in ,

குணமென்னும் குன்றேறி..! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

       அந்த முதியோர் இல்லத்திற்கு புதிதாய் வந்து சேர்ந்திருந்த பார்வதியம்மாளைச் சுற்றி அமர்ந்து, அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர் மற்ற முதியோர்கள்.

      “மகன் பேங்க்ல வேலை பார்க்கறான்னு சொல்றே!, மருமகளும் பெரிய கம்பெனில வேலை பார்க்கறாள்னு சொல்றே! ஆக, ரெண்டு பேருமே கை நிறைய சம்பாதிக்கிறாங்க, ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும்தான், அப்புறமென்ன? அந்தப் பேத்தியை பார்த்துக்கிட்டு, அது கூட வெளையாடிக்கிட்டு வீட்டோடவே இருந்திருக்க வேண்டியதுதானே? இங்க ஏன் வந்தே?” நீண்ட காலமாய் அந்த முதியோர் இல்லத்திலேயே இருந்து வரும் ஒரு சீனியர் சிட்டிஸன் கேட்க, மௌனப் புன்னகையை அதற்கு பதிலாய் தந்து விட்டு சிலையாய் அமர்ந்திருந்தாள் பார்வதியம்மாள்.

       “ஏன்? மருமக கூட சண்டையா? இல்லை, மகன் மேல கோவமா?”

       இரண்டிற்கும், “இல்லை”யென்றே தலையாட்டினாள்.

        “சரி சரி..விடுங்க! சொல்ல முடியாத வேற ஏதோ பிரச்சினை போலிருக்கு அதான் வாயையே திறக்க மாட்டேங்குது இந்தம்மா! எப்படியோ நம்ம கூட இன்னொரு ஜீவன் வந்து சேர்ந்திருக்கு! இதோட முகத்தைப் பார்த்தா வாழ்க்கைல ரொம்பவே நொந்து போய் வந்திருக்கற மாதிரி தெரியுது! பாவம், இனிமேல் நாமதான் இதுக்கு சந்தோஷம்ன்னா என்ன? மகிழ்ச்சின்னா என்ன? அப்படிங்கறதை நம்மோட அன்பான அணுசரணையான பழகுமுறைல காட்டணும்! என்ன?” சீனியர் சிட்டிஸன் மற்ற முதியோர்களைப் பார்த்துச் சொன்னது.

      அப்போது, அந்த முதியோர் இல்ல மெயின் கேட்டருகே நின்று கொண்டிருந்த வாட்ச்மேன், யாரையோ சத்தம் போட்டுத் துரத்திக் கொண்டிருந்தான்.

“ச்சை! சனியன்! போ போ வெளிய!” என்று கத்தலாய்ச் சொன்னவன், கீழே கிடந்த கல்லை எடுத்து யார் மீதோ எறிந்து கொண்டிருந்தான். “மறுபடியும் இந்தப் பக்கம் வா சொல்றேன், காலை ஒடிக்கறேன்!”

       “ஏய் வாட்ச்மேன்! என்ன அங்க சத்தம்?” முதியோர் இல்ல சிப்பந்தி ஒருவர் அலுவலக அறையிலிருந்து கேட்க,

       “ஒண்ணுமில்லை சார்! ஒரு நாய்! ரொம்ப நேரமா இங்கியே சுத்திக்கிட்டிருந்திச்சு! ..திடீர்னு உள்ளார பூந்திடுச்சு!” என்றவன் “ஏய்! ஏய்! ச்சூ ச்சூ!” என்று உரக்கக் கத்தியபடி அந்த காம்பௌண்டின் உட்புறமாய் அதைத் துரத்திக் கொண்டு ஓடினான். அவனுக்கு உதவும் விதமாய் அலுவலக அறையிலிருந்து வெளியே வந்து வாட்ச்மேனைத் தொடர்ந்து ஓடினான் அந்த முதியோர் இல்ல சிப்பந்தி

      தொடர்ந்து, அந்த முதியோர் இல்ல வாசிகள் பார்வதியம்மாளிடம் இயல்பாகப் பேசி, அவளது இறுக்க மனநிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களிருவரும்தான் ஓடி ஓடிக் களைத்துப் போய் வந்து நின்றனர்.

       “என்னப்பா என்னாச்சு? நாயை வெளிய துரத்திட்டீங்களா?” சீனியர் சிட்டிஸன் கேட்க,

       “ம்ஹூம்! அது அங்க ஓடுது, இங்க ஓடுது! ஆனா வெளிய மட்டும் போக மாட்டேங்குது!”என்று அந்த சிப்பந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு எதிரில் வந்து நின்றது அந்த நாய்.

அதைக் கண்ட வாட்ச்மேன், தன் கையிலிருந்த குச்சியை ஓங்க, “உர்ர்ர்ர்ர்” என்று மேற் பற்கள் முழுவதும் வெளியே தெரியும் விதமாய் உறுமியது அது. அங்கிருந்த முதியவர்கள் அனைவரும் நடுங்கியபடி ஒதுங்கி ஓட, அந்த நாய் மெல்ல மெல்ல நடந்து வந்து, பார்வதியம்மாளை நெருங்கி, வாலாட்டியபடி,  அவள் காலருகே படுத்துக் கொண்டு, குழந்தைக் குரலில் சிணுங்கியது.

      எல்லோரும் திகைத்துப் போயினர்.

       “ம்ம்! என்னம்மா இது? இந்த நாய் உங்ககிட்ட வந்து படுத்திருச்சு!” வாட்ச்மேன் கேட்டான்.

       “நன்றியுணர்ச்சி! என் கையால எத்தனை நாள் இதுக்குச் சோறு போட்டிருப்பேன்! அந்த நன்றியுணர்ச்சி” என்றாள் அவள்.

       “என்னம்மா சொல்றீங்க?”

       “இது என் மகன் வீட்டு நாய்! நான் அங்க இருந்தப்ப நாந்தான் இதைப் பராமரிச்சிட்டிருந்தேன்! சாப்பாடு போடுறது, குளிக்க வைக்கறது, எல்லாமே நாந்தான்! அதனால்தானோ என்னவோ என் மகன் என்னைய இங்க கொண்டு வந்து விட்டதும், என்னைப் பிரிய முடியாம இங்கியே வந்திருச்சு!”

      எல்லோரும் அந்த நாயை நெகிழ்ச்சியுடன் பார்க்க, அது தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி நின்று, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டது.

      அப்போது, கேட்டருகே ஏதோ ஒரு வாகனம் வந்து நிற்க, வாட்ச்மேன் ஓடிப் போய் கேட்டைத் திறந்து விட்டான்.  வெண்ணிற ஹோண்டா சிட்டி கார் ஒன்று உள்ளே நுழைந்து வலப்பக்க மரத்தினடியில் நிற்க, அதிலிருந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் இறங்கி, சுற்றும் முற்றும் எதையோ தேடினார்.  காரின் பின் புறக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் ஒரு யுவதி.

                 “யாருங்க நீங்க? யாரைப் பார்க்கணும்?” வாட்ச்மேன் கேட்க,

      அவர்கள் பதிலேதும் சொல்லாமல் பார்வதியம்மாளை நோக்கி நடந்து வர, அவர்களை புன்சிரிப்புடன் வரவேற்றாள் பார்வதியம்மாள்.  “வாப்பா சுந்தர்! வாம்மா கௌரி!”

      அந்த வரவேற்பை அவர்கள் சிறிதும் சட்டை செய்யாமல், பார்வதியம்மாளின் காலடியில் படுத்துக் கிடந்த நாயைப் பார்த்தனர். “பாத்தீங்களா? நான் அப்பவே சொன்னேன் அல்ல? இது இங்கதான் வந்திருக்கும்னு” அப்பெண் கடுப்போடு சொல்லிவிட்டு, நாயின் பக்கம் திரும்பி, “ஏய்! ரேம்போ! கமான் கமான்! எந்திரி!” என்றாள். ரேம்போ அவர்களை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தது.

      அப்போது அவர்கள் எதிரில் வந்து நின்ற ஒரு சீனியர் சிட்டிஸன், “தம்பி! நீ யார்?” என்று சன்னமான குரலில் கேட்க,

      பார்வதியம்மாள் அதற்கு பதில் சொன்னாள். “அது என் மகன்! கூட வந்திருக்கறது என்னோட மருமகள்!”

       “ஓ… நீங்கதான் அம்மாவை இங்க கொண்டு வந்து சேர்த்து விட்டவங்களா?” பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பக்கத்தில் பார்ப்பது போல் அவர்களைப் பார்த்தாள் அவள்.

      அவர்களிருவரும் எந்த பதிலும் பேசாதிருக்க, “இப்ப எதுக்கு இங்க வந்தீங்க? திருப்பிக் கூட்டிட்டுப் போறதுக்கா?” அதே பெண்மணிதான் கேட்டாள்.

                  பார்வதியம்மாள் இடையில் புகுந்து, “ஆமாம்…திருப்பிக் கூட்டிட்டுப் போகத்தான் வந்திருக்காங்க! ஆனா, என்னையல்ல! என்னைப் பிரிஞ்சு இருக்க முடியாம அங்கிருந்து  ஓடி வந்து இங்க என் காலடில கிடக்குது பாருங்க இந்த நாய்?. இதை…இதைத்தான் கூட்டிட்டுப் போக வந்திருக்காங்க!” அவள் அப்படிச் சொன்னதும் மொத்த முதியோர்களும் அவர்களிருவரையும் நேர்ப்பார்வை பார்த்து, வெறுப்பை உமிழ்ந்தனர்.

       “ஏம்பா! அஞ்சறிவு நாய் கூட, தின்ன சொத்துக்கு நன்றி காட்டுற விதத்துல உங்கம்மாவைத் தேடி வந்து காலடில கெடக்கு, ஆறறிவு உள்ள மனுஷன் நீ, அவ ரத்தத்தைப் பாலா உறிஞ்சி வளர்ந்த நீ! அவளை இப்படிக் கொண்டாந்து தள்ளியிருக்கியே? உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லையா?” இதுவரை அமைதியாய் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பஞ்சுத் தலை பெண்மணி ஆக்ரோஷமாய்க் கேட்டாள்.

      இன்னொரு பெண்மணி அவளையும் மிஞ்சும் வகையில் கொதித்தாள்.  “வயசான அந்த ஜீவனோட மனசு, அன்புக்கும், பாசத்துக்கும், அரவணைப்பிற்கும், ஆறுதலுக்கும் எவ்வளவு ஏங்கும்னு புரிஞ்சுக்க முடியாத நீயெல்லாம் எத்தனை படிச்சு, என்னப்பா பிரயோஜனம்?”

       “நான் சொல்றேன், இப்ப உன்னால அந்த நாயைக் கூட இங்கிருந்து கூட்டிட்டுப் போக முடியாது! ஏன்னா அதுக்கும் உன்னைப் பெத்தவளுக்கும் நடுவுல கண்ணுக்குத் தெரியாம ஓடுற அன்பு இழை இருக்கே? அது யாராலும் அறுக்க முடியாத பந்தம்!”

ஆளாளுக்கு பார்வதியம்மாளின் மகனையும், மருமகளையும் கரித்துக் கொட்ட, சட்டென்று அவர்களைக் கையமர்த்தினான் அவன்.  

“போதும்! போதும்! இப்ப நான் உணர்ந்திட்டேன்! நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்!. இதோ இந்த நாய்கிட்ட இருந்து பாடம் படிச்சுக்கிட்டேன்! நீங்க எல்லோரும் என்னைய மன்னிச்சிடுங்க! நான் இங்கிருந்து நிச்சயமா திருப்பிக் கூட்டிட்டுப் போகத்தான் போறேன்!”

       “நாயையா?”

      இட,வலமாய்த் தலையாட்டி விட்டு, “என் தாயை!” என்றார் பார்வதியம்மாளின் மகன்.

எல்லோரும்  “ஹேய்ய்ய்ய்ய்” என்று கத்தி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திய போது, அந்த நாயும் தன் இரண்டு முன்னங்கால்களை மேலே தூக்கி நின்று, தன் சந்தோஷத்தைக் காட்டியது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் மாணவன் அல்லவா? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஒரு கைதியின் தீர்ப்பு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை