிடுமே என்று உள்ளுக்குள் ஒரு நைப்பாசை அவனுக்கு. அவளோ பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.
இப்போது காத்திருக்கிறார்கள். இவர்கள் போனதற்கப்புறம் மூன்று பேர் பார்த்துவிட்டு போய் விட்டார்கள். நான்காவதாக உள்ளே போனவர்கள், ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அப்போதுதான் வெளியே வந்தனர். சட்டென எழுந்தாள் காந்திமதி.
அதற்குள் எழுந்துகொண்ட இன்னொரு அம்மா கதவருகில் போய்விட்டார். காந்திமதியும் எழுந்து கூடவே வந்துவிட்டதைக் கவனித்த அந்தம்மா, திரும்பிப் பார்த்து… ‘ ஏங்க… நான் ஒரு மணிநேரமா காத்திருக்கேன்… நீங்க எனக்கப்புறமாத்தானே வந்தீங்க… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… வரிசைப்படிதானே போகணும்… ‘ என்றார் கொஞ்சம் காட்டமாக..
காந்திமதி கொஞ்சம் கோபம் கொண்டாள். ‘அம்மா… நான் பின்னாடிதான் வந்தேன் இல்லேங்கலை… ஆனா நான் பொருத்தம் மட்டும்தான் பார்க்கணும். அதிகபட்சம் அஞ்சு நிமிஷம்… எல்லாத்தையும் போல நான் கால் மணி நேரம் அரை மணி நேரமெல்லாம் எடுத்துக்க மாட்டேன்… அத்தோட எனக்கு அவசர சோலி இருக்கு. கொஞ்ச சீக்கிரம் போகணும்… ‘ என்றாள்.
அந்தம்மாவும், ‘ ஏம்மா நானும் பொருத்தம்தாம்மா பார்க்க வந்திருக்கேன். எனக்கும் அஞ்சு நிமிஷம்தான் ஆகும். அதுவும் பொருத்தமில்லைனா ரெண்டு நிமிஷமோ… மூணு நிமிஷமோ… உடனே வந்துடுவேன்… உங்களுக்கு முன்னாடி வந்தவங்களும் உட்கார்ந்திருக்காங்க. ஒருவேளை அவங்க பர்மிஷன் கொடுத்தா போய்க்கோங்க… முதல்ல நான் போறேன் ‘ என்றுவிட்டு கதவைத் திறக்க முற்பட்டார்.
தனது அம்மாவின் கையைப் பிடித்து ‘ பொறுமையம்மா ‘ என்று முகத்தைச் சுளித்தான். அவளோ அதை உதாசீனப் படுத்திவிட்டு பதிலுக்கு அந்தம்மாவிடம் கத்தினாள்.
‘ஏம்மா… எனக்கு கொஞ்சம் அவசரம்மா… சொன்னா புரிஞ்சுக்கோங்களேன்… ‘ என்று எரிச்சலாக சொல்லிக்கொண்டு முந்திக்கொண்டு போய்கதவைத் திறக்கப் போனாள் இவள். ராஜா எட்டி அவளது கையைப் பிடித்து இழுத்தான்.
‘அம்மா சொன்னா கேட்கமாட்டியா… மானத்தை வாங்காதேமா… வந்து உட்கார்… ‘
‘ஏன்டா… நான் இவ்வளவு சொல்லியும் கொஞ்சம் கூட கேட்காம இந்தம்மா அப்படி பேசுது… ‘
அதற்குள் பின்னால் இருந்து ஒருவர் கத்தினார். ‘ ஏங்க… ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் உள்ளே போறீங்களா… இல்லே நான் போகட்டுமா…’
அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்தம்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் விட்டார். காந்திமதி திட்டிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்துவிட்டாள். ராஜா வேதனைப்பட்டான். ‘ஏம்மா… நாம முன்னால போகணும்னா கொஞ்சம் கெஞ்சித்தான்ம்மா கேட்டுக்கனும்மா… அராஜகமா பேசக்கூடாது… ’
முனுமுனுத்துக்கொண்டே பொறுமை இல்லாமல் உட்கார்ந்திருந்தாள் அவள். ராஜா அவளது தொடையில் அழுத்தி… கொஞ்சம் பேசாம இரு என்பது போல சைகை செய்தான்.
நான்கு நிமிடங்களில் உள்ளே போன அந்தம்மா புன்னகையுடன் வெளியே வந்தார். கூடவே… ‘அப்பாடா… கடைசியில இதுதான் பொருந்தி வந்திருக்கு…‘ என்று சொல்லிக்கொண்டே நடந்து போனார் அந்தம்மா. உதட்டைச் சுளித்துக் காட்டிக்கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டாள் காந்திமதி.
முன்பு குறுக்கிட்டு பேசியவர்… ‘இந்தாங்க தம்பி… அடுத்தது நாந்தான் போகணும்… ஆனா, நீங்க ஏதோ அவசரம்னீங்க… சட்டுன்னு எழுந்து போங்க… ‘ என்றார். ராஜா சட்டென எழுந்தான். அம்மாவை தட்டினான். அதற்குள் அவளது மொபைலில் யாரோ கூப்பிட்டார்கள்.
‘ நீ போடா… நான் அப்புறமா வர்றேன்… அந்தம்மாவுக்கு வக்காலத்து வாங்கினேல்ல… ’
‘ அம்மா வாம்மா… ‘ என்றான் மறுபடியும்.
‘ நீ போ… நான் பேசிட்டு அப்பால வாறன்… ‘ என்று திரும்பிக் கொண்டாள்.
வேறு வழியின்றி, கொஞ்சம் முறைத்து, ‘ சட்டுன்னு வா…’ என்றுவிட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
சிலநோடிகளிலேயே திரும்பிவிட்டான். கதவைத் திறந்துகொண்டு ராஜா வெளியே வரவும் காந்திமதி எழுந்து உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
‘ ஏன்டா அதுக்குள்ளே வந்துட்டே…’ என்றாள்.
‘ பொருத்தம் சரியில்லேம்மா…’ என்றான்.
‘அடக் கடவுளே… என்னவோ மாலாக்கா சொன்னா, ஜோதிடரை மாத்துனா ஜாதகம் பொருந்தும்னு… ‘ என்றாள்.
இருவரும் மொபெட்டில் கிளம்பினார்கள். ராஜா நினைத்துப் பார்த்துக் கொண்டான்.
இவன் உள்ளே போனதும், ஜாதகத்தை வாங்கிப் பார்த்த ஜோதிடர் சிரித்தார்.
‘என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்… இப்போத்தான் ஒரு அம்மா இதே ஜாதகத்தை கொண்டுவந்து பார்த்துட்டு போகுது… அவங்க பொண்ணுக்காக வந்து பார்த்தாங்க… இப்போ நீங்க கொண்டு வந்து பார்க்கறீங்க… அப்போ நீங்கதான் அந்த பையனா… ‘ புன்னகைத்தார் அவர். ‘ ஒன்பது பொருத்தம் இருக்கு தம்பி… ‘ என்றார்.
இவன் பணத்தைக் கொடுத்துவிட்டு உடனே திரும்பிவிட்டான்.
‘அம்மா… ‘
‘என்னடா… ‘
‘உள்ளே போறதுக்காக நீ சண்டைப் போட்டியே, அவர்தான் நாம பார்க்கவந்த பொண்ணோட அம்மா… ‘
‘அதான் போருந்தலைன்னு சொன்னியே… அவள் மூஞ்சியும் அவளும்… ‘
‘சண்டைப் போட்டுவிட்டு அவளிடம் பெண் கேட்டால் சிரிக்க மாட்டார்களா… முதல்லே சம்பந்தி பொருத்தமே சரியில்லை… ‘ அவன் நினைத்துக் கொண்டான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings