in ,

தீட்சண்யம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையிலிருந்து மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது கந்தசாமிக்கு. 

கந்தசாமி எப்போதுமே பொறுப்பாக உடம்பு வளைந்து வேலை பார்த்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றியது கிடையாது. அப்படியே ஏதாவது கொஞ்சம் சம்பாதிப்பதும் குடிப்பதற்கே போய்விடும்.

லஷ்மி இருந்தவரை பொறுப்பாக குடும்பத்தை பார்த்துக் கொண்டாள். அவள் அப்பா உதவியும் இருந்தது .அவளும் பாடுபட்டு உழைத்து கட்டும் செட்டுமாக குடித்தனம் நடத்தி, மகனையும் நன்றாக படிக்க வைத்தாள். 

குடும்பத்தை கவனிக்க தெரிந்தவளுக்கு தன் ஆரோக்கியத்தை பேணத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளை பாதித்த நோய் ஒரேடியாக அவளை கொண்டு போனது. அதற்கும் முதலில் பெரிதாக கந்தசாமி வருத்தப்படவில்லை.  

போகப்போகத்தான் மனைவி இருந்தவரை தனக்கு எவ்வளவு ராஜ மரியாதை என்பதை புரிந்து கொண்டார். மகனுக்கும் மருமகளுக்கும் அடங்கி போகவும் முடியவில்லை அதே நேரம் காசும் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான் காலையில் அவருக்கும் அவர் மகனுக்கும் பெரிய சண்டை வந்துவிட்டது . 

மருமகள் அகல்யாவும் தன் பங்குக்கு கோபமாக இரண்டு வார்த்தை “ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு என்ன குறை வச்சிருக்கோம்? அத்தை போன்ற பிறகு உங்கள நல்லா தானே கவனிச்சிக்கிறோம். இந்த மாதிரி நடந்தா உங்களை எப்படி வீட்டில் வச்சு கவனிக்கிறது” என்று ஒரு வார்த்தை சொல்ல, குமரனும் மனைவி சொன்னதை ஆதரித்தான். 

மகனும், மருமகளும் சேர்ந்து கொண்டு பேசியதும், கோபம் வந்தது கந்தசாமிக்கு,  அதனால் கோபித்துக் கொண்டு கோவிலில் வந்து உட்கார்ந்து விட்டார். 

“பயபுள்ள என்ன பேச்சு பேசிட்டான்.. பொண்டாட்டி தாசன்…அவளுக்கு எதுக்கு இப்படி பயப்படுறான்னு தெரியல..சம்பாதிக்கிறான் கை நிறைய காசு வச்சிருக்கான்.. அப்புறம் எதுக்கு அவகிட்ட போயி கெஞ்சிகிட்டு  இருக்கான்..இந்த புள்ள அகல்யாவும் தான் மாமியார் இருக்கிற வரைக்கும் ஒரு வார்த்தை வாயைத் திறக்க மாட்டா.. இப்ப அத்தை இல்லை என்கிற தைரியத்துல என்னையே பேசி புட்டா”

மகனையும், மருமகளையும்  மனதுக்குள் திட்டி தீர்த்தார்… காலையில் அவருக்கும்  குமரனுக்கும் நடந்த சண்டையை அவருடைய மனக்குமறலுடம் நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். 

லட்சுமி இருந்த வரைக்கும் அந்த வீட்ல மானம் மருவாதி எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு… என்னைக்கு அந்த மகராசி போனாளோ, அவளோட சேத்து மருவாதையும் போச்சு  … 

லட்சுமி உயிரோடு இருந்த காலத்தில்  கந்தசாமி அவளை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை ..அதையெல்லாம் மறந்துவிட்டு மனம் போன போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார்… 

அப்பாவுக்கும் மகனுக்கும் அப்படி சண்டை வர என்ன காரணம் ..  நேற்று குமரன் இபி பில் கட்டறதுக்கு வச்சிருந்த காசை கந்தசாமி எடுத்துட்டு போய் டாஸ்மாக் கடை பாக்கிக்கு கொடுத்துவிட்டு குவாட்டர் வாங்கி ஊத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் குமரன் பார்த்துக் கொண்டு பேசாமலா இருப்பான் … 

காலையில் வந்த கோபத்துக்கு வச்சு வெளுத்து வாங்கினான்… 

“அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்துச்சு நீங்க  திருந்துறதா இல்ல. நான் ஈபி பில் கட்ட வச்சிருந்த பணத்தை  இப்படி டாஸ்மார்க்கில கொண்டு கொடுத்துட்டு வந்து நிக்கிறீங்க.. ஒவ்வொரு பைசாவும் உழைச்ச சம்பாதிச்சிருந்தால் தெரியும் …அம்மா இருந்தவரை உங்களுக்கு உழைச்சு கொட்டுனா.. இப்ப என் காசுல கை வைக்கிறீங்க …ஒழுங்கா இருக்கிறதா இருந்தா இருங்க பெத்த கடமைக்கு மூன்று வேலையும் சாப்பாடு போடுறோம் ஆனா குடிச்சிட்டு இப்படி காசை எடுத்துட்டு போயி செலவு பண்ணுனா… உங்களுக்கு இந்த வீட்ல இடம் கிடையாது… எங்கேயாவது ஒரு மடத்தில் போய் சேர்ந்துக்கோங்க” என்று கோபத்தில் கத்தினான். 

மருமகள் அகல்யா “சரி விடுங்க ..இத்தனை நாளுமே திருந்தல இனிமே எங்க திருந்த போறாரு” இன்று தன் கையில் இருந்த காசை இபி பில் கட்ட கணவனிடம் கொடுத்தாள். 

அவ்வளவுதான் ரோஷத்துடன் சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியே வந்த கந்தசாமி அந்த திண்ணையில் அமர்ந்து புலம்பி கொண்டு இருந்தார் 

கோயில் வாசலில் வரையப்பட்டிருந்த மகானின் படம் கண்ணில் பட்டது ..அந்த மகான் படத்தில் உள்ள கண்கள் அதன் தீட்சண்யம் கந்தசாமியை ஏதோ செய்தது.. தலையை குனிந்து கொண்டார் இத்தனை நாளும் ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் காலத்தை ஓட்டிவிட்டோம். இனிமேல் என்ன செய்வது என்ற கவலை ஆட்டியது …

“ஐயா சாமி பெரியவரே அப்படி பாக்காதீக எனக்கு எந்த வேலையும் தெரியாது சும்மா உட்கார்ந்து இருக்கிறத தவிர ..” 

அன்று பிரதோஷம் என்பதால் அவர் முன்னாள் செருப்பை கழட்டி போட்டு சென்றவர்கள் 

“பெரியவரே கொஞ்சம் பாத்துக்கங்க நாங்க திரும்பி வரும்போது காசு தர்றோம்”  என்று சொல்ல…துண்டை விரித்து உட்கார்ந்தவர் கையில் கணிசமாக ஒரு தொகை சேர்ந்தது. 

“ஆஹா சும்மா உக்காந்து இருந்ததற்கே இவ்வளவு காசு கிடைச்சா இதையே ஒரு கடையா போட்டா ..நல்ல வருமானம் கிடைக்கும் வீட்டிலும் மதிப்பு வரும் …கட்டிங் போட யார் கிட்டயும் காசு கேட்க வேண்டாம் ” 

அவ்வளவுதான் அடுத்து மடமடவென ஒரு சின்ன கடை போட செருப்புகளை பாதுகாத்து… அதற்கு கட்டணம் வசூலித்தார் கந்தசாமி  ..கோயிலுக்கு நல்ல கூட்டம் வர அவர் வருமானமும் உயர்ந்தது.

ஆரம்பத்தில் குடியை விட முடியாமல் பல நாட்கள் டாஸ்மார்க் பக்கம் போனாலும் …குடித்துவிட்டு வரும்போது அந்த பெரியவர் படம்.. அவர் கண்களின் தீட்சண்யம். அவரை ஒரு குற்ற உணர்வுக்கு தள்ள.. மெல்ல மெல்ல அந்த பழக்கத்திலிருந்து வெளிவந்தார்.  

இப்போது அந்த பெரியவர் அருளினால் நன்றாக உழைக்கும் கந்தசாமி மிஞ்சிய பணத்தை பேரன் பேத்திகளுக்கும் குடும்பத்திற்கும் கொடுத்து சந்தோஷமான ஒரு குடும்பஸ்தன் ஆகிவிட்டார்.. 

தன் கண் பார்வையினாலே தன்னை திருத்தி உழைப்பாளி ஆக்கிவிட்ட அந்த மகானுக்கு தினம் சூடம் ஏற்றி கும்பிட்டு விட்டு  தான் கடையை திறக்கிறார் கந்தசாமி.

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நூல் விமர்சனம் (ராஜ பேரிகை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    தாயார் சன்னதி – சுகா (படித்த புத்தகம்) – தி. வள்ளி, திருநெல்வேலி