in ,

எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணனும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

      அவுட்டோர் சூட்டிங்கிலிருந்து எஸ்கேப் ஆகி, அந்த உயர்தர ஹோட்டல் அறையில் தஞ்சம் புகுந்திருந்தனர் அசிஸ்டெண்ட் டைரக்டர் ரூபனும், புதுமுக நடிகை  “பளிங்கா”வும்.

       “என்னங்க… எப்ப உங்க வொய்ஃபை டைவர்ஸ் பண்ணப் போறீங்க?” பளிங்கா தன் பளிங்குப் பல் வரிசையைக் காட்டியபடி கேட்க,

       “டைவர்ஸ் சாத்தியமில்லை டியர்… அதுக்கு பதிலா அவளை மர்டர் பண்ணப் போறேன்!”  “விருட்”டென எழுந்தாள் பளிங்கா. அவள் கண்களில் பயம்.

       “பயப்படாதே இது கொலை மாதிரியே தெரியாது… தற்கொலைன்னுதான் எல்லாருமே அடிச்சுச் சொல்லுவாங்க… அப்படியொரு பிளான்!”

       “இருந்தாலும்… நாம மாட்டிக்குவோமோன்னு..”

       “சான்ஸே இல்லை!” என்ற ரூபன், சிறிய யோசனைக்குப் பின், “சரி உன் கிட்டே சொல்றதில் என்ன?… அதாவது, வேணுமின்னே என் வலது கை விரல்ல ஒரு காயத்தை ஏற்படுத்திக்கிட்டு என் மனைவி கிட்டப் போயி, “ஜோதி… நாளைக்கு ஷூட் பண்ணப் போற ஒரு சீனுக்கு அர்ஜெண்டா ரீ-ஸ்கிரிப்ட் எழுதணும்!.. இந்தக் கையை வெச்சுக்கிட்டு எழுதவே முடியலை!.. என்ன பண்றதுன்னே தெரியலை!”ன்னு ஒரு சோக ஆக்ட் குடுப்பேன்… அவ  “சரிங்க நான் எழுதித் தர்றேன்!”ன்னுட்டு வருவா…”

       “இதுல எப்படி?” பளிங்கா விழியை விரித்துக் கேட்டாள்.

       “அதாவது அடுத்த நாள் ஷூட் பண்ணப் போற சீன்ல ஹீரோயின் தற்கொலை பன்ணிக்கப் போறா!.. அதுக்கு முன்னாடி உட்கார்ந்து ஒரு கடிதம் எழுதறா அந்த சீனுக்கு ஹீரோயின் எழுதற மாதிரி ஒரு தற்கொலை லெட்டரை ஜோதி கையால எழுத வெச்சு வாங்கிடுவேன்! அதுக்கப்புறம் நைட்டே அவ கதையை முடிச்சு தூக்குல தொங்க விட்டுட்டு அந்தக் கடிதத்தை அவ கையில பிடிச்சிருக்கற மாதிரி வெச்சிடுவேன்! போலீஸ் அந்த லெட்டரைப் பார்க்கும்!.. அது அவளோட கையெழுத்துதானா?ன்னு ஆராய்ச்சி பண்ணும்!… கடைசில  “இது தற்கொலைதான்”னு ஃபைலை மூடிடும்!…”

      அவள் “ஓ.கே” என்று சொல்ல வாயெடுக்க, அந்த வாயைப் பொத்தினான், தன் வாயால்.

****

      தனது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த ரூபன், வேண்டுமென்றே பென்சில் சீவுவது போல், பிளேடால் தன் விரலை அறுத்துக் கொண்டு, ரத்தம் சொட்டச் சொட்ட சமையலறைக்கு ஓடினான். “ஜோதி… ஜோதி”

      பதறிப் போனவள்,  ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்ஸை, எடுத்து வந்து மருந்து போட்டு, நர்ஸைப் போல் அழகாய்க் கட்டும் போட்டு விட்டாள்.

       “ஜோதி!.. ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்!” என்றான் ரூபன் சோகமாய்.

      அவள் “என்ன” வென்று கேட்க, நேற்று பளிங்காவிடம் விவரித்த பாவ்லா சீனைப் பற்றிச் சொல்லி விட்டு, “நீதான் ஹெல்ப் பண்ணனும்” என்றான்.

      தன் கணவனின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றி அரசல் புரசலாகத் தெரிந்து வைத்திருந்த ஜோதியின் உள் மனசுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. யோசித்தாள்.  சட்டென்று, “சரிங்க நானே எழுதித் தர்றேங்க!” என்று சொல்லி, எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.  அங்கு, டீப்பாய் மீதிருந்த “அந்த” பேனாவையும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். “ம்… சொல்லுங்க!”

      தன் நடிப்பை அவள் நம்பி விட்டதை எண்ணி மகிழ்ந்து போன ரூபன், அழகான வாசகங்களை, அற்புதமாகப் போட்டு, தற்கொலைக் கடிதத்தை ஜோதி கையாலே எழுத வைத்தான். எழுதி முடித்ததும், அதை வாங்கிப் பார்த்தவனுக்கு, முழு திருப்தியாயிருந்தது. “இது போதும்… இதை வெச்சே தப்பிச்சிடலாம்!” என்று அவனையுமறியாமல் அவன் வாய் சொல்லி விட,

      ஜோதி அதைக் “கப்”பென்று பிடித்துக் கொண்டாள். “என்ன… சொன்னீங்க?… தப்பி விடலாமா?… எதுல இருந்து தப்பி விடலாம்?” கேட்டாள்.

       “அது… வந்து….” என்று திணறிய ரூபன், தன் கையிலிருந்த அந்த தற்கொலைக் கடிதத்தை, மடித்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, அங்கிருந்து நகரப் போக, தாவி வந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் ஜோதி, “சொல்லுங்க!.. தப்பி விடலாம்னு சொன்னீங்கல்ல அதுக்கு என்ன அர்த்தம்?”

      டென்ஷனாகிப் போன ரூபன்,  “ம்… உன்னைக் கொல்லப் போறேனில்ல?… அந்தக் கொலைக் குற்றத்திலிருந்துதான் தப்பி விடலாம்னு சொன்னேன்… போதுமா?”

ஜோதி அமைதியாய் அவன் முகத்தையே பார்க்க,

       “என்னடி பாக்கறே?… இப்ப உன் கைப்பட ஒரு தற்கொலைக் கடிதம் எழுதி வாங்கினேனே?… அது சினிமா ஷூட்டிங்கிற்கு அல்ல…இங்க…நடக்கப் போற நிஜ ஷூட்டிங்கிற்கு!.. என்ன? புரியலையா?… இன்னிக்கு ராத்திரி உன்னைக் கொல்லப் போறேண்டி… கொன்னு தூக்குல தொங்க வெச்சிட்டு… உன் கைல இந்த லெட்டரைத் திணிச்சிடுவேன்!.. அது… காப்பாத்திடும்டி என்னைய!” சொல்லி விட்டு” வாய் விட்டுச் சிரித்தான் ரூபன்.

      சிரித்தவன் ஓய்ந்து, சிரிப்பை நிறுத்திய பின், ஜோதி சிரிக்க ஆரம்பித்தாள். குழம்பினான் ரூபன். “ஏய்… எதுக்குடி நீ சிரிக்கறே?”

      “முட்டாள்… நான் எழுதிக் குடுத்த அந்த லெட்டரை எடுத்துப் பாருடா மொதல்ல”

      அவசர அவசரமாக தன் பாக்கெட்டிலிருந்த அந்த லெட்டரை எடுத்துப் பார்த்தவன் முகம் வெளிறிப் போனான்.  அது வெள்ளைத் தாளாய் இருந்தது. “ஏய்.. ஏய்… இதிலிருந்த எழுத்துக்கள் எங்கே?… எப்படி… எப்படி.. அழிஞ்சுது?”

      அப்போது கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, விரைந்து போய்க் கதவை நீக்கினாள் ஜோதி.  வெளியே, அவளது சித்தப்பா மகனும், இன்ஸ்பெக்டருமான அருண் நின்றிருந்தான். “என்ன அருண்… வீடியோவும்… வாய்ஸும் கிளியரா வந்திருந்திச்சா?” கேட்டாள் ஜோதி.

       “ம்… அதனாலதானே படையோட வந்திருக்கேன்!” என்று சொன்னவரின் பின்னால் இரண்டு கான்ஸ்டபிள்களின் தலை தெரிந்தது.

      எதிரில் நடப்பவை எதுவுமே புரியாமல் “பேந்த… பேந்த” விழித்தபடி நின்றிருந்த ரூபனிடம் வந்த ஜோதி, “என்னம்மா கண்ணூ… ஒண்ணுமே புரியலை!… அப்படித்தானே?… சொல்றேன் கேளு!.. எனக்கு உன்னோட சுயரூபம் ஏற்கனவே தெரியும்… அதனாலதான் நீ தற்கொலைக் கடிதம் எழுதித் தரச் சொல்லிக் கேட்டப்பவே முழிச்சுக்கிட்டேன்!… சும்மா எழுதித் தர்ற மாதிரி தந்துட்டு உன்னோட வாயாலேயே உண்மையை வரவழைக்கணும்னுதான் உன்னைக் கோபப் படுத்தற மாதிரி பேசினேன்!… நீயும் கோபப்பட்டு எல்லாத்தையும் கொட்டிட்டே!… அப்படி நீ கொட்டும் போது அதை உனக்கே தெரியாம என் செல்போன்ல வீடியோ எடுத்து… என் சித்தப்பா மகன் இன்ஸ்பெக்டர் அருணுக்கு அனுப்பினேன்.. அவனும் சரியான நேரத்துல வந்து சேர்ந்தான்!… கண்ணா.. உனக்கு மட்டும்தான் பிளான் போடத் தெரியும்னு நினைக்காதே!” என்றாள்.

      இன்ஸ்பெக்டர் கண் காட்ட, கான்ஸ்டபிள்கள் வந்து ரூபனை நெட்டித் தள்ளிக் கொண்டு சென்றனர். அவர்கள் சென்றதும், இன்ஸ்பெக்டர் ஜோதியிடம் கேட்டார், “அந்த லெட்டர்… எப்படி திடீர்னு வெள்ளைக் காகிதம் ஆயிற்று?”

       காலையில் நடந்த அந்த நிகழ்ச்சியை விவரிக்க ஆரம்பித்தாள்.

****

                 காலை பத்தரை மணி, வாசலில் ஓசை கேட்க வந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு கௌதம் நின்று கொண்டிருந்தான். “என்னடா குட்டி விஞ்ஞானி?.. என்ன சமாச்சாரம்?” கேட்டேன். ப்ளஸ்டூ படிக்கும் மாணவனான கௌதமிற்கு அறிவியலில் ஏக ஈடுபாடு. பல சிறிய சிறிய கண்டுபிடிப்புக்களைத் தானே உருவாக்கி, அதைப் பள்ளிகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளில் வைத்துப் பெயரெடுத்தவன்.  அவனுக்கு நான் வைத்திருக்கும் பெயர், “குட்டி விஞ்ஞானி!”

 “ஆண்ட்டி… இந்தாங்க” ன்னு சொல்லி ஒரு பேனாவை என்கிட்ட நீட்டி “எழுதிப் பாருங்க” என்றான் கௌதம். நானும் ஒரு பேப்பரை எடுத்திட்டு வந்து அதில் என் கையெழுத்தைப் போட்டேன். அப்புறம் ரெண்டு பேரும் போய் டி.வி.பார்க்க உட்கார்ந்திட்டோம்.

பத்து நிடங்களுக்குப் பிறகு, “ஆண்ட்டி இப்ப அந்தப் பேப்பரை எடுத்துப் பாருங்க” என்றான் கௌதம். எடுத்துப் பார்த்தேன்.  நான் கையெழுத்துப் போட்டிருந்த இடம் காலியாயிருந்தது.

       “ஆண்ட்டி… இதுதான் போன வாரம் எங்க ஸ்கூல் சைன்ஸ் எக்ஸிபிஷன்ல நான் வெச்ச என்னோட லேட்டஸ்ட் கண்டுபிடிப்பான மாஜிக் பேனா!…”

       “டேய்..டேய்.. கௌதம் இதை நானே வெச்சுக்கறேண்டா!”

       “ஓ.கே!… வெச்சுக்கங்க!… நாளைக்கு வந்து என்னோட இன்னொரு கண்டுபிடிப்பைக் காட்டறேன்.. பை…”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கை பயணம் தொடருமா? (சிறுகதை) – சாமுண்டேஸ்வரி பன்னீர்செல்வம்

    இக்கரைக்கு அக்கரை பச்சை (சிறுகதை) – சுஶ்ரீ