எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு வாரமாகிறது இன்றோடு பர்வதம்மாள் மறைந்து. காலியாக கிடந்த பெஞ்சுகள் என்னை வெறித்துபார்த்தது மாதிரி இருந்தது .நினைவுகள் சுழல நான் மௌனமாக அங்கே உட்கார்ந்தேன்.
லாரியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த சாமான்களை வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்த என்னை உங்களுக்கு தமிழ் தெரியுமா என்ற குரல் ஈர்த்தது.
மராட்டி ஹிந்தி மொழி மட்டுமே பேசும் மாநிலத்தில் மற்ற மொழிகள் பேசுபவர்கள் குறைவு. கன்னடம் தெலுங்கு மலையாளம் எல்லாம் கலந்து இருக்கும் இடத்தில் தமிழ் வார்த்தை கேட்பது நிஜமாகவே அமுதமாக இனித்தது.
அங்கேயே ஒரு பெஞ்சில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி தான் என்னைக் கூப்பிட்டார். பர்வதம்மா இப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.
மிகவும் வயதான தோற்றம். பஞ்சாக நரைத்த தலைமுடி.கையில் ஔவையார் மாதிரி ஒரு மூங்கில் கம்பு வேறு வைத்திருந்தார்.
சேலத்திலிருந்து வைத்திருக்கிறாராம். அங்கு ஒரு பொண்ணு வீடு என்று அடுக்கிக் கொண்டே போனார்.என்னைப் பற்றியும் விசாரித்துக் கொண்டார்.
தினமும் காலையில் நடப்பது என் வழக்கம். தினசரி என்னுடன் கொஞ்ச நேரமாவது பேசாமல் இருக்க மாட்டார்.
காஃபி குடிச்சாச்சா, பூ பறிச்சாச்சா ! என்று தினமும் சில கேள்விகள். ஐந்து நிமிடமாவது பேசாமல் என்னை விட மாட்டார். பவளமல்லி, நந்தியாவட்டை என்று பூக்களை சேகரிக்கிறேன் என்று தானும். சில பூக்களை பறித்து மடியில் வைத்து தருவார்.
இந்த கம்போடு நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள் என்று ஒருமுறை சத்தம் போட்டேன். மற்றவர்கள் பறித்துக்கொண்டு போய் விடுகிறார்கள் அதனால் தான் என்றபோது பரவாயில்லை என்றேன்..
அந்தக் கம்பை வைத்துக்கொண்டு அவர் நடக்கும் போது டக் டக் என்று சப்தம் கேட்கும். இரண்டு படிகள் இறங்கி மறுபடி அவர் ஃப்ளாட்டுக்கான லிஃப்டுக்கு செல்வதற்கும் ஏழெட்டு படிகள் ஏறவேண்டும்.
‘அப்படியாவது இங்கு வரவேண்டுமா’ என்று வினவினேன்.
“வீட்டில் பொழுது போகவில்லை. எத்தனை நேரம்தான் சும்மா உட்கார்ந்திருப்பது? இங்கே வந்தாலாவது கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாமே!” அது என்னவோ நிஜம்தான்.
காலை வேளையில் பள்ளி கல்லூரி செல்லும் சிறுவர்கள், நடக்கும் பெரியவர்கள் பால் பாக்கெட், பேப்பர் போடும் ஆட்கள் தவிர பெரிய அளவில் வாளிகளை உருட்டிக் கொண்டு செல்லும் தூய்மைப்பணியாளர்கள் கார்களைத் துடைக்கும் பணியாட்கள் என்று கலகலப்பாக இருக்கும் .
காலை வேளையில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களை பார்க்கும்போது மனதுக்கு உற்சாகமாக இருக்கும். வேலை எதுவும் செய்யவும் முடியாமல் செய்யாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கும் வயோதிக மக்களின் ஒரு பிரதிநிதியாகத்தான் அவர் தெரிந்தார்.
தினமும் ஏதாவது ஒரு கதை சொல்லுவார்.
“அதோ அங்கே நிற்கிறாளே அந்தப் பொண்ணு இதோ இங்கே இந்த ஜி ஃப்ளாட்டில் வேலை செய்கிறாளாம். வீட்டோடு இருக்காளாம். மாசம் இருபது ஆயிரம் ரூபா தராங்களாம்”.
எப்படி இந்த மாதிரி செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. தெலுங்கும் கொஞ்சம் பேசுவார். எப்படியோ அவர்களுக்கு பொழுது போக வேண்டும். தினமும் யார் வாயையாவது கிண்ட வேண்டும். சிரித்துக்கொண்டு நகர்ந்து விடுவேன்.
“இன்னொரு நாள் இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா ?”என்று கண்களை உருட்டினார்.
‘என்ன ஆச்சு! ‘ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“ஏழு எட்டு திருட்டு டிவி இருந்ததாம் ஃப்ளாட்டில். எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு காரை வேறு செயின் போட்டு கட்டி வைத்திருந்தாங்க”. திகைத்துப் போனேன்.
அப்போது தான் அந்த பஹல்காம் விஷயம் நடந்து முடிந்திருந்தது.என்ன நடந்திருக்கும் என்றே புரியாமல் வீட்டில் வந்து சொன்னேன். க்ரூப்பில் அப்படி ஒன்றும் செய்தி வரவில்லையே என்றவர் “ஓ இந்த அட்வர்டைஸ்மெண்ட் ஹோர்டிங்ஸ் வைத்திருந்தார்கள் இல்லையா! நகை, புடவை, ஷு என்று அவற்றின் காலம் முடிந்துவிட்டதால் எடுத்துப் போயிருப்பார்கள்” என்றார்.
அட , ஆமாம் லிஃப்ட் அடியில் காத்திருக்கும் இடங்களில் சுவர்களில் இருந்த அந்த பலகைகள் காணவில்லை என்பதை அப்போதுதான் நானும் உணர்ந்தேன். நிமிஷத்தில் எப்படி காபரா பண்ணிவிட்டார் என்று எரிச்சலாக வந்தது.
மறுநாள் விவரம் சொன்ன போது எனக்கென்ன தெரியும் என்று சர்வ சாதாரணமாக பதில் சொன்னார். அப்புறம் அந்த கார் என்று நினைவாக கேட்டார்.
அது ஏதோ பார்க்கிங் பிரச்சினை, என்று சொல்லிவிட்டு மேலே நடந்தேன்.
மும்பையில் மழை நாட்களில் நடப்பது மிகவும் சிரமம். எப்போது மழை வரும் என்று தெரியாது. சில சமயங்களில் சேர்ந்தாற்போல் கொட்டிக் கொண்டே இருக்கும்.
அந்த நாட்களிலும் பர்வதம்மா வந்து ஏதாவது ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பார்.மழை வந்த உடன் போய் விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு. அவருடைய பெண் வந்து கடுமையாக அதட்டிக் கூட்டிக்கொண்டு போனார். சொன்னாலும் புரிவதில்லை. எங்காவது விழுந்து வைத்தால் என்ன செய்வது என்று திட்டிக்கொண்டே.
மறுநாள் பார்த்த போது மிகவும் தளர்வாக காணப்பட்டார்.
“ஒரு வயசுக்கு மேலே பெத்தவங்களை பொறுப்பு அப்படின்னு நினைக்கறதில்லை. பாரமாத்தான் நினைக்கிறாங்க. சின்னக் குழந்தைங்க அழுதா பசிக்கு, தூக்கத்துக்கு, வலிக்கு என்று கண்டு பிடிக்கிற பெத்தவங்க அதே தன்னைப் பெத்தவங்க படுற கஷ்டத்தை புரிஞ்சுக்கறதே இல்லை. அதைப்பற்றி கவலைப்படறதும் இல்லை. நம்ம காலத்தில் எல்லாம் பெரியவங்க வீட்டில சட்டமா உட்கார்ந்து கிட்டு அதிகாரம் பண்ணிகிட்டு இருப்பாங்க. இப்போ அப்படியா!” என்று நீளமாக பெருமூச்சு விட்டார்.
‘சும்மா இரு சொல்லற’ என்று கந்தர் அநுபூதியிலே வரும். அது மாதிரி இருக்க முடிவதில்லை. உடம்பும் மனசும் ஒத்து வருவதில்லை. உடம்பும் சொன்ன பேச்சு கேட்கமாட்டேன்கிறது. மனசானா ஏதேதோ நினைவுகளை கொண்டு வந்து கொட்டுகிறது’.
அவர் பாட்டுக்கு ஏதோ சொல்லிக்கொண்டே போனார். நான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குப் பின் அவரைப் பார்க்க முடியவில்லை. உடல் நலம் சரியில்லை என்று நினைத்து கொண்டு இருந்தபோதுதான் அவர் மறைந்துவிட்ட செய்தி வந்தது. அவருக்காக வந்திருந்தவர்களைப் பார்க்கும் போது தான் அவர் எவ்வளவு பேரிடம் பேசிப் பழகிய இருக்கிறார் என்று தெரிந்தது.
முதுமை வந்தபின் தான் தெரியும் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்று. பரபரவென்று ஓடிக் கொண்டிருந்த கால்களும் கரங்களும் இயங்குவதே சிரமமாக மாறும்போது. சில மனிதர்கள் உற்சாகமாக வளைய வருகிறார்கள். பலரால் முடிவதில்லை.
‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி!’ என்ற திரைப்படப் பாடல் மனதில் எதிரொலித்தது.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings