அந்த ஊருக்கு ஒதுக்குபுறமாக நாலு கொம்பு நட்டு கிழிசலான கோணிப்பையை கூரையாய் செய்து, அங்கு வாழ்ந்திட்டு வருகிறாள் மூக்காயி.
இவளுக்கு, கல்யாணமாகி நாலு வருஷம் ஆயிடுச்சு. இவளுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உண்டு. அவனுக்கு வயசு ரெண்டு. மூக்காயியும் அவன் மகன் ராமுவும் தான் அந்த இடத்தில் வாழ்ந்துட்டு வராங்க.
மூக்காயியோட வீட்டுக்காரன் சரியான குடிகாரன். குடிச்சு குடிச்சு தனக்கு சொந்தமா இருந்த வீட்டையும் வித்துட்டான். நகைநட்டு, பாத்திர பண்டம் எல்லாமே வித்து குடிச்சான். ஒரு கட்டத்தில் இவன் மதுவுக்கு அடிமையாகி குடல் வெந்து ஒரு நாள் செத்தே போயிட்டான். இவன் சாகும்போது ராமுவுக்கு ஒரு வயசு.
தன் கணவன் இறந்த பிறகு, என்ன செய்யறதுன்னு தெரியாம கைக்குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு ஒவ்வொரு வீடாக போயி உதவி கேட்கிறாள். ஆனா, யாருமே அவளுக்கு உதவி செய்ய முன் வரல.
அதனால, அவ யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லன்னு நெனச்சு தன் குழந்தையை தூக்கிட்டு அந்த, ஊருக்கு எல்லையில் இருக்கிற ஏரிக்கரையோரமா, தன்கிட்ட இருந்த கோணிப்பையை, கூரையாக்கி அந்த இடத்தில் தான் இப்போ வாழ்ந்துட்டு வராள்.
இராவும், பகலும் எங்க வேலை கிடைச்சாலும், என்ன வேலை இருந்தாலும் செய்து, தன் புள்ளையை நல்லா பாத்துக்கிட்டாள். தன் புள்ளைய பெரியவனா ஆக்கணும், நல்லா படிக்க வைக்கணும்னு அடிக்கடி மனசுக்குள்ள நினைப்பாள். அதனாலயே ரொம்ப கஷ்டமான வேலையைக் கூட அவ இஷ்டமா செய்து வந்தா.
ஆனா, இப்ப அந்த குழந்தைக்கு ரெண்டு நாளா காய்ச்சல். ஆஸ்பத்திரி அந்த ஊருல இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் தள்ளி இருக்கு. இவள் பஸ்ல போகணும்னா கூட கையில காசு இல்ல. தன்கிட்ட இருக்கிறதே 100 ரூபாய் தான். அந்த காச போயிட்டு வரவே செலவு பண்ணிட்டா அங்க புள்ளைக்கு சோறு வாங்கி தர கூட காசு இருக்காது, அப்படின்னு தன் மனசுக்குள்ள நினைச்சா.
அதனால, நடந்தே ஆஸ்பித்திக்கு போகலாம் என்று முடிவெத்தாள். அன்னைக்கு காலையிலே தன் மகனுக்கு சட்டை போட்டு, தலை சீவி, பொட்டு வச்சி அவனை இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரி நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
காலுல செருப்பு இல்ல, காலையில கூட அவ சாப்பிடல, இருந்தாலும் தன் மகனுக்கு இந்த சுரம் சரியாகனும் என்று நினைத்து வேகமா நடக்க ஆரம்பித்தாள். அன்னைக்கு காலையிலே சூரியன் தாக்கம் அதிகமா இருந்ததால் தன் சேலை முந்தானையை தன் மகன் மீது போர்த்தி கொண்டு நடந்தாள். ஒரு வழியா 10 மணிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்துட்டாள்.
அங்க ‘புற நோயாளி பிரிவு’ சீட்டு வழங்கும் இடத்துக்கு போயி வரிசையில் நின்னாள்.
“யாருக்குமா பாக்கணும்” அப்படின்னு சீட்டு வழங்கும் நபர் கேட்டான்.
“சாமி.. என் புள்ளைக்கு தான் பார்க்கணும், சுரம் நிக்கிற பாடில்ல” என்றாள் மூக்காயி.
“சரி சரி இந்தா போய் டாக்டரை பாரு” அப்படின்னு சொல்லி வழிகாட்டியும் விட்டான். டாக்டரையும் பார்த்தாள் மூக்காயி.
ராமுவை பரிசோதித்து பார்த்துட்டு டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு நெஞ்சே பதறிப் போச்சு மூக்காயிக்கு.
“அம்மா உன் பிள்ளைக்கு டைபாய்டு சுரம் நாலு நாளு ஆஸ்பத்திரியில் சேர்த்துடு” அப்படின்னு டாக்டர் சொன்னாரு.
என்ன ஆனாலும் பரவால்ல, தன் பிள்ளைக்கு குணமானால் தான் இங்கிருந்து போகணும்னு மனசுக்குள்ள நினைச்சா மூக்காயி. அவளும் ஆஸ்பத்திரில அட்மிஷன் போட்டாள்.
தன் புள்ளைய சேர்த்து வைத்திருக்கிற வார்டுக்கு வந்தாரு டாக்டர். மூக்காயியை பார்த்து, “இந்தா பிடி இந்த சீட்டில் எழுதி இருக்கிற மாத்திரை மருந்து எல்லாம் இந்த ஹாஸ்பிட்டல்ல இல்ல, வெளியே இருக்கிற தனியார் மெடிக்கல்ல போய் வாங்கிட்டு வா” என்றார்.
தன் புள்ளையை தனியா விட்டு போகிறதுக்கு அவளுக்கு மனசே இல்ல. இருந்தாலும், வேற வழி அவளுக்கு இல்ல. தன்கிட்ட இருந்த 100 ரூபாயை அவள் எடுத்துக்கிட்டு, டாக்டர் எழுதி தந்த மருந்தை வாங்கிட்டு வர போனாள் மூக்காயி.
“தாயே மாரியம்மா, என் புள்ளைக்கு சரியாகிடனும் உன்ன தான் நான் மலை போல நம்பி இருக்கிற” என்று வேண்டிக்கிட்டே போனாள்.
அவள் தனியார் மெடிக்கலுக்கு போய், டாக்டர் எழுதி தந்த மருந்து எல்லாம் வாங்கிட்டு வரதுக்குள்ள, அங்க ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு. அந்த வார்டுல கடைசி கட்டில்ல தன் பிள்ளையை படுக்க போட்டுப் போனாள் மூக்காகி. அந்தக் குழந்தை, தன் பக்கத்துல தாய் இல்லனு தெரிஞ்சு, அழுது புரண்டு ஒரு கட்டத்துல அந்த கட்டலில் இருந்து கீழே விழுந்துரான்.
தலையில பலத்த காயம். உடம்பிலிருந்து இரத்தமா வருது. அந்த இரத்தம் நிக்கவே இல்ல. பக்கத்துல நிக்க வேண்டிய செவிலியர், ஊழியர்கள், மருத்துவர் ஒருவருமே இல்ல. வலி தாங்க முடியாம கத்தி கத்தி அழுகுது அந்த குழந்தை.
ஒன்னு…
ரெண்டு…
மூணு…
அவ்வளவுதான் அந்த குழந்தைகிட்ட இருந்து எந்த சத்தமும் வரல, எந்த அசைவும் வரல. “ஊர் அடங்கும் போது காத்தும் சேர்ந்து அடங்குவது போல அந்த குழந்தையோட மூச்சும் அடங்கிடுச்சு”
தன் புள்ளைக்கு சரியாகிடும்னு நினைச்சு, காலையில இருந்து சாப்பிடாம, தன்கிட்ட இருந்த பணத்துக்கு மருந்து வாங்கிட்டு, இறந்து போன தன் ஆசை மகனை பார்க்கப் போய் கொண்டிருக்கிறாள் இந்த ஏழைத்தாய்…….
எழுத்தாளர் பாலாஜி ராம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings