2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மநாயகத்தை அந்தக் கூச்சல் இடையூறு செய்ய, கூர்ந்து கேட்கலானார்.
‘அய்யோ… வேண்டாங்க… அடிக்காதீங்க… வலிக்குதுங்க” ஒரு பெண்மணியின் குரல்.
‘வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்” என்று வறட்டுக் கத்தலாய் ஒரு ஆண் குரல். கூடவே அடி விழும் ஓசைகள்.
‘வசுமதி… வசுமதி” மனைவியை அழைத்தார் பிரம்மநாயகம்.
கைகளைத் துடைத்தபடியே அடுக்களையிலிருந்து வந்தவள் “என்னங்க,..என்ன வேணும் உங்களுக்கு?”
‘என்ன சத்தம்?… வழக்கம் போல பக்கத்து வீட்டுல ஆரம்பமாயிடுச்சா?”
‘ஆமாங்க… அதேதான்… பாவம் அந்தப் பெண்மணி… எப்படித்தான் புருஷன்கிட்ட தெனமும் அடி வாங்கிட்டு… அத்தனையையும் பொறுத்துக்கிட்டிருக்காளோ?… அப்படித்தான் என்ன சின்ன வயசுக்காரங்களா அவங்க ரெண்டு பேரும்?… அந்த ஆளுக்கு வயசு அம்பதுக்கும் மேலிருக்கும்… அந்தப் பெண்ணுக்கும் ஒரு நாப்பத்தியெழு… நாப்பத்தியெட்டிருக்கும்… இத்தனை வயசுக்கப்புறம் இதுகளுக்குள்ளார இப்படியெல்லாம் சண்டை வேணுமா?” வசுமதி அங்கலாய்த்தாள்.
‘கொழந்த குட்டின்னு ஏதாச்சும் இருந்திருந்தா… இதுக அடங்கியிருக்கும்க… அதுவுமில்லியா… அதான்… இதுக ஆடிக்கிட்டிருக்குதுக”
‘அந்தப் பெண்மணியைக் குத்தம் சொல்ல முடியாதுங்க… நானும் அப்பப்ப வெளிய… தெருவுல போகும் போது… வரும் போது பார்த்திருக்கேன்… ரொம்ப அமைதியான… சாந்தமான முகம்… யாருகிட்டேயும் இரைந்து கூடப் பேசாத குணம்… அந்தாளுதான் ரொம்ப முசுடா இருப்பான் போலத் தெரியுது”
இப்போது அடி விழும் சத்தங்கள் நின்று போயிருக்க, அப்பெண்மணியின் அழுகைச் சத்தம் மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.
மறுநாள் காலை.
வாக்கிங் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் பிரம்மநாயகம். கையில் டிபன் கேரியருடன் தன்னைக் கடந்து போன அந்தப் பக்கத்து வீட்டு மனிதரைக் கண்டதும் அவருடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.
‘சார்…சார்” அழைத்தார்.
அவர் நின்று திரும்பிப் பார்க்க, ‘சார்… நான் பிரம்மநாயகம்… உங்க பக்கத்து வீட்டுலதான் குடியிருக்கேன்… வந்து நாலு மாசமாச்சு… உங்ககூடப் பேசவோ… அறிமுகப்படுத்திக்கவோ முடியலை… சார்…எங்க வேலை பார்க்கறீங்க?” வெகு சிநேகிதமாய்க் கேட்டார்.
முகத்தில் ஒருவித வெறுப்போடு அவரைப் பார்த்த அந்த மனிதர் “அய்யா பக்கத்து வீட்டுக்காரரே… நான் ஏழரை மணிக்குள்ளார ஃபாக்டரில இருக்கணும்… அறிமுகம் பண்ணிக்கிட்டு அரட்டை அடிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை… பிறகு பார்க்கலாம்” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு நடக்க,
‘வசுமதி சொன்னது சரிதான்… ஒண்ணாம் நெம்பர் முசுடுதான் இந்தாளு”
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
எலக்ட்ரிக் பில் கட்டுவதற்காக ஈ.பி.அலுவலகம் சென்றிருந்த வசுமதி அங்கு காத்திருந்த வேளையில் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி வர சன்னமாய்ப் புன்னகைத்தாள்.
பதிலுக்கு அப்பெண்மணியும் புன்னகைக்க தைரியமாய்ப் பேச ஆரம்பித்தாள். ‘உங்களுக்கு கரெண்ட் பில் எவ்வளவு வருது?”
அப்பெண்மணி தன் கார்டைப் பார்த்து விட்டு “இருநூறு” என்றாள்.
‘பரவாயில்லையே… எங்களுக்கு ஆயிரம் வருது”
‘எங்க வீட்டுல மின்சார உபயோகம் ரொம்பக் கம்மி… அதுவுமில்லாம… இருநூறுக்கும் மேல போனா போச்சு… அவ்வளவுதான்… எங்க வீட்டுக்காரர் என்னைக் கொன்னே போட்டுடுவார்” என்றாள் அப்பெண்மணி பரிதாபமாய்.
அவள் வாயிலிருந்தே அவள் வீட்டுக்காரரைப் பற்றிப் பேச்சு வந்து விட இன்னும் கொஞ்சம் தைரியமான வசுமதி நீண்ட நாட்களாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள்.
‘தினமும் நாங்க எங்க வீட்டுல இருந்து கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்… எதுக்கு உங்க வீட்டுக்காரர் உங்களை அந்த மாதிரி அடிக்கிறார்… என்ன காரணம்?”
மெலிதாய் முறுவலித்த அப்பெண்மணி “காரணத்துக்கா பஞ்சம்?… ஏதாவதொரு காரணம்… கிடைச்சிடும்… அடிக்கறார்” சொல்லி விட்டு அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, வசுமதியும் அமைதியானாள்.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் வசுமதியே தொடர்ந்தாள். “உங்களால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியது?… எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாம… வரம் வாங்கிட்டு வந்த மாதிரி அவர் குடுக்கற அடிகளை வாங்கிக்கறீங்களே… ஏன் இப்படி?..சொல்லிப் புரிய வைக்கக் கூடாதா?”
பதிலேதும் பேசாது மெல்லப் புன்னகைத்தாள் அந்தப் பெண்மணி.
‘என்னடா இவ… நம்ம குடும்ப விஷயங்கள்ல தலையிடறான்னு நெனைக்காதீங்க… திருப்பி ஒரு வார்த்தை கூடவா எதிர்த்துப் பேச முடியாது உங்களால?… எனக்கென்னமோ நீங்க எதிர்த்துப் பேச மாட்டீங்க அப்படிங்கற தைரியத்துலதான் அவர் தொடர்ந்து அடிச்சிட்டே இருக்கார்ன்னு தோணுது”
அவள் ‘குறு..குறு” வென்று வசுமதியின் கண்களையே பார்க்க,
‘அய்யய்யோ… உங்களுக்குள்ளார பகையை மூட்டி விடணும்கறதுக்காக நான் இதைச் சொல்லலே… ஒரு பொம்பளை அனுபவிக்கற சித்திரவதையை இன்னொரு பொம்பளையால தாங்க முடியல… அதனால சொல்றேன்”
அவள் இப்போதும் வசுமதியின் முகத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பொறுமையிழந்த வசுமதி மறுபடியும் எதையோ சொல்ல வாயெடுக்க அவளைக் கையமர்த்திய அப்பெண்மணி “அம்மாடி… முன்பின் தெரியாத எம்மேல நீ இத்தனை அக்கறை காட்டுறதுக்கு ரொம்ப நன்றிம்மா… நான் எம்புருஷனோட அடிகளையும்… அதோட வலிகளையும் பொறுமையாத் தாங்கிக்கிட்டு ஒரு சகிப்புத்தன்மையோட இருக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு… அது மத்தவங்களுக்குப் புரியாது”
‘காரணமா?” வசுமதி ஆர்வமானாள்.
‘ஆமாம்மா… ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கணவர் ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளியா… கிட்டத்தட்ட நூறு… நூத்தம்பது பேருக்கு வேலை குடுக்கறவரா… பணபலத்தோட… அதிகார பலத்தோட… செல்வாக்கோட இருந்தவரும்மா… கூட இருந்த பார்ட்னரும்… ஆடிட்டரும் சேர்ந்து பண்ணின தில்லுமுல்லுத்தனத்தால் கம்பெனி ‘சட…சட”ன்னு சரிஞ்சு விழுந்திட்டுது… அவங்கெல்லாம் முன்கூட்டியே புத்திசாலித்தனமா தங்களோட சொத்துக்களை பாதுகாப்புப் பண்ணி வெச்சுக்கிட்டுத் தப்பிச்சிட்டாங்க… இவருதான் பாவம் எல்லாரையும் நம்பி… ஏமாந்து…. திவாலாகி… வீடு வாசலை இழந்து… அடுத்த வேளைச் சோத்துக்குக் கூட வழியில்லாதவராகி நடு ரோட்டுக்கு வந்திட்டாரு”
‘அடப்பாவமே”
‘கடைசில… இப்ப… ஏதோ ஒரு குறைஞ்ச சம்பளத்துக்கு… ஒரு சின்ன கம்பெனில வேலைக்குச் சேர்ந்திட்டாரு… அதன் மூலமா இப்போதைக்கு ஏதோ அரை வயிறு…கால் வயிறு நெறையுது… நல்ல வேளையா ஆண்டவன் எங்களுக்குன்னு குழந்தை குட்டி எதையும் குடுக்கல… இல்லேன்னா பாவம்…அதுகளும் எங்க கூட சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கும்க”
“சரிம்மா… அதுக்கும் அவரு தெனமும் உங்களை அடிக்கறதுக்கும்… நீங்க அலாதிப் பொறுமை காக்கறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?… இதெல்லாம் வாழ்க்கைல எல்லாருக்கும் வர்ற ஏற்ற தாழ்வுகதானே?” வசுமதி விடாமல் கேட்டாள்.
“அம்மா… அவருக்கு வயசு ஐம்பத்தியொண்ணு… இப்ப அவரு வேலைக்குப் போற எடத்துல அவரோட மேலதிகாரியா இருக்கற எல்லோருமே அவரை விட வயசுல குறைஞ்சவங்க… அவங்க ஏவுற வேலையைச் செய்யற ஆள் இவரு… அது அவரை மனசளவுல ரொம்பவே பாதிச்சிருக்கு… ஆனாலும் வயித்துப் பாட்டுக்காக அதை மறைச்சுக்கிட்டு வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு… சமயத்துல வயசுல குறைஞ்ச அவங்க இவரை அதிகாரத் தொணில விரட்டும் போது… எதிர்த்துக் கேட்க… நாக்கும் மனசும் துடிச்சாலும் பேச முடியாத சூழ்நிலை… ஆரம்பத்திலிருந்தே ஒரு முதலாளியா வாழ்ந்திட்டு… நூத்துக் கணக்கான பேர்களை அதிகாரம் பண்ணிட்டிருந்தவரோட மனசு அது போன்ற சூழ்நிலைகள்ல எவ்வளவு வலிக்கும்னு எனக்குத்தான் தெரியும் அதனால….”
‘அதனால….,”
‘பாவம்… மேலதிகாரிக மேலே காட்ட முடியாத கோபத்தையும்… ஆவேசத்தையும்… ஆரம்பத்திலிருந்து பழகி வந்துட்ட அதிகாரத்தையும்… ஆக்ரோஷத்தையம் அவரு எங்க போயி,.. யாரு கிட்டக் காட்டுவார்?… அவர் என் மேல் காட்டுற கோபமெல்லாம்… எனக்குக் குடுக்கற அடியெல்லாம் அந்த ஆவேசத்தின் வெளிப்பாடுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்… அதனாலதான் அவரோட அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலா என்னை நான் ஆக்கிக்கிட்டு பொறுமையா இருக்கேன்”
அந்தப் பெண்மணி சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்ட வசுமதி தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
‘புருஷனோட சுகங்களுக்கும்… சந்தோஷங்களுக்கும் மட்டும் பொண்டாட்டி வடிகாலல்ல… சோகங்களுக்கும்… ஏன்… கோபங்களுக்கும் கூட அவதான் வடிகால்”
பில் கௌண்டரில் ஆள் வந்து அமர்ந்ததும், “சரி… வர்றேன்மா” என்று சொல்லி விட்டு நிதானமாய் எழுந்து நடந்த அந்தப் பெண்மணியைப் பெருமையுடன் பார்த்தாள் வசுமதி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்ல கருத்து ஆழமுள்ள கதை . ஆனாலும் ஏனோ அந்தப் பெண்மணி பாவம் தானே என்று தோன்றுகிறது. அதுவும் இத்தனை வயதில் கணவனிடம் அடி வாங்குவது பாவம்