in ,

ஃபூல்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ன்று ஏப்ரல் ஒன்று.

காலையில் எழுந்ததுமே செல்வியை ஏப்ரல் ‘ ஃபூல்… ‘ ஆக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான், கணேஷ்.

ஷேவிங் செய்து கொண்டிருந்தவன், மெல்ல போய் ரவியின் அலமாரியைத் திறந்து அவன் பேனாவுக்கு நிரப்பும் சிவப்பு இங்க்கை இங்க் பில்லரில் எடுத்துக்கொண்டு நைஸாக திரும்பிப்போய் ஒரு சொட்டு கன்னத்தில் விட்டான். அது மெல்ல வடிந்தது.

‘ ஐயோ…’ என்று அலறினான்.

சமையற்கட்டிலிருந்து, ‘ என்னங்க என்னாச்சு… ? ‘ என்றாள் செல்வி. 

‘ ப்ளேடு பட்டுடுச்சு… ‘ என்றான். கன்னத்தில் விரலை வைத்து அழுத்திக் கொண்டான். கையில் கரண்டியுண்டன் பதறிக்கொண்டு ஓடிவந்தவள், ‘ அய்யய்யோ… பார்த்து பண்ணக்கூடாது… ‘ என்று அவனது கன்னத்தைத் தொடப் போனாள்.  ‘ ஐயோ… ரத்தம் வருதே… ‘ என்றாள். அவளை தொட விடாமல், சிரித்தான் கணேஷ். 

‘ இன்னிக்கு தேதி என்ன… ? ‘ என்றான்.

‘ ஏங்க… முதல்ல போயி டெட்டால் போடுங்க… தேதிய கேட்கறீங்க… ‘ என்றாள்.

‘ ஏ மாடே மாடே… இன்னிக்கு ஏப்ரல் ஒன்னு… உன்னை ஏப்ரல் ‘ ஃபூல்… ‘ ஆக்கத்தான் சும்மா அப்படி நடிச்சேன்… இதோ பார், ரவியோட இங்க் பில்லர்… ‘ என்று சிரித்தான். விரலை எடுத்தான். காயத்தைக் காணவில்லை.

கொஞ்சம் கோபமாய் தட்டி, ‘ உங்களுக்கு இதிலெல்லாம் கூடவா விளையாட்டு… நிஜமாவே பிளேடு பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்… ‘ என்று செல்லமாய் கடிந்து கொண்டு வெறுப்புடன் திரும்பினாள்.

ஷேவிங் பண்ணி முடித்து குளித்து முடித்து டிரஸ் செய்துகொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான்.

ஏதோ கருகின வாசனை வந்தது.  கொஞ்சம் பதறிப் போய், ‘ செல்வி… என்னாச்சு… இன்னும் டிபன் கொண்டு வந்து வைக்கலையா… ஆபீஸ்க்கு நேரமாச்சில்லையா…  ‘ என்றான்.

‘ ஸாரிங்க… இட்லி கொப்பரையில தண்ணி தீர்ந்துடுச்சு போல… கவனிக்கலை… சட்டி தீய்ஞ்சு போச்சு. இட்லி எல்லாம் மஞ்சளாகிடுச்சு. நீங்க போற வழில சாப்பிட்டுக்கங்க… ஸாரிங்க… ‘ என்று அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

கோபத்துடன் எழுந்தான். ‘ ஏற்கனவே டைம் ஆகிடுச்சு… இது வேறயா… ‘

அதே நேரம் கையில் தட்டுடன் வெளியே வந்தாள் அவள்.  இவன் திடுக்கிட்டு நின்றான்.

‘ ஏன்… உங்களால மட்டும்தான் ஏப்ரல் ‘ ஃபூல்… ‘ ஆக்கமுடியுமா… என்னால முடியாதா… இட்லி கொப்பரை ஒன்னும் தீயலை… உட்கார்ந்து சாப்பிடுங்க… சட்னி தாளிக்கும்போது கடுகு கருகிடுச்சு. கொட்டி எறிஞ்சுட்டு புதுசா தாளிச்சுக் கொட்டிட்டேன்… உட்காருங்க… ‘ என்று சிரித்தாள்.

வெறுத்துப் போனவன், சாப்பிட்டு முடிச்சு எழுந்து கொண்டான்.

‘ அப்பா… இந்த மாச பீஸ் கட்டனும்… அப்புறம் எக்ஸாம் வருதே… அதுக்கும் சேர்த்து கட்டச் சொன்னாங்க… ஐயாயிரம் கொடுத்துட்டு போங்கப்பா… ‘ என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தால் ஜானவி.

‘  அம்மாக்கிட்ட வாங்கிக்கோ… ‘ என்றுவிட்டு கிளம்பிவிட்டான் அவன்.

xxxxxxxx

சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த ரவி,   கொஞ்சம் சோகமாக வந்து நின்றான்.

‘ ஸாரிம்மா… ‘ என்றான்.

லேசாய் பதறியவள், ‘ என்னடா ஆச்சு… ‘ என்றாள்.

டைரியை திறந்தபடியே, ‘ பேரண்ட்ஸை கூட்டிட்டு வான்னு மிஸ் சொல்லிட்டாங்க… டைரில எழுதிட்டாங்க… ‘ என்று டைரியை காட்டினான்.

அதைப் பார்க்காமலேயே, ‘ ஏண்டா வரச்சொன்னாங்க… ‘ என்றாள்.

‘ நான் ஒரு பையனை அடிச்சுப்புட்டேன்… அதான்… ‘ என்று கண்களில் மிரட்சியுடன் சொன்னான்.

‘ மாடே… மாடே… பசங்களோட சண்டை போடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… ‘ என்று செல்லமாய் திட்டியபடியே அவன் நீட்டிய டைரியை வாங்கிப் பார்த்தாள். அங்கே ஒன்றும் எழுதியிருக்கவில்லை.

சிரிசிரியென்று சிரித்தான் ரவி.

‘ அம்மா… ஏப்ரல் ‘ ஃபூல்… நீ ஏப்ரல் ‘ ஃபூல்… இன்னிக்கு தேதி என்ன… ஏப்ரல் ஒன்னு. இன்னிக்கு கிளாஸ் பூரா ஒரே கூத்துதான்… ‘ என்றான் சிரித்தபடியே.

வெறுத்துப் போனாள் செல்வி.

‘ காலையில உங்கப்பா பண்ணினார்… இப்போ நீ பண்ணிட்டே… கூம்… டைப்பிங் போயிருக்க உங்கக்கா வந்துட்டு என்ன பண்ணப் போறாளோ… ‘ என்று செல்லமாய் வெறுப்பை உமிழ்ந்தாள்.

கணேஷ் ஆபீஸ் விட்டு வந்து சேர்ந்துவிட்டான்.  ‘ இன்னிக்கு ஆபீஸ் பூரா ஜாலிதான்… ‘ என்று சிரித்தான்.

‘ ஏங்க… மணி ஏழரை ஆச்சு… இன்னும் இவளை காணோமேங்க… ஒரு போன் பண்ணுங்க… ‘ என்றாள்.

‘ எக்ஸாம் வருதில்லையா… ரிவிஷன் டெஸ்ட் நிறைய கொடுத்துட்டான்களோ என்னவோ… ‘ என்றான்.

கூடவே போனும் பண்ணினான்.  ‘ ச்விட்சுடு ஆப்னு வருதுடி… ‘ என்றான்.

‘ இருக்கும்… கிளாஸ்ல இருக்கும்போது ஆப் பண்ணி வச்சிடுவா… ‘ என்று குரல் கொடுத்தபடியே உள்ளே போனாள்.

அப்படியே, ‘ டேய்… உனக்கு பால் வச்சிருக்கேன் வந்து எடுத்துக் குடி… ‘ என்று மகனுக்கு குரல் கொடுத்தாள்.

மணி எட்டரை ஆனது. இப்போது இன்னும் கொஞ்சம் பயம் வந்தது. 

‘ இந்தாங்க… போன் பண்ணுங்க… ‘ என்றாள் செல்வி.

சட்டென போனை எடுத்தவன் அலறினான்.

‘ என்னங்க ஆச்சு… ‘

‘ சனியன்… இப்படியா பண்ணும்… ஐயோ… ‘

ஓடிவந்தாள் செல்வி. 

‘ மன்னிக்க வேண்டும். சுந்தருடன் நான் சென்னைக்குப் போகிறேன்… உங்கள் பேச்சை மீறுவதற்கு வருந்துகிறேன். அவன் இல்லாமல் நான் செத்துவிடுவேன். என்னைத் தேடவேண்டாம்… ‘

தெள்ளத் தெளிவாக எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாள் ஜானவி.

அவள் பங்குக்கு அவளும் நிஜ ‘ ஃபூல்… ‘ ஆக்கிவிட்டாள் எல்லோரையும்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 28) – ஜெயலக்ஷ்மி

    கல்யாணமாம் கல்யாணம்… (பகுதி 1 – சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு