in ,

தேவதை வந்தாள் வாழ்விலே! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பளிச்சிடும் ரோஜா வண்ணப் புடவையில் பளீரிடும் புன்னகையுடன் எதிரே நின்ற மாதவியைப் பார்த்து வெறுப்புடன் முகத்தை திருப்பினான் வசந்த்.

அவளோ அதை சட்டை செய்யாமல் அவன் அருகில் வந்து நின்று தோளைக் குலுக்கினாள்.

‘கிளம்பலாமா?’

‘சரி என்று அசுவாரசியமாக எழுந்தவனுக்கு திடீரென்று மனதில் ஒன்று உறைக்க அவளை நோட்டமிட்டான்.

எப்போதும் அவள் கழுத்தை ஒட்டிக் கொண்டு அலங்கரிக்கும் அந்த விலையுயர்ந்த நெக்லெஸைக் காணோம். அதற்குப் பதிலாக அவனை வறுத்து எடுத்து வாங்கிய அந்த முத்துக்கள் கோர்த்த மாலை தான் கண்ணில் பட்டது. தந்தம் போன்ற கைகளிலும் அதே மாதிரி முத்து வளையல்கள். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்ததுதான்.

பாராதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வண்டியைக் கிளப்பிய அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது. அடக்கிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள் அவள்.

கார் ஒரு குலுக்கலுடன் திருமண மண்டபம் முன்னால் நின்றது. இறங்கி உள்ளே சென்றவர்களை வசந்த்தின் நண்பர் பட்டாளம் மொய்த்துக் கொண்டது. அவளிடம்தான் ஏக உபசரிப்புகள்.

“மேடம், இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாமே! இப்போதான் சுஜாதா உள்ளே போனாள். உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணினாள்.கூட்டிக் கொண்டு வரவா? “

வசந்துக்கு பற்றிக் கொண்டு வந்தது. எல்லோரையும் எப்படி எளிதாக ஏமாற்றுகிறாள்! திமிர்! அவ்வளவும் பணத்திமிர்! பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான் அவன். கோபத்தை வெளியே காட்டி நண்பர்களிடம் அவமானப்பட அவன் தயாராக இல்லை. அவர்களுக்கு புரியப் போவதும் இல்லை.

திருமணத்துக்கு முன்னால் இருந்த அந்த வாழ்க்கை இனி கிடைக்கப் போவது இல்லை.

நேரம் தெரியாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு சினிமா, டிராமா என்று சுற்றிய நாட்களும் முடிந்துவிட்டன. யாரிடமும் மனம் விட்டு பேச முடியாமல் தவித்தான் வசந்த்.

முதன் முதலில் அவளுடைய உண்மையான முகம் எப்போது வெளிப்பட்டது? 

திருமணமான புதிதில் அன்பும் ஆசையுமாக மேலே விழுந்து பழகிய மாதவியா இவள் என்று எப்போது நினைக்கத் தோன்றியது!

எல்லாம் தேவியின் திருமணத்துக்குப் பின் தானோ?.

ஆமாம். கல்யாண செலவுக்கு திட்டமிடும் போது இவனிடம் கடனாக ஒரு பெருந்தொகை மாமனாரிடம் ஏற்பாடு செய்யச் சொல்லி அவன் அப்பா சொன்ன போதுதான்.

“உனக்கென்னடா! கோடீசுவரன் வீட்டு மருமகன். தங்கைக்கு செய்தால் தேய்ந்தா போவாய்! ஒரு ஐம்பது ஆயிரம் புரட்டிக் கொடு. மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

அவர் கேட்டபோது இவன் சரியென்று தான் சொன்னான். ஆனால் மாதவி அவள் அப்பாவிடம் கேட்க விடாமல் குறுக்கே நின்றாள்.

“இதோ பாருங்கள்! அப்பாவிடம் போய் பணம் கேட்டால் நம்முடைய சுய மரியாதையே போய்விடும். எதுவுமே கேட்கக்கூடாது.”

“அப்படியானால் பணத்துக்கு என்ன செய்வது?”

“ஊம்! உங்கள் ஆபீஸில் லோன் வாங்குங்கள். தங்கைக்கு கல்யாணம் என்றால் பொறுப்பு பெற்றவர்களுக்கும் கூடப் பிறந்தவர்களுக்கும் தானே தவிர சம்பந்தி வீட்டாருக்கு இல்லை”.

கிண்டலும் கேலியுமாக சொல்லிவிட்டு போய் விட்டாள் அவள்.

தயக்கத்துடன் அப்பாவிடம் சொன்னபோது அவர்தான் எப்படி எகிறினார்! எவ்வளவு கோபப்பட்டார்! அப்புறம் தேவிக்கு நிச்சயம் செய்ய இருந்த அந்த பெரிய இடத்து வரன் கூட தடைப்பட்டதே.

நினைக்க நினைக்க அவன் மனம் எரிந்தது.. பெரிய பணக்கார வீட்டில் வாழ்க்கைப்பட இருந்த தேவியை அநியாயமாக ஒரு சாதாரண வங்கியில் பணிபுரிபவருக்கு கொடுத்து செலவை சமாளிக்க மேலும் மேலும் கடன் வாங்கி திணறிய போதுதான் மணவாழ்க்கை முதன் முதலாக கசக்க ஆரம்பித்தது.

‘சாப்பிடப் போகலாமா!’ என்ற அவள் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான் வசந்த்.

சே ! இந்த மனம்தான் எப்படி அலை பாய்கிறது! நிமிடத்தில் எதையெல்லாம் யோசித்து விட்டோம் என்று எண்ணியபடியே அவளைத் தொடர்ந்தான் அவன்.

அந்த திருமணம் முடிந்து திரும்பிய போதும் அவன் மனதின் நினைவலைகள் அவனை அமைதியாக இருக்க விடவில்லை. ஒரே தங்கை திருமணம் முடிந்து போகும்போது அன்பு அண்ணனாக அவளுக்கு எதையுமே செய்ய விடாமல் தடுத்து அந்த புண்ணியம் வேறு கட்டிக் கொண்டாள். பாவி! மாதவியை நினைத்து பற்களை இறுக கடித்தான் அவன்.

அவனுடைய அலுவலகத்திலிருந்து கடனாக பெரும்பாடு பட்டு திரட்டிய பணத்திலும் பாதியை தனக்கென்று எடுத்துக் கொண்டாள்.

அந்த நாள் அவன் நினைவில் வந்தது.

“இதோ பாருங்கள், எனக்கு நீங்கள் இதுவரை எதையுமே வாங்கித் தரவில்லை. உங்கள் தங்கைக்கும் எனக்கும் சரிபாதியாக இந்த தொகையை பிரித்துக் கொள்ளலாம்” என்று சொன்னதோடு உடனே நகைக்கடைக்கு இழுத்துப் போய் தனக்கு வேண்டிய டிசைனில் முத்து மாலையும், வளையல்களும் மோதிரமுமாக வாங்கிக் கொண்டாள். அத்தோடு தேவியின் திருமண வீட்டிலும் அதைக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டபோது மேலும் சீ என்று ஆகிவிட்டது அவனுக்கு.

திருமணத்துக்கு முன் உல்லாசமாக நண்பர்களுடன் சுற்றிய நாட்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை அருமையான நாட்கள்! அப்பா! எப்படி எல்லாம் கற்பனை செய்தேன்! என் வாழ்க்கை இப்படி ஆகும் என்று நினைக்கவில்லையே!

“பணக்கார வீட்டுப் பெண், அழகாக இருக்கிறாள். படித்தவள். உன்னைப் பற்றி கேள்விப்பட்டு பெண் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். முடித்துவிடலாமா!” என்று அப்பா கேட்டதும் தான் உடனே சம்மதித்ததும் அவன் மனக்கண்ணில் பளிச்சிட்டு மறைந்தது.

அன்றைய கனவுகள், மனதில் துள்ளாட்டம் போட்ட நினைவுகள். பார்ப்பவர்களைப் போல தன் வாழ்க்கையும் மிக பிரமாதமாக அமையப் போகிறது என்ற மயக்கங்கள் எல்லாம் தீர்ந்து போயிற்று.‌

மாதவி என்ற இந்தப் பெண்ணைக் கைபிடித்து மண் வாழ்க்கையில் ஈடுபட்டு போது கூட மனது மதி மயங்கித்தான் போயிருந்தது.

‘மாதவி ! உன்னைப் போல் உண்டா! ‘ என்று தலைகால் தெரியாமல் புகழ்ந்த காலங்கள். எதற்கும் அவள் முகம் பார்த்து சிரிப்பை பார்க்க ஏங்கிய நாட்கள்.

எல்லாம் திரும்ப திரும்ப மனதில் வட்டமிட்ட தில் அவன் சோர்ந்து போனான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேசுவதை தவிர்த்து, தன் வேலைகளை பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொண்டான் வசந்த்.

கணவனது உணர்வுகளை கடமைகளை மதிக்காத சுயநலக்காரி! அகம்பாவம் பிடித்தவள், பணம் என்ற ஒரு அளவு கோலை வைத்து மனிதர்களை எடை போடும்ஜாலக்காரி என்று விதம் விதமாக அவளுக்கு பட்டங்களை கொடுத்து மனதுக்குள்ளேயே பழுங்கினான். அவள் எதுவும் பேச வந்தாலும் ஒதுங்கிக் கொண்டான்.

அப்பா பட்ட கஷ்டங்கள், பேசிய வார்த்தைகள் கடைசியாக அவன் மேல் எரிந்து விழுந்த தருணங்கள் அவனை மேலும்மேலும் வெறுப்பின் உச்சத்துக்கே தள்ளின.

இந்த நிலையில் தான் அவள் தந்தையின் உடல்நலம் சரியில்லாமல் போனது. வேண்டா வெறுப்பாக மாணவியைக் கூட்டிக்கொண்டு  ஹாஸ்பிடலுக்கு போனான் வசந்த். மருமகனைக் கண்டதும் அவர் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!

மனமில்லாவிட்டாலும் நோயாளிக்காக இனிமையாக இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டு மனைவியைப் பார்த்தான்.

“நீ வேண்டுமானால் இரண்டு மூன்று நாட்கள் இங்கே இருந்து வா! நான் சமாளித்துக் கொள்வேன். அப்பா உடல் நலம் தான் முக்கியம்.கவனித்துக் கொள்.”

மேம்போக்காக சொல்லிவிட்டு கீழே இறங்கி காரில் விரைந்தவனுக்கு மனதில் பெரிய நிம்மதி உணர்வு தலைகாட்டியது. அப்பாடா ! இரண்டு நாளைக்கு இஷ்டம் போல இருக்கலாம்.

உயிர்த் தோழன் வீட்டுக்கு வண்டியைத் திருப்பினான் அவன்.

“மிஸஸ் வரலையா! தங்கமான பெண்! உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”

அவனும் மற்றவர்களைப் போலவே சொன்னதும் எரிச்சலில் வெடித்தான் அவன்.

ஆமாம் ! நீதான் மெச்சிக்கணும்! பணம் பணம் என்று எப்போதும் அதே தான் நினைவு.சாதாரண வீட்டுப் பெண் என்றால் கூட பரவாயில்லை. இவள்தான் பெரிய கோடீசுவரன் வீட்டுப் பெண் ஆயிற்றே!”

தோளைக் குலுக்கியவனை வியப்புடன் பார்த்தான் பாஸ்கர்.

“நிஜமாதான் பேசுறியா? உனக்கு ஒண்ணும் தெரியாதா? உன் மிஸஸ் எத்தனையோ பேருக்கு சத்தமே இல்லாமல் உதவுகிறார்கள் தெரியுமா! எனக்கே ஒரு இக்கட்டில் , விஜி மூலமாக தெரிந்துகொண்டு , அவசியமான எல்லா உதவிகளையும் செய்தார்கள். தன் பெயரே வெளிவராமல் நிறைய அனாதை இல்லங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .நம் நண்பர்கள் எல்லோருக்குமே நன்றாக தெரியுமே! அதனால்தான் நாங்கள் எல்லோரும் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம். ஆனந்த் கல்யாணத்தில் கூட பார்த்திருப்பாயே!”

அவன் சொல்ல சொல்ல வசந்துக்கு தலை சுற்றியது. அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.. தன்னைப் பற்றித் தான் தப்பு அபிப்ராயம் ஏற்படும் என்று மௌனம் சாதித்தான் .

அங்கும் இருக்க முடியாமல் கிளம்பியவனுக்கு தேவியின் நினைவு வந்தது.

அவளையாவது பார்த்துவிட்டு போகலாம் என்று காரை அவள் வீட்டுக்கு செலுத்தினான் அவன்.

அண்ணா என்று கலகலத்த தேவியின் பாசம் அவனை நெகிழ வைத்தது..

சாதாரணமான ஒரு வீட்டில் இருந்த அவளைப் பார்த்து மனம் கசங்கினான் .

“தேவி! உனக்கு என்மேல் கோபமாம்மா? நான் அந்த பெரிய இடத்து வரனை.,.”முடிக்க முடியாமல் திணறிய சகோதரனை வியப்புடன் பார்த்தாள் அவள்.

“அண்ணா! உனக்கு ஒண்ணுமே தெரியாதா! அண்ணி சொல்லவில்லையா? அந்த பெரிய இடத்து வரன் மோசமான நடத்தை உடையவர் என்று தெரிந்து சொன்னதே அண்ணியின் அப்பா தானே! அப்படி சொல்லியும் பணத்துக்காக என்னை அங்கே தள்ளப் பார்த்தார் அப்பா.” என்று சொல்லி நிறுத்திய வளுக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

அன்றைய நினைவில் சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

தங்கையின் கண்களில் நீரைக் கண்டதும் வசந்துக்கு ஒன்றுமே ஓடவில்லை.

அதிர்ச்சியும் திகைப்புமாக அவன் பேசினான்.

“அப்படியானால் நான் பணம் தராததால் தான் அந்த வரன் தடைப்பட்டது என்று அப்பா சொன்னது!”

‘பொய்’ நீள ஜிமிக்கிகள் அசைந்தாட தலையாட்டினாள் அவள்.

“அண்ணா! உனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அப்பாவுக்கு இந்த வயதில் வேண்டாத சில பழக்கங்கள் உண்டாகியிருப்பது உனக்குத் தெரியாமல் போய் விட்டது. அதனால் நிறைய பணத்தேவை வந்துவிட்டது. அந்த வரன் அவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டுவார் என்றுதான் அவ்வளவு தூரம் முனைந்தார். இவரும் அவர் பணத்தில் புகுந்து விளையாடலாம் என்பதற்காகத்தான். மற்றபடி என் மேல் ஒன்றும் அக்கறை , கரிசனம் எதுவும் கிடையாது.”

மூச்சு விடாமல் பேசியவளுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்தது.

“ஆமாம்! உன் கல்யாணம் கூட அப்படித்தான் நிச்சயமாயிற்று! கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை படமாகவே வாங்கிவிட்டாரே அப்பா. தெரியாதா உனக்கு!”

கல்லால் அடித்த சிலை போல அமர்ந்து விட்டான் வசந்த். இதென்ன புதிது புதிதாக பல விஷயங்கள் தோண்ட தோண்ட கிளம்புகிறது!

அப்பாவா இப்படியெல்லாம் செய்தார்! ஆனாலும் மனைவி மேலிருந்த கோபம் மற்றதை எல்லாம் மறக்க அடித்தது.

“ஆனால் இவள் செய்தது மட்டும் நியாயமா? அதற்காகத்தான் என்னை பாடாய் படுத்தி எடுத்தாளா? “

‘அண்ணா! ‘அதிர்ச்சியுடன் இடைமறித்தது தேவியின் குரல்.

“தப்பா சொல்லாதே அண்ணா! அண்ணி மாதிரி ஒருத்தி லட்சத்தில் ஒருத்தர் கூட இருக்க மாட்டார்கள். என் திருமணத்துக்கு அப்பாவை செலவழிக்க வைக்கவேண்டும் பொறுப்பை உணர வைக்க வேண்டும் என்றுதான் அப்படி நாடகம் ஆடினார்கள். வேண்டுமானால் அம்மாவிடம் கேட்டுப் பார். இப்போதெல்லாம் அப்பா எவ்வளவோ திருந்தி விட்டார். திருந்திவிட்டார் என்ன! திருந்த வேண்டியதாயிற்று.

பழைய நண்பர்களிடமிருந்து விலக வேண்டியதாயிற்று. பணம் இல்லாமல் யாரும் இவரை சேர்த்துக் கொள்வதாக இல்லை. அந்த ஆங்காரம் ஆத்திரத்தை அண்ணி மேல் தப்பு தப்பாக சொல்லி உன்னை கிளப்பி விட்டிருக்கிறார். அண்ணி மேல் இன்னும் கோபமும் வெறுப்பும் தணியவில்லை. அதுதான் உனக்கும் அண்ணிக்கும் தடுப்புச் சுவரை எழுப்பி விட்டிருக்கிறார். ஆனால் உனக்கு கொஞ்சம் கூட அண்ணியின் மனோபாவம் புரியவில்லையா? கூடவே தானே இருக்கிறாய்!”

தேவியின் வார்த்தைகள் அவன் மனதில் இடியாக இறங்கியது.

கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தது தான்தான் என்று புரிந்தது.

அப்பாவின் மேல் இருந்த மரியாதை, பாசம் மற்ற எதையும் தெரிய விடாமல் செய்து விட்டது. உண்மை தெரிந்ததும் ஒரு பரபரப்பு வந்தது அவனுக்குள்.

எங்கோ காரிருளில் மாட்டிக்கொண்டு ஒரு லேசான மின்னல் கூட வராதா என்று தவித்தவனுக்கு ஜோடியாய் ஒரு பெரும் ஒளி தோன்றினால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு மனோநிலையில் இருந்தான் அவன்.

கண்ணம்மா, கண்மணி! என்னை மன்னித்து விடு! உன் உன்னதமான குணத்தை புரிந்துகொள்ளாத மடையனாக இருந்துவிட்டேன். என்று அரற்றித் தள்ள அவன் மனம் துடித்தது.

“தேவி! நான் நாளை வருகிறேன்.இப்போ உடனே கிளம்புறேன்.”

சொல்லிவிட்டு விரைந்த அண்ணனை பார்த்து மகிழ்ச்சியுடன் முறுவலித்தாள் அந்த சகோதரி.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானில் பறக்கும் பட்டம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    நிறமில்லாத பூக்கள்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்