2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒரு நாள் லீவு கிடைக்காதாவென்று ஏக்கம் கொண்டே இயங்கும் மனதிற்கு பல நாட்கள் விடுமுறை என்றால் கசக்கவா செய்யும். பூஜா மகிழ்ச்சி பொங்க தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க இருபத்தி ஒரு நாட்களுக்கு ஊரடங்கு. அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற அனைத்திற்கும் விடுமுறை.
பூஜாவிற்கு கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். பெரிதாக அவளுக்கு எந்த பண்டிகை எந்த விஷேசங்களுக்கும் தேவையான விடுமுறை கிடைக்கவில்லை. இப்பொழுது தற்காலிக வேலையில் பணிபுரிந்து வந்தாள். அவளுக்குப் பிடித்த வேலைக்கு செல்ல இன்னும் படிக்க வேண்டி இருந்தது, அதற்கும் அவளுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இப்பொழுது அவளுக்கு கிடைத்த இந்த ஓய்வு மிகவும் அவசியமானதாக இருந்தது.
ஊரடங்கின் முதல் நாள் பூஜாவிற்கு உண்டு உறங்கவே சரியாக இருந்தது.
இரண்டாவது நாள் மூன்றாவது நாள் தன் படிப்பிலும் மற்ற தன் வேலைகளிலும் கவனம் செலுத்த முயன்றால் என்ன காரணத்தாலோ அவளால் முடியவில்லை.
நான்காவது நாள் இரவில் தொலைகாட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்க்கவே அவளுக்குப் பதட்டமாக இருந்தது.
தான் ஏங்கிய விடுமுறை இது இல்லை. இந்த நாட்கள் தன்னை அச்சுறுத்துவதாய் எண்ணினாள்.
ஐந்தாவது நாள் இரவு உணவு உண்ணும்பொழுது செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மீண்டும் மீண்டும் காண்பித்தார்கள். இந்தியா அல்லாது பிற நாடுகளில் எவ்வளவு தீவிரமாக பரவியுள்ளது என்பதை காட்டினார்கள். பூஜாவிற்கு பயத்தில் முகம் வெளிறியது. அவளால் உணவு உண்ணவே முடியவில்லை. அப்பொழுது அவள் வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.
“எல்லாரும் உள்ளப் போங்க. யாரும் வெளிய வராதீங்க” என்று கத்திக்கொண்டே வந்தார் ஒருவர். அவருக்குப் பின் ஆம்புலன்ஸ் நின்றது.
பூஜாவின் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருக்கும் ஒரு வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்று பாதித்து உள்ளதால் அனைவரையும் ஆம்புலன்ஸ்ஸில் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அவர்கள் செல்லும் வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அவர் கூறிக்கொண்டிருந்தார்.
பூஜாவிற்கு இதை கேட்டதும் அழுகை வந்துவிட்டது. உள்ளே ஓடிவந்தவள் படுக்கையில் சரிந்து விழுந்து அழ ஆரம்பித்தாள். அதை கண்ட பூஜாவின் அம்மா லட்சுமி படுக்கை அறைக்கு வந்தாள். அவளை சமாதானம் செய்தாள்.
“இப்போ எதுக்கு இவ்ளோ அழுகாச்சி?”
“எனக்கு தொண்டை வலிக்கிற மாதிரி இருக்கு.. மூச்சு விட கஷ்டமா இருக்குமா.. நம்ம தெருவுல இருக்குன்னா எனக்கும் இருக்கும். எனக்கு அறிகுறி இருக்கு. என்னையும் ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போகப் போறாங்க.. செய்தில காட்ற மாதிரி பெட் கிடைக்காம வெச்சிருக்க போறாங்க.. எனக்கு பயமா இருக்கு”
“எதுக்கு இப்போ இவ்ளோ யோசிக்கிற.. ஒன்னும் பயப்படாத.. நாங்க உன்ன விட மாட்டோம்” லட்சுமி பூஜாவின் அருகே அமர்ந்து தலை கோதிக் கொண்டே கூறினாள்.
“இருபத்தி மூணு வயசாகுது.. இப்படியா பயந்துக்குவாங்க.. கஷாயம் காச்சி தரேன் குடி நல்லாருக்கும்.. அப்பாவ போய் திட்டறேன் எந்நேரமும் செய்தில கெட்ட நியூஸ்ஸா போட்டு பிள்ளைய பயம் புடுத்திடாங்கா”
வெகு நேரம் ஆகியது பூஜாவை தேற்ற. பின் அவளை அறைக்கு வெளியே அழைத்து வந்து உணவு உண்ண வைத்தாள் லட்சுமி.
அடுத்த நாள் விடிந்ததும் அவளை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றாள் லட்சுமி. மேலே தான் வளர்த்து வந்த சன்னமல்லியை பறிக்கச் சொன்னாள். பூஜாவும் கை நிறைய பறித்து வந்தாள்.
அவளையே பூ கட்டச் சொன்னாள். ஆனால் பூஜாவிற்கு கட்டத் தெரியவில்லை.
“அம்மா எனக்கு கைல கட்ட கஷ்டமா இருக்கு.. கால்ல பூ கட்டலாம் சொல்லுவியே அது எப்படி?” பூஜா ஆர்வமாய் கேட்க லட்சுமியும் சொல்லிக்கொடுத்தாள்.
பூஜாவிற்கு காலில் கட்டுவது சுலபமாக இருந்தது.
அன்று சாயங்காலம் மருதாணி அரைத்து வந்தாள் லட்சுமி. பூஜாவிற்கு வைத்துவிட்டாள். பூஜாவின் தந்தை கோபாலும் கை நீட்டினார்.
“என்னங்க.. உங்களுக்கும் மருதாணி வெக்கணுமா?”
“ஆமாடி.. கல்யாணத்தப்ப வெச்சேன்.. இப்போ வீட்டுல தான இருக்கப் போறேன்,வையேன்”
கலகலப்பாக வைத்துக் கொண்டார் கோபால். அதில் இன்னும் கொஞ்சம் சிவந்து போனது லட்சுமி விரல்களும்.
அடுத்த நாளும் பூஜாவை அழைத்துச் சென்று பூ பறிக்கச் சொன்னாள் லட்சுமி.
மலரின் வாசனையும் மருதாணியின் சிவப்பும் பூஜாவை புத்துணர்ச்சியாக்கியது.
“மாடில சின்ன பசங்களாம் பட்டம் விடறாங்கம்மா” பூஜா மேலே பூப்பறிக்கச் சென்ற போது தான் பார்த்ததை கூறினாள்.
“நீயும் போய் பட்டம் விடு. நானும் வரேன்.. நானும் பட்டம் விடறேன்”
“நிஜமாவாமா?”
“பின்ன சும்மா தான இருக்கோம். பண்ணலாம் வா”
இப்படி தன்னை மெல்ல மெல்ல ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுத்திக் கொண்டாள்.
“போன் பாத்து சமைக்கிறேன்னு சொன்ன.. எதாவது செய்யேன்”
லட்சுமி பூஜாவை சமையலிலும் ஈடுபட வைத்தாள். பூஜாவும் ஆர்வத்துடன் செய்தாள். ஊரடங்கில் உணவகம் இல்லாத குறையைத் தீர்க்க உணவக சுவையில் பலவற்றை செய்தாள்.
“சாப்பாடு, குழம்பு வைக்க மாட்டிக்கிற.. ஸ்னாக்ஸ்ஸா செய்ற.. சரி ஹெல்த்தியா பண்ணு.. அப்போ தான் இந்த மாதிரி எந்த நோய் தொற்று வந்தாலும் ஒன்னும் பண்ணாது”
“சரிம்மா.. எனக்கும் இப்போதான் ஹெல்த்தோடு முக்கியத்துவம் புரிஞ்சது. கொஞ்ச கொஞ்சமா பாஸ்ட் புட் குறைச்சிக்கிறேன்”
“நாளையோட லாக்டவுன் முடியுது.. உனக்கு சந்தோசம் தான?.. வீட்டுல இருக்கத் தான உனக்கு ஸ்ட்ரெஸ் ஆச்சு”
“இல்லம்மா.. நான் லாக்டௌன்ல பண்ண பிளான்யே வேற… படிக்கணும் ரெஸ்ட் எடுக்கணும் அது இதுன்னு நினைச்சேன். கொஞ்சம் பயந்துட்டேன் அதான் எதும் பண்ண முடில”
“அப்புறம் எப்போ பயம் போச்சு”
“கொரோனான்னு கூட்டிட்டு போனவங்க நாலு நாள்ல வீட்டுக்கு வந்தாங்கல்ல அப்போ போச்சு” என்று பூஜா சொல்லி சிரிக்கவும் லட்சுமியும் சிரித்தாள்.
“செய்தில காட்ற மாதிரி நிறைய பேரு இறந்துருக்காங்க.. அதுக்காக நம்ம பயந்துட்டே இருக்க முடியாதுல்ல.. பாதுகாப்பா இருந்துக்கணும்”
“ஆமாம்மா.. நான் தான் ரொம்ப பயந்துட்டேன். அப்புறம் உன் கூட சேர்ந்து பூ கட்றது, சமைக்கிறது, வீட்டு வேலை செய்றதுலாம் பன்றப்ப என் மனசு சந்தோசமா ஆயிடுச்சி.. நான் நிறைய லைப் ஸ்கில் கத்துக்கிட்டேன். உன் கூட உக்கார்ந்து பேசுறது பழைய பாட்டு கேக்கறது எல்லாம் ரொம்ப பிடிச்சதுமா..ஒன்னு சொல்லட்டா”
“சொல்லு”
“இன்னும் கூட கொஞ்ச நாள் இப்படி இருந்தா எனக்கு சந்தோசம் தான்”
“இப்படியே இருந்தா சந்தோசம் தான் அடுத்த வேலை என்னனு பாக்கணும்ல”
“பாக்கணும் தான். இன்னும் கொஞ்ச நாள் கூட இப்படி இருக்கலாம்ன்னு ஆசையா இருக்கும்மா”
இருவரும் பேசிகொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர்.
“கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேலும் இருபத்தி ஒரு நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings