in ,

என்னைச் சொல்லிக் குற்றமில்லை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

            வீட்டிற்குள் நுழைந்து. நிதானமாய் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு, என் அறையை நோக்கி நடந்த என்னை, தடுத்து நிறுத்தியது அப்பாவின் அடித் தொண்டைக் கத்தல்.

            ‘போதும் இதுவரைக்கும் நீ கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போய் கிழிச்சது…நாளையிலிருந்து போக வேண்டாம்… நின்னுடு”

            ‘திடு..திப்”பென்று அப்பா அப்படிச் சொன்னது என்னை அதிர்ச்சி மற்றும் குழப்பத்திற்குள்ளாக்கி விட, ‘என்னங்கப்பா… ஏன்… திடீர்னு இப்படிச் சொல்லறீங்க?” யதார்த்தமாய்க் கேட்டேன்.

            ‘காரணமெல்லாம் உன்கிட்டச் சொல்லிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை… நின்னுடுன்னா… நின்னுடு… அவ்வளவுதான்”

            சமையலறையிலிருந்து வெளி வந்த அம்மா, ‘என்னங்க நீங்க?.. என்ன… ஏது… ன்னு காரணம் செல்லாம இப்படிப் “பொசுக்”னு போக வேண்டாம்னு சொன்னா… இத்தனை நாள் போனது…பணம் கட்டினது… படிச்சது எல்லாமே வேஸ்டாயிடுமல்ல?”

            ‘ம்ம்ம்… அவசியம் காரணத்தைத் தெரிஞ்சுக்கணுமோ?” அப்பா நக்கலாய்க் கேட்க,

            ‘அட… அமாம்… சொல்லுங்க”

            ‘நாலு வீடு தள்ளி இருக்கானே….காதுல கடுக்கன் போட்டுக்கிட்டு… பாகவதர் மாதிரி பின்னாடி முடி வெச்சுக்கிட்டு… ஒரு பையன்…?”

            ‘ஆமாம்… ஆடிட்டர் வீட்டுப் பையன்..”

            ‘அவனும்… இவ போற அதே கம்ப்யூட்டர் சென்டருக்குத்தான் போறானாம்”

            ‘சரி… இருந்திட்டுப் போகட்டும்… அதுக்காக நாம ஏன் நம்ம பொண்ணை நிறுத்தணும்?” அம்மா எனக்காக வாதாடினாள்.

            ‘ஏய்… உனக்குத் தெரியாது… வாயை மூடிக்க… அந்தப் பையன் அங்க போறதே இவளைப் பார்க்கத்தான்… இவளோட பழகி… லவ் பண்ணத்தான்.”

            எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நாலாவது வீடு ஒரு ஆடிட்டர் வீடு என்பதும். அங்க பாகவதர் கிராப்போட ஒரு பையன் இருக்கிறானென்பதும், அவன் நான் படிக்கும் அதே கம்ப்யூட்டர் சென்டரில்தான் படிக்கிறான் என்பதும், இந்த நிமிடம் வரை எனக்குத் தெரியாத விஷயங்கள்.

            ‘த பாருங்க… எனக்குக் கண்டவங்களைப் பத்தியெல்லாம் கவலையில்லை…. என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கையிருக்கு… அவ அப்படியெல்லாம் போறவளில்லை” அம்மா என் மேலுள்ள நம்பிக்கையை வார;த்தைகளாக்கிக் கொட்டினாள்.

            ‘அப்படின்னு நீதான் நெனச்சிட்டிருக்கே… இந்தப்பக்கமிருந்து க்ரீன் சிக்னல் வராம அந்தப் பையன் எப்படி அங்க போவான்?”

            ”பக்”கென்றது எனக்கு. ‘ச்சே… அப்பாவா இப்படிப் பேசறார்..? இவ்வளவுதானா இவருக்கு என் மேல் நம்பிக்கை?”

            நான் அரண்டது போலவே அம்மாவும் அரண்டு போனாள். ‘ச்சீய்…. வாய் புளிச்சுதோ… மாங்காய் புளிச்சுதோ?…ன்னு எதை வேணுமானாலும் பேசாதீங்க… இவ நம்ம பொண்ணு…. தப்புத் தண்டாவுக்குப் போக மாட்டா..” அம்மா ஆணித்தரமாக அடித்துப் பேசினாள்.

            ‘அவ நம்ம பொண்ணுதான் யார் இல்லேன்னா….ஆனாலும் அவ இந்தக் காலத்துப் பொண்ணாச்சே!…”

            கடும் கோபத்திற்குள்ளான நான் சடடென்று அப்பாவின் முன் சென்று, அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டேன், ‘அப்பா… நீங்க என்னை நம்பலையா?”

            அவரோ பதில் பேசாமல் இறுகிய முகத்துடன் எங்கோ பார்த்தார்.

            ‘அப்பா…. நீங்க சொல்லுற அந்த நாலாவது வீட்டுப் பையன் யாரு… எப்படியிருப்பான்… கருப்பா… சிவப்பா… ன்னு கூட எனக்குத் தொpயாதுப்பா” தழுதழுத்த குரலில் சொன்னேன்.

            நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதை நம்பாதவராய், தலையை இட… வலமாய் ஆட்டியபடி அங்கிருந்து நகர்ந்த அப்பாவை கண்ணீருடன் பார்த்தேன.

            மூன்று நாட்களுக்குப் பிறகு,

            மாலை ஆறு மணியிருக்கும், ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கி வீடடிற்குள் நுழையப் போன என்னை எரிப்பது போல் பார்த்தபடி வாசலிலேயே நின்றிருந்தார் அப்பா.

            ‘இப்ப… இதுக்கு என்ன சொல்றே?” கண்களை உருட்டியபடி கேட்டார்.

            ‘எதுக்குப்பா?”

            ‘ஆஹா… உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு…”

            ‘ப்ச்… அப்பா… எதுவானாலும் நேரடியாச் சொல்லுங்கப்பா… நீங்க பார்க்கறது… பேசறது… எதுவுமே புரியலைப்பா”

            ‘இப்ப… ஷேர் ஆட்டோவுலதானே வந்தே?”

            ‘ஆமாம்”

            ‘கூட வந்தது யார்?”

            ‘ம்ம்ம்… யாரு… தெரியலையே… நான் இறங்கும் போது யாரோ ஒரு ஆள் மட்டும்தான் உள்ளார உட்கார்ந்திட்டிருந்த மாதிரி இருந்தது… அவ்வளவுதான்”

            ‘அது யாருன்னு உனக்குத் தெரியாது… அப்படித்தானே?”

            ‘என்னப்பா இது… ஷேர் ஆட்டோன்னா… அங்கங்கே  நிக்கும் போது யார் யாரோ ஏறுவாங்க… இறங்குவாங்க… அதெல்லாம் யாருன்னு எனக்கெப்படிப்பா தெரியும்?”

            ‘பரவாயில்லைம்மா… நல்லா சமாளிக்கறே…” அசிங்கமாய்ச் சிரித்தார் அப்பா.

            நான் கடுப்பாகி முறைத்தேன்.

            ‘அதெப்படி அந்த நாலாவது வீட்டுப் பையனும் நீயும் மட்டும் கரெக்டா ஷேர் ஆட்டோவுல ஒண்ணு சேருவீங்க?… இத்தனைக்கும் அவன்கிட்ட சொந்தமா ஒரு பைக் இருக்கு… அவன் ஏன் ஷேர் ஆட்டோவுல வரணும்,”

            அப்போதுதான் எனக்கே தெரிய வந்தது, அந்த ஷேர் ஆட்டோவுல நான் இறங்கும் உட்கார்ந்திருந்த நபர்தான் அப்பா குறிப்பிடும் அந்த நாலாவது வீட்டுப் பையன் என்று.

            ‘அப்பா… நீங்க நம்பினாலும் சரி… நம்பாட்டாலும் சரி… எனக்கு எந்தப் பையனையும் தெரியாது… நான் எவன் கூடவும் வரலை” வெடுக்கென்று சொல்லி விட்டு வேகவேகமாய் என் அறைக்குள் புகுந்து கொண்டேன்.

            வெளியே அவர் தொடர்ந்து அரை மணி நேரம் கத்திக் கொண்டிருந்ததைக் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை நான்.

            மதியம்.  கொரியர்க்காரனுக்காக காத்திருந்தேன். ‘ச்சை… மத்த நாளெல்லாம் ஒரு மணி… ஒன்றரை மணிக்கே வந்திடுவாரு… இன்னிக்குன்னு பாத்து… மணி மூணாச்சு…. இன்னும் காணோம்”

            ‘என்னடி கலைவாணி… ரோட்டையே திரும்பத் திரும்பப் பார்த்திட்டிருக்கே… என்ன விஷயம்?” அம்மா கேட்டாள்.

            ‘ஒண்ணுமில்லைம்மா இன்னிக்கு கொரியர்ல நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் பாஸ் செய்ததற்கான சான்றிதழ் வருமாம்… சென்டர்ல சொன்னாங்க… அதான் கொரியர்க்காரனை பார்த்திட்டிருக்கேன்”

            ‘இன்னுமா வரலை… இன்னேரம் வந்திருக்கணுமே…” நெற்றியைச் சுருக்கியபடி அம்மா சொல்லும் போது,

            வெளியே வாகன ஓசை. பாய்ந்து வெளியில் ஓடியவள் அதே வேகத்தில் திரும்பினேன்.  வேறு யாரோ.  ‘ச்சை” நொந்தவாறே என் அறையை நோக்கித் திரும்பியவளின் முதுகில்  “மடேர்” என்று அந்த அடி விழ, ‘தொப்”பென்று தரையில் விழுந்தேன்.

            விழுந்தவள் ‘விருட்”டென்று எழுந்து பின்னால் பார்த்தேன்.  அப்பா நின்று கொண்டிருந்தார்.  ‘அ…ப்…பா….நீ… நீங்களா அடிச்சீங்க?” கேட்டேன்.

            ‘பின்னே… நீ செஞ்ச காரியத்துக்கு அடிக்காம கொஞ்சுவாங்களா?”

            எதுவும் புரியாதவளாய் எழுந்து நின்ற என்னை நெருங்கி வந்த அப்பா,  ‘அந்தப் பையனோட பைக் சத்தத்தைக் கேட்டுத்தானே இப்ப நீ அரக்கப்பரக்க வெளிய ஓடுனே?.. சொல்லு…”

            ‘இல்லப்பா… நான்… கொரியர்க்காரன்..”

            ‘எந்த ஊர்ல கொரியர்க்காரன் பைக்குல வர்றான்… ஏண்டி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தில ஏறாதா?”

            யோசித்துப் பார்த்தபோது லேசாய்த் தெரிந்தது. ‘ஆமாம்… ஒரு பைக் போன மாதிரிதான் இருந்தது…ஓ…அதுதான் அவனா?”

            வுழக்கம் போல் இந்த முறையும் என்னைக் காப்பாற்ற அம்மா வந்தாள். ‘ஏங்க… அவ ஒரு மணியிலிருந்து கொரியர்க்காரனுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காளுங்க… அவளோட கம்ப்யூட்டர் சர்ட்டிபிகேட் வருமாம்..”

            தன் பக்கம் வலுவான ஆதாரம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த அப்பா என்னையும் அம்மாவையும் முறைத்துப் பார்த்தபடியே நகர்ந்தார்.

            மறுநாள் காலை.  கோவிலுக்குச் செல்வதற்காக தெருவில் இறங்கி நடந்தேன்.

            அப்பா குறிப்பிடும் அந்த நாலாவது வீட்டை நெருங்கும் போது என்னையுமறியாமல் என் தலை நிமிர்ந்து பார்த்தது. ‘எங்கே அவன்?” என் கண்கள் தேடின.

            அருகில் ஒரு பைக் சப்தம் கேட்க, ஆவலுடன் திரும்பிப் பார்த்தேன்.

            காதில் கடுக்கண் மற்றும் பாகவதர் கிராப்புடன் அந்த நாலாவது வீட்டின் முன் வந்து நின்ற அந்த பைக்கிலிருந்து இறங்கிய இளைஞனை…

            முதன் முறையாக….

            நேரடியாக…

            சிறிதும் லஜ்ஜையின்றி….

            ஊடுருவிப் பார்த்தேன்.

“இனி தினமும் பார்ப்பேன்!… நல்லா பார்ப்பேன்”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாறாத மாற்றங்கள் (சிறுகதை) – மைதிலி ராமையா

    வயது கடந்த காதல் (சிறுகதை) – வித்யாஸ்ரீ. S