எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அறிஞர்களும், சான்றோர்களும் பேசிய அவ்விழாவில் அவர்களுக்குக் கிடைக்காத மாபெரும் கைதட்டல் அந்த மிமிக்ரி கலைஞனுக்குக் கிடைத்த போது எனக்குள் எரிச்சல்.
“பெரியவங்கெல்லாம் அற்புதமான கருத்துக்களை, மத ஒற்றுமையை, மனித நேயத்தை, தெளிந்த நீரோடையாட்டம் பேசிட்டுப் போனாங்க!… அதுக்கெல்லாம் கை தட்டாத முட்டாள் ஜனங்க, பூனை மாதிரி, நாய் மாதிரிக் கத்தி, நடிகனுக மாதிரிப் பேசி, கூத்தடிக்கறவனுக்குக் கை தட்டி….. ச்சே… வர வர ஜனங்க ரசனை ரொம்பக் கெட்டுப் போச்சு!… இந்த மிமிக்ரிக்காரனுக்கு… நாட்டைப் பற்றி அக்கறை இருக்கா?…மொழியைப் பற்றி அக்கறை இருக்கா?…என்ன சாதிச்சிட்டான் இவன்?..”
நிகழ்ச்சி முடிந்ததும் மிமிக்ரிக்காரனைச் சுற்றிக் கூட்டம். கை குலுக்கல், ஆட்டோகிராப்… சகிக்கவில்லை எனக்கு.
என்னையும் என் முகச்சுளிப்பையும் கவனித்த மிமிக்ரி இளைஞன், கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு என்னிடம் வந்தான்.
“சார்…ஷோ எப்படியிருந்தது?” கேட்டான்.
“உண்மையைச் சொல்லவா?….இல்லை சம்பிரதாயமாய்ச் சொல்லவா?” என்றேன்.
“உண்மையை மட்டும் சொல்லுங்க!”
“ம்ம்ம்… வேஸ்ட் ஆஃப் டைம்!…”
சிறிதும் கோபித்துக் கொள்ளாமல், புன்னகைத்தவன், “நீங்க இந்தப் பல குரல் கலையைப் பற்றியும், அதுக்காக நாங்க படற சிரமங்களைப் பற்றியும் தெரிஞ்சுக்காம, ஒரே வார்த்தைல டைம் வேஸ்ட்டுன்னு சொல்லிட்டீங்க!… இந்தக் கலை ஆண்டவன் கொடுக்கற பரிசு!… வரப்பிரசாதம்!”
“இதனால…யாருக்கு…என்ன பிரயோஜனம்?…உனக்கு மட்டும் கொஞ்சம் சில்லரை சேருது…வேறென்ன?”
அமைதியாய் என்னைப் பார்த்தவன், “நீங்க இப்ப ஃப்ரியா?” கேட்டான்.
“ஏன்?”
“உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு….”
“எங்கே?”
“வந்துதான் பாருங்களேன்!”
உண்மையில் எனக்கு வேறு பணி இல்லாத காரணத்தால்,“ம்…போகலாம்!” என்றேன்.
ஒரு ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான். “ஏறுங்க சார்!”
நான் ஏறிய பின் அவனும் ஏறிக் கொள்ள ஆட்டோ கிளம்பியது.
“எங்க கூட்டிட்டுப் போறான்?…வீட்டிற்குக் கூட்டிட்டுப் போய்…மிமிக்ரி பற்றி லெக்சர் அடிச்சு…வாங்கின மெடல், பரிசையெல்லாம் காட்டுவானோ?” எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
ஆட்டோவை ஒரு ஸ்வீட் ஸ்டாலில் நிறுத்தி, ஸ்வீட் மற்றும் கார வகைகளை வாங்கிக் கொண்டு வந்தான்.
“வீட்டுக்குப் போய்… இதையெல்லாம் எனக்குத் தந்தா… நான் இவனை மெச்சுவேன்னு நெனைச்சிட்டான் போல!” மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
ஒரு வெண்ணிற பில்டிங் முன் ஆட்டோவை நிறுத்தியவன், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!” என்று டிரைவரிடம் கூறினான்.
இருவரும் இறங்கினோம்.
“அன்னை தெரசா முதியோர் இல்லம்!”
“இங்க எதுக்கு?” என்று யோசித்தேன். “வாங்க சார்” என்றவாறு முன்னே அவன் நடக்க, பின் தொடர்ந்தேன்.
அலுவலக அறைக்குள் நுழைந்தோம்.
“வாங்க வாசன்!…எப்படி இருக்கீங்க?” சிரித்தபடி வரவேற்ற மனிதருக்கு ஐம்பது வயதிருக்கும்.
“நல்லாயிருக்கேன் சார்!…. இவர் என்னோட நண்பர்…” அவன் என்னைக் காட்ட, நான் “ஐராவதம்” என்றேன்.
“வெல்கம் மிஸ்டர் ஐராவதம்!…” என்றபடி அவர் என் கைகளைப் பற்றிக் குலுக்க, சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டேன்.
“சார்…நான் நூர்ஜஹான் அம்மாவைப் பார்க்கலாமா?” மிமிக்ரி இளைஞன் அந்த கேட்க, “ம்…தாராளமா” என்றார் அவர்.
மூவரும் சற்றுத் தள்ளியிருந்த வேறொரு அறைக்குள் நுழைந்தோம்.
உள்ளே! ஒரு மூதாட்டி கறுப்புக் கண்ணாடியுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மிமிக்ரி இளைஞன் அவள் காலடியில் அமர்ந்தான். “அம்மா…நான் சம்சுதீன்!” என்று வேறொரு குரலில் சொல்ல,
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. “குரலை மாற்றினதோட…பெயரையும் அல்ல மாற்றி “சம்சுதீன்”னு சொல்றான்!…இவனை அந்தப் பெரியவர் “வாசன்”னுதானே வரவேறார்!.. பயல் பயங்கர ஃபிராடாயிருப்பான் போலிருக்கே?…கண்ணுத் தெரியாத கிழவிகிட்ட ஏதோ தில்லுமுல்லு பண்றான்”
“சம்சு?…வாப்பா” அந்த மூதாட்டி கைகளால் தேட, அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, “இந்தாம்மா…உனக்குப் பிடிச்ச ஜாங்கிரி…காரசேவு!” என்றான் வேற்றுக் குரலில்.
வாங்கிக் கொண்டவள், “நீ சாப்பிடலையாப்பா?” கேட்க,
“நீ சாப்பிட்டா…நான் சாப்பிட்ட மாதிரிம்மா!” என்றான்.
சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, மனதுக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள்.
“நான் கெளம்பறேன்மா!…உடம்பை பாத்துக்கோம்மா!” என்றபடி எழுந்தான் மிமிக்ரி இளைஞன்.
“சரிப்பா”
மறுபடியும் அலுவலக அறை.
“அடுத்து ஆல்பர்ட் தாத்தாவா?” அந்த அலுவலர் கேட்க, “ஆமாம்” என்றான் மிமிக்ரிக்காரன்.
தொலைபேசியை எடுத்து நெம்பரை அழுத்திய அலுவலர், “யாரு?…ஆல்பர்ட் அய்யாவா?…அய்யா நான் ஆபீஸ் ரூம்ல இருந்து மாதவன் பேசறேன்!…ஆஸ்திரேலியாவுல இருந்து உங்க மகன் பீட்டர் லைன்ல இருக்கார்…பேசுங்க!” என்றவாறு போனை மிமிக்ரிக்காரனிடம் நீட்டினார்.
“இன்னொரு வேஷமா?” எனக்குள் அடுத்த கேள்வி.
போனை வாங்கியவன், புதுக் குரலில் பேசினான். “டாடி…நான் பீட்டர் பேசறேன்!…எப்படி இருக்கீங்க?…உங்களை நல்லா கவனிச்சுக்கறாங்களா?…மருந்தெல்லாம் சரியா சாப்பிடறீங்களா?..கொரியர்ல அமௌண்ட் அனுப்பியிருக்கேன்!”
பத்து நிமிடங்கள் பேசி விட்டு போனை வைத்தவனை முறைத்தேன்.
பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்த மாதவனிடம் கொடுத்தவன், “பீட்டர் அனுப்பிச்சது!ன்னு சொல்லி ஆல்பர்ட் தாத்தாவிடம் கொடுத்திடுங்க!…”
வெளியில் வந்து ஆட்டோவில் ஏறினோம்.
“ஐஸ்வர்யா காலனிக்குப் போப்பா!” என்றான் மிமிக்ரி இளைஞன்.
நான் என் சந்தேகங்களைக் கேட்க வாயெடுக்க, சைகையால் என்னைத் தடுத்தான்.
ஆட்டோ ஐஸ்வர்யா காலனிக்குள் நுழைந்து குறிப்பிட்ட வீட்டிற்கு முன் நின்றது. அவன் இறங்கி நடக்க, நானும் தொடர்ந்தேன்.
நைட்டி அணிந்த ஒரு பெண்மணி, “வாங்க வாசன்!” என்றாள்.
“என்ன பண்ணுது மின்மினிக்குட்டி?” என்றான்.
“பால் குடிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டுப் படுத்திருக்கு!”
“இப்பக் கொண்டு போய் பாலை வைங்க!…நான் இங்கிருந்து குரல் குடுக்கறேன்!”
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன பண்றாங்க இவங்க?….யாரந்த மின்மினிக்குட்டி?”
மிமிக்ரிக்காரன் ஒரு பூனையைப் போல் கத்த எனக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலானது.
அவன் கண் ஜாடையால் ஒரு அறையைக் காட்ட, போய் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு குட்டிப் பூனை இவன் கத்துவதைக் கூர்ந்து கேட்டவாறே பால் குடித்துக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டோம்.
மீண்டும் ஆட்டோ பயணம்.
சிறிது தூரம் சென்றதும், “உன் பெயர் வாசன்தானே?… கண்ணுத் தெரியாத மூதாட்டிகிட்ட சம்சுதீன்கறே!… போன்ல ஒரு பெரியவர்கிட்டே பீட்டர்ங்கறே!…பூனையாட்டமும் கத்தறே?… எதுக்கு இத்தனை தில்லுமுல்லுத்தனம்?” முகத்தில் வெறுப்போடு கேட்டேன்.
மெலிதாய் முறுவலித்த அவன், “அந்த மூதாட்டி என் பிரண்ட் சம்சுதீனோட அம்மா!…அவன் போன வருஷம் இறந்துட்டான்!…அவன் பத்து நாளைக்கு ஒரு தரம் வந்து தன் தாய்க்கு இதே மாதிரி ஸ்வீட்லாம் வாங்கி குடுத்துப் பேசிட்டுப் போவான்!” என்றான்.
“மகன் இறந்தது அந்த அம்மாவுக்குத் தெரியாதா?”
“நாந்தான் சொல்ல வேணாம்னு தடுத்திட்டேன்!…பாவம் சார்!…அவங்க ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம்!.. “மகன் செத்துட்டான்”னு தெரிஞ்சா தாங்குவாங்களா?… பரிதவிச்சுப் போய்டுவாங்களே!ன்னு தான் சம்சுதீனாட்டம் பத்து நாளுக்கு ஒரு முறை போய் குரல் மாற்றிப் பேசிட்டிருக்கேன்!”
“அந்த அல்பர்ட் தாத்தா?” கேட்டேன்.
“அவரோட மகன் பீட்டர் ஒரு ஸாப்ட்வேர் என்ஜினீயர்!…ஆஸ்திரேலியாவில் வேலை!…அங்கே இனவெறிக் கும்பல் பீட்டரை சுட்டுக் கொன்னுட்டாங்க!…ஆல்பர்ட் தாத்தா படுத்த படுக்கையா இருக்கற நோயாளி!.. அதான் அவருகிட்ட பீட்டர் சாவை மறைச்சிட்டிருக்கோம்!… ஆடியோவில் கேட்ட பீட்டரோட குரலைப் பயன்படுத்தி… இப்ப ஆல்பர்ட் தாத்தாவோட பேசிட்டிருக்கேன்!…”
“எவ்ளோ பெரிய மனசு இவனுக்கு?…இவனைப் போய் தப்பா நெனச்சு… தப்பாய்ப் பேசி!” மனசு வலித்தது எனக்கு.
“அந்தக் குட்டிப் பூனையோட தாய் போன வாரம் தண்ணீர்த் தொட்டில விழுந்து செத்துப் போச்சு!…அது செத்தப்புறம் அதோட குட்டிகளும் ஒவ்வொண்ணா செத்திடுச்சுக!…இந்த ஒண்ணுதான் பாக்கி!…இதுவும் ஏக்கத்துல பால் குடிக்காம சாகற நெலைமைக்கு வந்திடுச்சு!..அந்தம்மா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!…தாய்ப்பூனை மாதிரிக் கத்தி அதைப் பால் குடிக்க வெச்சா என்ன?ங்கற ஐடியா வந்திச்சு!…டிரை பண்ணினேன்!… ஒர்க்அவுட் ஆயிடுச்சு!…இப்ப பூனைக்குட்டி நல்லா தேறிடுச்சு!…” முக மலர்ச்சியுடன் சொன்னவன், “இப்ப குட்டிப்பூனை நல்லாவே தேறிடுச்சு!” என்று மகிழ்ச்சியோடு சொன்னவன், “இப்ப சொல்லுங்க சார்… மிமிக்ரி கலை ஒரு டைம் வேஸ்டா?”
என் மனம் பாறை போல் கனத்தது. வாயில் வார்த்தைகளே வரவில்லை. கண்கள் பனித்தன.
என் வயதில் பாதிக்கும் குறைவாகவே இருந்த அந்த இளைஞனைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.
அவன் மெலிதாய்ப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் மகாத்மாவைப் பார்த்தேன்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings