எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஒருமுறை உங்க பையனை கும்பகோணம் பக்கம் இருக்கிற திருநாகஸ்வரம் போயிட்டு வர சொல்லுங்களேன்” என்று யாரோ ஒருவர் வீட்டில் சொல்ல சொல்ல வீட்டில் உள்ளவர்கள் என்னிடம் சொல்ல…
“இந்த வருடம் வெய்யில் கொஞ்சம் அதிகமாதான் இருக்கு …இருந்தாலும் பரவாயில்ல இரண்டு நாள் லீவு இருக்கு… கும்பகோணம் வரைக்கும் போய்ட்டு வந்திடலாம்” …என்ற முடிவுடன் கிளம்பினேன்
கும்பகோணம் வந்தாச்சு ….அப்படியே திருநாகேஸ்வரம் போயிட்டு ஒரு பால் அபிஷேகம் பண்ணிட்டு, உப்பிலியப்பனையும் பார்த்துட்டு …அடுத்து என்ன …பசி மயக்கம் .
“சரி வந்ததும் வந்துட்டோம் …நமக்கு ஒரு நல்ல பழக்கமோ?! கேட்ட பழக்கமோ?! தெரியல.. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் உள்ள நல்ல சாப்படைத் தேடிப்போய்ச் சாப்பிடுவது. இணையத்தில் தேடினால் எக்கசெக்க உணவகங்கள் வருது …சரி உள்ளூர் ஆளுங்க யார்கிட்டயாவது கேட்போம்….ரமேஷ் ரவிசந்திரன் கேட்போம்”
“ஹலோ …ரமேஷ் …?”
“சொல்லுங்க …எங்க இருக்கீங்க ?!”
“உங்க ஊர்ல தான்?”
“பல்லாவரமா ..?!…வரதா சொல்லவே இல்ல?”
“பல்லாவரம் இல்ல …உங்க பூர்வீக ஊர்ல”
“ஓ ….கும்பகோணமா?!” எப்ப போனீங்க?!”
“காலையில தான் வந்தேன் …நல்ல ஹோட்டல் இங்கே எதுன்னு சொல்லுங்க …அப்புறம் நல்ல ஸ்வீட் ஸ்டால் எதுன்னு சொல்லுங்க ?”
“…ம் …ஹோட்டல் ஸ்ரீ கௌரிகிருஷ்ணா …சாப்பாடு நல்லா இருக்கும் …முராரி ஸ்வீட்…டிரை ஜாமுன் நல்லா இருக்கும் …பாருங்க ….அப்புறம்..”
“அப்புறம்… பசிக்குது ….அப்புறமா பேசுறேன்”
கூகுள் மேப் போட்டு முராரி ஸ்வீட் போய்ச் சிலவற்றை வாங்கிக்கொண்டு அடுத்து போன இடம்..ஹோட்டல் ஸ்ரீ கௌரிகிருஷ்ணா…சாப்பாடு சொல்லிவிட்டு உட்கார …கொஞ்ச நேரத்திலேயே உணவு பரிமாறினார்கள் …அப்பளம் வைக்கிற ஆயா இன்னும் வேணும்ன்னா கேளுங்க தம்பி என்று சொல்லிவிட்டுப் போனார்கள் … இரண்டு அப்பளம் கிடைச்சதுல கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி.
திருப்தியான சாப்பாடு சாப்பிட்டுப் பணம் கொடுத்துவிட்டு வெளியே வர ..பின்னாடியே ஒரு சிறுவன் “அண்ணா …அண்ணா …” என்று வந்தான்.
“ச்சே ..எங்க போனாலும் இந்த ஹோட்டலுக்கு முன்னாடி இப்படி ஒரு பிச்சையெடுக்கும் கூட்டம்.. அதுவும் சிறுவர்களா வராங்க …” என்று சலிப்புடன் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க …முன்னாடி வந்து நின்ற பையனை முறைத்தேன் …ஆனாலும் அவன் முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
“என்ன வேணும் உனக்கு ?”
“அண்ணா ..இத வாங்கிக்கோங்க அண்ணா…” என்று ஐந்து நீளமான பேனாக்களை நீட்டினான்…
“தம்பி ..எனக்கு பேனா வேண்டாம் …”
“அண்ணா பிளீஸ் ..ஒண்ணு பத்து ரூபா தான் …வாங்கிக்கோங்க”
“சரி… ஒண்ணு கொடு ….”
“அண்ணா அஞ்சு வாங்கிக்கோங்க …”
“அஞ்சு வாங்கி என்ன பண்ண போறேன்?”
“அண்ணா அம்பது ரூபா கிடைச்சா வீட்டுக்கு அரிசி வாங்கிட்டு போவேன்”
“நீ பள்ளிக்கூடம் போறது இல்லையா ?”
“போறேன் அண்ணா …சாயந்திரம் இப்படிக் கொஞ்சம் பேனா விக்கிறேன்”
“உங்க அப்பா அம்மா ..?”
“அவுங்க கூலி வேலை செய்றாங்க”… என்றான்
“பேனா எழுதுமா ..?..ஒண்ணு வேணும்னா வாங்கிறேன்”
“நல்லா எழுதும் அண்ணா …எழுதிப் பார்த்து வாங்கிக்கோங்க”
“சரி இந்தா ஐம்பது”… என்று கொடுத்துவிட்டு பேனா வாங்கிக்கொண்டு…நடந்தேன்
திரும்பி அந்தப் பையனைக் கூப்பிட்டு …முராரி ஸ்வீட் கடையில் வாங்கியதைக் கொடுத்தேன்
அவன் … “அண்ணா நான் பிச்சை எடுப்பதில்லை” என்றான் .
அவன் முதுகில் தட்டிக்கொடுத்து ..மனம் கனக்க நடந்தேன் …கும்பகோணம் ரெயில் நிலைய கொசுக்கடி கூடத் தெரியாமல் வெறுமையாய் உட்கார்ந்து காத்திருந்தேன் இரயிலின் வருகைக்காக.
வறுமை இன்னும் வாழ்கிறது.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings