in ,

எதை தொலைத்தாய் எங்கே தேடுகிறாய் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்மார்ட் வாட்சில் அலாரம் சிணுங்கியது. கேட்டு விழித்தவன் பாஸ்கர். திரும்பி பார்த்தான். மனைவியும் அவன் மகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எழுந்து ஜன்னல் திரையை விலக்கியவனின் கண்களில் வெளியே இருட்டில் வெண்மையாக பனி பெய்வது தெரிந்தது.

வாட்சில் அன்றைய தட்ப வெப்ப நிலையை பார்த்தான். அரை மணி நேரம் ஸ்நோ ஃபாலிங் என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து பெருமூச்செறிந்த படி பாத்ரூமில் நுழைந்தான். 

காலைக் கடன்களை முடித்து வெளிவந்த பாஸ்கரின் செல்போன் அலறியது. வேகமாக அதை வைபிரேஷனில் போட்டவன் பக்கத்து அறையில் மனைவியின் மகளும் மகனும் தூங்குவதை பார்த்தான்.

திரும்பவும் போன் அழைக்கவும் “இவன் ஒருத்தன் ரெடியாகி வெளிய வரதுக்குள்ள பத்து தரம் கால் பண்ணிடுவான்” என சலித்தபடி கூறி போனை அட்டெண்ட் செய்தான். 

“குட் மார்னிங் ஹேவ் யூ ஸ்டார்டட்” ஆங்கிலத்தை அமெரிக்கன் ஸ்லேங்கில் அவன் மனைவி மரியாவின் அண்ணன் ஜேம்ஸ் பேசினான்.

“ம்” என ஒரு வார்த்தையில் பதில் கூறியவனிடம் “ஹேட் யுவர் பிரேக்ஃபாஸ்ட்” என திரும்பவும் ஜேம்ஸ் கேட்க “நாட் யெட்” என்றான் பாஸ்கர் எரிச்சலுடன்.

“கூல் கூல் கம் டு வால் ஸ்ட்ரீட்” என்று கூறி அவன் எரிச்சலை புரிந்து கொண்டது போல் போனை நிறுத்தினான் ஜேம்ஸ். 

“போடா” என்றபடியே போனை வைத்த பாஸ்கர் குளிரை சமாளிக்க இரண்டு ஜீன்ஸ் இரண்டு பனியன்கள் அதன் மேல் வின்ட்டர் ஜாக்கெட் அணிந்து கொண்டான். கைகளில் க்ளவ்ஸ் கால்களில் ஷுஸ் அணிந்து கொண்டவன் காரின் மேல் விழுந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தள்ளி விட பிரஷை எடுத்தான்

அந்த சத்தத்தில் விழித்துக் கொண்ட அவன் மனைவி மரியா “ஹாய் டார்லிங் குட் மார்னிங் கிளம்பிட்டையா வால் ஸ்ட்ரீட் ஆர் மன்ஹாட்டன்” என கேட்டு படுக்கையிலிருந்தே கை அசைத்தாள்.

“குட் மார்னிங் டியர் வால் ஸ்ட்ரீட் தான் பை” என பதிலளித்த படி அந்த பெரிய பங்களாவை விட்டு வெளியே வந்தான் பாஸ்கர். காலை எட்டு மணியாகியும் குளிர் இருட்டும் ஊதக் காற்றும் மெலிதாக பனி பெய்தபடி இருந்தது அமெரிக்காவின் நியூஜெர்சி. 

“என்ன ஊருடா” என சலித்துக் கொண்டவனின் மனம் இதற்குத் தானே ஆசைபட்டாய் பால குமாரா என இடித்தது.

சம்மந்தமே இல்லாமல் ராபர்ட் ஃபராஸ்டின் தி ரோட் நாட் டேக்கன் கவிதை நினைவுக்கு வந்தது. எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுட்டு நம்ம ஊருக்கு ஓடிடலாமா இந்த எண்ணம் பளிச்சிடவும் ஒரு சோக சிரிப்பு சிரித்துக் கொண்டான் பாஸ்கர்.

“எதை விட்டுட்டு எதை தேடி ஓடப் போற” தன்னையே கேட்டுக் கொண்டான். 

திரும்பவும் போன் வைபிரேஷனில் அதிரவும், இப்ப எதையும் நினைக்க நேரம் இல்லை என முணுமுணுத்தபடி காரை வேகமாக எடுத்துக் கொண்டு நியூஜெர்ஸியின் டிரண்டன் ஸ்டேஷனுக்கு வந்தான் பாஸ்கர். நியூயார்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் போவதென்றால் ரயிலில் செல்வான். காலை டிராபிக்கை ஸ்கிப் செய்து விடலாம். 

கோவை பொம்பனம்பாளையம் கிராமத்தில் பிறந்து படிப்பு முடியும் வரை பெற்றோர் அரவணைப்பில் இருந்தவனுக்கு பெங்களூரில் பெரிய ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்ததும் அனைத்தும் மாறியது.

அவன் எதிர்பார்க்காத திருப்பங்கள் அவன் வாழ்வில் நடந்தேறியது. அவனுடன் அதே கம்பெனியில் வேலை பார்த்த ஷைலஜாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டான். மகனின் விருப்பமே தங்களது விருப்பம் என நினைத்தனர் அவன் பெற்றோர். 

ஆனால் அதுவும் இரண்டு வருடங்கள் கூட நிலைக்கவில்லை. பாஸ்கரின் சுயநல எண்ணங்களை ஷைலஜாவால் சகித்துக் கொள்ள முடியாமல் அவனை பிரிந்து சென்றாள்.

அதன் பின்னர் அவன் கனவு தேசமான அமெரிக்காவில் அவனுக்கு வேலை கிடைத்தது பறந்து சென்றான். டாலர்களில் சம்பளம். எதையும் நினைத்த உடன் வாங்க பணம் மற்றும் கடன் வசதி.

அவன் வேலைக்கு வந்ததும், “தம்பி கடன் மட்டும் வாங்கிடாத” அப்பாவின் அறிவுரை இன்றும் காதில் ஒலிக்கிறது. 

தினமும் இரவு உணவை நியூயார்க் டைம் ஸ்கொயரில் உள்ள இண்டியன் கேஃபில் தான் பாஸ்கர் சாப்பிடுவான். அங்கு அறிமுகமானவள் மரியா. அவளின் ரோஜா நிறம் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசும் நாசுக்கான பேச்சு பாஸ்கரை திரும்பவும் காதலில் விழ வைத்தது. 

இந்திய வம்சாவளி என்றதும் அதிக ஒட்டுதல். அதனால் அவளின் மதம் அவளும் டைவர்ஸி என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகியது. காதல் திருமணத்தில் முடிந்தது. இம்முறை சம்மதிக்க அவனுக்கு பெற்றோர் தேவையில்லை.

இது என் வாழ்க்கை என் முடிவு என நினைத்தான். முதல் கணவனால் மரியாவுக்கு பிறந்த இரு குழந்தைகள் குறித்து திருமணத்திற்கு பின்பே பாஸ்கர் தெரிந்து கொண்டான். 

காதல் மயக்கத்தில் குருடனாய் இருந்தான் பாஸ்கர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயத்தை இழந்து தற்போது தன் உழைப்பை அவர்களுக்காக கொட்டும் போதுதான் தான் எவ்வளவு கண்மூடித்தனமாக இருந்துள்ளோம் என புரிந்தது.

பெற்றோருடன் பேசுவது நின்று பல மாதங்களாகி விட்டது. பாதிப்பு தனக்கு ஏற்படும் போதுதான் பெற்றோரின் நினைப்பு வருகிறது. பாஸ்கரின் கண்களில் நீர்த்துளி. 

ஸ்டேஷனில் வந்து நின்ற ரயிலில் ஏறியவன் கண்களை மூடிக் கொண்டான். மனக்கண்ணில் அவன் கிராமத்து வீடு தெரிந்து சுற்றத்தாரின் நினைவுகள் துரத்தியது.

பாஸ்கர் வால் ஸ்ட்ரீடில் ஹோட்டலை அடைந்தான். நினைவுகளின் துரத்தலை ஒதுக்கி விட்டு வேலையில் கவனமாக இருந்தான். அன்று லன்ச் டைமில் ஹோட்டலின் உள்ளே நுழைந்த அந்த இண்டியன் ஃபேமலியை பார்த்தவனுக்கு அந்த முகங்கள் சற்று பரிச்சியமானதாக இருந்தது.

மூளை தேடுதலில் இறங்கிய போது அந்த குடும்பத் தலைவன் அவனிடம் வந்து “எக்ஸ்கியூஸ் மீ, ஆர் யூ பாஸ்கர்” என்று கேட்டான்.

குரலைக் கேட்டதுமே “டேய் ஸ்ரீகாந்த்” என்று கூவினான் பாஸ்கர் தமிழில்.

“டேய் பாஸு” என்ற ஸ்ரீகாந்த் பாஸ்கரின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். இருவரும் கல்லூரியில் நெருக்கமான தோழர்கள். சற்று நேரம் இருவரும் கல்லூரிக் கதைகளை பேசி மகிழ்ந்தனர்.

“டேய் பாஸு என்னடா வயசான மாதிரி ஆகிட்ட. நீ யூ.எஸ் வந்ததுக்கு பிறகு உன்னை பற்றி விபரமே தெரியலை” என்றான் ஸ்ரீகாந்த் சற்று கோபமாக. 

பாஸ்கருக்கு தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு ஒரு கட்டுமரம் கிடைத்தது போலானது ஸ்ரீகாந்தின் வருகை.

“டேய் ஸ்ரீ நான் உன்னோட நிறைய பேசணும் எங்க சந்திக்கலாம்” என்று கேட்டவனிடம் “மேடிஸன் ஸ்கொயர் பார்க் ஓகே வா” என்றான் ஸ்ரீகாந்த் சிரித்தபடி.

“சரிடா நாளை மாலை பார்க்கலாம்” என்றான் பாஸ்கர் புன்னகையுடன். 

டைம் ஸ்கொயர் கூட்டத்தின் நடுவே நடந்து வந்த பாஸ்கர் அங்கே மேடிஸன் ஸ்கொயர் பார்க்கில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்தின் அருகில் சென்று “ஹாய் ஸ்ரீ” என்றபடி அமர்ந்தான்.

மெளனமாக இருந்த பாஸ்கரிடம் “ஏண்டா நிறைய பேசணும்ன்னு சொல்லிட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்டான் ஸ்ரீகாந்த்.

“எப்படி ஸ்டார்ட் பண்ணறதுன்னு தான்” என்ற பாஸ்கர். “ஸ்ரீ நான், …எனக்கு இந்தியா வந்துடலாம்னு இருக்கு” என்றவன் புலம்பலாக ஆரம்பித்தான்.

“ஸ்ரீ நான் ஷைலஜாவை பிரிஞ்சு இங்க யூ.எஸ் வந்த பின்னாடி நல்லா ஜாலியா இருந்தேன். ஆனா எப்போ மரியாவை திருமணம் செய்துட்டு இந்த ஹோட்டல் தொழிலுக்கு வந்தேனோ அப்பவே என் வாழ்க்கை ரொம்ப குழப்பமாயிடுச்சுடா. மரியா ரொம்ப நல்லவ, ஆனா அவ அண்ணன் என்னை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணறானோன்னு தோணுது. அது மட்டும் இல்லை மரியாவோட குழந்தைகளை என்னால அன்பா நடத்த முடியலை. அது மரியாவுக்கு பிடிக்க மாட்டேங்குது. அவளுக்கு குழந்தைங்க இருக்குங்கிற விஷயமே எனக்கு அவளை திருமணம் செய்துகிட்டதுக்கு அப்புறம் தான் தெரியும். எனக்கு நிம்மதியே இல்லடா” என்று பேசிக்கொண்டே போனவனை

“டேய் கொஞ்சம் நிறுத்துடா, நீ எப்போதுமே உன்னை பத்தி மட்டும்தான் சுயநலமா யோசனை செய்வயா. உன் மனைவியை டைவர்ஸ் செய்துட்டு உன் பெற்றோரையும் கண்டுக்காம யூ.எஸ் வந்த. நல்ல கம்பெனியில் வேலை நல்ல சம்பளம் அதெல்லாம் விட்டுட்டு இரண்டாவது மனைவிக்காக ஒரு ஆடம்பர வாழ்க்கைக்காக ஹோட்டல் தொழிலுக்கு வந்த. இப்போ அதுவும் பிடிக்கலை இந்தியாவுக்கு வரேன்னா என்னடா அர்த்தம். 

எதையும் பொறுமையா யோசிக்க மாட்டயா? ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடி நாலையும் யோசனை செய்துட்டு தான் அதுக்குள்ள நுழையணும். ஒன்ஸ் நீ அதை தேர்ந்தெடுத்துட்டேன்னா அதனால ஏற்படற விளைவுகளை சமாளிக்க கத்துக்கணும். அதை விட்டுட்டு எதை தேடி எங்க ஓடற. எல்லாம் உனக்கு சாதகமா இருந்தா அது உனக்கு பிடிக்கும் இல்லைன்னா அதை விட்டு விலகி ஓடுவியா இந்த மனப்பாங்கை நீ முதலில் மாத்திக்கணும். நிம்மதி சந்தோஷம் எல்லாம் நம்ம மனசில தான்டா இருக்கு. எல்லாரையும் முதலில் நேசிக்க கத்துக்கோடா. 

நம்ம பெரியவங்க வாழ்க்கையை ஒரு வரைமுறையோட வாழணும்னு சொல்லியிருக்காங்க. ஆனா அதெல்லாம் பழைய பஞ்சாங்கம்ன்னு அது எதையுமே நீ பின்பற்றல. பாஸ் நான் சொன்னது உனக்கு வருத்தமாயிருக்கும். ஆனா உண்மை எப்போதும் கசக்கும். சரி போனதெல்லாம் போகட்டும் இப்போ கிடைச்ச வாழ்க்கையை நல்லவிதமா தக்க வைச்சுக்கோ.

உன் மனைவி குழந்தைகளை கூட்டிட்டு இந்தியாவுக்கு வா. உன் பெற்றோருடன் கொஞ்ச நாட்கள் இரு. ஒரு வேளை உன் மனைவிக்கு அந்த சூழல் பிடிச்சிருந்தா அங்கேயே உன் பெற்றோருடன் சேர்ந்து இரு. உன் வாழ்க்கை உன் கையில். ஆனா அதை நியதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ பழகிக்கோ. இதெல்லாம் கொஞ்சம் யோசனை செய். உனக்கே புரியும்” என்று கூறி ஆறுதலாக அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான் ஸ்ரீகாந்த். 

நண்பன் கூறிய உண்மை மனதில் தைத்ததில் சற்று நேரம் பேசாமல் இருந்தான் பாஸ்கர்.

அதன் பின் “ஸ்ரீ உன்னோட பேசினது எனக்கு மனஆறுதலா இருக்குடா. நீ சொன்னதை நான் கண்டிப்பா யோசிக்கிறேன், முயற்சிக்கிறேன்” என்ற பாஸ்கர் அவன் கைகளை அன்புடன் பற்றிக் கொண்டான்.

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனைவியின் மனம் (சிறுகதை) – ராதா பாலு

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 29) – ஜெயலக்ஷ்மி