2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘அவன் மூஞ்சியைப் பாரு, நசுங்குன சொம்பாட்டம் ‘ வெறுப்பை உமிழ்ந்தான் சுப்பிரமணி.
‘அட கிறுக்கா, செத்துப் போயிட்டா எல்லாரு மூஞ்சியும் இப்படித்தா இருக்கும்.. உனக்கேண்டா இந்த ஆளு மேல இவ்வளவு கடுப்பு?’ என்ற மாணிக்கத்தின் பதிலில் திருப்தியடையாமல் மீண்டும் செத்துப் போன ராமசாமியின் முகத்தை உற்றுப் பார்த்தான் சுப்பிரமணி. தூக்கிச் செல்பவர்களின் உயரம் சரிசமமாய் இல்லாததால், பிணத்தின் முகம் அங்கும் இங்கும் உருண்டு அவனை சரியாகப் பார்க்க விடாமல் செய்தது. ஆனாலும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் பிணத்தின் முகம் வெறுப்பூட்டுவதாகவே இருந்தது சுப்பிரமணிக்கு. ஒருவேளை ராமசாமி என்ற அந்தப் பிணத்தோடு முன்பு அவனுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் இப்போது கூட அந்த முகம் கொடூரமாகக் காட்சி அளிக்கிறதோ?
‘ ஏண்டா… சிவகாமியம்மா வாழ்க்கையில வெளையாண்ட மாதிரி, உனக்கும் இந்த இம்சை அரசன் ஏதாவது கொடுமை பண்ணினானா?”
‘என் எதிர்காலம் இருண்டு போய் இந்தக் கிராமத்தில் நான் விழுந்து கிடப்பதற்கு இந்த நாய்தான் காரணம்.’
‘என்னடா சொல்றே? இந்த ராமசாமி உன் வாழ்க்கையைக் கெடுத்தானா?’
‘ஆமாண்டா.. பள்ளிக்கூடத்தில நல்ல மார்க் எடுத்துட்டு, எனக்குப் பிடிச்ச எலக்ட்ரிகள்ல டிப்ளமோ இல்லைன்னா டிகிரி படிக்கறேன்னு எங்க அப்பன்கிட்ட சொன்னபோது, என்னை நேரா இவன்கிட்டத்தான் கூட்டிப்போனார் எங்கப்பன். இவந்தான் நம்ம ஊர்ல ரொம்ப விவரம் தெரிஞ்சவனாம். ஏழாவது வரை படிச்ச அறிவாளியாம். வட்டிக்கு விட்டு காசு கையில் நிறைய வைத்திருப்பவனாம். எங்கப்பன்கிட்ட இவன் என்ன சொன்னான் தெரியுமா?”
‘என்னடா சொன்னான் ? ‘ ஆவல் தாங்காமல் கேட்டான் மாணிக்கம். பறை கொட்டும் சப்தம் இடைவிடாமல் கேட்டதாலும், இறுதி ஊர்வலத்தில், சுடுகாட்டை நோக்கி பிணத்துடன் நடந்து கொண்டிருந்தவர்களின் சளசளவென்ற பேச்சு இடையூறாக இருந்ததாலும், சுப்பிரமணியின் அருகில் நெருங்கி வந்தான்.
‘இவனை மூணு வருசம் செலவு பண்ணி படிக்க வைக்கிறங்ற. வேல கிடைக்கறதுக்கு ஒண்ணும் உத்திரவாதம் இல்ல. இவனைப் படிக்க வைக்க கடன் வாங்குவே. அதுக்கு வட்டி கட்டோணும். உன்னோட விவசாய வருமானம் சாப்பாட்டுக்கே காணாது. அடுத்து இவனுக்குக் கீழ இருக்கிற பொண்ணுக்கு கல்யாணச் செலவு வரும். இதையெல்லாம் யோசனை பண்ணுனயா?. நா ஒரு நல்ல யோசனை சொல்றேன். கேக்கறியா? என்னோட மில்லுல நாலு செக்கு ஓடுது. அதுல ஒரு செக்கை பையன ஓட்டச் சொல்லு. அத்தோட மில்லுல வரவு செலவு கணக்கையும் பார்த்துக்கச் சொல்லு. எனக்கும் ஒரு படிச்ச பையன் கூட இருந்தா நல்லது. மாசம் நூத்தம்பது ரூபா சம்பளம் போட்டுத்தாரேன். என்ன சொல்றே?’. ‘
அந்தாளு பேசப்பேச எங்கப்பனின் கண்களில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஏறியது. செலவுக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் வந்த மனுசனுக்கு, வருமானத்துக்கும் வழி காட்டினால் எப்படி இருக்கும்? கடைசியில் இவன் என் படிப்பிற்கு வேட்டு வைத்தது இல்லாமல் என்னை நான்கு வருடம் செக்கு மாட்டோடு மாடாக குணா பட கமல் மாதிரி சுற்ற வைத்து விட்டான்டா. பாவி, இவன் மாத்திரம் ‘பையனை படிக்க வை’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என் வாழ்க்கையே வேறடா.. இந்த நாய் என் எதிர்காலத்தையே நாசம் செய்தவன்… தூ.’
சிவகாமியம்மாள் அனாதையாய், தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் அந்த ஊருக்கு வந்து, பூட்டிக் கிடந்த அந்தக் குடிசையின் திண்ணையில் என்ன செய்வது என்ற கேள்விக்குறியுடன் உட்கார்ந்திருந்தபோது அவளை முதன் முதலில் பார்த்தவர் ராமசாமிதான்.
‘யாரம்மா நீங்க?’ என்ற அவரின் ஒற்றைக் கேள்விக்கு தன் வாழ்க்கையை ஒப்பித்து விட்டாள் சிவகாமியம்மாள்.
‘பொள்ளாச்சிக்கு பக்கத்துல மீனாட்சிபுரம் ஊருங்க. வீட்டுக்காரர் இறந்து ஒரு வருசம் ஆச்சுங்க. பொண்ணுக்கு ரெண்டு வயசு. பிழைப்பைத் தேடி வந்திருக்கறேங்க..’.
‘என் பேரு ராமசாமி. இந்த வீடு என்னுதுதான். இந்தா சாவி. இந்த ஊரு மளிகைக் கடையில சொல்லிடறேன். நீ வேணுங்ற சாமான் வாங்கிக்க. எதுக்கும் செலவுக்கு இந்த ரூபாயை வெச்சுக்க.’
ரூபாய் கை மாறும்போது அவர் கையை விடவில்லை. அவளும் மறுப்புச் சொல்லவில்லை. பல கழுகுகளுக்கு இரையாவதை விட ஒரு கழுகுக்கு இரையாவது பரவாயில்லை என்று நினைத்திருக்கக் கூடும். ‘என் பொண்ணை மாத்திரம் நல்லா படிக்க வைக்கணுங்க ‘.
‘கண்டிப்பாகப் படிக்க வைக்கிறேன். அவள் எவ்வளவு படித்தாலும் சரி. படிக்க வைக்கிறேன்’.
ஊரின் கேலிப்பேச்சுக்களையெல்லாம் உதறித்தள்ளி மல்லிகாவைப் படிக்க வைத்தார். நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளும் அவரை ‘அப்பா’ என்றே அழைத்தாள். புத்தி கூர்மையுள்ள அவள், திறமையின் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வானபோது, செலவு அனைத்தையும், கொடுத்த வாக்குப்படி செய்து, அவளை ஒரு முழுமையான டாக்டராக்கினார்.
வயதினால் சற்றுக் கருத்துப்போய், முகத்தின் பளபளப்புக் குறைந்து, ராமசாமியின் இறப்புச் செய்தி கேட்டு குறுகி அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்தாள் மல்லிகா. அவளுக்கு நினைவு தெரிந்தபோதும், ஊராரின் கேலிப் பேச்சின்போதும் ஏனோ அம்மாவின் மேல் கோபம் வரவில்லை. அம்மாவின் நிலையில் இருந்திருந்தால், தான் என்ன செய்திருப்போம் என்று நினைத்துப் பார்த்தாள். பச்சாதாபத்தையும், கேலிப்பேச்சையும் திசை திருப்பி வெறி பிடித்தது போல் படித்தாள். படிப்பின் மூலம் அவள் தன் வாழ்க்கையையும், தன் அம்மாவின் வாழ்க்கையையும் மாற்றினாள்.
‘கடைசியா அப்பா முகத்தைப் பார்க்கப் போகலாமா அம்மா?’
‘வேண்டாம்மா.. அவமானம்தான் மிஞ்சும்..’.
இருவரும் சுவரின் மாட்டியிருந்த ராமசாமியின் போட்டோவை வணங்கினர். எமலோகத்தில்….
‘என்ன சித்திரகுப்தா? ஒரு மனிதனின் காலச்சுவடியை வைத்துக் கொண்டு படிப்பறிவில்லா பாமரனைப் போல் திணறுகிறாய்?’
‘யம மகாராசா.. யமலோகம் வந்துள்ள ராமசாமி என்ற அற்ப மானுடனின் பாவக்கணக்கு என்னைக் குழப்பி விட்டது. அவனின் பாபச்செயலும், நற்செயலும் சரி சமானமாய் உள்ளது. அவனை அனுப்ப வேண்டிய இடம் நரகமா? சொர்க்கமா? என்பதே என் குழப்பம்?’.
ராமசாமி சுப்பிரமணிக்கு செய்ததையும், சிவகாமியம்மாளுக்குச் செய்ததையும் விளக்கியவுடன் எமன் தெளிவாகக் கூறினார்,
‘இதிலென்ன குழப்பம் சித்திரகுப்தா? சுப்பிரமணியின் அப்பாவுக்கு கடனில்லாமல் பிழைக்கும் வழி சொல்லியிருக்கிறார். சிவகாமியம்மாவிற்கு அடைக்கலம் கொடுத்து, அவரின் மகளுக்கு கல்வி என்னும் செல்வத்தைக் கொடுத்துள்ளார். அவர் சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதியானவர்தான்.’
‘ஹி..ஹி.. நானும் அதையேதான் நினைத்தேன் மகாராசா… தங்களின் உத்தரவு என் பாக்கியம் …தும் தஹா…’.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings