எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பண்ணைத் தோட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது பூபாலன் அப்படியொரு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை.
தோட்டத் தொழிலாளிகள் மொத்தமாகக் கூடித் திரண்டு ஜீப்பிற்கு எதிராக வந்து கொண்டிருந்தனர்.
தன்னுடைய முப்பது வருட அனுபவத்தில் இப்படித் தொழிலாளர்கள் எதிர்த்து திரண்டு வந்ததை பார்க்காத காரணத்தால் அவருக்கு முதலில் கோபம் பொங்கியது.
உள்ளே போயிருந்த மது அவரை யோசிக்கவிடவில்லை.
ஜீப்பை நிறுத்தி விட்டு, “ஓடிப்போய் விடுங்கள். குருவி சுடுவது மாதிரிச் சுட்டுத் தள்ளி விடுவேன்” என ரிவால்வரை எடுத்து வானத்தைப் பார்த்துச் சுட்டார்.
தொழிலாளர்த் தலைவன் தங்கவேலு, முன்னால் வந்து “பூபாலன் சார், நீங்கள் நினைக்கிற மாதிரி நாங்கள் ஒன்றும் காக்கைக் குருவி அல்ல, நாங்களும் உங்களைப் போல மனித சாதி தான், என்ன ஒரு வித்தியாசம். நீங்கள் பணக்கார சாதி. நாங்கள் ஏழை சாதி. உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்தால் என்னாகும் தெரியுமில்லையா? ஒழுங்காக இந்த வருட போனஸ் கொடுத்தால்தான் வேலை நடக்கும். சும்மா எங்களை எல்லாம் ஏமாற்ற முடியாது. உங்கள் பயங் காட்டல் வேலை எல்லாம் வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காக ஜீப்பை விட்டு இறங்கி வாருங்கள்” என்றான் தங்கவேலு
பூபாலனுக்கு உடம்பெல்லாம் கொதித்தது. “நான் பார்த்து வேலைக்குச் சேர்ந்த இரண்டு காசுப் பயல் நீ. என்னிடம் நேருக்கு நேர் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறாயா?” என்று கத்தியவர், ரிவால்வரைத் திருப்பி தங்கவேலுவைச் சுட, அவன் நெஞ்சில் பொத்துக் கொண்டு ‘குபுக்’கென்று இரத்தம் வர, கூடி நின்ற தொழிலாளிகள் எல்லோரும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.
இரத்தம் பார்த்ததும் பூபாலனுக்கு வியர்த்துக் கொட்டியது. உடம்பெல்லாம் சிறு நடுக்கம்.. ‘கொலை நடந்து விட்டது. இனி இதை எப்படி மூடி மறைப்பது? தங்கவேலு இறந்து கிடந்தான். முதலில் ‘இவனை நான் கொல்லவில்லை’ என்று நாடகம் நடத்த வேண்டும்.
நான் சுடும் போது கூட இருந்த தோட்டத் தொழிலாளர்கள் அனைவருடைய வாயையும் அடைக்க வேண்டும். என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டிருக்கும் போது ஜீப்பினுள்ளேயிருந்த செல்போன் சிணுங்க, கொஞ்சம் நடுக்கத்துடன் “ஹலோ” என்றார் போனை ஆன் பண்ணியவாறு.
“மிஸ்டர் பூபாலன். நான் டி.எஸ்.பி.வில்சன் பேசுகிறேன்.”
“ஹலோ சார், சௌக்கியமாக இருக்கிறீர்களா? என்ன விஷயம்”
“ஒரு டாடா சுமோ வாங்குகிற விஷயமா உங்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கைமாற்றுக்கு பணம் தந்தால் வசதியாக இருக்கும்.”
“உங்களுக்கு ஓசியிலேயே ஒரு டாடா சுமோ வாங்கித் தருகிறேன். ஆனால் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்து போச்சு, அந்தப் பிரச்சினையை நீங்க தான் தீர்த்து வைக்கணும்”
“சொல்லுங்க என்ன விஷயம்?”
நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னார் பூபாலன்.
“ஸோ, ஒரு கொலையை செய்துவிட்டு அதை மூடி மறைக்கப் பார்க்கறீங்க. நான் என்ன போலீஸ்காரனா? இல்லை உங்க வீட்டு அடிமையா? கொலை கேஸிலே எத்தனை வருஷம் உள்ளே போடுவார்கள் தெரியுமில்லையா?” டி.எஸ்.பி.வில்சன் உறுமினார்.
“சார் நான் வேண்டுமென்றே சுடவில்லை. ஏற்கனவே உள்ளே போன விஸ்கியின் வேகம். நேற்று வேலைக்கு வந்த பய என்னைப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடுகிறான் என்கிற கோபம். எல்லாம் சேர்ந்துதான்…” முடிக்காமல் விழுங்கினார்
“ஸோ ஒழுங்காக போலீஸிலே சரண் அடைந்து விடுங்கள்”
“வேற வழியே இல்லையா ?”
“நெறைய இருக்கு. என்ன கொஞ்சம் அதிகமாக செலவழியும்?”
“அப்பா. பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்றார் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பூபாலன்.
“என்ன சார் பெருமூச்சு விடுறீங்க”
“பின்னே என்ன? ஒரு நிமிஷத்திலே பயங்காட்டி விட்டீர்களே”
“உங்களை அவ்வளவு எளிதில் ஜெயிலுக்கு அனுப்பிடுவோமா?”
“என்ன செய்யணும் அதைச் சொல்லுங்க முதலிலே”
“துப்பாக்கியை கர்ச்சீப்பை வைத்து நன்றாக துடைத்துக் கொண்டு தங்கவேலு கையிலே வைத்து விடுங்கள். எல்லாத் தொழிலாளர்களையும் கூப்பிட்டு போனஸ் தந்து விடுகிறேன், தங்கவேலு தற்கொலை செய்து கொண்டான் என்று போலீஸிடம் சொல்லச் சொல்லுங்கள்.”
“சொல்ல மறுத்தால்.”
“அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உடனே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுங்கள், நான் உங்கள் ஏரியா இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணி பாடியை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விடுகிறேன்.”
“ரொம்ப நன்றி சார்”
“இந்த நன்றிக்கு விலை அதிகம் சார்”
“எனக்கு பணம் முக்கியமில்லை மிஸ்டர் வில்சன்.”
பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. டி.எஸ்.பி.வில்சன் இன்ஸ்பெக்டர் ராம், பூபாலன் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இனி பிரச்சினை எதுவும் ஆகாதில்லையா வில்சன்?”
“ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்?”
“இந்தாங்க உங்கள் டாடா சுமோவின் சாவி”
வில்சனிடம் கொடுத்தார் பூபாலன்.
இன்ஸ்பெக்டர் ராம் “சார். நம்ம விஷயம் என்னாச்சு?” என்று கேட்டார்.
“வீட்டிலே போய்ப்பாருங்க. நீங்கள் கேட்ட கலர் டிவியும் பிரிஜூம் போய் இறங்கியாச்சு” என்றார் பூபாலன்.
“டேய்…என் புருஷனைக் கொன்னவனை சும்மா விடமாட்டேன்” என்று தலைவிரி கோலமாக தங்கவேலுவின் மனைவி புவனா வேகமாக வர, இருவர் அவளைப் பிடித்துக் கொள்ள, “யாருடா அது?” – என்றார் பூபாலன்,
“இது இறந்து போன தங்க வேலுவின் மனைவி சார்”
“அப்படியா? பொண்ணு ரொம்ப அழகா இருக்கே டேய் தூக்கிண்டு போய் நம்முடைய பண்ணைத் தோட்டத்திலே கட்டி வைங்க. அப்புறமாக நா வருகிறேன்” என்று கூறிய பூபானிடம் “இனி மேல அதிகமா பிரச்சினைகளை விலைக்கு வாங்காதீங்க சார்” என்றார் இன்ஸ்பெக்டர் ராம்.
“அதுதான் நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை. இனி பிரச்சினைகளோடே குடியிருக்கலாம் போல தோணுது” என்று கண்ணாடி கிளாசை நிறைத்துக் கொண்டு ‘சியர்ஸ்’ என்றார் பூபாலன்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings