2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சிவா, கொஞ்சம் மாடர்ன் டெய்லர் வரை போகலாம் வரயானு சிவாவைக் கேட்டேன்.
”ஏன் எதுக்கு, டிரஸ் தைக்க கொடுத்துருக்கயா?”
“இல்லைடா கொடுக்கணும்,பொங்கலுக்கு பேண்ட் ஷர்ட் தைக்கலாம்னு.”
“பொங்கலுக்கா? தீபாவளி போயே 10 நாள் ஆகலயே”
“இல்லை இப்பவே தையக்கூலி, டெலிவரி டைம் விசாரிச்சு வச்சிண்டா நல்லதுதானே”
“துணியெல்லாம் வாங்கியாச்சா?”
சிவா கேட்டவுடனே எனக்கும் ஞானோதயம் பிறந்தது. தீபாவளிக்கே தொங்கித் தொங்கி கெஞ்சி, ஆர்ப்பாட்டம் பண்ணி கடேசி நேரத்துல அப்பா டிரஸ் எடுத்து கொடுத்தார்.இப்ப தெரியறது தன் சொற்ப சம்பளத்துல எவ்வளவு கஷ்டப் பட்டு குடும்ப செலவுகளை சமாளிச்சார்னு. அப்ப 11வது படிக்கறப்ப இதெல்லாம் தெரியலையே.
இந்த தீபாவளி வரை எனக்கும் அவ்வளவு ஒண்ணும் டிரஸ் மேல இன்ட்ரஸ்ட் கிடையாது. என்னாச்சு இப்ப திடீர்னு?அது வந்து இந்த தீபாவளிக்கு நாலு நாள் முன்னால விழுப்புரம் மாமா வீட்டுக்கு நானும் அம்மாவும் போயிருந்தோம். மாமாவுக்கு ஒரு ஆக்சிடண்ட்னு கேள்விப் பட்டு. அங்கே போனவுடனே தெரிஞ்சது, மாமா காய்கறி வாங்க மார்க்கெட் போறப்ப ஒரு சைக்கிள் காரன் இடிச்சு கால் சுண்டு விரல்ல ஒரு சின்ன கீரல்( ரத்தம் கூட வரலை) நாங்க போறப்ப மாமா ஈசிசேர்ல உக்காந்து ஆனந்தவிகடன் பத்திரிகை வாசிச்சிட்டிருந்தார். அம்மாவை பாத்தவுடனே ஒரே அலட்டல்.
என் அம்மா, அதுக்கு மேலே, “ எந்த கடங்காரன்டா என் தம்பி மேலே மோதி காலை உடச்சது, அவன் நல்லா இருப்பானா, நம்ம குடும்பத்துல எல்லாரும் செல்லம் கொடுத்து வளத்தோமே கடைக்குட்டினு, இந்த நிலைமைல பாக்கற படி ஆச்சே”னு புலம்பறா.
சமையல்அறைல இருந்து வந்த அத்தை,” வாங்க, காபி கலக்கவா? உங்க தம்பி ஏற்கனவே ஓவர் ஆக்டிங், இதுல உங்களை பாத்துட்டாரா” சொல்லிட்டே திரும்ப உள்ளே போனார்.
ஆக்சிடன்ட்னு சொன்னாங்களே, துருவி துருவி தேடினாலும் ஒரு கீரல் கூட தெரியலையேனு நான் ஆச்சரியமா மாமாவையே பாத்துட்டிருந்தேன்.அப்ப பின்னால சரசரனு சத்தம், சட்னு திரும்பிப் பாத்தேன்.அம்மாவும் பாத்துட்டு, “ அடியே இது என் மருமகளா,என் கமலிச்செல்லம் என்னமா வளந்துட்டே வா வா இந்த அத்தை கிட்ட உக்காரு”
எனக்கும் ஆச்சரியம், இந்த கமலியை பாத்து ரெண்டு வருஷம் இருக்குமா? அதுக்குள்ளே இவ்வளவு மாற்றமா?
மாமா, “ என்னக்கா உன் மருமகளை பாத்தயா, பெரிய வாலு சட்னு உன் பையனை படிக்க வச்சு வேலைக்கு போச் சொல்லு. காலகாலத்துல கடமையை முடிச்சிடுவோம்”
அந்த கமலிப் பொண்ணு “போங்கப்பா எப்ப பாத்தாலும் கேலி பண்ணிட்டு” குங்கும சிவப்பான முகத்தை என் பக்கம் திருப்பி ஒரு மோகனப் புன்னகையுடன் உள்ளே ஓடிப் போனாள்.
ரெட்டைப் பின்னலை முன்னால போட்டுண்டு ரெண்டு கைகளால அதை பிடிச்ச வண்ணம் பாவாடை பறக்க குதிச்சு குதிச்சு ஓடி விளையாடும் கமலிதான் எனக்கு ஞாபகம். திடீர்னு எப்படி இவ்வளவு அழகா மாற முடியும்.நான் என்னையே ஒரு முறை பாத்தேன், தொளதொளனு கால்சட்டை, லேசா கிழிஞ்சு தொங்கற பாக்கெட்டோட ஒரு கட்டம் போட்ட மஞ்சக் கலர் சட்டை.சே.. கமலி என்னைப் பாத்து என்ன நினைச்சிருப்பா.
விழுப்புரத்துல இருந்து திரும்பினவுடனே அம்மாவை தொந்தரவு பண்ணி அடம் பிடிச்சு தீபாவளிக்கு ஒரு செட் ரெடிமேட் டிரெஸ் வாங்கியாச்சு. இதுவும் அவ்வளவு ஸ்லாக்கியமா இல்லை, ஏதோ ஒரு பழைய ஸ்டாக்கை டிஸ்கவுன்ட் சேல்னு என் தலைல கட்டிட்டான் பாலமுருகன் ரெடிமேட் ஸ்டோர்காரன். அதான் பொங்கலுக்காவது நல்ல துணி எடுத்து மாடர்ன் டெய்லர்ஸ் கிட்ட தைக்கணும்.
ஏன் திடீர்னு இந்த பரபரப்புனு கேக்கறீங்களா, விழுப்புரம் மாமா பொங்கலுக்கு எங்களை குடும்பத்தோட கூப்பிட்டிருக்கார், குடும்பமா சேந்து விழுப்புரம் பக்கத்துல இருக்கற எங்க குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கணும்னு. திரும்ப அந்த கமலி முன்னால பழைய டிரஸ்ல போக முடியுமா?
டிசம்பர் கடோசி வரை டிரஸ் துணி வாங்க போராடி அப்பா கூட்டிட்டு போய் ஓரளவு நல்ல பேண்ட்,ஷர்ட் துணி கோவாபரேடிவ் ஸ்டோர்ல வாங்கி கொடுத்தார். அதை வாங்கிட்டு ,என் ஆத்ம நண்பன் சிவாவையும் கூட்டிட்டு மாடர்ன் டைலர் கிட்ட அளவு கொடுத்துட்டு வந்தவுடனதான் நிம்மதியா மூச்சு விட்டேன்.
பொங்கலுக்கு 3 நாள்தான் இருக்கு. மாடர்ன் டெய்லர் என் டிரஸ் சூப்பரா தச்சு கொடுத்துட்டான்.இது வரை அந்த டிரஸ்ஸை 10 தடவை கைல எடுத்து அழகு பாத்தாச்சு.
ஜனவரி மாசம் பிறந்தவுடனேயே எனக்கு பரபரப்பு. அம்மா கிட்டே எப்படி கேக்கறது, எப்ப விழுப்புரம் போறோம்னு. அன்னிக்கு காலைல அம்மா கூப்பிட்டு “கொஞ்சம் ஒத்தாசை பண்ணுடா இந்த துவைச்ச துணிகளை மட்டும் மொட்டை மாடில காயப் போட்டுட்டு வந்துடு”
“சரிம்மா போறேன், ஆனா இந்த பொங்கலுக்கு நான் விழுப்புரம்லாம் வரது சந்தேகம் எனக்கு பேஸ்கட் பால் மேச் இருக்கலாம் அப்ப”
அம்மா, ”அச்சோ அப்படி சொல்லாதே 12ம் தேதியே நாம போறோம். ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் குலதெய்வ பொங்கல், தவற விடக் கூடாது”
மனசுக்குள்ளே மத்தாப்பு அப்பாடா ஒரு வழியா கன்பர்ம் ஆச்சு போறது. மேலுக்கு, “சரி பாப்போம், இன்னும் மேச் தேதி முடிவாகலை”
12ம் தேதி காலைலயே புறப்பட்டாச்சு மறக்காம புது டிரஸ் பைக்குள்ளே போச்சு. விழுப்புரத்துல இருந்து ஒரு 40 கிலோமீட்டர் தூரம் அந்த கோவில். மாமா ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணி இருந்தார்.
நாங்க மூணு பேர், மாமா, அத்தை, கமலி, அவ தம்பி சுந்தரம் , என் சித்தி,சித்தப்பா, அவங்க 8 வயசு பையன். கட்டு சாதம்லாம் கட்டிட்டு புறப்பட்டோம்
மறக்க முடியுமா அந்த பொங்கல் பிரயாணம்.கேலி, கூத்து, பாட்டுனு அந்த பிரயாணம் வாழ்க்கையின் ஒரு வெளிச்ச நாள்.
கமலி என்னை ஏதோ வம்பிழுத்துக் கொண்டே வந்தாள், அவ்வளவு அருகில் அமர்ந்து என் கூட வந்ததே எனக்கு படு சந்தோஷம்.
என் டிரெஸ் நல்லா இருக்கானு கேட்டேன். சூப்பரா இருக்குடான்னா
இதை கேட்டிட்டிருந்த என் சித்தி “ ஏய் கமலி போடா வாடானு பேசாதே, அப்பறம் கல்யாணம் ஆனா அதே பழக்கமாயிடும் “
கமலி, “அச்சோ யார் சொன்னா நான் இவனை கட்டிப்பேன்னு,நான் கல்யாணமே பண்ற ஐடியா இல்லை, டாக்டருக்கு படிச்சு பொது ஜன சேவை பண்ணப் போறேன்” சொல்லிட்டு என்னைப் பாத்து நாக்கை துருத்தினா.
அதுக்கப்பறம் நான் அவ கூட ஒரு 10 நிமிஷம் பேசவே இல்லை, ஏன் பாக்கக் கூட இல்லை.
மெதுவா என் காதருகே கிசிகிசுத்தாள்,” கோவமா என் அத்தானுக்கு”
நான் ஒன்றும் பதில் கூறாமல் அவள் முகத்தை பாத்தேன். அவள் யாரும் பாக்காத வண்ணம் என் கைகளை பிடித்து அழுத்தினாள். அப்ப ஜனித்தது எங்கள் காதல்.
“ ஏங்க டயமாச்சு பூஜைக்கு எல்லாம் ரெடி, பால் பொங்கப் போகுது சீக்கிரம் வாங்க”
இது எனக்கும் கமலிக்கும் கல்யாணம் ஆனதுக்கப்பறம் 40வது பொங்கல். சந்தோஷமா கொண்டாடறோம் ஒவ்வொரு வருஷமும். குலதெய்வ பொங்கலா? அது ஃபாரின்ல இருக்கற எங்க ரெண்டு பசங்க வரப்ப குடும்பத்தோட சேந்து போய் வைப்போம்.
அச்சோ கமலி திரும்ப கத்தறதுக்குள்ளே போறேன் வரட்டா?
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings