எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப்பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார்.
பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால், செய்தி அறிந்தவுடன் ஊர் மக்கள் அனைவரும் வந்து அவர் வீட்டில் குவிந்திருந்தனர். பிணத்தின் தலை மாட்டில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு, அதை அணைய விடாமல் அவரது மருமகள் அவ்வப்போது எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
விளக்கின் அருகில் பரமசிவத்தின் மனைவி பத்மாவதி பெரிதாக அழாமல், முகம் இறுகிப்போய் பாறை போல் உட்கார்ந்திருந்தாள். அவளின் அந்த முகம், இதுபோல் இறுகத் தொடங்கி பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன என்ற கணக்கு காலத்திற்குத் தெரியும்.
கணவனை இழந்து விட்டு, பரிதாபமாய் வீராயி தன் பெண் குழந்தையுடன் ஒரு நாள் வீட்டு வாசலில் வந்து நின்றது பத்மாவதிக்கு ஞாபகம் வந்தது. இளமை முற்றிலும் மாறாத நிலையில் அவள் வந்து நின்ற தோற்றம் பத்மாவதிக்குப் பரிதாபத்தை உண்டாக்கியது.
வெளிஉலகின் கொடூரப் பார்வைக்கு அவளைப் பலி கொடுக்க விடக்கூடாது என்ற உறுதியுடன் கேட்டாள், “நம் தோட்டத்தில் எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். அப்படி இல்லாத நாட்களில் நம் வீட்டு வேலையை நீ செய்யலாம். எல்லோருக்கும் கொடுக்கும் கூலியை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வேறு இடத்திற்கு வேலைக்குப் போகக் கூடாது சரியா?” என்றாள்.
“சரிங்கக்கா… பாப்பாவை படிக்க வைக்கோணும்… நாங்க ரெண்டு பேரும் கஞ்சி குடிக்கணும். அதுக்கு மாத்திரம் கூலி கொடுத்தால் போதும்…” என்றாள் வீராயி.
பத்மாவதி நினைத்ததற்கு மாறாக வீராயி கடும் உழைப்பாளியாக இருந்தாள். எந்த அளவிற்கு கடும் உழைப்பாளியாக இருந்தாளோ அதே அளவிற்கு வெகுளியாகவும், உலகம் தெரியாதவளாகவும் இருந்தாள். ஆனால் தன் பெண்ணைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் மும்முரமாக இருந்தாள்.
முடிந்த வரை தன் மகன் குமாரும், வீராயியும் தனிமையில் சந்திப்பதைத் தவிர்த்து வந்த பத்மாவதி ஏனோ தன் கணவன் விசயத்தில் கோட்டை விட்டது ஆச்சரியம்தான்.
எந்த நாளன்று, தன் கணவனையும், தோட்டத்து வேலைக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வீராயியையும், தோட்டத்துச் சாலையில் எசகு பிசகாகக் கண்டாளோ, அன்று கணவனிடம் தொடங்கிய அவளின் அந்த மெளன யுத்தம் அப்படியே இதுவரை நீடித்திருந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை, பரமசிவத்தின் விரல் கூட அவள் மீது பட பத்மாவதி அனுமதிக்கவில்லை என்பது, அவளுக்கும் உயிரின்றிக் கிடக்கும் பரமசிவத்திற்கும் மாத்திரம் தெரிந்த ரகசியம்.
வெட்ட வெளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வீராயியின் கண்களிலிருந்து கண்ணீர் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. குடித்துக் குடித்து குடல் வெந்து செத்துப் போன அவளின் கணவனின் மரணத்தின் போது கூட அவளுக்கு இந்த அழுகை வரவில்லை.
அப்போது ஊருக்காக ஒப்பாரி வைத்தாலும், ஆழ்மனதில் தன் கணவனின் மரணம், தன் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த அட்டைப் பூச்சியைப் பிய்த்து எறிந்த சுதந்திர உணர்வையே அவளுக்கு உண்டாக்கி இருந்தது.
கணவனின் இறப்பிற்குப் பிறகு, அவன் வைத்து விட்டுப் போன கடனை அடைக்கவும், வயிற்றுப்பாட்டைத் தீர்க்கவும், தன் ஒரே மகளை வளர்க்கவும் பரமசிவம் உதவிட முன் வந்தபோது, அவளிடம் இருந்த வாலிபம் என்ற ஒரே சொத்தை அவருக்குக் கொடுக்க அவள் மறுக்கவில்லை.
நன்கு படித்து, இன்று கிராம நிர்வாக அலுவலராக பக்கத்து ஊரில் பணி புரிந்து வரும் அவள் மகளின் படிப்பு மற்றும் பதவி, பரமசிவம் போட்ட பிச்சை என்பதும் ஊரார் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை.
பரமசிவத்தின் மறைவு திடீரென்று நிகழ்ந்துவிட்டதால், அவரின் இறுதி யாத்திரைக்கான ஏற்பாட்டில் திணறிக் கொண்டிருந்தான் மகன் குமார். அவர்களின் சமூகத்தில், மரணத்தின் போது ஏராளமான சடங்குகள் செய்ய வேண்டி இருந்ததால், நிற்க நேரமில்லாமல், ஆங்காங்கே ஆட்களை ஏவிக்கொண்டிருந்தான்.
பந்தல் போடும் ஆட்களும், சேர்களைத் துடைத்து, வரிசையில் போடும் ஆட்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மற்றொரு புறம் பறை அடிக்க வந்த ஆட்கள் தங்கள் இசைக் கருவிகளை நெருப்பில் சூடாக்கிக் கொண்டிருந்தனர்.
சுந்தரன் தன் பறையை எரியும் நெருப்புத் தணலில் சூடாக்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்த அவனின் அக்கா மகன் கிண்டலிடித்தான். “என்ன மாமா? உங்க நண்பர், உங்க பள்ளி கிளாஸ் மேட் இறந்து விட்டார்… உங்க முகத்தில சோகமே இல்லையே?”
சுந்தரனின் ஆழ் மனதில் அப்பிக்கிடக்கும் சோகத்தை மற்றவர்க்கு வெளிச்சம் போட்டா காண்பிக்க முடியும்? பள்ளிப் பருவத்திலிருந்து பரமசிவம் தன் மீது காட்டிய தனிப்பட்ட பிரியத்தை நினைத்துப் பார்த்தான் சுந்தரன்.
ஒரு முறை உடம்புக்கு முடியாமல் நாட்களை எண்ணிக்கொண்டு படுக்கையில் முடங்கிக் கிடந்தபோது வீட்டிற்கு வெளியில் பரமசிவத்தின் குரல் கேட்டது.
“என்னடா ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லைன்னா ஒரு தகவல் கொடுக்க மாட்டாயா? நம் தோட்டத்துக்கு வேலைக்கு வந்த ராமன் சொல்லித்தான் தெரியும் எனக்கு…” என்று கடிந்து கொண்டார்.
“இந்த முறை தப்பிக்க மாட்டேன்… வயசாச்சில்ல.. விடுங்க….” என்று அலுத்துக் கொண்ட சுந்தரனை வலுக்கட்டாயமாய்க் கிளப்பி அருகில் இருந்த டவுன் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டார்.
அந்த பெரிய ஆஸ்பத்திரியைப் பார்த்து மிரண்ட சுந்தரன், “எதுக்கு இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி? நிறைய செலவாகுமே? பேசாம கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?” என்றவனை அடக்கி, நல்ல மருத்துவ உதவியால் ஒரே வாரத்தில் அவனைக் குணமாக்கி வீடு கொண்டு வந்து சேர்த்தார் பரமசிவம்.
இனி நோயிலிருந்து மீள முடியாது என்றிருந்த தனக்கு மீண்டும் உயிர் கொடுத்த பரமசிவத்தின் கையைப் பற்றிக் கொண்டு நன்றி சொல்ல முற்பட்ட போது “போடா” என்று சொல்லிவிட்டுச் சென்றவர்தான் அந்த மனிதர்.
காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருந்த சுந்தரன் தன் அக்கா பையனைப் பார்த்து, “அந்த பாட்டிலை எடுடா” என்றான்.
“மாமா… நீங்க பறை அடித்து ஆடும்போது குடிக்க மாட்டீங்களே?” என்றான் ஆச்சரியத்துடன்.
“இன்று ஆடும் ஆட்டம் என் கடைசி ஆட்டம்… எனக்கு உயிர் கொடுத்த என் அன்பு நண்பனுக்காக… இந்தக் குடியும் இன்றுதான் கடைசி… சிவபெருமானின் ருத்ரதாண்டவம் சினிமாவில் பார்த்திருக்கிறாயா? இன்று பார்ப்பாய் என் ஆட்டத்தில்” என்றான் சுந்தரன்.
அங்கும் இங்கும் அலைந்து ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த பரமசிவத்தின் மகன் குமாரின் முகத்திலும் பெரிய சோகம் தெரியவில்லை. அதற்கும் கூட சில வருடங்களுக்கு முன் அவன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒரு காரணமாக இருந்தது.
“என்னடா சொல்றே? காதலிக்கிறாயா? அதுவும் வேற சமூகத்துப் பொண்ணா?” கொதித்துப் போய்க் கேட்டார் பரமசிவம், தன் முன் தலை குனிந்து நின்ற குமாரிடம்.
“நல்ல பெண் அப்பா… கூட படிச்சவ… எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு… இதுவரைக்கும் நான் உங்க முன்னாடி நின்னு எதிர்த்துப் பேசியது கூட இல்லை. இதற்கு மாத்திரம் உங்க அனுமதி வேணும்பா…” என்றான் குமார் கெஞ்சலுடன்.
“அதெல்லாம் நான் செத்த பிறகு…. இதோ பார்…நீ சொல்ற பொண்ணு யார் என்று எனக்குத் தெரியும். அந்தப் பெண்ணோட அப்பன் நம்ம தோட்டத்துக்கு கூலி வேலை செய்ய வருபவன். அவனை நான் சம்பந்தியா ஏற்க முடியுமா? இரண்டு தலைக்கட்டா இந்த ஊருக்கு நம்ம குடும்பம்தான் நாட்டாமை. அந்தப் பேருக்கு ஒரு மரியாதை வேண்டாம்? நான் பார்த்து வைத்திருக்கிற பொண்ணுதான் உனக்கு பொண்டாட்டி… பேசாம போய் வேலையைப் பார்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் தன்நாட்டாமைத் தொணியில்.
தன் மகனிடம் பேசுவது போல் இல்லாமல், பண்ணையில் வேலை செய்யும் வேலையாளிடம் பேசுவது போலவே இருந்தது அவரது பேச்சு. அவர் கட்டளையை மீற முடியாது என்பதால், பேசாமல் போய் வேலையைப் பார்த்துக் கொண்டு, அவர் சொன்ன பெண் கழுத்திலேயே தாலியைக் கட்டி, தன் காதலைக் குழி தோண்டிப் புதைத்தான் குமார்.
“இந்த வயதில் உங்களுக்கு ஒரு பெண் சுகம் கேட்குது, எனக்குப் பிடித்த பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாதா?” என்று வாய்க்குள் முணுமுணுக்க மாத்திரம் முடிந்தது அவனால்.
பிணத்திற்கு சற்று தூரத்தில் அமர்ந்து, பிணத்தின் முகத்தையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் குமாரின் மாமனார். அவரின் பெண்ணின் நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, கல்யாணம் முடியும் வரை பரமசிவம் அவருக்குக் கொடுத்த நெருக்கடிகள் அவரின் மனைவிக்குக் கூடத் தெரியாது.
திடீரென்று நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அவரைக் கூப்பிட்டு கல்யாண மண்டபத்தை உடனடியாக மாற்றச் சொன்னார் பரமசிவம். கல்யாண மண்டபத்துக்காரர் அவருக்கு சரியான மரியாதை தரவில்லை என்பதுதான் காரணமாம்.
மண்டபம் எதுவும் காலி இல்லை என்று எவ்வளவோ கெஞ்சியும் விடாப்பிடியாக இருந்த பரமசிவத்தின் பிடிவாதத்தால், தன் தகுதிக்கு மீறிய அதிக வாடகையில் மண்டபம் பிடிக்கும்படி ஆயிற்று அவருக்கு.
பரமசிவத்தின் ஒவ்வொரு பிடிவாதத்திற்கும் ஈடு கொடுக்க, தனது இரண்டாவது பெண்ணின் கல்யாணத்திற்கென்று சேமித்து வைத்திருந்த மொத்தக் காசையும் செலவாக்கி முதல் பெண் கல்யாணத்தை ஒரு வழியாக முடித்தார்.
பரமசிவத்தின் இறுதிக் காரியங்கள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன. ஆற்றிலிருந்து கொண்டு வந்திருந்த குடத்து நீரில் அவரைக் குளிப்பாட்டி, புதுக் கோடித்துணிகளை பங்காளிகள் அவரின் உடல் மீது போர்த்தி, அவரது பேரன் பேத்திகள் நெய்ப்பந்தம் பிடித்து, அவரது கட்டிலை மூன்று முறை சுற்றி வந்தபோது கிட்டத்தட்ட எல்லா சடங்குகளும் முடிவடையும் தறுவாயில் இருந்தன. அப்போதுதான் தெருவில் ஒரு பரபரப்பு தோன்றியது.
சைரன் வைத்த காரும், போலீஸ் ஜீப்பும் தெருவில் புழுதி பறக்க வந்து நின்றன. உள்ளூர் போலீசார் பரக்கப் பரக்க குமாரிடம் ஓடி வந்து, “கலெக்டர் வருகிறார் உங்களைப் பார்க்க… கொஞ்சம் முன்னாடி வாங்க…” என்று அவனைக் முன்புற வாசலுக்குக் கூட்டிச் சென்றனர்.
பேப்பரிலும், தொலைக்காட்சியிலும் அடிக்கடி பார்த்திருந்த முகம் என்பதால் ஆட்சியரை அடையாளம் கண்டு வணக்கம் சொன்னான் குமார். சுற்றிலும் நிற்கும் காக்கி உடையைப் பார்த்தவுடன் உண்மையில் உள்ளுக்குள் கொஞ்சம் உதறல் எடுத்தது குமாருக்கு. செத்துப் போன மனுசன் ஏதாவது ஏடாகூடமாக செய்து வைத்துவிட்டாரோ என்ற பதைபதப்பும் இருந்தது.
அதிகம் அவனுக்கு சஸ்பென்ஸ் கொடுக்காமல் ஆரம்பித்தார் ஆட்சியர், “நான் இந்த மாவட்ட ஆட்சியர். உங்கள் தந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்… இதோ என் அருகில் நிற்கும் இவர் கன்யாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.தமிழ்ச்செல்வன். நாங்கள் இருவரும் ஒன்றாக ஆட்சியர் பயிற்சி எடுத்த நண்பர்கள். உங்கள் தந்தை இறந்த செய்தியை நான்தான் இவருக்குத் தெரிவித்தேன். இனி இவர் பேசுவார்” என்று சுருக்கமாகத் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன் குமாரைப் பார்த்து பேச ஆரம்பித்தார், “நான் சொல்லும் இந்த விசயங்கள் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். சுமார் இருபது வருடங்களுக்கு முன், என் அப்பா நாகர்கோவிலில் புகையிலை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். வியாபார விசயமாக நாகர்கோவில் வந்த உங்கள் அப்பாவும் என் அப்பாவும் சந்தித்து நாளடைவில் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். சூழ்நிலை காரணமாக என் அப்பா வியாபாரத்தில் நஷ்டப்பட்டு நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு ஆளாகி விட்டார். அப்போது உங்க அப்பாதான் உதவி செய்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியதோடு, என்னையும் கல்லூரி வரை படிக்க வைத்தார்.
நானும் என் முயற்சியால் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விட்டேன். என் அப்பா இறக்கும்போது என்னிடம் ஒரு உறுதி வாங்கிக் கொண்டார். அதாவது உங்கள் அப்பாவுக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், நான் உடன் அவருக்கு உதவி செய்து நன்றிக் கடனைத் தீர்க்க வேண்டும். ஆனால் அதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இருந்தாலும், உங்க ஊர் கலெக்டர் மூலமாக உங்கள் குடும்ப நலனை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டே இருந்தேன். இன்று காலை உங்க அப்பா இறந்ததைக் கூட இவர்தான் போனில் சொன்னார். அப்பாவின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறிக்கொண்டே திரும்பிப் பார்க்க, இரண்டு பேர் இரண்டு மாலைகளைக் கொண்டு வந்து இரண்டு ஆட்சியரிடமும் கொடுத்தனர்.
பரமசிவத்தின் உடல் மீது இரண்டு மாலைகளும் வைக்கப்பட, வணங்கிவிட்டு பத்மாவதியிடமும் விடை பெற்றுச்சென்றனர் இரு ஆட்சியனரும். சினிமாவில் நடப்பதைப் போல நடந்து முடிந்த நிகழ்ச்சியினைக் கண்டு பிரமித்து நின்றான் குமார்.
பூக்கள் தெருவெங்கும் இறைக்கப் பட, பரமசிவத்தின் பூதவுடல் இடுகாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சளசளவென்று பேசிக்கொண்டே உடன் நடந்து கொண்டிருந்தனர் ஊர்க்காரர்களும், உறவினர்களும். குமாரின் சமவயதுத் தோழர்கள் பழனியும், சங்கரும் வழக்கம்போல இடுகாட்டுத் தத்துவ விசாரங்களில் இறங்கியிருந்தனர்.
“ஒரு மனிதன் எப்படிப் பட்டவன் என்ற உண்மை அவனின் இறுதி யாத்திரையில் மக்களால் பேசப்படும் பேச்சில்தான் வெளிப்படும் என்பார்கள். இவரைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான் பழனி.
“ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும் போது கூடுகிற கூட்டம்தான் சொல்லும் நீ யாரென்பதை‘ பட்டினத்தாரின் இந்தப் பாடலைத்தானே சொல்கிறாய்?’ என்றவன், ‘எனக்கும் ஒன்றும் புலப்படவில்லை… நாயகன் படத்தில் வரும் டயலாக் போல, ‘இவர் நல்லவரா? கெட்டவரா?’ என்பது பற்றிக் கூட முடிவுக்கு வர முடியவில்லை..’ என்றான் சங்கர்.
‘மனைவி, மகன் மற்றும் சம்பந்தியின் பார்வையில் கெட்டவர்… வீராயி, சுந்தரன் மற்றும் கலெக்டர் போன்றவர்களின் பார்வையில் நல்லவர். இந்த மனுசனுக்கு திரிசங்கு சொர்க்கம்தான் கிடைக்குமோ?’ என்று சிரித்தான் பழனி.
எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings