2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காய்கறி மார்க்கெட்.
“ம்மா… இன்னையோட சரி… இனிமேல் என்னை இந்த மாதிரி மார்க்கெட்டுக்கெல்லாம் கூப்பிடாதம்மா!… என்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் பார்த்திட்டாங்கன்னா… எனக்குத்தான் கேவலம்” சத்தமில்லாமல் தாயின் காதோரம் புலம்பினான் குமார்.
“இதிலென்னடா கேவலம்?… நம்ம வீட்டுக்குத்தானே வாங்கறோம்” அவன் நிலைமை புரியாமல் உரத்த குரலில் பதில் சொன்னாள் தாய்.
“ச்சூ… எதுக்கு இப்படிக் கத்தறே?” பல்லைக் கடித்தான் குமார்.
“அட… மார்க்கெட்டுக்குள்ளார சத்தமா பேசாம “கிசு…கிசு”ன்னா பேசுவாங்க?… அப்படிப் பேசினா இங்கிருக்கற சத்தத்துல காதுல ஒண்ணுமே விழாதுடா” மீண்டும் அதே உரத்த குரல்.
இதற்கு மேல் அவளிடம் பேசினால் தனக்குத்தான் அவமானம் என்று கருதி அமைதியானான் குமார்.
அப்போதுதான் அவன் பார்வையில் அந்த சதீஷ் பட்டான்.
“அய்யய்யோ… சதீஷ் வேற வர்றானே!… இப்ப என்ன பண்றது?… இந்த மாதிரி ஒரு அம்மாவோட… இத்தனை பைகளைத் தூக்கிட்டு நான் போறதை பார்த்துட்டான்னா அவ்வளவுதான்!… என்னோட பிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!… அது மட்டுமா காலேஜ்ல எல்லார் முன்னாடியும் வெச்சு… “ப்ரோ… இவன் கொஞ்சம் கூட ஹை ஸ்டேட்டஸ் இல்லாத பக்கா லோக்கல்யா… இவன் கூட யாரும் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்காதீங்கப்பா…”ன்னு கூசாமச் சொல்லுவான்!… அது மட்டுமா என்னை இங்கே அம்மாவோட பார்த்ததைச் சொல்லிச் சொல்லி… கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்” உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே குமார் அந்த பணக்கார தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான்.
அவன் படிக்கும் கல்லூரியில் அப்படியொரு பாகுபாடு உண்டு. காரில் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்து போகும் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும், பஸ்ஸில் அல்லது சைக்கிளில் வந்து போகும் லோக்கல் மாணவர்கள் ஒரு கோஷ்டியாகவும் இருப்பர்.
தான் ஒரு லோக்கல் ஸ்டூடண்ட்டாய் இருந்த போதிலும் அதை மறைத்து, பெற்றோரை சிரமப்படுத்தி ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, போலி அந்தஸ்துடன் பணக்கார மாணவர்கள் கும்பலில் தன்னை இணைத்துக் கொண்டு பாவ்லாவாய் காலந் தள்ளுபவன் குமார்.
ஆனால், அதற்குள் அந்த சதீஷ் இவனைப் பார்த்து விட, “போச்சுடா பார்த்துட்டான்… இனி தப்பவே முடியாது” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தர்ம சங்கடமாய்த் திரும்பி உடன் வரும் அம்மாவை ஏற இறங்கப் பார்த்தான்.
“ஹய்யோ… இந்தக் கோலத்துல இருக்கற அம்மாவை பார்த்தா எனக்கே ஒரு மாதிரி இருக்கே… எண்ணை காணாத நரைத்த தலையும்… வெளுத்துப் போன நூல் புடவையும்… இதை எங்க அம்மா அறிமுகப்படுத்தினா நிச்சயமா என்னைக் கேவலமா நினைப்பான்” குழம்பினான்.
தன்னுடைய பி.எம்.டபிள்யூ.காரை பார்க் செய்து விட்டு குமாரை நோக்கி படு ஸ்டைலாக வந்தான் அந்த சதீஷ்.
அதற்குள் குமார் தன் கைகளில் இருந்த காய்கறிப் பைகளை அவசர அவசரமாய் அம்மாவின் கைகளில் திணித்து விட்டு, முகபாவனையை சற்று இறுக்கமாய் மாற்றிக் கொண்டு, சதீஷை சற்று தள்ளியே நிறுத்தி விடும் நோக்கத்தில், அவனைப் பார்த்துக் கையை அசைத்தபடி வேகமாக முன்னால் வந்தான்.
“ஹாய்…. குமார்!… எங்கே இந்த பக்கம்?… ஹூ இஸ் தட் ஓல்ட் லேடி?” கூலிங் கிளாஸை கழற்றியவாறே அவன் கேட்டான்.
அவன் அணிந்திருந்த உயர்தர டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும் அந்த கூட்டத்தில் அவனைத் தனியே காட்ட, அவன் மீதிருந்து வீசிய காஸ்ட்லி செண்டின் நறுமணம் அங்கிருந்த அனைவரின் நாசியையும் நளினமாய் தடவிச் சென்றது.
“சும்மா டைம் பாஸிங்காக வந்தேன்!… ச்சை!… வெரி டர்ட்டி பிளேஸ்!.. இஸிட்?” செயற்கை தனமான பகட்டுடன் பேசினான் குமார்.
எங்கே, அந்த சதீஷுடன் தான் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அம்மா வந்து தன்னுடன் பேசி தன் மானத்தைக் கெடுத்து விடுவாளோ, என்கிற பதட்டம் அவனுள் இருந்து கொண்டேயிருந்தது.
“இட்ஸ் ஓ.கே.!.. பட்… அது யாருன்னு நீ சொல்லலையே?” குமாரின் தாயாரை சுட்டிக் காட்டி அந்த சதீஷ் விடாமல் கேட்க,
“ச்சை… இவன் வேற திரும்பத் திரும்ப அதையே கேட்டுட்டிருக்கான்” என்று உள்ளுக்குள் நினத்துக் கொண்ட குமார், “ஓ… தட் ஓல்ட் லேடி?… அவங்க எங்க வீட்டு சர்வெண்ட் யா” மனம் கூசாமல் பெற்ற தாயை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தினான் குமார்.
அந்த சதீஷுடன் தொடர்ந்து உரையாடினால் பொய்க்கு மேல் பொய்யாய் அடுக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்த குமார், “ஓகே.. ப்ரோ.. நான் கிளம்புறேன்!… யூ.எஸ்.ஏ.ல இருந்து கெஸ்ட் வருவாங்க!..” இன்னொரு பொய்யை வீசி விட்டு நகர்ந்தான். அவனுடைய உறவினர்களெல்லாம் உள்ளூரையே தாண்டாதவர்கள் என்பது, பாவம் அந்த சதீஷுக்கு எப்படித் தெரியும்?
தூரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கியவன், “ம்மா கிளம்பலாம்!… மீதியெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம்!” என்றான் ஒருவித பதட்டத்துடன்.
“அடப் போடா!… இன்னும் பாதி சாமான் கூட வாங்கலே.. அதுக்குள்ளார போகலாம்ங்கறே!” அவனது அவஸ்தை புரியாத தாய் அப்பாவியாய்க் கூறினாள்.
“ஐயோ உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எரிந்து விழுந்தான்.
“சரிடா… ரெண்டு மூணு முக்கிய சாமான்களை மட்டுமாவது வாங்கிட்டு வந்துடறேன்”
“சரி… நீயே போய் வாங்கிட்டு வந்து சேரு நான் மார்க்கெட் வாசலில் நிற்கிறேன்” சொல்லி விட்டு வேக வேகமாக ஓடினான்.
மார்க்கெட் வாசலில் “கச…கச”வென்று நின்று கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொண்டு, தாயின் வருகைக்காக காத்திருந்தான்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இயற்கை உந்துதலை தவிர்க்க மாட்டாமல் நாலைந்து கார்களை தாண்டி மறைவிடம் தேடிப் போனான்.
ஒரு வெண்ணிற ஹோண்டா சிட்டி காரை தாண்டும் போது அந்த சதீஷ் அங்கு நின்று யாரோ ஒரு டீன் ஏஜ் ஏஞ்சலிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் சட்டென்று நின்றான்.
“அடப்பாவி இங்கேயும் வந்துட்டானா?” ஒளிந்தபடியே நகர்ந்தவன் காதுகளில் அவர்களின் சம்பாஷனை விழ கூர்ந்து கேட்டான்.
“ஹேய் சதீஷ்!… மார்க்கெட்டுக்குள்ளார நின்னு… யாரோடவே பேசிட்டிருந்தியே… யார் அவன்?… உன்னோட ஃபிரண்டா?” ஒருவித முகச்சுளிப்புடன் அந்த ஏஞ்சல் கேட்க,
“அவன்?… என் ஃப்ரெண்டா?… நோ… நோ!… அவன் என் வீட்டு சர்வெண்ட்!.. அவனைப் போய் என் ஃப்ரண்ட்ன்னு… சொல்றியே?… ஜஸ்ட் என்னென்ன வெஜிடபிள்ஸ் வாங்கணும்னு அவனுக்கு சொல்லிட்டிருந்தேன்” என்றான் சதீஷ் படுகேஷுவலாக.
முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது குமாருக்கு. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்த அம்மாவிடம் காய்கறிப் பைகளைத தானே வாங்கிக் கொண்டு அமைதியாக நடந்தான்.
இரு சக்கர வாகனத்தருகே வந்து அம்மாவிடமிருந்து ஒரு பையை வாங்கி பைக்கில் மாட்டும் போது அம்மா சொன்னாள்.
“டேய்… நீ அந்தப் பையனோட பேசிட்டிருந்தியே அப்ப நான் உங்க முதுகுக்குப் பின்னாடியிருந்த தேங்காய்க்காரன்கிட்டேதான் தேங்காய் வாங்கிட்டிருந்தேன்!… நீ பேசினதையெல்லாம் நானும் கேட்டேன்!…” சாதாரணமாய்ச் சொன்னாள்.
ஆடிப் போனான் குமார். ”என்ன… என்ன கேட்டே?” தருமாறினான்.
“ம்ம்… நீ என்னை உன் வீட்டு சர்வெண்ட்ன்னு சொன்னதைக் கேட்டேன்”
என்ன பாதில் சொல்வதென்று குமார் தவிக்க, “நீ சொன்னதுல என்ன தப்பு… ஒரு தாயானவள் எப்பவுமே தன்னோட குழந்தைகளுக்கு… அதுக பெரிசாகி… ஆளானாலும்… சர்வெண்ட்தான்!… சரி வண்டியை எடு… கிளம்பலாம்”
சொல்லி விட்டு அம்மா புன்னகைத்தாள்.
“எந்தச் சூழ்நிலையிலும் உங்களால் புன்னகை செய்ய முடிகின்றதென்றால், நீங்கதான் இந்தப் பிரபஞ்சத்தின் பெரும் வலிமை வாய்ந்த மகாராணி” எங்கோ படித்தது குமாரின் நினைவில் வர,
“அம்மா… நீ ஒரு மகாராணிம்மா” என்றான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings