எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘அம்மாவைக் கூட்டி வந்திருக்கேன்’, என்று சொன்ன பிரகாஷை நிமிர்ந்து பார்த்தாள் கௌரி.
அவனுடன் வந்த அந்த பெண்மணி வயதானவராகத் தெரிந்தார். கச்சிதமான நீலநிறக் காட்டன் புடவையில் மெலிதான புன்னகையுடன் அவளை நோக்கி வணங்கியவளைப் பார்த்து வரவேற்கும் பாவனையில் தலையசைத்தாள் கௌரி.
முதல் நாள் பிரகாஷ் சொன்ன விஷயங்கள் மனதில் ஓடின.
“மேடம்! என்னோட அம்மா நல்லவங்கதான். ஆனா அவங்க நினைக்கிறது சொல்றதுதான் சரின்னு சொல்லுவாங்க”.
“சரி ! சொல்லிட்டுப் போகட்டுமே! நீங்கள் அனுசரித்துப் போக வேண்டியதுதானே!”
அவன் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான்.
எப்படி சொல்வது என்று யோசித்தான் போலிருக்கிறது.
“மேடம்! என்னோட தங்கை சின்ன வயசிலேயே வழி மாறிப் போயிட்டா. அதில் அவளால் நிலைத்து நிற்க முடியாமல் வீட்டுக்கு திரும்பி வந்துட்டா. ஒரு குழந்தை வேறு. என் அம்மா தன் சொந்தத்தில் அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அதுவும் சரிப்படலை. இப்போ அவ பிரச்சினை தான் பெரிசா போயிட்டிருக்கு. கூடவே வச்சுக்கணும்னு பார்த்தாங்க. அவளுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து தனியாகவும் வீடு பார்த்து வச்சோம். எங்க அம்மா சமைக்கிற சாப்பாட்டில் இருந்து சமையல் சாமான் வரைக்கும் கொண்டு போய் கொடுக்கிறாங்க. எப்போ பார்த்தாலும் அவளைப் பற்றியே பேசுறாங்க. என் மனைவிக்கு இது ஒத்து வர மாட்டேங்குது.
தனியாகவும் போகமுடியாது.இப்போதான் பாங்க் லோன் வாங்கி வீடு வாங்கியிருக்கேன்.எனக்கும் இரண்டு பசங்க இருக்காங்க. சின்ன பசங்க அப்படிங்கறதாலே ஸ்கூல் விட்டு வந்தா அம்மாதான் பாத்துக்கிறாங்க.நாலு பேர் சம்பாதிக்கிறோம். ஆனா சமாளிக்க முடியலை. எங்க அப்பா ஒரு பூக்கடையிலே வேலை பார்க்கிறாரு. அவரோட வருமானம் முழுக்க பெண்ணுக்கும் அவளுடைய மகளுக்கும் என்று சொல்கிறார்கள். என் பாடுதான் திண்டாட்டமா இருக்கு. பணம் மட்டுமில்லாமல் மனசிலேயும் கொஞ்சம் கூட அமைதி இல்லை.
பட படவென்று அவன் மனதிலிருந்து பாரத்தை கொட்டித் தீர்த்தான்.
கௌரியால் அவன் கஷ்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஒருதலைப்பட்சமாக பெற்றவர்கள் நடத்தும்போது துவண்டு போகிறவர்கள் பாவம் இந்த ஆண்கள் தானே!
சாதாரணமாகவே அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு பேசவே முடியாமல் போகிறவர்களுக்கு இடியாப்ப சிக்கலாக மேலும் மேலும் பிரச்சினைகள் வந்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்.
“பேசிப் பார்த்தீர்களா? “
“எங்கே என்ன சொன்னாலும் தங்கச்சி மேல பாசம் இல்லை. நான் அப்படி வளர்த்தேன் இப்படி வளர்த்தேன் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் எதுவுமே பேச முடிவதில்லை”.
என் ஒய்ஃப் கூட நிறைய மாறிப் போயிட்டா. யார்கிட்டேயும் மனசு விட்டு பேச முடியறதில்லை.சின்னப் பசங்களையும் வீட்டில் சரியாக பார்த்துக்க முடியலை. அவனைப் பார்த்த போது மிகவும் கஷ்டமாக இருந்தது. கப்பல் நகர விடாமல் நங்கூரம் போடுவது போல எதையாவது சொல்லி பேசவே விடாமல் செய்யும்போது என்ன செய்யமுடியும்!
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படவும் முடியாது. அலுவலகப் பிரச்னை வீட்டுப் பிரச்சினை என்று தடுமாறும் அவனால் எதையும் சிந்திக்கவும் முடியவில்லை.
“பார்ப்போம் ! நாளை கூட்டி வருவீர்கள் இல்லையா! பேசிப் பார்க்கிறேன் !”என்றாள் கௌரி.
எந்த ஒரு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு தீர்வு இருந்துதான் ஆக வேண்டும். பார்ப்போமே என்று சொல்லியிருந்தாள்.
அவள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக தேவகி பேசினாள். ஆக்ரோஷமாகவும் பேசினாள்.
“ஒரு பொண்ணு கஷ்டப்படுறான்னா கூடப்பிறந்தவன் அக்கறை காட்ட வேண்டாமாம்மா! அவளே மனசு நொந்துபோய் வந்திருக்கா. அந்தப் பொண்ணு வித்யாவுக்கு என் பெண்ணைப் பத்தி கவலை இல்லை. ஒரு பொண்ணுக்கு பொண்ணு காட்டற சாதாரண உணர்ச்சி கூடவாம்மா இருக்காது”.
மடை திறந்த வெள்ளம் போல அவள் பேசிக்கொண்டே போனாள்.
அவள் பேசியதிலிருந்து கௌரிக்கு ஒன்று நன்றாக புரிந்தது.
தான் சொல்வதுதான் நியாயம் என்று கௌரியை ஒத்துக் கொள்ள வைப்பதுதான் அவள் குறிக்கோளாக இருந்தது.கௌரியும் அவள் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.அதுவே தேவகிக்கு சாதகமாக தெரிந்தது. வெற்றிக்களிப்புடன் மகனைப் பார்த்தாள்.
“பார்த்தியா! இந்த அம்மா கூட நான் சொல்றது தான் சரி அப்படின்னு நினைக்கிறாங்க”.
பிரகாஷுக்கு தலை சுற்றியது. ஏதாவது ஒரு விடியல் கிடைக்கும் என்று பார்த்தால் மேலும் கும்மிருட்டுக்குள் தள்ளுவது மாதிரி இருந்தது
“நீங்களும் சொல்லுங்கம்மா. பிரகாஷ்! அம்மா சொல்றதையாவது கேளு!”
அமர்த்தலாக கூறியவளை எதுவும் செய்யமுடியாது வெறுமையாகப் பார்த்தான் அவன்.
“இருங்கம்மா! நீங்க இவ்வளவு நேரம் பேசினீங்க! நான் பேசவே இல்லையே! ஒரே ஒரு கேள்வி உங்களை கேட்கலாமா?”
‘கேளுங்கம்மா!’
‘ஆனா உண்மையா மனசிலே என்ன தோணுதோ அதை சொல்லணும்’.
‘எதுக்கு இந்த பீடிகை!’
‘கண்டிப்பா சொல்றேம்மா!’
பிரகாஷ் வியப்புடன் பார்த்தான்.
“நீங்க இவ்வளவு நேரம் பேசினீங்க! பொண்ணுக்கு பொண்ணு பரிவு இல்லை பாசம் இல்லை அப்படி எல்லாம் சொன்னீங்க”.
“அதெல்லாம் சரிதான். ஆனா இப்போ உங்க பொண்ணு நிலையிலே உங்க மருமகள் இருந்தா, இல்லை வேற யாரோ ஒரு பொண்ணு இருந்தா நீங்க இதே மாதிரி நடத்துவீங்களா!”
பொட்டில் அடித்தது போல் இருந்தது அவளுக்கு.
‘அது எப்படி ‘ என்று சொல்ல வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினாள்.
“இவ்வளவு நேரம் பேசினீங்க! இப்போ ஏன் தடுமாறுகிறீங்க! என்ன ஆச்சு!”
தேவகியால் பதில் பேச முடியவில்லை. எதைச் சொன்னாலும் அது அவளையே திருப்பித் தாக்கும் என்று உணர்ந்தவளாக மௌனம் சாதித்தாள்.
“சரி, அது போகட்டும். உங்க பொண்ணு மனசிலே குற்ற உணர்ச்சியே இல்லையா? கூட பிறந்த அண்ணன் குடும்பத்திடம் பாசமே கிடையாதா? அவள் பணிந்து போயிருந்தால் , அன்பாக நடந்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது என்றே எனக்கு தோன்றுகிறது”.
உண்மைதானே! பிரகாஷும் மனசுக்குள் அதை சரியாக உணர்ந்தான். எப்போதுமே அவள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பாள். அம்மா அவள் பக்கமே பேசுவதால் எந்த வித தாழ்வுணர்ச்சியும் இல்லாது தனக்கு வேண்டுமென்பதை யெல்லாம் சாதித்துக் கொள்கிறாள்
கௌரியே மேலும் தொடர்ந்தாள்.
“உங்க கண்மூடித்தனமான பாசம் தப்பு செஞ்ச அவளைத் கட்டிக்காத்து தப்பே செய்யாத உங்க பையனைத் தண்டிச்சிட்டிருக்கு”.
அது எப்படி என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள் தேவகி.
“ஆமாம் அம்மா! அவரோட வாழ்க்கையிலே நிம்மதி இல்லை. நீங்க அதைப் பத்தி கவலைப் படறதும் இல்லை.உங்க மருமகள் உங்களை அனுசரித்துப் போகணும்னு நீங்க நினைக்கிற மாதிரி அவளும் நினைக்கமாட்டாளா?”
“யோசிங்க! உங்க மகள் கிட்டே மட்டும் காட்டுற அக்கறையை உங்க மகன் கிட்டேயும் காட்டுங்க. உங்க பொண்ணுகிட்டேயும் பேசுங்க. செஞ்ச தப்புக்கு வருத்தப்படலைன்னாலும் நடந்துக்கிற விதமாவது சரியாக இருக்கணும்மா!. ஏன் என்றால் வீட்டிலே வளர்கிற குழந்தைகள் நம்மைப் பார்த்துத்தான் கத்துக்குவாங்க”.
மனதுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கௌரி சொன்ன வார்த்தைகளின் நியாயம் அவளுக்கு புரிந்தது.எத்தனை தூரம் மகன் காயப் பட்டிருக்கிறான் என்றும் உணர முடிந்தது.
என் பொண்ணு படறகஷ்டம் தான் எனக்கு தெரிஞ்சது. நான் அதிலேயே மூழ்கிப் போயிட்டேன்.
“தப்பில்லை . ஆனா அதை எப்படி எதிர் நோக்குறதுன்னும் சொல்லிக் கொடுங்க. அப்போதான் அவளுக்கும் நிதர்சனம் புரியும்.உடம்பிலே பெரிய பிரச்சினை வந்தா தீவிரகண்காணிப்பிலே சேர்த்து பார்ப்பாங்க. அதிலேயே இருக்க முடியாதில்லே. சாதாரண வார்டுக்கு வந்து தானே ஆகணும்.! மனசு சம்பந்தப்பட்ட பிரச்னையும் அப்படித்தான். கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்தால் அதோட வேர் தெரியும். சிக்கல் எங்கே இருக்கு அப்படன்னு தெரிஞ்சாலே பாதி பிரச்னை சரியாகிவிடும்”.
ஒரு தேர்ந்த மனநல நிபுணராக பேசிய கௌரி பிரகாஷைப் பார்த்து ‘இனிமே உங்க அம்மா நியாயமா நடந்துப்பாங்க’ என்றாள்.உங்களோட பிரச்சினைகளை சரிசெய்ய உதவியாக இருப்பாங்க”.
அங்கு வந்தபோது இருந்த மனபாரம் நீங்கியவனாக மகிழ்ச்சியுடன் கை குவித்தான் பிரகாஷ்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


Very nice