எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த பங்களா வீட்டின் கேட்டிலிருந்த வாட்ச்மேன் அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்து விட்டு, “உள்ளார போங்க!… போய் அந்த போர்ட்டிக்கோ பக்கத்துல… நில்லுங்க…. கொஞ்ச நேரத்துல முதலாளி வந்துடுவார்” என்று சொல்லிவிட்டு இண்டர்காமில் ஏதோ பேசி விட்டு வைத்தான்.
“முதலாளி ஊர்லதான் இருக்காரா?” காளியண்ணன் வழக்கமான அசட்டுச் சிரிப்புடன் கேட்க, “யோவ்… குளிச்சிட்டு இருக்காருய்யா!… போய் அங்க நில்லுங்கய்யா… வருவாரய்யா” என்றான் எரிச்சலுடன் அந்த வாட்ச்மேன்.
“ஹி…ஹி…” என்று அசடு வழித்தபடி ராஜனையும் இழுத்துக் கொண்டு போர்டிக்கோவை நோக்கி நடந்தான் காளியண்ணன்.
பத்து நிமிடத்தில் முதலாளி வந்து எட்டிப் பார்த்தார்.
”நீங்கதான் டிரைவர் வேலைக்கு வந்த ஆளுங்களா?” கேட்டார்.
நல்ல அகலமான வெற்றுடம்பு, மார்பில் தங்கச் சங்கிலி “பள..பள”வென மின்னியது. முகத்தில் கம்பீரமும், கண்டிப்பும் கூடவே கொஞ்சம் கர்வமும் தாண்டவமாடின.
“ஆமாங்க” என்றனர் இருவரும் கோரஸாய்.
“ஒரு டிரைவர் தானே வேணும்னு கேட்டிருந்தோம்?… ரெண்டு பேர் எதுக்கு வந்திருக்கீங்க?”.
“ஐயா…. இவன் தான் டிரைவர் வேலைக்கு வந்திருக்கான்!… நான் சும்மா கூட வந்திருக்கேன்” என்றான் காளியண்ணன்.
“அப்படியா?…”என்றவர் ராஜனைப் பார்த்து, “ஏம்பா உன் பேர் என்ன?” என்று கேட்க, சொன்னான்.
“எத்தனை வருஷம் அனுபவம் டிரைவிங்ல?”.
“அஞ்சு… ஆறு வருஷமா டிரைவிங் பண்ணிக்கிட்டுத்தான் சார் இருக்கேன்!… ஆனா… இப்பதான் முதல் தடவையா ஒரு இடத்துல டிரைவர் வேலைக்கு சேர்றேன்” என்றான் ராஜன்.
“அஞ்சாறு வருஷம் டிரைவிங் பண்ணிட்டுத்தான் இருக்கேன்!னி சொன்னே?… எங்க டிரைவிங் பண்ணினே?” முதலாளி கேட்க,
“ஆக்டிங் டிரைவரா போவேன்… அப்பப்ப டெம்போ ஓட்டுவேன்… லாரி கூட ஓட்டிவேன் சார்”
“அது சரி!… நீ என்ன படிச்சிருக்கே?”
.
“எம். ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் சார்”
.
அதிர்ந்து போனார் முதலாளி. “என்னது எம்.ஏ. படிச்சிருக்கியா?… அதுவும் இங்கிலீஷ் லிட்ரேச்சர்?… அப்புறம் ஏனப்பா டிரைவர் வேலைக்கு வந்திருக்கே?”
“சார்…. படிப்புக்கேத்த வேலை கிடைக்கனும்னு நினைச்சு நிறைய வருஷத்தை வீணடிச்சிட்டேன் சார்!… அதான் கடைசில இந்த முடிவுக்கு வந்தேன்” என்றான் விரக்தியாக.
“வெரி குட்!… ஐ லைக் திஸ் கான்ஸெப்ட்!… நீ நாளையிலிருந்து வேலைக்கு வரலாம்”. என்றார் முதலாளி.
“ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி விட்டுத் திரும்பிய ராஜனை, “ஒரு நிமிஷம்” என்று சொல்லி நிறுத்தினார் முதலாளி.
“இங்க பாருப்பா… ஒரு முக்கியமான விஷயத்தை…. இப்பவே சொல்லிடறேன்!.. எனக்கு ரெண்டு வயசு பொண்ணுங்க இருக்காங்க!… அவங்களை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டுக் கூட்டிட்டு வர்றது உன்னோட வேலைதான்!… நீயும் வயசு பையன்… அதனால வயசுக் கோளாறுல ஏதாவது காதல்… கீதல்…ன்னு என் பொண்ணுக கிட்ட வாலாட்டினே?… என்னோட இன்னொரு பக்கத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும்… ஜாக்கிரதை!” ஆட்காட்டி விரலைக் காட்டி மிரட்டுவது போல சொன்னார்.
“சார்… நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை சார்!… இன்னும் சொல்லப் போனால் எனக்கு இருக்கற ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு நடுவில் எனக்கு அந்த மாதிரி விஷயங்களை நினைக்க கூட நேரமில்ல சார்!” என்றான் ராஜன் சீரியஸாக.
அவன் பேச்சும், முகபாவமும் அவன் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்திய போதும், “அப்படி ஏதாவது நடந்தால்…?” என்று தலையைச் சாய்த்துக் கொண்டு அந்த முதலாளி கேட்க,
.
“உறுதியா நடக்காது சார்…. அவ்வளவுதான்!” என்று ஆணித்தரமாய்ச் சொன்ன ராஜன் திருப்பிக் கேட்டான். “இப்ப… நான் அதே கேள்வியை உங்களைத் திருப்பிக் கேட்கிறேன்!… உங்க பொண்ணுங்கள்ல ஒண்ணு… அதுவா வந்து என்கிட்ட அந்த மாதிரிப் பேசினா… நான் என்ன பண்றது?”.
அவன் கேட்டதில் கோபமாகிப் போன முதலாளி, “ஸ்டுப்பிட்!… என்னப்பா வாய் நீளுது?” என்று கத்தினார்.
“கவலைப்படாதீங்க சார்!… அப்படி அவங்களா வந்து பேசினாக் கூட…. அடுத்த நிமிஷமே என்னோட ராஜினாமா கடிதத்தை நானே உங்ககிட்ட குடுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன்!… போதுமா சார்?”.
தன் மூக்கின் நுனியை லாவகமாய்ச் சொறிந்த அந்த முதலாளி, “ஓ.கே. நீ ராஜினாமா லெட்டர் குடுத்தால்… நானே புரிஞ்சுக்குவேன்..” என்றார் சன்னக் குரலில்.
தலையை மேலும், கீழுமாய் ஆட்டினான் ராஜன்.
“அப்ப… நாளைக்கு நான் வந்து வேலையில ஜாயின் பண்றேன்!” சொல்லி விட்டு அவரைக் கைகூப்பி வணங்கி விட்டு வெளியேறினார்கள் இருவரும்.
ராஜன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும், “என்ன சொரணம்?… டிரைவர் பையன் பரவாயில்லையா?” என்று தன் மனைவியிடம் கேட்டார் முதலாளி.
“ம்…” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் அவர் மனைவி சொர்ணம்.
“நானும் கூட ஆரம்பத்தில் இள வயசுப் பையன்… பொண்ணு கிட்ட ஏதாவது வேலைத்தனத்தைக் காட்டுவான்னு நெனச்சேன்!… பயல் பரவாயில்லை… சொன்னபடி பக்கா நேர்மையாக நடந்துக்கிறான்” என்றாள் முதலாளி.
“ஆமாம்” என்று சொர்ணம் சொல்லிக் கொண்டிருந்த போது வெளியே கார் ஹார்ன் சத்தம் கேட்டது.
“பொண்ணுங்க காலேஜ்ல இருந்து வந்தாச்சு போலிருக்கு” சொல்லியபடியே வேகமாக வெளியே வந்த சொர்ணம் டிரைவரைப் பார்த்து, “ராஜன்… நான் கொஞ்சம் லேடீஸ் கிளப் வரைக்கும் போகணும்!.. கிளம்பத் தயாரா இருக்கு… இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லி விட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று மேக்கப் வேலையில் மும்முரமானாள் சொர்ணம்.
*****
மேனேஜர் கொடுத்தனுப்பியிருந்த ஆபிஸ் பைலில் மூழ்கியிருந்த முதலாளி ராஜனின் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார். “என்னப்பா ராஜன்?… என்ன சமாச்சாரம்?”
பதிலேதும் பேசாமல் தன் கையிலிருந்த கடிதத்தை நீட்டினான்.
“என்னப்பா இது?… ஏதாவது அட்வான்ஸா?… வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை மாசம்தான் ஆச்சு… அதுக்குள்ளார அட்வான்ஸா?” கேட்டப்படியே கடிதத்தை வாங்கிப் படித்தவர் குழப்பமானார்.
“என்னப்பா…? என்னாச்சு?… ஏனிப்படி திடீர்னு ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கிறே?… எல்லாமே நல்லாதானே போயிட்டிருக்கு?” ஆபீஸ் ஃபைலை மூடி வைத்து விட்டுக் கேட்டார் முதலாளி.
“சார் நான் வேலைக்குச் சேரும் போதே உங்க கிட்ட சொல்லி இருக்கேன். “நான் உறுதியா தப்பு பண்ண மாட்டேன்… இந்த வீட்டை சேர்ந்தவர்கள் என்கிட்டத் தப்பா பேசினாலும்… தப்பா பழகினாலும்… நான் உடனே என்னோட ராஜினாமா உங்க கிட்ட கொடுத்திடுவேன்”னு இதோ என்னோட ராஜினாமா!… நான் வர்றேன்!… அந்தக் கடிதத்திலேயே அன்னோட பேங்க் அக்கௌண்ட் விபரங்களைத் தந்துள்ளேன்!… எனக்குச் சேர வேண்டிய சம்பளத் தொகையை… அந்த அக்கௌண்ட்ல போட்டுடுங்க!” சொல்லி விட்டுப் போகத் திரும்பியவனை நிறுத்தினார் முதலாளி.
“என்னப்பா?… நீ பாட்டுக்கு ராஜினாமா கொடுத்திட்டுப் போயிட்டா எப்படி?.. விபரத்தைச் சொல்லிட்டுப் போ!.. யாரு?.. என் ரெண்டு பொண்ணுகள்ல எந்தப் பொண்ணு உன்கிட்ட தப்பான எண்ணத்தோடு பேசினது… பழகினது… சொல்லுப்பா சொல்லு” கோபத்துடன் கத்தினார் முதலாளி.
“சாரி சார்!… என்னை மன்னிச்சிடுங்க!… அதை நான் வெளியே சொல்ல விரும்பலை!… அமைதியா… சந்தோஷமா இருக்கற இந்தக் குடும்பத்துக்குள்ளார ஒரு அணுகுண்டைப் போட்டு அந்த அமைதியைக் கெடுக்க நான் விரும்பலை சார்!… நீங்களும் இந்த விஷயத்தை இத்தோட மறந்திட்டு எப்பவும் போல சகஜமா இருங்க சார்” சொல்லி விட்டு வேகமாக வெளியேறியவன், மாடிப்படிகளில் இறங்கி வரும் சொர்ணத்தை ஒரு நிமிடம் நின்று, ஏற இறங்கப் பார்த்து விட்டு வெளியேறினான்.
அந்தப் பார்வைக்கான அர்த்தமும், அந்த ராஜினாமாவுக்கான அர்த்தமும், அவர்கள் ரெண்டு பேருக்கும் மட்டுமே புரியும்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings