in

எதிரிலா வலத்தினாய்…! (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி

எதிரிலா வலத்தினாய்...!

“அபிராமபுரம் எல்லாம் இறங்குங்க”

நடத்துனரின் குரல் கேட்டு, யோசனையிலிருந்து மீண்டு பேருந்தை விட்டு இறங்கினான் கதிர் என்கிற கதிரேசன்

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், ஊர் உறங்க ஆரம்பித்திருந்தது. கதிர் தளர்வாக நடையைப் போட்டான்.

தெருவில் மங்கலான வெளிச்சம் இருந்தது. ஒரு சில வீடுகளில் லைட் எரிந்து கொண்டிருந்தது

“ஏ… நீ நம்ம சின்னசாமி மவன் கதிரு தான…?” திண்ணையில் உட்கார்ந்திருந்த வேலய்யா கேட்டார்

“ஆ…மா” என்றான் கதிர் சுரத்தின்றி

“என்னப்பா… நல்லாயிருக்கியா? காலேஜ் லீவாப்பா? படிப்பெல்லாம் பரவாயில்லையா? கடைசி பஸ்ல வந்தியோ? பாவம்… சாப்பிடலையா இன்னும்? சரி… நீ வீட்டுக்குப் போப்பா. நான் நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்கறேன்” மடமடவென பேசி முடித்தார்

அவர் எப்பவுமே இப்படித் தான், ஆனால் நல்ல மனிதர். அப்பாவின் நண்பர்

கதிர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான். அமைதியாய் இருந்த வீட்டிற்குள் சலனமும், வெளிச்சமும் தோன்றியது. கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்த்தாள் அம்மா.

இருட்டில் மசமசப்பாய்த் தெரிந்த உருவத்தை வைத்தே, வந்திருப்பது தன் மகன் தான் எனக் கண்டுபிடித்துவிட்டாள் அஞ்சலை.

“ஏ… தம்பி ! கதிரேசா…! என் ராசா… வாய்யா. என்ன இந்த நேரத்துல? வாய்யா… உள்ளார வா…”

“மாமா…! இங்கன பாரு, யாரு வந்திருக்காவன்னு… எந்திரி மாமா… கதிரு வந்திருக்கான்” பரபரத்தாள் அஞ்சலை

சின்னசாமி தூக்கம் கலையாமல் எழுந்து மகனைப் பார்த்தார்.

துவண்டு போய் இருந்த கதிரைப் பார்த்ததும், “வாப்பா! என்ன திடீர்னு? ஏ…புள்ள… பையன் பசியோட இருப்பான் போல, முதல்ல அவனுக்கு சாப்பிட ஏதாவது குடு. மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்” என்றார்

பிள்ளையின் பசி உணர்ந்ததும் மற்றதெல்லாம் பின்னுக்கு போக, சில நிமிடங்களில் ஆவி பறக்க உணவை பரிமாறினாள் அஞ்சலை

ஒரு மாதமாக விடுதி உணவில் நொந்து போயிருந்த கதிர், மடமடவென சாப்பிட்டான்

உணவு முடித்து முன்னறைக்கு வர,  அதற்கே காத்திருந்த சின்னசாமி, “சாப்டியாப்பா?” என பேச்சை ஆரம்பித்தார்

“சாப்பிட்டேன்பா, நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கிங்க?”

“எங்களுக்கென்னப்பா, நல்லாருக்கோம். நீ தான் ரொம்ப வாடின மாதிரி இருக்கே. காலேஜ் சேர்ந்து ஒரு மாசம் தான் ஆகுது. ஹாஸ்டல்ல சாப்பாடு புடிக்கலையா? ரொம்ப இளச்சுட்டியே?”

“அதெல்லாம் இல்லப்பா. உங்களைப் பிரிஞ்சு இருக்க ஒரு மாதிரியா இருக்கு. அதா…ன்”

“போகப் போக பழகிடும். ஆமா… காலேஜ் லீவாப்பா? எவ்வளவு நாள் லீவு?”

“மூணு நாள் லீவுப்பா. திடீர்னு சாயங்காலம் சொன்னாங்க. அதான் உடனே கிளம்பி, கடைசி பஸ்ல வந்தேன்.”

“சரிப்பா, உனக்கு அசதியா இருக்கும். விடிஞ்சதும் பேசலாம், நல்லா தூங்குய்யா”

அம்மா பாயும், தலையணையும் கொண்டு வந்து போட, ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டான் கதிர்

சின்னசாமியும் பழையபடி படுத்துக் கொள்ள, அஞ்சலை அடுக்களையில் கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்துக் கொண்டவள், சிறிது நேரத்தில் எழுந்து கணவனிடம் வந்தாள்

“மாமா…” மெல்ல அழைத்தாள்.

“என்ன, தூங்கலையா நீ?” என்றான் சின்னசாமி.

“எப்படி தூக்கம் வரும்? புள்ள முகத்தைப் பாத்தியா? மனசுல எதையோ வச்சுக்கிட்டுப் புழுங்கற மாதிரி இருக்குய்யா. அம்மாம் தொலைவுல பையனப் படிக்க அனுப்பாதேனு சொன்னேன், கேட்டியா? இப்ப பாரு, என்ன பிரச்சனையோ?”

“சலசலனு சத்தம் பண்ணாதே. எதுனாலும் காலைல பேசிக்கலாம், அவன் தூங்கட்டும்”

அஞ்சலை மறுபடியும் அடுப்படியில் போய்ப் படுத்துக் கொள்ள, சின்னசாமியும் தூங்க ஆரம்பித்தான்

கதிருக்குக் கண்களில் உறக்கம் வராமல் அடம் பிடித்தது. எப்படி வரும்… மனம் நிலையில்லாமல் தவிக்கும் போது?

எவ்வளவு பாசமாய் இருக்கிறார்கள் அப்பாவும், அம்மாவும்… அவர்களை விட்டுப் பிரியப் போவதை நினைக்கவே கஷ்டமாயிருந்தது.

அப்பா தோட்ட வேலை செய்பவர். இந்த ஊரில் இருக்கும் பெரியய்யா வீட்டில் வருடக்கணக்காய் வேலை செய்பவர். நல்லவர், நாணயமானவர்.

அம்மாவும் அவ்வப்போது அப்பாவுடன் ஒத்தாசைக்குப் போவதுண்டு. பெரியய்யாவும் நல்லவர். பண உதவியோ, என்ன உதவியென்றாலும் செய்வார்

கதிர் படிப்பில் என்றுமே கெட்டிக்காரன், ரொம்ப அமைதி. உயர்நிலைப் பள்ளி வரை பக்கத்து ஊருக்குச் சென்று படித்தவன், நல்ல மார்க் வாங்கவே, சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சிறுகச் சிறுக சேர்த்த பணமும், பெரியய்யா கொடுத்த பணமும் அதற்கு உதவியது

அதுவரை எல்லாம் நன்றாகவே நடந்தது. கதிருக்கும் நன்றாகப் படித்து, பொறியியல் பட்டம் வாங்க ஆசை தான்

ஆனால் கல்லூரி வாழ்க்கை அவனுக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. ஹாஸ்டல் வாழ்க்கை அதை விட கொடுமை.

ஒரு சாதாரண ஊரிலிருந்து, தோட்ட வேலை செய்பவரின் மகனாய், நகராட்சிப் பள்ளியில் படித்து விட்டு வந்தால், பொறியியல் கல்லூரியில் சேரக் கூடாதா என்ன?

நல்ல மதிப்பெண்களும், படிக்கும் ஆர்வமும் இருந்தால் போதாதா?

சக மாணவர்களுக்கு இவன் ஒரு அந்நியன் போலவே இருந்தான்.

அவர்களின் ஸ்டைலான ஆங்கிலமும், மாணவப் பருவக் குறும்புகளும் கதிரிடம் இல்லாததால், அவன் அவர்களுக்கு கேலிப் பொருளானான்.

இது தான் என்றில்லை. எப்பொழுதும், எல்லா சூழ்நிலையிலும் கதிர் அவமானங்களைச் சந்தித்தான். யாரும் அவனை நண்பனாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

ஹாஸ்டலிலும் அவன் ஒதுக்கப்பட்டான். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தான். பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதம் ஓட்டி விட்டான். மனம் துவண்டதால் படிப்பில் கவனம் செல்லவில்லை.

இப்படியே எவ்வளவு நாட்கள் ஓட்டுவது? படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, ஊருக்குப் போய் விடவும் மனம் ஒப்பவில்லை.

அப்பா பாவம்… என்ன நினைப்பார்…? இரண்டு நாட்களாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

மூன்று நாட்களுக்கு லீவு எழுதிக் கொடுத்து விட்டு ஊருக்குக் கிளம்பினான். வருகிற வழியில் மெடிக்கல் ஷாப்பில் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொண்டான்.

அதைச் சாப்பிடுமுன் ஒருமுறை அப்பா, அம்மாவைக் கடைசியாகப் பார்த்துப் போகத் தான் ஊருக்கு வந்திருக்கிறான்.

பள்ளி நாட்களில் செய்தித்தாளில் தினமும் வரும், கல்லூரி மாணவர் விடுதி கழிவறையில் தற்கொலை, கல்லூரி வளாகத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை போன்ற செய்திகளைப் படிக்கும் பொழுது, முட்டாள்தனமான செயல்களாகத் தோன்றும்.

பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கிடையில் இவர்களைப் படிக்க வைக்கிறார்கள். நன்றாகப் படித்து, நல்ல பெயர் எடுப்பதை விட, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, இவர்களுக்கு என்ன கவலை இருக்க முடியும் என்று கதிர் நினைத்ததுண்டு.

ஆனால் இப்பொழுது அவனுக்கு அவையெல்லாம் நியாயமாகப்பட்டது. தான் இவ்வளவு மன உளைச்சலில், இப்படி ஒரு முடிவெடுத்தது போலத் தான் அவர்களும் தற்கொலை முடிவெடுத்திருப்பார்கள் என நினைத்தான்.

இப்படி எண்ணற்ற மன சஞ்சலத்தின் நடுவே, விடிவதற்கு சற்று முன் கண்ணயர்ந்தான் கதிர். மறுநாள் மதியம் வரை அப்படி, இப்படியென்று பொழுதைக் கழித்தான். அம்மாவுக்குத் தான் இவன் முகவாட்டம் கவலையளித்தது

மதியம் சாப்பிட்டு விட்டு, காற்றாட திண்ணையில் அப்பாவுடன் உட்கார்ந்திருந்த போது, அப்பாவின் நண்பர் கனகு வந்தார். இவரும் பெரியய்யா வீட்டில் கணக்குப் பிள்ளையாய் வேலை செய்தவர், கைச்சுத்தம் இல்லாதவர்

இரண்டு வருடங்களுக்கு முன் வேலையை விட்டுவிட்டு, பக்கத்து ஊர் மிராசுடன் சேர்ந்து கொண்டு, வட்டிக்குப் பணத்தை விட்டு, ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்

கதிருக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. எப்பொழுதும் மற்றவர்களை மட்டம் தட்டியே பேசுவார். ஆனால் சின்னசாமி அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்.

அன்றும் அப்படித் தான்… சின்னசாமியின் நேர்மையையும், வறுமையையும் கேவலமாகப் பேசினார். சாமர்த்தியம் இல்லாதவன் என்றார்.

“பொழைக்கத் தெரியாதவனா இருக்கியே சின்னா. இப்படியே ஒத்த ரூம் ஓட்டு வீட்டுல உன் ஆயுசு முடிஞ்சுரும் போலயே. உன் பையன் காலேஜு படிப்பெல்லாம் முடிப்பான்னு தோணல. பணம் கட்ட முடியாம, பாதியிலேயே படிப்பை விட்டுட்டு, உன் கூட மண்வெட்டி பிடிக்கறதும், பாத்தி கட்டறதும், செடிக்குத் தண்ணி ஊத்தறதுமா காலந் தள்ளத் தான் லாயக்கு. பொழைக்கத் தெரியாதவங்ககிட்டப் பேசி என் நேரம் தான் வீணாகுது…”

கனகு போனபின், “அப்பா, என்னப்பா! கனகு இப்படியெல்லாம் பேசறார். நீங்க அதைக் கேட்டுட்டுப் பேசாம இருக்கீங்க. கோவமோ, வருத்தமோ இல்லையாப்பா?”

“எதுக்குக் கோவப்படணும்? நேர்மையா இருந்தா முன்னேற முடியாதுனு அவன் நினைக்கறான். ஆனா குறுக்கு வழியில சம்பாதிக்கறதோ, போலியான வாழ்க்கையோ, ஆடம்பரமோ ஒருநாள் அவன் நிம்மதியைக் குலைச்சிடும்னு தெரியாம வாழ்ந்திட்டிருக்கான். மத்தவங்களுக்காக நாம குறுக்கு வழியில போகக் கூடாது. நான், நானா இருந்து ஜெயிக்கணும். நீ மனசப் போட்டுக் குழப்பிக்காதே கதிர். நீ நல்லா படிச்சு, நல்ல நிலைமைக்கு வருவேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு”

கதிரின் கண்களில் கண்ணீர் குளம் போல் நிரம்பி, வெளியே வரத் தயாராக இருந்தது, சமாளித்துக் கொண்டான்.

படிப்பறிவு அவ்வளவாக இல்லாத அப்பாவுக்கு இருக்கும் மனப்பக்குவம், தனக்கு இல்லாமல் போனதை நினைத்து வெட்கப்பட்டான்.

மனதில் பிறந்த தெளிவுடன், மாலையில் பையை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்குக் கிளம்பினான்.

 “என்னப்பா! மூணுநாள் லீவுனுசொன்னியே… இன்னிக்கே ஊருக்குக் கிளம்பணுமா?” என அம்மா கேட்க

“இல்ல’ம்மா… கொஞ்சம் படிக்கற வேலையிருக்கு. இன்னிக்கே போயிட்டா நாளைக்கு ஹாஸ்டல்ல இருந்து படிச்சு முடிச்சுடுவேன். மறுபடியும் லீவு கிடைக்கும் போது வரேன்மா. அப்பா… போயிட்டு வரேன்பா, பார்த்துக்கோங்க” என பிள்ளை கூற

“சரிப்பா… பார்த்துப்போ, நல்லா படி” என்றார் தந்தை

பஸ்ஸிற்கு காத்திருக்கும் போது, சட்டைப் பையில் உறுத்திக் கொண்டிருந்த தூக்க மாத்திரைகளை, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டான். மனதிலிருந்த குழப்பங்களையும் அதனுடன் சேர்த்து தூர வீசினான்

Click the Picture below, to set reminder in YouTube for Sahanamag Anniversary Event on Aug 2, 2021 @ 5pm


#ad 

                      

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

செல்ல நாய்குட்டி (பென்சில் ஸ்கெட்ச்) By நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)

சிறுகதைப் போட்டி 2021