in ,

எண்ணம் போலவே (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இன்னிக்கு வீட்ல ஒரே அமக்களம் ஷாமளிக்கு கல்யாணம் நாளை மறுநாள். சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, குழந்தைகள்னு ஏகக் கூட்டம். எங்க ரெண்டு ரூம் பிளாட் திணறியது.

இப்படி மொட்டையா ஆரம்பிச்சா என்ன புரியும்னு கேக்கறவங்களுக்கு, என்னன்னா எங்க வீட்ல முத முத ஃபங்ஷன் ஒரே எக்சைட்மென்ட் அதான் டக்னு மனசுல வந்ததை சொல்லிட்டேன். சொல்றேன் முதல்ல இருந்து.

நான் பங்கஜா, க்வீன் மேரீஸ்ல ஃபைனல் இயர் பி.எஸ்.சி., என் அக்கா ஷ்யாமளசுந்தரி டிகிரி முடிச்சிட்டு பிராட்வேல ஒரு குட்டியூண்டு எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை பாக்கறா.

அப்பாக்கு மவுண்ட் ரோட்ல ஒரு பேமஸ் புக்‌ஷாப்ல மேனேஜர் வேலை. அம்மா இன்கம் டாக்ஸ் ஆபீஸ்ல ஹெட்கிளார்க்கோ என்னவோ .நுங்கம்பாக்கம் கவர்ன்மெனட் ஸ்டாஃப் காலனில ஒரு 2 ரூம் பிளாட். கேளம்பாக்கத்துல இடம் வாங்கி ஒரு வில்லா கட்டி இருக்கோம் ஓரளவு வசதியான குடும்பம்தான்.

அம்மாவுக்கு ஒரே கவலை ஷாமளிக்கு வயசாறது கல்யாண ஏற்பாடு இன்னும் பண்ணலையேனு. போன மாசம் முத சனிக்கிழமை ஏதோ லோகல் எலெக்‌ஷன்னு எல்லோருக்கும் லீவு வீட்லதான் இருந்தோம்.பிரேக் ஃபாஸ்ட் ரொம்ப நாளைக்கு அப்பறம் சேந்து சாப்பிடறோம்.

அம்மாதான் ஆரம்பிச்சா, “எங்க ஆபீஸ்ல சுந்தர்னு ஒரு பையன் புதுசா சேந்திருக்கான், களையா இருக்கான், நம்மளவாதான், விருதுநகர் பக்கம்.நம்ம ஷாமளிக்கு பொருத்தமா இருப்பான்.”

அப்பா,” பாக்கலாமே ஒரு நாள் ஈவ்னிங் காபிக்கு கூப்பிடேன் முதல்ல பையன் கிட்ட பேசிப் பாப்போம்.”

நான், “ஹை அக்காவுக்கு கல்யாணம், எனக்கு ரிசப்ஷனுக்கு சிவப்புல காக்ரா சோளி, கல்யாணத்துக்கு பச்சை பட்டுப் புடவை”

ஷாமளி, “ அது அது வந்து அவசரப் படாதீங்க நானே சொல்றேன்”

அம்மா, “என்னடி சொல்லப் போறே, ஐய்யோ வயத்துல புளியை கரைக்கறதே”

“ஒண்ணுமில்லை ‘சமீர்’ நம்ம ஏரியா சப் இன்ஸ்பெக்டர். என்னை தினம் பாத்திருக்கார் ஸ்டேஷன் தாண்டி போறப்ப. ரெண்டு மாசத்துக்கு முன்னால புரபோஸ் பண்ணினார், நான் சரின்னு சொல்லிட்டேன்”

“தலைல கல்லை தூக்கி போடறயேடி, எப்படியெல்லாம் செல்லம் கொடுத்து வளத்தோம்”

அப்பா, “ ஏய் என்ன நடந்து போச்சுனு அழுது புலம்பறே ஷாமளிக் குட்டி அந்த சமீரை நாளைக்கே வீட்டுக்கு கூப்பிடு முதல்ல பேசிப் பாப்போம்”

ஷாமளி அப்பா கழுத்தை கட்டிண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.நான் ஷாமளி கன்னத்தில்.அம்மாதான் அன்னிக்கு பூரா மூஞ்சியை தூக்கி வச்சிண்டு உக்காந்திருந்தா.

மறு நாள் சாயந்தரமே ஒரு புல்லட் பைக்கை கம்பீரமா ஓட்டிட்டு வந்து வாசல் முன்னால நின்னார் அந்த சமீர் பின்னால அக்காவை உரிமையா உக்கார வச்சிட்டு. அப்பா எழுந்து வாசல் வரை போய் அவரை வரவேற்றார்.

அந்த சமீரும் மரியாதையா வணக்கம் சார்,”நான் இந்த ஏரியா சப்.இன்ஸ்பெக்டர்”னு சொல்லிட்டே உள்ளே வந்தார். ஹால்ல இருந்த சோஃபால அமர வைக்கப் பட்டார்,

அம்மா தன் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கதவோரமாய் வந்து நின்னா. நான்தான் ஓடிப் போய் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணி கொண்டு வந்து நீட்டினேன்.

என்னை ஏறிட்டுப் பாத்து கவர்ச்சியா சிரிச்ச வண்ணம், ”நீ பங்கஜா, க்வீன் மேரீஸ்ல பி.எஸ்.சி படிக்கறே சரியா”னு கேட்டார்.

நான்,”ரொம்ப சரி அக்கா எங்க குடும்பத்தைப் பத்தி பூரா சொல்லி இருப்பானு நினைக்கிறேன், நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்க”

பொதுவா எங்க எல்லாரையும் பாத்த வண்ணம், “என்னைப் பத்தி ஜாஸ்தி ஒண்ணுமில்லை.அப்பா, அம்மா ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளத்த ஒரு தான்தோணிப் பையன்.பி.எஸ்.சி. படிச்சு போலீஸ்லதான் சேருவேன்னு பிடிவாதமா போலீஸ்லயே வேலை கிடைச்சது ஒரு அதிர்ஷ்டம். சப் இன்ஸ்பெக்டரா சேந்திருக்கேன். என்னோட லட்சியம் பத்து வருஷத்துக்குள்ளே குறைஞ்ச பட்சம் ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் பொசிஷனுக்கு வரணும்ன்றதுதான். உங்க தெருவுலயே இருக்கற R-2 ஸ்டேஷன்லதான் வேலை பாக்கறேன்” சொல்லி புன்னகையோட எல்லாரையும் பாத்தார்.

நான்,”சரி அக்காவை எங்கே பாத்திங்க எப்படி வளைச்சுப் போட்டீங்க”

அக்கா,”ஏய் சும்மா இருடி தேவையில்லாத்தையெல்லாம் கேட்டுட்டு”

அப்பா,”பங்கஜ்,சும்மா இரும்மா,அவரை நெர்வஸ் பண்ணாதே”

சமீர்,”பரவாயில்லை ஷாமி,கேக்கட்டும்”

என்னைப் பாத்து,”நீ எதிர் பாக்கற மாதிரி அவ்வளவு திரில்லிங் ஸ்டோரியெல்லாம் இல்லை, உங்க அக்கா வெளில வேலைக்கு புறப்படற நேரமும், நான் ஸ்டேஷனுக்கு வர நேரமும் கிட்டத் தட்ட ஒரே நேரம் அதனால தினம் பாப்பேன்.அழகா அமைதியா தெரிஞ்சதால ஒரு நாள் வழி மறைச்சு நின்னு பேச்சுக் கொடுத்தேன். அப்பறம் போறப்ப வரப்ப அறிமுகப் புன்னகை.ஒரு நாள் பதட்டமா நடந்து வந்தாங்க.”

அந்த நாள் ஷ்யாமளி கண் முன்னால வந்தது.

மேனேஜர் முத நாளே சொன்னார்,”ஷ்யாமளிம்மா இந்த எக்ஸ்போர்ட் டாகுமென்டை கொஞ்சம் லேட்டானாலும் இன்னிக்கே முடிச்சிட்டு போ.நாளைக்கு ஷிப்மென்ட் மெடீரியலோட போயாகணும், இதை ஜி.எம் ரொம்ப கண்டிப்பா சொல்லியிருக்கார்”

அன்னிக்குதான் பங்குவோட பிறந்த நாள்,ஃபங்ஷன் வீட்டிலேயே பிரண்ட்ஸ்சோட கொண்டாடற பிளான். டயத்துக்கு போகலைன்னா பங்கு வருத்தப் படுவா. 6.30 வரை வேலை செஞ்சும் வேலை கொஞ்சம் பாக்கி இருந்தது.சரி காலைல சீக்கிரம் வந்து மேனேஜர் வரதுக்குள்ளே முடிச்சிடலாம்னு வந்தாச்சு.

பர்த்டே ஃபங்ஷன் சிம்பிளானு ஆரம்பிச்சு, ஆட்டம் பாட்டம்னு முடியறப்ப நடு இரவு. அசதில தூங்கி காலைல எந்திரிக்கறப்பவே 8.30. அச்சோ ஆபீசுக்கு அந்த மேனேஜர் கடங்காரன் வரதுக்கு முன்னால சீக்கிரம் போகணுமேனு பறந்து பறந்து தயாராகியும் லேட் ஆச்சு, அவசரத்துக்கு ஆட்டோ கூட கிடைக்கலை.

அப்பதான் இந்த போலீஸ்காரர் “என்ன மேடம் அவசரமா போறீங்க போல,நான் வேணா டிராப் பண்ணவா”னு கேட்டார்.

அவசரத்துக்கு பாவமில்லைன்னு,”பிளீஸ் சார் பிராட்வேல கொஞ்சம் டிராப் பண்ணினா உதவியா இருக்கும்”

அப்படிதான் ஆரம்பிச்சது.அப்பறம் வாரத்துல ஒரு நாளாவது புல்லட் சவாரி ஆபீஸ் வரை. மெதுவே புல்லட் சவாரி நேரமும்,திசையும் மாறியது.

ஆபீஸ் நேரம் முடியறப்ப புல்லட் வாசலில் நின்றது, ஷ்யாமளியை அள்ளிக் கொண்டு சில நேரம் மெரினா, சில சமயம் ஈ.சி்.ஆர்.ல லாங் டிரைவ்னு ஆரோக்யமா ஆரம்பிச்சு, சனிக்கிழமை மாட்னி ஷோ வரை அமக்களமா தொடர்ந்தது.

சட்னு நினைவலைகள் கலைஞ்சு அப்பாவோட பேசிட்டிருந்த சமீரை வாஞ்சையுடன் பாத்தா. புன்முறுவலுடன் அவன் அனைவரையும் கவரும் வண்ணம் பேசிக் கொண்டிருந்தான்.ஷ்யாமளிக்கு ஒரே பெருமை இவ்வளவு கம்பீரமான ஒத்தனை கணவனா அடையப் போறோம்ன்றதை நினைச்சு.

அம்மாவுக்குதான் கொஞ்சம் திருப்தி இல்லை போல தெரிஞ்சது,அம்மாவுக்கு அவ அண்ணா பையன் மணிகண்டனுக்கு ஷ்யாமளியைக் கொடுக்கணும்னு ஆசை, நிறைய சொத்து பத்து இருக்கு,ஆடிட்டரா இருக்கான்னு. ஆனா என்ன பண்றது நாம நினைக்கறது ஒண்ணு, நடக்கறது ஒண்ணு.எது தலைல எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்.

அதுக்கப்பறம் எல்லாம் மளமளனு நடந்தது.சமீர் கம்பீரமாதான் இருந்தார். அக்காவுக்கு கனப்பொருத்தம். அவரோட பேரண்ட்ஸ் மேட்டூர் பக்கம் விவசாயக் குடும்பம். அவங்க பெரிசா ஒண்ணும் அலட்டிக்கலை.

இதோ இப்ப பந்தக்கால் கூட நட்டாச்சு.நாளனைக்கு கல்யாணம். சமீர்தான் சொன்னார் இப்பல்லாம் புதுசா ஏதோ பிரி மெரிடல் ஃபோட்டோ ஷூட்னு இருக்காம்.போகணும் கண்டிப்பானு மகாபலிபுரம் பக்கத்துல முட்டுக்காடுனு பேக் வாட்டர்,போட் கிளப், பக்கத்துலயே அழகான ரிசார்ட்ல ரூம் புக் பண்ணியாச்சாம்.

அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் வச்சிக்கங்களேன்னு சொல்லிப் பாத்தார், சமீர் பிடிவாதம், அக்காவுக்கும் இஷ்டம். ஆனா இதுல நான் எதுக்கு, கட்டாயம் நீயும் வரணும்னு கட்டாயப் படுத்தினாங்க அக்காவும், சமீரும். அப்பாவும் சொன்னார் நீயும் கூடப் போயிட்டு வானு…

வாடகைக் கார் புக் பண்ணி போனோம். அழகான ரிசார்ட்தான். ஆனா எனக்கு அவங்க கூட போறது கஷ்டமா இருந்தது. கார்லயே சமீர் அக்காகிட்ட அவ்வளவு இன்டிமேட்டா நடக்க முயற்சித்தது எனக்கு சங்கடமா இருந்தது. அக்கா ஜாடையா எவ்வளவோ சொல்றா ரெண்டு நாள்ல கல்யாணம் ஆயிடும், அதுவும் இந்த சின்னப் பொண்ணுக்கு முன்னால வேண்டாம்னு,யாரு கேக்கறா.

ரிசார்ட்ல எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ரெண்டு பெட்ரூம் வில்லா. எனக்கு ஒரு ரூம், அக்காவுக்கு ஒண்ணு, சமீர் ஹால்ல எக்ஸ்ட்ரா பெட்லனு பேச்சு.

அக்கா குளிக்கறா போல இருக்கு அவ பெட் ரூம்ல, நானும் குளிக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கறப்ப கதவு தட்டல்., தயக்கத்தோட கொஞ்சமா திறந்து பாத்தேன். சமீர்தான் கதவை திறந்து உள்ளே வந்தார்.

.”என்ன அத்தான், நான் குளிக்கப் போறேன்,ஒரு மணி நேரத்துல நாம போட்டிங் போகணுமே”

“சரி போகலாம் கொஞ்சம் இங்கே வா”

இப்ப சமீரின் பேச்சு வித்யாசமாப் பட்டது. கொஞ்சம் குடிச்சிருப்பார் போலத் தெரிஞ்சது அவர் பேச்சு, என் மேல மேஞ்ச பார்வை எனக்கு சுத்தமா பிடிக்கலை.

“இல்லை நான் குளிக்கணும் நீங்க அப்பறம் வாங்க”

“சர்தான் வாடா பங்கு, ஒண்ணும் தெரியாத மாதிரி ஆக்ட் கொடுக்கறயே., உனக்காகத்தானே இந்த டிரிப்பே ஏற்பாடு பண்ணினேன்”

சட்னு பக்கத்துல வந்து இறுக அணைத்துக் கொண்டான். முகத்தை கட்டாயமாத் திருப்பி இதழ்களைக் கவ்வினான். அவன் கை கண்ட இடத்துக்கும் தாவியது. என் கைக்கு கிடைத்தது பக்கத்திலிருந்த தண்ணி பாட்டில்தான். அதை எடுத்து அவன் தலையில் போட்டேன். பிளாஸ்டிக் பெட் பாட்டில் அடி சரியா விழலை, ஆனா கண்டிப்பா ஷாக் ஆயிட்டான்.

“பரவாயில்லை அப்பறம் வச்சிக்கறேன் உன்னை, உன் அக்காகிட்ட ஏதும் உளராமல் இருந்தா உனக்கு நல்லது.” கதவைத் திறந்து வெளியே போயிட்டான்.

என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியலை.அப்படியே பாத்ரூமுக்கு ஓடி ஷவருக்கு கீழே நின்னேன்.அவன் தொட்ட இடமெல்லாம் எட்டுக்கால் பூச்சி மேலே ஊர்ந்த மாதிரி அறுவருப்பா இருந்தது. எவ்வளவு சோப் போட்டாலும் துக்கம்தான் வந்தது, அங்கே இருந்த சின்ன காம்ப்ளிமென்டரி டூத் பேஸ்டை எடுத்து என் இதழ்களை அழுத்தி அழுத்தி தேச்சேன்.

ஒரு வழியா மனசைத் தேத்திண்டு அக்கா ரூமுக்குப் போனேன். நல்லவேளை அந்த சண்டாளன் எங்கேயும் காணலை. அக்காவைப் பாத்ததும் என்னால் அடக்க முடியலை. அவளைக் கட்டிப் பிடிச்சு அழுது எல்லாத்தையும் கொட்டிட்டேன். அக்கா வழக்கத்துக்கு மாறான இறுக்கமான முகத்தோட அமைதி காத்தாள்.

“சரி வா போட்டிங் டயமாச்சு போகலாம், நம்ம டைம் ஸ்லாட் 10 நிமிஷம்தான் இருக்குனு புறப்பட்டது ஆச்சரியமா இருந்தது.ஒரு வேளை நான் சொன்னதை நம்பல்லையோ.

சமீர் மிடுக்கான போலீஸ் உடையில் காத்திருந்தான். எங்களைப் பாத்ததும் எதுவுமே நடக்காத மாதிரி, ”ஹை கேர்ல்ஸ் கம் ஆன் ஃபாஸ்ட் அவர் போட் இஸ் வெயிட்டிங்”

ஷாமளியும்,”ஹை ஸ்வீட் ஹார்ட் வி ஆர் ரெடி”னு அவனைப் பாத்து சிரித்தாள்.

அவன்,”ஒய் பங்கு லுக்ஸ் அப்செட்,எனிதிங் ராங்”னு கேக்கறான் தைரியமா.

அக்கா கேட்டா,”ஏன் யூனிபார்ம்ல போட்டிங்”

“அப்பதான் எல்லாருக்கும் பயம் இருக்கும்,பணமும் ஜாஸ்தி கேக்க மாட்டான்.”

போட்டில் ஏறினோம்,கூட போட்டை செலுத்த வந்த போட்மேனை சமீர்”நீ வேண்டாம் , நான் பாத்துக்கறேன்”னான்

போட்மேனுக்கு தயக்கம் ஆனா போலீஸ் ஆச்சே. எனக்கும் உள்ளூர பயம் அக்காகிட்ட சொல்லாம இருக்கணும்னு எங்கயாவது ஆழமான இடத்தில் கொண்டு போய் என்னைத் தள்ளிடுவானோனு”

யாரும் ஒண்ணும் பேசாம ரைட் பண்ணினோம். மோட்டார் ஓடற சத்தம் மட்டும கேக்கறது. சமீர் ஸ்டியரிங் பிடிச்சுட்டு உக்காந்திருக்கான். ஒரு 15 நிமிஷம் ஆச்சு ஆழமான இடம் ஷாமளி சட்னு கேட்டா, “இன்ஸ்பெக்டர் சாருக்கு அதுக்குள்ளே நான் சலிச்சிட்டேனோ?என்னை விட இளரத்தம் கேக்குதோ,இல்லை ரெண்டும் வேணுமா?”

முதல்ல கொஞ்சம் உறைஞ்சு போன சமீர், ”இல்லை சும்மா விளையாட்டாதான், ஓகே ஐ அக்செப்ட், உன்னை பங்கஜாவை ரெண்டு பேரையும் வச்சிக்கத் தயார். உன்னை நம்ம ஒரிஜினல் பிளான்படி கல்யாணம் பண்ணிக்கறேன். பங்கஜாவை கொஞ்ச நாள் வச்சிருந்துட்டு நாமளே ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக்கொடுத்துடலா……………ம்.

அவன் சொல்லி முடிக்கறதுக்குள்ளே அவசர உபயோகத்துக்கு வச்சிருந்த அந்த துடுப்புக் கட்டை வேகமா அவன் தலையில் இறங்கியது. தடுமாறி ரத்தம் வழிய தண்ணீரில் விழுந்தான் சமீர். இந்த அடியில் அவன் இறக்க வாய்ப்பு இல்லை. ஆனா செம அடி. மோட்டோர் போட் இரைச்சலோட கரைக்கு திரும்பியது. ஷாமளிக்கு லாவகமா போட்டை தரை திருப்பத் தெரிந்தது.

கதறிக் கதறி அழும் ஷாமளியை சமாதானப்படுத்த என்னாலோ, என் பெற்றோராலோ முடியலை. குறித்த நாளில் கல்யாணம் நடக்கலை. ஆனா கல்யாணத்துக்குனே புறப்பட்டு வந்திருந்த மாமா சுந்தரேசன் நிலமையை புரிந்து கொண்டு தன் மகனிடம் பேசினார். அடுத்த முகூர்த்தத்தில் ஆடிட்டர் மணிகண்டனின் மனைவி ஆனாள் ஷ்யாமளசுந்தரி.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அனன்யா என் அன்னாசிப்பழமே (சிறுகதை) – சுஶ்ரீ

    சொன்னால் புரியாது (சிறுகதை) – சுஶ்ரீ