எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கவிதாவிற்கு மேல் மூச்சு, கீழ்முச்சு வாங்கியது. இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அந்த ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.
திரும்ப ஒருமுறை உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள். விரல்களெல்லாம் சிவந்து போயிருந்தது. அடித்த எனக்கு இப்படி கை சிவந்து போய் வலிக்கிறதென்றால் அடி வாங்கிய அந்த டாக்டர் கல்லூரி முதல்வருக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணியபோது, எரிச்சலும் படபடப்பும் கலந்தபோதும் ஒரு மூலையில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
எவ்வளவு தைரியுமிருந்தால் என்னிடம் இவ்வளவு கீழ்த்தரமாக பேசியிருப்பான். பணம் கொடுத்தால்தான் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.
சே! எவ்வளவு கேவலமான நாயைவிட மோசமான மிருகமாக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே கேட்டான்.
இவனுடைய மகளைப் பார்த்து யாராவது இப்படி கேட்டால் சும்மா இருப்பானா?
தகப்பன் ஸ்தானத்தில இருக்க வேண்டியவன் பெண்டாள நினைக்கிறானே. வெறுத்துப் போய் மெதுவாக கட்டிடத்தை விட்டு வெளியே வந்தாள் கவிதா.
இன்னும் சூரியன் தன் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கதிர்களை பூமியின் மீது பாய்ச்சிக் கொண்டிருந்தான்.
அருகிலிருந்த கடைக்கு வந்து ஒரு சர்பத் கொடுங்க, சார் என்றாள் தன் கலைந்து போன கேசத்தைக் கொத்தாகப் பிடித்து இரப்பர் பேண்ட் போட்டபடி.
சர்பத்தை வாங்கி குடிக்க முனைகையில் ‘சர்’ரென்று ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், “நீ தானா கவிதா?” என்றார்.
“ஆமாம்”
என்ன நடந்தது?
திரும்பி நின்றவர்களைப் பார்த்துக் கொண்டே கொஞ்சமும் பதற்றப்படாமல் “கல்லூரியிலே இடம் வேண்டும் என்றால் என்னை தன் படுக்கைக்கு அழைத்தார். அதனால் என் கோபம் தீரும் மட்டும் அறைந்தேன்” என்றாள் கவிதா.
“ஸ்டேஷனுக்கு வந்து புகார் மனு எழுதித் தர முடியுமா?
“கண்டிப்பாக”
ஸ்டேஷனுக்கு வந்த கவிதா புகார் எழுதிக் கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் பழனி போன் பண்ணி, “சார், நான் எக்ஸ்டென்ஸன் தரீ போலீஸ் ஸ்டேஷனிலேருந்து இன்ஸ்பெக்டர் பழனி பேசுகிறேன். நீங்கள் சொன்ன மாதிரி கவிதா பாப்பாவை ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டேன்” என்றார்.
“வெரிகுட். என்ன பண்றே. அவள் அழகான கையெழுத்திலே புகார் எழுதி முடிச்சதும் வாங்கி கிழித்துக் குப்பைப் பெட்டியில் போடு” என்றார் எதிர்முனையில் பேசிய கல்லூரி முதல்வர்.
செய்து விட்டு “செய்தாகி விட்டது ஸார்” என்றார் இன்ஸ்பெக்டர் பழனி.
“பழனி நீ கவிதாவை கூட்டிக் கொண்டு நம்முடைய தில்லை நகர் எஸ்டேட் பங்களாவிற்கு வந்து விடு”
“சரி சார். என் மச்சினனுக்கு டாக்டர் ஸீட் கேட்டிருந்தேன், மனசிலே வச்சிருப்பீங்க, ஒண்ணும் பதில் சொல்லியே நீங்கள்.”
“என்ன பழனி உனக்கு செய்யாமலா கண்டிப்பாக நீ என்னிடம் கவிதாவை ஒப்படைத்து விட்டால் உன் மச்சினனுக்கு நம்ம காலேஜிலே டாக்டர் ஸீட் கிடைத்தாகி விட்டது என்று நினைத்துக் கொள்.”
“சரி சார். நான் உடனடியாக அங்கு வருகிறேன்” என்ற பழனி இன்ஸ்பெக்டர் திமிறிய கவிதாவின் கைகளை சேர்த்துக் கட்டி ஜீப்பில் ஏற்றினார்.
முதலில் பங்களாவில் தனித்து விடப்பட்ட கவிதா கொஞ்சம் கலவரப்பட்டுப் போனாள். அறையின் கதவிற்கு பூட்டு எங்கேயிருக்கிறது என்று கூட தெரியாமல் அழகாக அமைக்கப்பட்டிருந்தது அந்த அறை.
உள்ளே வந்த கல்லூரி முதல்வர் தயாளன். “என்ன பாப்பா, என்னை அடிச்சக் கையை என்ன செய்யலாம். சொல்லு பார்ப்போம்” என்றவாறு அவளருகில் வந்தார்.
“கிட்டே வராதே. நாயே”, என்றவர் அருகில் பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து நீட்டினாள்.
“பாரு பாப்பா, உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன். சும்மா அலட்டிக்காதேம்மா, கத்தியை அப்படி வைத்துவிடு” என்றார். தன் பையிலிருந்த ரிவால்வரை எடுத்து அவளைக் குறிபார்த்தவாறு.
“சுடுடா. சுடு, உன்னுடைய துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைக்கும் இந்தக் கவிதாவிற்கு பதில் எத்தனையோ கவிதாக்களுக்கு நீ பதில் சொல்ல வேண்டியதிருக்கும்” என்று கத்தினாள் கவிதா.
“அவ்வளவு எளிதாக உன்னைக் கொலை செய்வதற்காகவா இவ்வளவு தூரம் உன்னைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றவாறு அருகில் வந்தார்.
“வராதே கிட்டே வராதே” என்று சொல்லிக் கொண்டிருந்த கவிதா கையிலிருந்த சுத்தியால் தன் கழுத்தைக் குத்திக் கொண்டவள், “நான் உயிரோடு இருக்கும் வரை உன்னால் என்னைத் தொட முடியாது” என்று சொல்லியவாறு சாய்ந்தாள்.
இரத்தம் பெருகி அறையை சிவப்பு மயமாக்க தயாளன் போனை எடுத்து “பழனி கவிதா தற்கொலை செய்து கொண்டாளடா” என்றார்.
“கொலை பண்ணினீர்களா.. இல்லைத் தற்கொலையா?” என்றார் இன்ஸ்பெக்டர் பழனி மறுமுனையில்.
“நமக்கு காரியம் முடியு முன்னர் யாரையும் கொலை செய்து பழக்கம் கிடையாது பழனி. இவள் கத்தியை எடுத்து தன் கழுத்தில் குத்திக் கொண்டாள்.”
“என்ன செய்யப் போறீங்க”
“நீ தான் சொல்லணும்”
“எனக்கு ஒரு பங்களா வேணும். அதுவும் தில்லை நகர் எக்ஸ்டன்ஸிலே கிடைத்தால் நல்லது.’
“நாளைக்கே ஏற்பாடு பண்ணி விடுகிறேன்.”
“சரி நீங்கள் அந்த இடத்தைவிட்டு உடனடியாக போய் விடுங்கள், மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற இன்ஸ்பெக்டர் பழனி ‘இந்த கேஸை எப்படி ஜோடிக்ககலாம்’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings