எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நாளைய தினம் தீபாவளி. இன்றைய மாலை நேரத்தில், பக்கத்து வீடுகளில் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பம் ஆகி இருந்த நேரம். ஆறாவது படிக்கும் மீனா, தன் பக்கத்து வீட்டுத் தோழி அர்ச்சனா, தீபாவளி வெடிவெடித்துக் கொண்டிருப்பதை கண்டு கடும் கோபமாக இருந்தாள்.
“அம்மா, அம்மா! எங்க இருக்க? இங்க வாம்மா” என்று தன் தாய் பார்வதியை, சப்தமாக அழைத்தாள் மீனா.
“என்னடி? ஏன் இப்படி கத்தற!” என்று கூறியபடி, கிச்சனிலிருந்து வெளியே வந்தாள் பார்வதி.
“அம்மா, பக்கத்து வீட்ல இருக்கிற, என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் புது டிரஸ் வாங்கிட்டாங்கம்மா. வெடி வெடிக்குறாங்க, எனக்கு மட்டும் எப்பமா புது டிரஸ், வெடி எல்லாம் வரும். இதப்பத்தி கவலைப்படாம, நீ பாட்டு கிச்சன்ல உட்கார்ந்து, உன் வேலைய பார்த்துகிட்டு இருக்க” என்று தாய் பார்வதியை நோக்கி கோபமாக கேள்வி கேட்டாள் மீனா.
“நான் என்ன பண்ண முடியும்? உங்க அப்பா வந்தா தான் உண்டு. அவரு சம்பளத்தை வாங்கிக் கொண்டு நமக்கு புது துணி, வெடி வாங்கிட்டு வருவார்.” என்று பார்வதி கூற,
“அதான்ம்மா, அப்பா எப்ப வருவாரு?” என்று மீனா கேட்க,
“வருஷா வருஷம் தீபாவளிக்கு முதல் நாள்தான் தீபாவளி போனஸ் வாங்கிட்டு, அந்த காசுல தான் புது டிரஸ் , வெடி வாங்கிட்டு வருவாரு உங்க அப்பா. மறந்து போச்சா உனக்கு. நல்ல நாள் பொழுதுமா தண்ணிய போட்டுட்டு 5 மணிக்குள்ள வந்துருவேன்னு சொல்லி இருக்கார்.” என்று பார்வதி கூற
அதற்கு கடிகாரத்தை பார்த்தபடி மீனா, “மணி இப்போ நாலே முக்கால்” என்றாள்.
“சரி உங்க அப்பாக்கு ஒரு போனை போடு” என்ற பார்வதி கூற, அதை கேட்டு சந்தோஷமாக போனை எடுக்க சென்றாள் மீனா.
****
தனியார் பார்(மனமகிழ் மன்றம்) ஒன்றில், சுந்தரம் தன் நண்பன் மாணிக்கமுடன் அமர்ந்து சரக்கு அடித்தபடி, “நாளைக்கு என் பொண்ணு மீனாவோட பிறந்தநாள். என் பொண்ணு தான் என் உலகம். அவளுக்காக நிறைய வெடி, புது துணி வாங்கி இருக்கேன். என் மனைவி பார்வதி ஒன்னும் கொறச்சல் இல்ல. அவளும் என்னை சந்தோஷமா பார்த்துகிறா” என்று சுந்தரம் கூறிக் கொண்டிருந்த பொழுது, செல்போன் சினுங்கியது.
“என்னங்க, எப்ப வருவீங்க.? தண்ணிய போட்டது போதும் குடும்பமுன்னு ஒன்னு இருக்கு மறந்து போல அளவு குடிக்காதிங்க. நாளைக்கு தீபாவளி, உங்க மக பிறந்த நாள் இரண்டும் ஒரு சேர வந்திருக்கு அவ ரொம்ப ஆர்வமா காத்திட்டு இருக்கா. சீக்கிரமா வாங்க“ என்று மனைவி பார்வதி கூற
“இதோ கெளம்பிட்டேன். அரைமணி நேரதிற்குள் வீட்டுக்கு வந்திருவேன். மீனா எதிர்பார்த்தபடி இருக்கட்டும். அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பேன். இந்த தீபாவளிய அவ மறக்க மாட்டா அந்த அளவுக்கு கொண்டு வாறேன்”, என்று போனை அணைத்து தடுமாறியபடி கிளம்பினான் சுந்தரம்.
“மாப்ள ! பார்த்து போடா. இன்னைக்கு போதை கொஞ்சம் அதிகமா இருக்குடா. நிதானமா வண்டிய ஓட்டுடா. வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு. மீனாக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதா சொல்லிரு. நான் இப்ப கிளம்புறேன்” என்று நண்பன் மாணிக்கம் கூறி விட்டு, அங்கிருந்து வெளியேறினான்.
“ஓகே டா மாப்ள. நான் பார்த்து போயிருவேன். நாளைக்கு எங்க வீட்டில விஷேசம் வந்திரு” என்று கூற, மாணிக்கத்தை பார்த்து கையசைத்து விட்டு, வாகனத்தை இயக்க ஆரம்பித்தான் சுந்தரம்.
தன் மகள் மீனாவுக்கு, தான் வாங்கியதை கொடுத்து, சந்தோஷபட வைக்கும் நோக்கத்திலே, வாகனத்தை வேகமாக இயக்கினான்.
“இந்த தீபாவளி, உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஸ்பெஷலா, இருக்க போகுது. பார்வதிக்கும், மீனாம்மாக்கும் நிறைய பரிசு. இதோ அப்பா வர்றேன்” என்று போதையில் புலம்பியபடி, இருசக்கர வாகனத்தை தடுமாறியபடி தலைகவசம் அணியாமல் வேகமாக இயக்கினான் சுந்தரம்.
ஒரு நிலையில், சிறு கல் இடறி விட, தட்டு தடுமாறி வாகனத்துடன் கீழே சரிந்தான் சுந்தரம்.
வாகனம் ஒருபுறம் நகர, சுந்தரம் தரையை உரசிய படி , சாலையோரம் இருந்த மைல் கல்லின் மீது மோதினான். பலத்த அடி, தலையில் விழுந்தது.
‘அபாயகரமான வளைவு. மெதுவாக செல்லவும்’. ‘இது ஒரு பயணம். பந்தயம் அல்ல’ என்ற தகவல்கள் அடங்கிய பலகை, அவன் மேல சரிந்து விழ , உயிருக்கு போராட ஆரம்பித்தான் சுந்தரம்.
நிச்சயமாக இந்த தீபாவளி மீனா மற்றும் பார்வதிக்கு தீராவலியாக (தீபாவ(ளி)லி) அமைய போவது உறுதி. சுந்தரத்தின் இன்ப அதிர்ச்சி இது தானோ !!!….
அப்பா வருகைக்காக காத்து கொண்டிருப்பார்கள், மீனா போன்ற எத்தனையோ குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.
உயிர் ஒன்றும் எளிதானது அல்ல.
1. மது உயிருக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கும் கேடு.
2. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்.
3. வாகனம் ஓட்டும் போது , தலைகவசம் அணியவும்.
4. சாலை விதிகளை மதித்து செயல்படுவோமாக.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings