in ,

சின்ன மனுஷன் பெரிய மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      அறைக் கதவை பவ்யமாய்த் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ஆபீஸ் பையனை நிமிர்ந்து பார்த்து,  “என்ன?” பார்வையால் கேட்டார் ராஜவேலு. ராஜாளி குரூப் ஆஃப் கம்பெனிகளின் செல்வாக்கு மிக்க ஜெனரல் மேனேஜர்.  பணியாட்களுக்கு அவர் சிம்ம சொப்பனம்.

     “சார்… நீங்க கேட்ட பேங்க் டிராப்ட்!”. அவன் நீட்டிய பேங்க் டிராப்ட்டை வாங்கிச் சரி பார்த்து விட்டு ஒரு தலையாட்டலில் அவனை வெளியே அனுப்பி விட்டு மீண்டும் லேப்டாப்பில் மூழ்கினார் ராஜவேலு.

     சில வினாடிகளில் மறுபடியும் அறைக் கதவு தட்டப்பட, லேப்டாப்பில் இருந்து விலகி,  “யெஸ்… கம் இன்” என்றார்.

     போர்மேன் சக்திவேல்.

     “சொல்லுங்க சக்திவேல்… என்ன விஷயம்?”.லாப்டாப்பை மூடியபடி கேட்டார்.

     “சார் பதினஞ்சு நாளா வேலைக்கு வராம இருந்த கோபி… இன்னைக்கு வந்திருக்கான் சார்!… யார் கிட்டேயும் எதுவும் கேட்காம அவன் பாட்டுக்கு வேலை செஞ்சிட்டிருக்கான் சார்!…”

“வாட் மிஸ்டர் சக்திவேல்… நான் உங்க கிட்டே என்ன சொன்னேன்?… “என்னை வந்து பார்த்திட்டு அப்புறமாய்ப் போய் வேலை செய்யச் சொல்லுங்க!”ன்னு சொன்னேன் அல்ல?”

 “சார்… நானும் நீங்க சொன்ன மாதிரியே உங்களை பார்த்துட்டு வந்து வேலை செய்யச் சொன்னேன் சார், “எதுக்கு… எதுக்கு நான் போய் அவரைப் பார்க்கணும்?… மாட்டேன்”னு அடம் பிடிக்கிறான் சார்!”.

     “நீயெல்லாம் என்னய்யா போர்மேன்?… உனக்குக் கீழே வேலை பார்க்கிற ஒருத்தனைக் கூட கண்ட்ரோல் பண்ண முடியாம… என் கிட்டே வந்து ஸ்கூல் பையனாட்டம்.. “அடிக்கறான் சார்… கிள்ளுறான் சார்”ன்னு கம்ப்ளைண்ட் பண்ணிட்டிருக்கீங்க… அப்படித்தானே?”

 “இல்லை சார்… அது வந்து…” போர்மேன் சக்திவேல் இழுக்க,

 “சரி… நீங்க போங்க சக்திவேல்… நான் ஆபீஸ் பையனை விட்டு அவனை வரச் சொல்லிக் கண்டிக்கிறேன்!”.

     போர்மேன் சக்திவேல் சென்றதும், காலிங்பெல் அடித்து ஆபீஸ் பையனை அழைத்து கோபியைக் கையோடு கூட்டி வரச் சொன்னார்.

     அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து நின்ற கோபிக்கு சுமார் இருபத்தியெட்டு வயதிருக்கும். வயதுக்கு மீறிய அனுபவப் பக்குவம் முகத்தில் தெளிவாக தெரிந்தது.  போர்மேன் சக்திவேல் சொன்ன அளவுக்கு அவனுடைய உடல் மொழியில் அவ்வளவு திமிர்த்தனம் இல்லை.

      “என்னப்பா… இது என்ன கம்பெனியா?… இல்ல சத்திரமா?… நீ பாட்டுக்கு நெனைச்சா வர்றே… நெனைச்சா லீவு போட்டுக்கறே?… கொஞ்சமாவது டிசிப்ளின் இருக்கா உனக்கு?.. போர்மேன் கிட்ட கூட அடங்காம எதிர்த்துப் பேசுறியாமே?… வேலையில் தொடர்ந்து இருக்கிறதா உத்தேசமா?… இல்லை வெளியில் போற மாதிரி ஐடியாவா?” எடுத்த எடுப்பிலேயே ராஜவேலு சத்தம் போட ஆரம்பிக்க.

      “சார்… வீட்ல அம்மா… அப்பா… ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு சார்!… ரெண்டு பேரும் படுத்த படுக்கையா இருக்காங்க!… நான் ஒருத்தன்தான் மகன்!.. என்னை விட்டால் அவங்களைப் பார்த்துக்கறதுக்கு வேற யாருமே கிடையாது!… அதான் லீவு போட்டுட்டு கூடவே இருந்து நேரா நேரத்துக்கு மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து கவனிச்சிட்டிருந்தேன் சார்!” சொல்லும் போதே குரல் கமறியது அவனுக்கு.

      “சரி… அப்படியே நிரந்தரமா வீட்டிலேயே இருந்துக்க வேண்டியதுதானே?… இன்னிக்கு எதுக்கு வந்தே?… எந்த தைரியத்தில் வந்தே?… யாரும் எதுவும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டியா?” ஜி.எம்.மின் குரல் உயர்ந்தது.

      “வந்து… இப்பக் கொஞ்சம் பரவாயில்லை சார்!… அவங்க வேலையை அவங்களே செஞ்சுக்கிற அளவுக்குத் தேறிட்டாங்க!.. அப்பா அவராகவே எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டார்!… அதான் வந்துட்டேன்!”அப்பாவியாய்ச் சொன்னான்.

      “அப்ப… மறுபடியும் அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னா… மறுபடியும் லீவு போடுவே… அப்படித்தானே?”.

      “வேறென்ன சார் பண்ண முடியும்?.. பெத்தவங்க முக்கியமில்லையா?… அவங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கில்லையா?” கோபியும் சற்று உரத்த குரலில் சொல்ல,.

      அவனுடைய அந்தச் செய்கை ஜி.எம்.மைக் கோபப்படுத்தி விட, “பெத்தவங்கதான் முக்கியம்ன்னா அவங்களையே பார்த்துட்டு… வீட்டோடவே கெட… இனிமே வேலைக்கு வராதே!… இன்னிக்கே உன் கணக்கே முடிக்க சொல்லுறேன்… வாங்கிட்டுக் கிளம்பு!.. நான் வேற ஆளை வெச்சு வேலை பார்த்துக்கிறேன்!… நீ இல்லேன்னா ஆயிரம் பேர் க்யூல நிப்பாங்க!”. என்றார் கடுமையான முகத்தோடு.

      “அய்யய்யோ… சார்… அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க சார்!” அவன் கெஞ்ச.

      “இது கம்பெனி… இங்க ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்… அந்த ஆயிரம் பேருக்கும் ஆயிரம் சொந்தக் கவலைகள்… பிரச்சனைகள் இருக்கும்!… அதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது!… எங்களுக்கு வேலை முக்கியம் அவ்வளவுதான்!” தெளிவாகச் சொன்னார் ஜி.எம்.ராஜவேலு.

     பதில் பேசாது மௌனமாய் தலை குனிந்து நின்றான் கோபி.  அவன் முகத்தில் சோக ரேகைகள் ஓட ஆரம்பித்தன.  கண்கள் கூட லேசாய்க் கலங்கின.

     அவனின் அந்த அமைதிக் கோலம், ராஜவேலுவை சற்று சாந்தப்படுத்த,  “தம்பி… வயசாயிட்டாலே பெரியவங்களுக்கு… அப்பப்ப ஏதாவதொரு கேடு வந்துட்டேதானிருக்கும்!… அதுக்கெல்லாம் நாம முக்கியத்துவம் கொடுத்திட்டிருந்தா… நம்ம வாழ்க்கை வண்டி ஒழுங்கா ஓடாதப்பா!… அதனாலதான் நான் ஒண்ணு சொல்றேன் அது மாதிரிச் செய்”.என்றார் சாந்தமான குரலில்.

     ஜி எம்.மிடமிருந்து வந்த அந்தக் கனிவான வார்த்தைகளில் நெகிழ்ந்து போன கோபி,  “சொல்லுங்க சார்… நான் என்ன செய்யணும்?” கேட்டான் ஆவலாய்.

      “பேசாம ஒரு நல்ல முதியோர் இல்லமா பார்த்து அவர்களை சேர்த்து விட்டுட்டு நீ ஒழுங்கா வந்து வேலையை பாரு!… உனக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்குப்பா…” முகத்தில் சிரிப்போடு அவர் சொல்ல,

     சட்டென முகம் மாறி அவரை எரித்து விடுவது போல பார்த்த கோபி,  “இங்க பாருங்க சார்… வயசான காலத்துல பெத்தவங்களைக் கூட இருந்து அணுசரணையா கவனிச்சுக்காம… அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுட்டு… பொண்டாட்டி பின்னாடியும்… சொத்துக்கள் பின்னாடியும் ஓடறவங்கெல்லாம் உண்மையில் மனுஷங்களே அல்ல சார்!… பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மா அப்பாவை அனாதைகளாக்கி ஏதாவது ஒரு இல்லத்தில தள்ளி விட்டுட்டு திரியறவனுக எல்லோருமே அவங்களோட முதுமைக் காலத்துல அதுக்கான தண்டனையை அனுபவிச்சிட்டுத்தான் சார் சாவானுங்க!” என்று கோபி ஆத்திரமாய் சொல்ல.

      “முடிவா என்னதான் சொல்றே?… நான் இப்படித்தான் இருப்பேன்!.. வேலைக்கு ஒழுங்கா வரமாட்டேன்… அப்படித்தானே?”. ஜி.எம்.டென்ஷனானார்.

     “சார்… எனக்கு என்னைப் பெத்தவங்கதான் சார் முக்கியம்!… அதுக்கப்புறம்தான் இந்த வேலை… இந்த சம்பளம் எல்லாம்!… இந்த வேலையில் இருந்து கொண்டு என்னால் அவர்களைக் கவனிக்க முடியாது என்கிற ஒரு நிலைமை வரும் போது… இந்த வேலையே தூசுதான் சார் எனக்கு!.. வேண்டாம் சார்… இன்னைக்கே என்னோட ராஜினாமாவைக் கொடுத்துட்டு இப்படியே போய்டுறேன்!”. ஜி.எம்.மைக் காட்டிலும் அதிகமாய் டென்ஷனான கோபி, வேக வேகமாக வெளியேறினான்.

     அவன் சென்ற பிறகு கிட்டத்தட்ட அரை மணி நேரம் வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜவேலுக்கு வாழ்க்கையில் இதுவரை புரிபடாத பல விஷயங்கள் புரிபடத் துவங்கின. “மகானைப் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை… மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்”

     சட்டென்று மேசை டிராயரைத் திறந்து “அன்பாலயா முதியோர் இல்லம்” என்ற பெயருக்கு எடுக்கப்பட்டிருந்த அந்த பேங்க் டிராப்டை எடுத்து ”பர…பர”வென்று கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.

     அடுத்த நிமிடமே போனை எடுத்து அவசர அவசரமாக எண்களை நசுக்கி,  “விமலா… என்னோட அப்பாவும் அம்மாவும் நம்ம வீட்டிலேயேதான் இருக்கப் போறாங்க!… அவங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை!.. அனுப்ப மாட்டேன்” என்றார் கண்டிப்பான குரலில்.

     “என்னாச்சு திடீர்னு… இன்னிக்கே டிராப்ட் எடுத்து அனுப்பிடறேன்!… நாளைக்கே அவங்க ரெண்டு பேரையும் அங்க கொண்டு போய்த் தள்ளிடலாம்னு சொன்னீங்க!….” மறுமுனையில் இருந்து மறுப்புக் குரல் வர ஆரம்பிக்க பட்டென்று  போனை வைத்தார்.

      இண்டர்காமை எடுத்து,  “அந்த கோபியை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க” சொல்லி விட்டு போனை வைத்தார்.

     மனதில் ஏதோ ஒரு பாரம் குறைந்தாற் போலிருந்தது அவருக்கு.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காத்ரீன்… ப்யூட்டிஃபுல்… காத்ரீன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    முடிவாய் ஒரு முடிவு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை