2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
’தேவகி’
‘வா ராதா, சாப்பிட்டியா?”
‘இல்லயே, நீ சாப்பிட்டியா?”
“இன்னும் இல்ல”
“நான் சாப்பாடு கொண்டு வரல. சரி வா, ரெண்டு பேரும் வெளியில போய் சாப்பிடலாம்.”
“அப்ப நான் கொண்டு வந்த சாப்பாடு வீணாயிடுமே”
“வீராசாமி, இங்க வாங்க”
“அட ராதாம்மா, நல்லா இருக்கீங்களாம்மா?”
“நான் மூணு, நாலு தடவை உங்க செக்ஷனுக்கு வந்தேன். உங்கள பாக்கவே இல்லையே வீராசாமி? சரி சாப்பிட்டீங்களா?”
”இல்லம்மா. ரெண்டாவது பொண்ணுக்கு கொழந்தை பொறந்திருக்கு. அத்தோட எனக்கு ரெண்டு, மூணு நாளா வயத்த வலி.”
“இன்னும் நீங்க நிறுத்தலயா?”
“ஐய்யய்யோ, குடிக்கறதெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சும்மா”
“சரி நான் நம்பிட்டேன்.”
“மெய்யாலுமேதாம்மா”
“சரி, இந்த தயிர் சாதத்தை எடுத்துட்டுப்போய் சாப்பிடுங்க. நானும் தேவகியும் வெளியே போய் சாப்பிடப்போறோம்.”
***
”ஏன் தேவகி என்ன ஆச்சு உனக்கு. ஒரு சினிமாவில விவேக் சொல்லுவாறே ‘எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்’னு. எப்டி இருந்த நீ இப்டி ஆயிட்ட”
“ராதா, எனக்கு உடம்பே ரொம்ப முடியலடீ. ரொம்ப ரொம்ப சோர்வா இருக்கு. வீட்ல யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. என் மாமனார், மாமியார் இருந்த வரைக்கும் ரெண்டு பொண்ணுங்களையும் ரொம்ப செல்லமா வளர்த்துட்டாங்க. அதனால அவங்களுக்கு ஒரு சின்ன வேலை செய்யக்கூட வணங்கறதில்ல. போறாத்துக்கு எங்க வீட்டுக்காரரும் குழந்தைங்கள ஒண்ணும் சொல்லாத, இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கல்யாணம் ஆகி போயிடப்போறாங்கன்னு சொல்றார்.”
“பேஷ், ரொம்ப நன்னா இருக்கு. நீ ஒரு பதினைஞ்சு நாள் லீவு போடு. டாக்டரைப் போய் பாரு. ரெஸ்ட் எடுத்துக்கோ. இத்தன வருஷம் உழைச்சாச்சு. ஒரு வயசு வரைக்கும்தான் உடம்பு ஒத்துழைக்கும். உனக்கு இங்க ஆபீஸ்லயும் வேலை ஜாஸ்தி. 38 வருஷம் வேலை பார்த்துட்ட. ஏன் தேவகி உனக்கு 58 வயசு ஆகறது. சுகர், கொலஸ்ட்ரால், BP இதெல்லாம் இருக்கா. ஏதாவது செக் பண்ணி இருக்கியா?”
”இல்ல, இனிமேதான் டாக்டர்கிட்ட போகணும்.”
“இங்க பார். திங்கக்கிழமை லீவு போடு. நானும் லீவு போட்டுட்டு உன் கூட வரேன். உன் தங்கை ஹாஸ்பிடல்ல தான வேல பாக்கறா, அங்கயே போகலாம்”
***
”ஏன் தேவகி, உங்க வீட்டுக்காரர் வரலையா?”
”அவர் டூர் போயிருக்கார் ராதா”
“சரி உன் பொண்ணுங்களயாவது அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல.”
“அவங்க ரெண்டு பேரும் ஆபீசுக்கு லீவு போட முடியாதாம்”
“ஆமாம், நீ ஆஸ்பத்திரிக்கு போறேன்னு உன் பொண்ணுங்ககிட்ட சொன்னியா இல்லயா”
“அது வந்து…..”
“வந்து, போயி, ரொம்ப மோசம் தேவகி நீ, நான் உன் நிலைமையில் இருந்தா ஒரு வேலையும் செய்யாம இழுத்து போத்திண்டு படுத்துடுவேன். எல்லாத்துக்கும் பதில் ஒரு சிரிப்பு. முதல்ல இந்த இட்லிய சாப்பிடு.”
”உன் தங்கைக்கு போன் பண்ணி சொல்லிட்டயா?”
“சொல்லிட்டேன். இப்ப வந்துடறேன்னு சொல்லி இருக்கா”
”வா யாழினி, இது..”
“ராதாக்கா, தெரியாதா எனக்கு. என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தாங்களே!”
“பரவாயில்லையே யாழினி, உனக்கு நல்ல ஞாபக சக்தி”
“அப்படி இல்ல ராதாக்கா, உங்களபத்தி தேவகி அக்கா நிறைய சொல்லி இருக்காங்க. நீங்க மறுபடியும் இங்கயே மாற்றலாகி வந்துட்டீங்கன்னும் சொன்னாங்க
”உனக்கு எவ்வளவு குழந்தைங்க யாழினி”
“உங்க வாய் முகூர்த்தம் சீக்கிரம் வரணும் அக்கா”
“அக்கா மாதிரியே தங்கையும். கண்டிப்பா சீக்கிரம் வரும் யாழினி.”
“ஏன், யாழினி, உங்க அக்காவ பாத்தியா? நீ அவள டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகலயா?”
“அக்கா, நீங்களே கேட்டுப் பாருங்க. எவ்வளவு தடவ அக்காவோட சண்டை போட்டிருக்கேன்னு”
“சரி இப்ப முதல்ல டாக்டரைப் பார்த்துட்டு என்ன டெஸ்டெல்லாம் எடுக்கணுமோ எடுத்துட்டுப் போகலாம்”.
***
”சரி ராதா, எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. நாளைக்குதானே ரிசல்ட் வரும். நான் வீட்டுக்குக் கிளம்பறேன்”.
“உதைபடுவ. நான் என்ன கல்யாண ஊர்வலம் போறதுக்கா கார் எடுத்துண்டு வந்திருக்கேன். மரியாதையா என் கூட வா. வீட்டுல விட்டுட்டுப் போறேன். அப்படியே போறச்சே பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவிலுக்கு போயிட்டு போகலாம்”.
“ஐய்யய்யோ, ஆஸ்பத்திரிக்கு வந்துட்டு கோவிலுக்கெல்லாம் போகக் கூடாது”
“இப்பதான் மகாலட்சுமிக்கு போன் போட்டு கேட்டேன். வரலாம்ன்னு சொல்லிட்டா”
”எந்த மகாலட்சுமிக்கு”
“ம். அதான் அந்த அஷ்டலட்சுமி கோவில்ல இருக்காளே, அவளுக்கு தான்”
“உனக்கு எப்பவும் வேடிக்கைதான்”
”உன் பொண்ணுங்க எத்தன மணிக்கு வீட்டுக்கு வருவாங்க”
“ஆறரை மணிக்கு”
“அப்ப நம்ப ஏழு மணிக்கு உங்க வீட்டுக்குப் போறோம்.”
”இல்ல, பாவம் என் பொண்ணுங்களுக்கு பசிக்கும்”.
“உன்ன திருத்தவே முடியாது”
***
”வினயா, விஜயா, இவங்க என் ப்ரெண்டு ராதா. நாங்க ரெண்டு பேரும் ஒரே நாள்லதான் ஆபீஸ்ல ஜாயின் பண்ணினோம்.”
“ஆனா நாங்க இவங்கள பாத்ததே இல்லையே”
“நான் உங்க ரெண்டு பேரையும் குட்டிப் பாப்பாவா இருக்கறப்ப பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் எங்க வீட்டுக்காரருக்கு டெல்லிக்கு மாத்தலாயிடுத்து. நானும் டெல்லிக்கு மாத்தல் வாங்கிண்டு போயிட்டேன். இப்ப மறுபடியும் போன மாசம்தான் ரெண்டு பேரும் சென்னைக்கு மாத்தலாகி வந்தோம்”
தேவகியின் பெண்களுக்காக வாங்கி வந்த தின் பண்டங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு “பொண்ணுங்களா, உங்க அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்கு. கொஞ்சம் உங்க அம்மாவையும் பார்த்துக்கங்க. நான் கிளம்பறேன் தேவகி.”
திருதிருவென்று முழித்த தேவகியின் பெண்களின் கன்னங்களைச் செல்லமாகக் கிள்ளி விட்டு “பயப்படாதீங்க, பயப்படும்படி ஒண்ணும் இருக்காது.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ராதா.
***
யாரது இவ்வளவு காலையில் போன் செய்வது என்று சொல்லிக் கொண்டே தன் கைப்பேசியை எடுத்தாள் ராதா.
“அக்கா, நான் யாழினி பேசறேன். மோசம் போயிட்டோம் அக்கா”
”என்ன யாழினி, என்ன சொல்ற”
“அக்கா, தேவகி அக்கா இன்னிக்கு காலையில இறந்துட்டாங்க.”
“என்ன உளர்ற. திங்கக்கிழமைதான டெஸ்ட் எல்லாம் எடுத்தோம். இன்னிக்கு வியாழக்கிழமை, ரெண்டு நாள்ல என்னடீ ஆச்சு”
“அக்கா, தேவகி அக்கா உடம்புக்கு முடியலன்னு வீட்டுலயே படுத்துட்டாங்க. நேத்து நான்தான் ரிபோர்ட் எல்லாம் வாங்கிட்டு அக்காவை போய் பார்த்தேன். அவங்களுக்கு கேன்சர்ன்னு சொல்லி இன்னிக்கு அட்மிட் பண்ண சொல்லி டாக்டர் சொல்லி இருந்தார். அதுக்குள்ள…….”
“எனக்கு உடனே சொல்லி இருக்கக்கூடாதா? நேத்தே அவள அட்மிட் செய்திருக்கலாமே. இதோ நான் உடனே கிளம்பி வரேன்”
***
”ஆன்ட்டி, எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.”
திருமண மேடையில் மாலைபோட்டு வைத்திருந்த தேவகியின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதா சட்டென்று சுயநினைவிற்கு வந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு மாலையும், கழுத்துமாக தம்பதிகளாக காலில் விழுந்த வினயா, விஜயா இருவரையும் ஆசீர்வாதம் செய்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings