எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாலை ஆறு மணியிருக்கும். ஊர் மக்கள் அனைவரும் அம்மன் கோவில் வாசலில் கூடியிருந்தனர்.
அவிழ்த்து விடப்பட்ட ஜடாமுடியுடன் கண்களை உருட்டிக்கொண்டு அடித் தொண்டையில் கத்தினான் பூசாரி.
“அடேய்… ஆத்தா வந்திருக்கேண்டா!… ஆத்தா வந்திருக்கேண்டா!… என்ன வேணும்ன்னு கேளுங்கடா””
“ஆத்தா… சொல்லு… ஆத்தா!… இந்த ஊரு மழையே இல்லாம… வறண்ட காடாப் போச்சு!… பஞ்சமும் பட்டினியும் தலைவிரிச்சாடுது!… வயலெல்லாம் வறண்ட நிலமாப் போச்சு!… கண்மாய் பாளம் பாளமாய் வெடிச்சுப் போச்சு!… நாங்கள் எல்லோரும் அழியறதுக்குள்ளார… என்ன பரிகாரம் செய்யணும்?ன்னு… சொல்லு ஆத்தா!… எங்க உசுரைக் கொடுத்தாவது செஞ்சு முடிக்கிறோம் ஆத்தா!” ஏற்கனவே பூசாரியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவன் நல்லவன் போல் கேட்டான்.
“அடேய்… பலி குடுங்கடா!… கெடா வெட்டிப் படையுங்கடா!… எத்தனை மாசமாச்சு எனக்கு நீங்க… கறி சோறு வடிச்சு?… உங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கிறேன் உடனே கறி சோறு படையுங்கடா… ரத்தப் பொறியல் படையுங்கடா”
“பார்த்தியா வேலு?… இந்தப் பூசாரிப் பயலுக்கு கறி சோறு திங்கணும்னு ஆசை வந்துடுச்சு… அதனால அம்மன் மேல் பழியைப் போட்டு கறி சோத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டான்”
சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முகிலன் தன் நண்பனிடம் சொன்னான். ஊரில் அவனுக்கு “சூனா… மானா” கட்சிக்காரன்… “நாத்திகப் பேர்வழி”ன்னு பேரு!”
“முகிலா… உனக்கு எதுக்குடா இதெல்லாம்?.. பேசாமல் வாயை அடக்கிட்டு வேடிக்கை மட்டும் பாருடா!”
“தப்புடா…. தப்பு!… இப்படி எல்லோருமே இருக்கிறனாலதாண்டா போலிச் சாமியார் பயலுங்களும்… இந்த மாதிரிப் பூசாரி பயலுங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டானுங்க!… ஊர்ல யாராச்சும் ஒருத்தனாவது கேள்வி கேட்கணும்டா”.
அப்போது கூட்டத்தை தள்ளிக் கொண்டு, வேக வேகமாய் முன்னேறி, பூசாரியின் எதிரில் வந்து நின்ற அரவை மில் சண்முகம், “ஆத்தா… ஊருக்காக நானே என்னோட ஆட்டுக்குட்டியை தர்றேன் ஆத்தா!… நாளைக்கு காத்தால சூரிய உதயத்துக்கு முன்னாடி உனக்கு அதைப் பலி கொடுக்கிறோம் ஆத்தா” என்று சொல்லி விட்டு, கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த தன் மகனிடம், “டேய்… போடா!.. போய் அந்த வெள்ளாட்டுக் குட்டியை இழுத்துட்டு வாடா!” என்று கட்டளையிட்டார்.
அடுத்த பத்தாம் நிமிடம் அந்த வெள்ளாட்டு குட்டி மிரளும் பார்வையுடன் கூட்டத்திற்கு நடுவில் வந்து நின்றது. தாயிடம் இருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி ‘அங்கே என்ன நடக்கிறது’ என்பதே தெரியாமல், பயத்தில் “சட… சட”வெனப் புழுக்கை போட்டது.
“டேய்… டேய்… வேலு!… அந்த குட்டியைப் பாருடா.. அதோட மூஞ்சியைப் பாருடா… பாவமா இல்லையாடா உனக்கு?… இந்த பூசாரி பயலோட கறி சோத்து ஆசைக்கு அந்தக் குட்டி பலியாகப் போகுதுடா!… ஹும் இதெல்லாம் ரொம்ப அக்கிரமம்டா” ஆற்ற மாட்டாமல் கத்தினான் முகிலன்.
“உஷ்….உஷ்… மெதுவா பேசுடா!” அவனை அடக்கினான் நண்பன்.
பூசாரியின் மேல் ஆளாளுக்கு விபூதியை மாறி மாறி வீச, பேயாட்டம் ஆடிய பூசாரி ஓய்ந்தான்.
அடுத்த நிமிடமே அந்த ஆட்டுக்குட்டியின் மேல் மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு, நெற்றியில் குங்குமம் தீட்டப்பட்டு, கழுத்தில் மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, கோவில் பந்தலில் கட்டப்பட்டது. தன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட மாலை தன் சாவுக்கு அனுப்பப்பட்ட ஓலை, என்பது கூட அறியாத அந்த ஆட்டுக்குட்டி மாலையிலிருந்த பூக்களை மென்று திங்க ஆரம்பித்தது.
“நாளைக்கு காலைல நாலு மணிக்கு கெடா வெட்டுங்கோ!.. ஆறுமணிக்கு கெடா வெட்டுப் பூசைங்கோ… எல்லாரும் தவறாக வந்திடுங்கோ” அறிவிப்பாய் ஒருத்தன் கூவ, கூட்டம் கலைந்தது.
இரவு ஒரு மணி.
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த முகிலனின் கண்களுக்குள் அந்த ஆட்டுக்குட்டியே வந்து வந்து போனது. இந்த நேரத்தில் அது என்ன பண்ணிக்கிட்டிருக்கும்?… தூங்கி இருக்குமோ?… ம்ஹும்… காத்து இந்த வீசு வீசுது அது எங்க தூங்கி இருக்கும்?… என்ன செய்யலாம்!” தீவிரமாக யோசித்தவன், திடீரென ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.
அவனையுமறியாமல் கால்கள் கோயிலை நோக்கி நடந்தன.
அவன் நினைத்தது போலவே அந்த குட்டி தூங்காமல் பயத்தில் ஏகமாய் பீய்ச்சி அந்த இடத்தையெல்லாம் அசிங்கப்படுத்தி, அதன் மேலேயே கிடந்தது.
முகிலன் நடந்து வரும் ஓசை கேட்டு தலையை தூக்கிப் பார்த்து, “மே…மே” என்றது ஆட்டின் அருகில் வந்து நின்றவன் கோயிலை பார்த்தான் பூட்டி இருந்தது.
சுற்றும் முற்றும் பார்த்தான்.
ஆள் அரவமே இல்லை. சட்டென்று குனிந்து அதன் கழுத்துக் கயிற்றை அவிழ்த்து, அதை போய் விடச் சொல்லி முதுகில் தட்டி விரட்டினான்.
துள்ளிக் குதித்து ஓடிய அது பத்தடி சென்றதும், நின்று திரும்பி முகிலனைப் பார்த்து பார்வையிலேயே நன்றி என்ற வார்த்தையை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் ஓடியது.
ஒரு சிலரின் நாக்கு ருசிக்காக உயிரை விட இருந்த அந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய முகிலன் மன நிம்மதியுடன் திரும்பி மனநிறைவுடன் உறங்கலானான்.
மறுநாள்.
விடியற்காலை நேரத்திலேயே கோயிலின் முன் ஏகப்பட்ட பேர் கூடியிருந்தனர். பூசாரி உக்கிரமாய்ச் சாமியாடினான்.
“அடேய்… எனக்கு நேர்ந்து விட்ட பலியாட்டை எவனோ திருடிட்டுப் போயிட்டாண்டா!… இந்த ஊரு அழியப் போகுதுடா!… பூசை போட்டு வச்ச பலியாடு வெளிய போயிட்டுதுடா!… அது ஆகாதுடா!… இனி இந்த ஊருக்கு ஐம்பது வருஷமானாலும் மழையே வராதுடா…. பஞ்சம் பட்டினி தலை விரிச்சாடப் போகுதுடா!… எல்லோரும் கள்ளிச்செடியையும், கற்றாழைச் செடியையும் திங்கிற காலம் வரப் போகுதுடா” ஆசைப்பட்ட கறிசோறு கை நழுவிப் போன ஆத்திரத்தில் பூசாரி கண்டபடி சாபம் விட்டான்.
ஊர் மக்கள் கிலி படர்ந்த முகத்தோடு பூசாரியையே பார்த்துக் கொண்டிருக்க, முகிலனுக்கு சிரிப்பாய் வந்தது.
அப்போது பூசாரிக்கு பதில் சொல்லும் விதமாய்,, வானில் கரு மேகங்கள் கூடின. யாருமே எதிர்பாராத விதமாய் திடீரென பெரும் மழை பொழியத் துவங்க, பூசாரியின் முகத்தில் ஈயாடவில்லை.
கூட்டமோ பூசாரியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு மழையில் நனைந்தபடி ஓடியது.
அந்தப் பெருமழைக்குக் காரணம் நேற்றிரவு அந்த வாயில்லா ஜீவனைத் தான் காப்பாற்றி, அதன் உயிருக்குச் செய்த உபகாரம்தான், என்பதை முகிலன் மட்டும் முழுமையாக நம்பினான்.
ஆம், நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings