2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒரு நாளுக்கான தேவைக்கு மேல் பணம் எடுத்துக் கொண்டு போகாத ‘கோபி’க்கு… அன்றொரு நாள் நடந்த நிகழ்வுதான் சட்டை பையில் தாராளமாகப் பணம் எடுத்துப் போகச் செய்தது.
இதமான மாலை நேரம் குளிர்காற்று வீச…செட்டென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து தூறல் ஆரம்பம் ஆனாது. மழை அதிகமாவதற்குள் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் விரைவதற்குள் மழை விரைந்தது. இனி எங்கேயாவது ஒதுங்குவது தவிர வேறு வழியில்லை…
அப்படி ஒதுங்கிய இடந்தான் ‘காதர்’ பாய் டீ கடை …அந்த ஊரிலேயே சின்னக் கடை ஆனாலும் பிரபலமான கடை…அங்கு போடப்படும் பஜ்ஜி,கார போண்டா ,மசால் போண்டா,கார வடை,சமோசா …குறிப்பா ஜவ்வரிசி வடை கூடவே காரச் சட்னியும் சாப்பிடவே பெருங்கூட்டம் கூடும் .
“சார் …மழையில நனையிறீங்க..இப்படி உள்ள வந்து நில்லுங்க”
“இருக்கட்டும் பாய் …உள்ள வந்தா அங்கெல்லாம் ஈரமாயிரும்”
“அட வாங்க சார் …அதெல்லாம் பார்த்தா ஆகுமா ..மழை இன்னும் கனமா வரும்போல..”
“ஒரு டீ போடுங்க …”
“சார் …ரெண்டு பஜ்ஜி சாப்பிடுங்க சார்…டீ தூள் மாத்தியிருக்கேன் …கொதிக்கட்டும் டீ போடுறேன்”
சுடச் சுட பஜ்ஜியை ‘மந்தார இலை’ யில் வைத்துக் கொடுக்க …வாயில் வைக்கப் போகும் நேரம் …அருகில் இருந்து ஈனசுரத்தில் ஒரு குரல் கேட்டது …
“சார் ..ஒரு டீ வாங்கிக் கொடு …ஒரு போண்டா வாங்கிக் கொடு…”
டீ கடை பாய் … “ஏம்மா ..இந்த மழையில் இங்க எங்க வந்த?…நீ தங்குற நிழற்கூடத்துல இருக்க வேண்டியதுதானே …!”
“பாய்… ஒரு டீ…ஒரு போண்டா கொடுங்க …அதுக்குக் காசு நாளைக்குத் தரேன் ..நான் அதிகமா பணம் எடுத்து வரல.”
“சார்…நான் இப்ப என்ன காசா கேட்டேன்?”
அவர் கொடுத்த பேப்பர் கப் டீயை வாங்கிக் குடித்தவள் …போண்டாவை… அவளைச் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்க்குப் போட்டுவிட்டாள் …டீயைக் குடித்து முடித்ததும் மழை என்றும் பாராமல் நடுத்தெருவில் அவள் பாட்டிற்குப் பேசிக்கொண்டு போகப் பின்னாலே அந்த நாயும் போனது.
டீக்கடை பாய் …“என்ன சார்… பார்க்கறீங்க …அந்த அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கு …எந்த ஊர் ? எப்படி இங்க வந்துச்சு ?எந்த விவரமும் இல்ல …யார்கிட்டேயும் கை நீட்டி காசு கேக்காது …அதுக்கா தோணுச்சுனா இந்த மாதிரி ஒரு சிலரிடம் கேட்டு சாப்பிட்டு போகும் ..அந்த நிழற்கூடத்துல படுத்துக்கும்” என்று சொல்லி முடித்தார் .
அன்று முதல்தான் கோபி சட்டைப்பையில் அதிகப் பணம் எடுத்துபோகத் தொடங்கியது …இது போன்ற நிலையில் இருபவர்களுக்கு உணவு ,டீ போன்றவை வாங்கித் தருவது …தர்மம் தலை காக்கும் என்ற நோக்கத்தில் அல்ல …ஏதோ ஒரு தாக்கத்தால் உந்தப்பட்டு.
இவ்வாறு ஒரு வருட காலம் போய்க் கொண்டிருக்கையில் ..ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலில் வீட்டோடு முடங்கிப் படாதபாடு பாட்டுவிட்டார் ‘கோபி ‘ .உடல் நலமில்லாதப் பொழுது உலக நினைவுகள் எல்லாம் அறுந்துப்போயின …மெல்ல மெல்ல தேறி வந்த நிலையில்…
ஒரு நாள் மாலை பாய் கடைக்குச் சென்றவர் ..சுற்றும் முற்றும் பார்த்தார் …அவரின் தேடலை உணர்ந்த பாய்
“என்ன சார் ….அந்த அம்மாவைத் தேடுறீங்களா ?!…அந்த அம்மாவுக்கு ஏதோ டெங்கு காய்ச்சலாம் …ஒருவாரம் அந்த நிழற்கூடத்திலேயே படுத்துக்கிடந்தது …அப்புறம் ஒரு தொண்டு நிறுவனத்தினர் வந்து பார்த்து இறந்துட்டுத்தா சொல்லி எடுத்து அடக்கம் பண்ணிட்டுப் போயிட்டாங்க”
கோபிக்குக் கையில் வைத்திருந்த டீயைக் குடிக்கமுடியவில்லை …தான் காய்ச்சலில் படுத்துக்கிடக்கும் போது…தன் குடுமபத்தினரின் கவனிப்புகளை எண்ணி …’மனித வாழ்வில் தான் எவ்வளவு வேறுபாடுகள் …நான் கூட… டீ போண்டா வாங்கிக் கொடுப்பதோடு நின்றுவிட்டேனே …ஒரு தொண்டு நிறுவனத்திற்காவது சொல்லி ஏதாவது செய்திருக்கலாம் ” என்று வருந்தினார் .
ஆறிப்போன டீயை கீழே ஊத்தப்போக அங்கே இருந்தது அந்த அம்மாவுடன் சுற்றும் நாய் …அதற்கு ஒரு போண்டா வாங்கிப் போட்டதும் ..சாப்பிட்டுவிட்டு வழக்கமாக அந்த அம்மாவுடன் போகும் பாதையில் போனது .பின் தொடர்ந்து போன கோபி …அந்த நாய் …அந்த அம்மா புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்துவிட்டு அங்கேயே படுத்துக் கொண்டது .
“மனிதர்களிடம் ‘ஈரம் உலர்ந்தது’ …மிருகங்களிடம் மட்டுமே எஞ்சியுள்ளது.” என்று எண்ணிக்கொண்டு திரும்பினார்.
இருள் விலக்க தெருவிளக்குகள் ஒளிர்ந்தன .கோபின் மனமும் .
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings