in ,

இன்றைய முக்கியச் செய்தி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

       அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்து வாசல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கும் கூடத்திற்குமாய் குட்டி போட்ட பூனையைப் போல் நடந்து கொண்டிருந்தான் பாலு.

      “டேய்… பாலு!… என்னடா இது அதிசயமா இருக்குது?… ஏழரை மணிக்கு முன்னாடி இடியே விழுந்தாலும் எந்திரிக்காத நீ.. இன்னிக்கு அஞ்சரை மணிக்கே எந்திரிச்சு…. நடமாடிக்கிட்டிருக்குறே?… என்ன ஆச்சு உனக்கு?” அவன் தாய் கிண்டலாய் கேட்க.

      “எல்லாம் இந்த எதிர் வீட்டுக்காரன்னாலே!” என்று எரிச்சலுடன் சொன்னான்.

      “யாரு?… கோபால் அண்ணனையா சொல்றே?… அவரு என்னடா பண்ணினாரு உன்னைய?”. கண்களைச் சுருக்கிக் கொண்டு அம்மா கேட்டாள்.

      “பேப்பர்க்காரன் வந்து பேப்பர் போட்டா… மின்னல் வேகத்துல பாய்ஞ்சு வந்து… உடனே தூக்கிட்டு போயிடறாரு!… சரி… எடுத்திட்டுப் போனவரு சீக்கிரமா கொண்டு வந்து குடுக்கிறாரா?… அதுவுமில்லை!…ஒன்றரை… அல்லது… ரெண்டு மணி நேரம் இல்லாமத் திருப்பி கொண்டு வருவது இல்லை!… ஏம்மா… நான் கேட்கிறேன்… நாம பேப்பர் நமக்காக வாங்குறோமா?… இல்லை அவனுக்காக வாங்குறோமா?”. பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான் பாலு.

      “டேய்… டேய்… விடுடா… விடுடா… அப்படியெல்லாம் பேக் கூடாதுடா!… அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்கெல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க!… நாமதாண்டா அனுசரிச்சுப் போகணும்?… இது ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் வரிஞ்சு கட்டிட்டு நிக்கிறியே!”.

      “அது சரி…. பேப்பர் விழுந்ததும் முதல் ஆளாத் தூக்கிட்டு ஓடிடறான்!…  நான் ஏழு மணிக்கு எந்திரிச்சு வந்து தேடினால் இருக்காது!…. எனக்கு ஏழிலிருந்து ஏழரை வரைக்கும்தான் ஃப்ரீ…. டைம்!… அதுக்கப்புறம் எனக்கு காலேஜுக்கு கிளம்பவே நேரம் சரியா இருக்கும்!… அதுக்குள்ளார ஒரு பார்வை பார்த்திடலாம்னா… இவன் விட மாட்டேங்கிறானே?”.வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் குத்துக் கொண்டு சொன்னான் பாலு.

      “அப்ப இனிமே ஒண்ணு செய்…. பேப்பர்க்காரன் ஆறு மணிக்கு தானே பேப்பர் போடுகிறான் அவருக்கு முன்னாடி நீ முந்திட்டு போய் எடுத்திடு என்ன…?”.

      “கரெக்ட்!…. அதுக்காகத்தான் இன்னிக்கு நேரத்துல எந்திரிச்சு வாசலையே பார்த்திட்டிருக்கேன்!” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பேப்பர்க்காரனின் சைக்கிள் பெல் சப்தம் கேட்டது.

      “ஓடு… ஓடு பேப்பர்க்காரன்…. வந்துட்டான்… ஒடு!” அம்மா துரத்த பாலு அவசர அவசரமாக வாசலுக்கு ஓடினான்.

     அவனுக்கு முன்னால் பேப்பரை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நிதானமாய் நடந்து கொண்டிருந்தான் எதிர் வீட்டு கோபாலன்.

     உள்ளங்கையை ஓங்கிக் குத்திக் கொண்டான் பாலு.

     மறுநாள் அசதியால் சற்றுத் தாமதமாக எழுந்த பாபு பாலுவால் அன்றும் பேப்பரைக் கைப்பற்ற முடியவில்லை.  “ஆண்டவா…. இதுக்கு விமோசனமே இல்லையா?… இந்த வீட்டில என்னைத் தவிர யாருக்குமே இது ஒரு பெரிய விஷயமாகவே தோணலையா?… ம்ஹும்… விடக் கூடாது!…. நாளைக்காவது அந்த ஆளை ஜெயிக்கணும்!” மனசுக்குள் கருவினான்.

     மாலை ஆறு மணியிருக்கும். வீட்டிற்குள் நுழைந்த பாலு “அம்மா… என்னம்மா எதிர் வீடு பூட்டியிருக்கு?” என்று சந்தோஷமாய்க் கேட்டான்.

      “அதுவா?… ஊர்ல யாருக்கோ உடம்பு சரியில்லையாம்…. சீரியஸாம்… தகவல் வந்தது எல்லோரும் கிளம்பிப் போயிருக்காங்க!”.என்றாள் அம்மா.

      “அப்ப… நாளைக்கு அந்த ஆளு எனக்குப் போட்டியா பேப்பர் எடுக்க வர மாட்டான்… அப்படித்தானே?” என்றான் பாலு சிரித்தபடி.

      “ச்சீய்… சரியான அல்பம்டா நீ!” அவனை திட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தாள் அவன் தாய்.

     எப்படியும் தனக்கு இன்று போட்டியில்லை என்கிற தைரியத்தில் ஏழு மணி வாக்கில் நிதானமாய் எழுந்து வந்து பேப்பரைத் தேடிய பாலு துணுக்குற்றான். எதிர் வீடு திறந்திருந்தது.  உள்ளே அந்த கோபாலன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாய்ப் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். “அடப்பாவி”.

      “அம்மா… அம்மா”. கத்தியவாறே வீட்டிற்குள் வந்தான் பாலு.

      “என்னடா?… எதுக்குக் கத்தறே?” கையில் கரண்டியுடன் வந்தாள் அம்மா.

      “எதிர் வீட்டைக் காட்டினான்.

      “ஓ… அதுவா?… கோபால் அண்ணன்… சம்சாரத்தையும், குழந்தைகளையும் ஊர்ல விட்டுட்டு, தான் மட்டும் ராத்திரி கடைசி பஸ் பிடிச்சு… அதிகாலையில் வந்து சேர்ந்துட்டாருடா!” என்றாள்.

      “யாருக்கோ சீரியஸ்னு போனாங்களே?”.

      “ஆமாம்… இன்னும் இழுத்துக்கிட்டிருக்காம்!… எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள் தாங்குமாம்!”.

     “பரதேசிப்பயல்… பேப்பர் எடுக்கணும் என்பதற்காகவே ராத்திரியே கிளம்பி வந்திருப்பான் போலிருக்கு!”.

      “இப்படியெல்லாம் பேசாதடா பாலு!” அதட்டினாள் தாய்.

      “க்கும்… ஆளாளுக்கு என்னையே அதட்டுங்க!… யாராவது ஒருத்தர் அந்த ஆளை ஒரு வார்த்தை கேட்டிருக்கீங்களா?”.

      “அடப் போடா… உன்கிட்டவெல்லாம் பேசவே முடியாதுடா!” மீண்டும் சமையலறைக்குள் சென்றாள் அவன் தாய்.

     அடுத்த பத்து நாட்கள் காலேஜ் இண்டஸ்ரியல் விஸிட்டிற்காக வெளியூர் சென்றிருந்த பாலு, அன்று காலை நாலு மணிக்கு வீட்டில் இறக்கி விடப்பட்டான்.

      அசதியோடு படுத்தவனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். உடம்புதான் வலித்ததே தவிர உறக்கம் வரவில்லை.

     காலை ஆறேகால் மணிவாக்கில் அவன் அறைப் பக்கம் வந்த அவன் தாய்,  “என்னப்பா தூங்கலையா?” நிதானமாய்க் கேட்டாள்.

     “உடம்பு வலி தாங்க முடியலைம்மா… தூக்கமே வர மாட்டேங்குது!”.

     “அப்படியா?… இரு சூடா ஒரு டீ கொண்டு வந்து தர்றேன்!” அவன் தாய் நகர, வெளியில் பேப்பர்க்காரன் சைக்கிள் பெல் சத்தம் கேட்டது. அனிச்சையாய் எழுந்து வேகமாக ஓடிப் போய் வெற்றிகரமாய் பேப்பரைக் கைப்பற்றினான் பாலு.

      “வெற்றி… வெற்றி” என்று மனதிற்குள் கூவிக் கொண்டு, முகமலர்ச்சியுடன் எதிர் வீட்டை பார்த்தான்.  “என்னது… அந்த ஆளைக் காணோம்?… அவனும் எங்காவது வெளியூர் போயிட்டானா?… அப்படியே போனாலும் பேப்பரை எடுப்பதற்காகவே ராத்திரி கடைசி பஸ்ஸைப் பிடிச்சு வந்து சேர்ந்திடுவானே?” யோசனையுடன் உள்ளே வந்து தாயிடம் கேட்டான்.

      “அட… அதை ஏன் கேட்கிறே?… முந்தாநாள் சைக்கிள்ல போய்க்கிட்டிருந்த நம்ம கோபால் அண்ணனை ஒரு லாரிக்காரன் இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டான்!… பாவம்…. மனுஷன் மூணு நாளா சுயநினைவு திரும்பாம எமர்ஜென்சில கிடக்காரு!”.

     அதிர்ந்தான் பாலு. ”அடப்பாவமே!….” அவனையுமறியாமல் ஒரு இரக்க உணர்ச்சி அவன் உள்ளத்தில் சுரந்தது.

     அன்று மாலையே அந்த கோபாலன் அமைதியாய் தன் மூச்சை நிறுத்திக் கொள்ள, எதிர் வீடு இழவுக் கோலம் பூண்டது. மாலை தொடங்கிய ஒப்பாரிச் சத்தம் இரவு முழுக்க அந்த தெருவில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

     மறுநாள் காலை ஆறு மணிக்கு பேப்பர்க்காரன் போட்டு விட்டுச் சென்ற பேப்பர் எடுப்பாரற்றுக் கிடந்தது.  ஏனோ பாலுவுக்குக் கூட அதை எடுத்துப் படிக்கும் ஆவல் குறைந்து விட்டிருந்தது.

            நேற்று வரை சூடான செய்திகளுக்காக தாவி வந்து எடுத்த கோபாலன் இன்றைய பேப்பரில் “லாரி மோதி ஒருவர் சாவு” என்ற தலைப்புச் செய்தியாகி விட்டிருந்தான்.

            அதனால் தானோ என்னவோ அவனும் அதை எடுக்க வராமல் சவமாய்க் கிடந்தான்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயர்ந்த பாராட்டு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நாம்… நமது! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை