எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“கிரி எக்ஸ்போர்ட்ஸ்” என்ற போர்டைப் பார்த்து விட்டு, உள்ளே நுழைந்தாள் ஜமுனா.
இவளைப் பார்த்ததும் ரிசப்ஷன் பெண் நிமிர்ந்து, “யெஸ்!” என்றாள்.
“மிஸ்டர் சேகர்….அசிஸ்டன்ட் மேனேஜர்?”. பவ்யமாக குரலில் ஜமுனா கேட்க,
“அதோ… அந்த நேர் கேபின்!” அவள் கை காட்டிய கேபினை அடைந்து கதவை மெதுவாக தட்டினாள்.
“யெஸ்!…கம் இன்!” கம்பீரமான ஆண் குரல் வரவேற்றது.
உள்ளே சென்றவளை பார்வையாலேயே அமரச் சொன்னான் அந்த சேகர்.
உட்கார்ந்தவள், “சார்!.. ஐ யாம் ஜமுனா!… மிஸ் பிரேமாவோட சிஸ்டர்!”.
“பி…ரே…மா…” நெற்றியை சுருக்கியபடி அவன் யோசிக்க.
“பிரேமா சார்!… இன்னைக்கு ஈவினிங் நீங்க பெண் பார்க்கப் போறீங்களே?… அந்தப் பிரேமாவோட தங்கை சார் நான்!”.
“யெஸ்…. யெஸ்… இப்பத்தான் ஞாபகம் வருது!… அந்த பொண்ணோட பேரு மிஸ் பிரேமா… ஐ ரிமெம்பர் இட் !”
“சார்… அது விஷயமா உங்ககிட்டக் கொஞ்சம் தனியா பேசணும்!” தயங்கியபடி சொன்னாள்.
“தாராளமாய்ப் பேசலாம்!… பட் அதுக்கு முன்னாடி காபி ஆர்டர் பண்ணிடலாம்!”சொல்லி விட்டு பஸ்ஸரை அழுத்தி ப்யூனை வரவழைத்து, “ரெண்டு காஃபி” என்றான்..
“யெஸ்!…. இப்பச் சொல்லுங்க!” என்றான் சற்று ரிலாக்ஸாக.
“சார்…. இதுவரைக்கும் பல பேர் வந்து என் சிஸ்டர் பிரேமாவைப் பெண் பார்த்திட்டுப் போனாங்க!… ஆனா எதுவுமே அவளுக்கு அமையலை!… “போய் லெட்டர் போடுறோம்”ன்னு சொல்லிட்டுப் போவாங்க!… ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தவிர்த்திடுவாங்க!… எனக்கே இதைப் பார்த்துப் பார்த்துச் சலித்து போயிடுச்சுன்னா… அவ மனசுக்கு எப்படி இருக்கும்?… எத்தனை பாடுபடும்?… பாவம் சார் அவ!… வேதனைகளை யாரிடமும் சொல்லவும் முடியாமல்… மெல்லவும் முடியாமல்… அவள் படற பாடு எனக்கு மட்டும்தான் சார் தெரியும்!”.
மூச்சு விடாமல் பேசும் அவளைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்த சேகர் மெதுவாக கேட்டான். “ஓ.கே…. நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க மிஸ் ஜமுனா?”.
“நீங்களும் அவளைப் பார்த்திட்டு தட்டிக் கழிச்சிட்டுப் போற மாதிரியிருந்தா…. தயவு செய்து பெண் பார்க்கவே வர வேண்டாம் சார்!… ப்ளீஸ்… வெந்து போன அவ மனசுல மறுபடியும் மறுபடியும் வேலைப் பாய்ச்ச வேண்டாம் சார் ப்ளீஸ்!” கெஞ்சினாள்..
“என்ன மிஸ் ஜமுனா?… நீங்க பேசறதுல கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே?…. உங்க சிஸ்டர் எப்படி இருப்பாங்க?ன்னே தெரியாம நான் இப்பவே சம்மதம் தெரிவிக்கணும்னு நீங்க எதிர்பார்ப்பது… நாட் கரெக்ட்!” சீரியஸாகச் சொன்னான்..
“சார்… உயரமும்… உடல் வாகும்… நிறமும்… என்னை மாதிரியேதான் சார்!…. முகம் மட்டும்… இதோ… இந்தப் போட்டோவில் இருக்கிற மாதிரி!”.
மொபைலில் அவள் காட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்த சேகர் மௌனம் சாதிக்க, ஜமுனா அந்த மௌனத்தை கலைத்தாள்.
“என்ன சார் யோசிக்கிறீங்க?”.
“மிஸ் ஜமுனா!… நீங்க போங்க… நிச்சயம் ஒரு நல்ல முடிவை நான் தருகிறேன்!” தீர்மானமாய் அவன் கூறியதும் மகிழ்ந்து போன ஜமுனா, “சார்… ரியலி யூ ஆர் கிரேட் சார்!… நாளை உங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் சார்!” கூறி விட்டு எழுந்தாள்.
“என்ன எழுந்துட்டீங்க?… இன்னும் காபி வரலை!… இருந்து குடிச்சிட்டுப் போங்க!” என்றான் ஜாலியாக.
மதியம் இரண்டரை மணியிருக்கும்.
மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தபடி படுத்திருந்த பிரேமாவை ஜமுனா வம்புக்கு இழுத்தாள். “என்ன… மகாராணி பகலிலேயே கனவுலகத்துக்கு போய்ட்டாப்ல இருக்கு?”.
“ப்ச்… நான் ஏற்கனவே நொந்து கிடக்கிறேன்… இதுல நீ வேற!” சோகமாய்ச் சொன்னாள் பிரேமா.
“ஏய் பிரேமா… இந்த தடவை நிச்சயம் நல்ல முடிவு வரும்!… வேணா பாரேன்… என்னுடைய வார்த்தை சத்தியமாய்ப் பலிக்கும்!” என்றாள் ஜமுனா..
“பார்க்கத்தானே போறோம்?” என்று கூறி விட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்து கொண்டாள் பிரேமா. அதற்கு மேலும் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவளாய் அங்கிருந்து நகர்ந்தாள் ஜமுனா.
மாலை ஆறு முப்பதுக்கு அந்தக் கார் வீட்டின் முன் வந்து நின்றது.
அதிலிருந்து சேகர் இறங்க, அவன் பின்னால் அவனுடைய தாயும் தந்தையும் இறங்கினர். தொடர்ந்து யாரோ இரண்டு பெருசுகள். இரண்டு இளசுகள்.
உள்ளே வந்த சேகர் ஜமுனாவை ஒரு சினேகமாய்ப் பார்த்துப் புன்னகைத்தான்.
நம்பிக்கை துளிர்விட்டது அவளுக்குள்.
வழக்கம் போல சம்பிரதாயப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
காபி வழங்க தட்டுடன் வந்த பிரேமாவை பார்த்த சேகர் உடனே ஜமுனாவை பார்த்துப் புன்னகைத்தான்.
“அப்பாடா அவருக்கு பிடித்து விட்டது போலிருக்கு!” நிம்மதியானாள் ஜமுனா.
சோக வானில் தனிப்பறவையாய் திரிந்த அக்காவுடன் ஜோடி சேர ஒரு ஆண் பறவை வந்து விட்டது. இனி இந்த ஜோடிப் பறவைகள் சந்தோஷ வானில் சிறகடிக்கட்டும் அவள் மனம் விம்மியது.
மூன்று நாட்களாகியும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் ஜமுனா வீட்டினர் குழப்பத்திலாழ்ந்தனர்.
“சரி இன்னிக்கு ஈவினிங் நேர்ல போய்ப் பார்த்திடுவோம்!” என முடிவு செய்தபடி ஷாம்பு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள் ஜமுனா. என்னதான் பாத்ரூம் தள்ளி இருந்தாலும் கூடத்தில் அமர்ந்து யார் பேசினாலும் அது துல்லியமாய் கேட்கும்.
தரகருடன் அப்பா பேசிக் கொண்டிருந்தது குளித்துக் கொண்டிருந்த ஜமுனாவின் காதில் தெளிவாக விழுந்தது.
“ஐயா நான் மாப்பிள்ளை வீட்டிலிருந்துதான் வரேன்!… அவங்க முடிவை சொல்லிட்டாங்க உங்க பதிலைத்தான் எதிர்பார்த்திட்டிருக்காங்க!”.
“யோவ்… முடிவு என்னன்னு சொல்லாம பதிலை சொல்லுங்கன்னா எப்படிச் சொல்ல முடியும்?” எரிச்சலுடன் கேட்டார் ஜமுனாவின் தந்தை.
“மாப்பிள்ளைக்கும்… அவருடைய அப்பா… அம்மாவுக்கும் நம்ம சின்னப் பொண்ணைத்தான் பிடிச்சிருக்காம்!… நீங்க சம்மதிச்சா கல்யாணம் முடிச்சிடலாம்னு சொல்றாங்க!” தரகர் வியாபார நோக்கில் பேசினார்.
பாத்ரூமிலிருந்த ஜமுனாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. “அடப்பாவி நீயும் சராசரி ஆண்தானா?””.
அப்பா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதைக் கூர்ந்து கவனித்தாள்.
“என்னய்யா இது கூத்தாயிருக்கு?… மூத்தவ இருக்கும் போது இளையவளுக்கு எப்படிய்யா?”.
“கோபப்படாதீங்க இது எங்கேயும் நடக்காததில்லை!… ஆறு மாசத்துல பெரியவளுக்கும் ஒரு வரனைப் பார்த்து முடிச்சிட்டாப் போச்சு!” தரகர் சமாளித்தார்.
ஜமுனாவின் தந்தை அமைதி காக்க, மீண்டும் தரகரே பேசினார். “இது மாதிரி நல்ல சந்தர்ப்பம் வர்றதே கஷ்டம்!… தயவு செய்து தட்டிக் கழிச்சிடாதீங்க!… இதை விட நல்ல மாப்பிள்ளை நம்ம சின்ன பொண்ணுக்கு எத்தனை தேடினாலும் கிடைக்காது!.. சரின்னு சொல்லிடுங்க!” தரகர் அப்பாவைச் சம்மதிக்க வைக்க பல்வேறு அஸ்திரங்களை தொடர்ந்து வீசுவதை பாத்ரூமில் இருந்தபடி கேட்ட ஜமுனா துடித்தாள்.
இறுதியில் அப்பா மட்டுமல்ல அம்மாவும் கூட தரகருக்கு சரி என்ற பதிலை சொல்லியது ஜமுனாவை அதிர வைத்தது.
“ஆண்டவா என்னைப் பாவியாக்கிட்டியே!… என்னோட அக்கா மனசு மறுபடியும் புண்ணாகிடுமோ?ங்குற பயத்துலதான் நான் அந்த சேகரை சந்திச்சுப் பேசினேன்!… அது இப்படி முடியும்னு எனக்குத் தோணலையே!” கண்களில் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகியது. அவசரமாய்க் குளித்து முடித்து விட்டு பாத்ரூமை விட்டு வெளியேறினாள்.
தரகர் போய் விட்டிருந்தார்.
உடை மாற்ற அறைக்குள் வேகமாய்ச் சென்ற ஜமுனா அங்கே அமர்ந்திருந்த பிரேமாவை பார்த்து அடக்க முடியாமல் கதற,. ”ஏண்டி அழுவறே?… நீ அதிர்ஷ்டக்கட்டைடி!… வளமான வாழ்க்கை உன்னைத் தேடி வருது!… என்னைய நினைச்சு அதை உதறித் தள்ளிவிடாம ஏத்துக்கோ!.. என்னைப் பற்றி கவலைப்படாதே!… என்னோட ராஜகுமாரன் எப்படியும் வருவான்?.. என்ன… கொஞ்சம் லேட்டா வருவான்…. ஆனா லேட்டஸ்ட்டா வருவான்!” என்றாள் பிரேமா விரக்தியான சிரிப்புடன்.
தன் மீது மழை பொழிய வந்த மேகம் தாண்டிச் சென்று, பக்கத்து வயலில் மழை பொழியத் துவங்கியதும் வாடிக் கிடந்த அந்தப் பயிர் வரப் போகும் இன்னொரு மேகத்திற்காக காத்திருக்கத் துவங்கியது.
இன்னொரு மேகம் வராமலா போய் விடும்?.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings