in ,

சாணக்யா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     தான் சார்ந்திருக்கும் கட்சி அலுவலகத்தின் காம்பவுண்டுக்கு வெளியே தன் பைக்கை நிறுத்திப் பூட்டி விட்டு வேகவேகமாய் கேட்டினுள் நுழைந்த கௌதம், துடிப்பான… ஆவேசமான… ஆக்ரோஷமான… கல்லூரி மாணவன்.

     படிக்கின்ற காலத்திலேயே அரசியலில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டு, மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாயிருக்கும் அந்தக் கட்சியின் மாணவரணித் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெற்றவன்.

     ஆங்காங்கே மரத்தடியில் கும்பல் கும்பலாய் நின்று உரத்த குரலில் விவாதித்துக் கொண்டிருந்த கரை வேட்டிக்காரர்களின் பேச்சில் பிரதானமாக இருந்தது கட்சித் தலைவரின் பெயரும், அவரை கைது செய்ய வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கும் ஆளுங்கட்சித் தலைவரின் பெயரும்தான்.

     மாவட்டச் செயலாளரின் அறைக்கு முன் நின்று அங்கிருந்த கைத்தடியிடம்,   “ஐயாவை பார்க்கணும்” என்றான் கௌதம்.

     மாணவரணியா?”

     “ஆமாம்”.

     அறைக்குள் சென்று விட்டு ஐந்தே வினாடியில் திரும்பி வந்த அந்தக் கைத்தடி,  “ம்… உள்ளார போ!” என்றான்.

     கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற கௌதம் அங்கு மாவட்டச் செயலாளரோடு எம்.எல்.ஏ., நாலைந்து கவுன்சிலர்கள், என பல பெரிய தலைகள் வீற்றிருக்க, அவனையுமறியாமல் கையெடுத்துக் கும்பிட்டான்.

     “வாய்யா… மாணவரணித் தலைவா!… விஷயம் தெரியும்ன்னு நினைக்கிறேன்”

     “ம்… தெரியுங்க அய்யா” என்றான் பவ்யமாய்.

“அநேகமா நம்ம தலைவரை இன்னிக்கோ… நாளைக்கோ… கைது பண்ணிடுவாங்க!… நாங்க எங்க சைடுல என்னென்ன போராட்டம் பண்ணனும்?… எங்கெங்கே ஆர்ப்பாட்டம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டோம்!… நீ உன்னோட மாணவரணி சார்பில் என்ன பண்ணப் போறே?” மாவட்டச் செயலாளர் கேட்க.

     “ஐயா… நீங்க என்ன சொல்றீங்களோ… அதை அப்படியே செய்யறேன்”.

     “வந்து…. மாணவர்கள் கல்லூரிக்கு போகாமல் சாலை மறியலில் ஈடுபடணும்!…  ஊர்வலம் போகணும்!… ரகளை பண்ணனும்!… பச்சையாச் சொன்னா கொறைஞ்சது நாலஞ்சு பஸ்ஸாவது எரியணும்!… ரெண்டு மூணு பேராவது சாவணும்!.. அப்பத்தான் என் தலைவரோட செல்வாக்கு என்னனு இந்த ஆளுங்கட்சிக்கு புரியும்!… என்ன சொல்றே?” பொது நலம் பேச வேண்டிய மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ. சிறிதும் தாட்சண்யமின்றிச் சொன்னார்.

“சரிங்கய்யா…. பண்ணிட்டாப் போச்சு!” சொல்லும் போதே கௌதமின் மனதில் வேறொரு திட்டம் உருவானது.

     “சும்மா வாயால சொன்னாப் பத்தாது பையா!… செஞ்சு காட்டணும்” இது மாவட்டச் செயலாளர்.

     தன் மனதில் தோன்றிய அந்தத் திட்டத்தை அவர்களிடம் சொன்னால் நிச்சயம் தன்னைப் பாராட்டுவார்கள் என்று எண்ணிய கௌதம்,  “ஐயா எனக்கு ஒரு யோசனை இருக்கு… சொல்லலாமா?” அடக்கமாய் கேட்டான்.

     “பார்ரா… எங்களுக்கே நீ யோசனை சொல்றியா?.. சரி பரவாயில்லை… சொல்லு கேட்போம்”.

     “வந்து… காலேஜ்ல விவேக்னு ஒரு ஸ்டூடண்ட்!… பெரிய ஞானி மாதிரி பேசிட்டிருக்கான்!… மாணவர்களுக்கு அரசியல் எதுக்குனு கேள்வி கேட்டுட்டு… ‘காலேஜுக்குள்ள அரசியல் வரக் கூடாது’ன்னு தீவிரமா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கான்!.. ஸ்டூடண்ட்ஸ்க மத்தியில் ஓரளவுக்குப் பேரும் வாங்கிட்டான்!… அவனை இனியும் வளர விட்டா நாம ஒண்ணும் இல்லாமப் போயிடுவோம்”.

     “இத்தனை நாள்… இதைப்பற்றி நீ ஏன் என்கிட்டச் சொல்லலை?” மாவட்டச் செயலாளர் கடுப்பானார்.

     “ஐயா… நானே அவனை ஆஃப் பண்ணிடலாம்னு பார்த்தேன்!… முடியல!… அதனால…”இழுத்தான்.

     “அதனால….?”

“இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி அவனை முடிச்சிடுவோம்” ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப் போல் வெகு இயல்பாக அவன் சொன்னதைக் கேட்டு மூத்த அரசியல்வாதிகளே ஒரு கணம் ஆடிப் போயினர்.

     “அய்யய்யோ!… என்னய்யா சொல்ற?” மாவட்ட செயலாளர் பதறினார்

     அவரைக் கையமர்த்திய எம்.எல்.ஏ., “த பாரு… நீ என்னமோ செய்!… எங்களுக்கு கலாட்டா நடக்கணும்!… அவ்வளவுதான்”.

     “அப்ப… நான் கிளம்புறேன் ஐயா” கௌதம் புறப்பட,

     “அப்பப்ப நிலவரங்களைத் தகவல் கொடுத்துட்டே இரு”.

     “சரிங்கய்யா.”

     அனைவரும் எதிர்பார்த்தது போலவே அன்றிரவு அந்தக் கட்சித் தலைவர் கைது செய்யப்பட, மறுநாளைய விடியல் மோசமாகவே விடிந்தது.

            மறியல் செய்யப்படாமலேயே வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை முடக்கிக் கொண்டன. கடையடைப்பு செய்ய அவசியமே ஏற்படாதபடி கடைகள் எதுவும் திறக்கப்படவே இல்லை.  எந்தவித அறிவிப்புமின்றி சில கல்லூரிகளும், பள்ளிகளும் தங்களை கட்டாய விடுமுறைக்கு உட்படுத்திக் கொண்டன.  

நகரின் மத்தியிலிருந்த அந்தக் கல்லூரியின் முன் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நடுவில் நின்று கொண்டு, தலைவர் கைது செய்யப்பட்டதற்காக ஆக்ரோஷமாய்க் குதித்துக் கொண்டிருந்தான் கௌதம்.

     அவன் பார்வை அவ்வப்போது விவேக்கை கவனித்துக் கொண்டுதானிருந்தது.

     கௌதம் தன்னைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த விவேக்,  “ஹலோ பிரதர்!… உன் தலைவனை என்ன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவா கைது பண்ணிட்டாங்க?… வெட்ட வெளிச்சமாகிப் போன ஊழல் குற்றச்சாட்டுக்குத்தான் கைது பண்ணி இருக்காங்க!… இதுக்காக நாம காலேஜை புறக்கணிக்கவோ… ஆர்ப்பாட்டம் பண்ணவோ… அவசியமே இல்லை!… நீதித்துறை தன் வேலையைத் திறம்பட செஞ்சிருக்கு!… அவ்வளவுதான்!” அமைதியாகச் சொன்னான்.

     “டேய் என்னடா சொன்ன?… என் தலைவனையா ஊழல் குற்றவாளின்னு சொல்றே?… டேய்… நீ முடிஞ்சடா!… உனக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சுடா” தன் கட்சி குண்டர்கள் அந்தக் கூட்டத்தினுள் புகுந்து விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட கௌதம் தன் ஆவேசத்தை அதிகப்படுத்திக் கொண்டு உச்ச ஸ்தாயில் கத்தினான்.

     கூட்டத்தில் கலந்து விட்ட குண்டர்கள் தமக்கு இட்ட பணியை நிறைவேற்றும் விதமாய் கைக்குக் கிடைத்த மாணவர்களையெல்லாம் தூக்கிப் பந்தாடினர். கௌதமிற்கு சந்தோஷமாயிருந்தது. 

            “அடேய் விவேக் பையா!.. இன்னும் கொஞ்ச நேரம்தாண்டி உன்னோட ஆயுள்!… எமதூதர்கள் வந்தாச்சுடி… உன்னைத் தேடி” முறுவலித்தான். ஆனால் அந்தக் குதூகலம் ஒரு வினாடிதான் நீடித்தது. அடுத்த வினாடி பின்புறம் இருந்து யாரோ அவனை மிருகத்தனமாய்த் தள்ளி விட, தடுமாறி குப்புற விழுந்தான்.

     விழுந்தவன் சுதாரித்து எழுவதற்குள் அவன் மேல் பெட்ரோல் அபிஷேகம் நடத்தப்பட்டது.

     “டேய்… டேய்… முட்டாள்களா… நான் நம்ம கட்சி ஆளுடா!… மாணவர் அணி தலைவர்டா” அடித் தொண்டையில் கத்தினான் கௌதம்.

     அங்கு நிலவியிருந்த ஆர்ப்பாட்டக் கூச்சலில் அவன் கத்தல் காற்றில் கற்பூரமாய் கரைந்து போக, பெட்ரோல் அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. “திகு…திகு”வென்று எரியும் நெருப்புடன் அவன் தாறுமாறாக ஓட, கூட்டம் நாலாப்பக்கமும் சிதறியது.

     விவேக் மட்டும் தனி ஆளாய் நின்று நெருப்பை அணைக்க முற்பட்டான். பாவம், அவனால் நெருப்பை மட்டும்தான் அணைக்க முடிந்தது, கௌதமின் உயிரைக் காப்பாற்ற இயலாமல் போனது.

மறுநாள் செய்தித்தாளில், “கட்சித் தலைவரைக் கைது செய்ததைக் கண்டித்து அக்கட்சியின் மாணவர் அணித் தலைவர் கௌதம் தீக்குளித்து இறந்தார். இவரோடு சேர்த்து தமிழகம் முழுவதுமாய் தீக்குளித்தோர் எண்ணிக்கை ஏழு.”.

செய்தியைப் படித்த விவேக் குமுறினான்.  “பாவிகளா உங்க ஆளை நீங்களே கொளுத்திட்டு… தீக்குளித்ததாய்க் கதை பண்ணிட்டீங்களா?… நீங்க உருப்படுவீங்களா?… ஹும்… உங்களோட சுயரூபம் தெரிஞ்சுதான் கல்லூரிக்குள்ளார அரசியலே வரக்கூடாதுனு அந்தப் பாடுபட்டேன்!… அதைப் புரிஞ்சிக்காம இந்த கௌதம் என்னைத் தப்பா நினைச்சு… தன்னோட உயிரை இழந்துட்டானே?”.

 அதே நேரம் கட்சி அலுவலகத்தில்.

“இதுதாண்டா சாணக்கியம்!… அந்த விவேக் பயலுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல பேர் இருக்கு… அதே மாதிரி நம்ம மாணவர் தலைவன் கௌதமுக்கும் அவனுக்கும் பகை இருக்குது!… காலேஜ் முழுவதும் எல்லாருக்கும் இந்தப் பகை விஷயம் நல்லாவே தெரியும்!… ஆக… இந்தச் சமயத்தில் நாம அந்த விவேக்கைப் பலி கொடுக்கிறது அவ்வளவு உசிதம் இல்லை!… அது நமக்கு நாமே குழி தோண்டிக்கற மாதிரி!… அதனாலதான் பார்த்தேன்!… அவனைக் கொளுத்துவதை விட இவனைக் கொளுத்துவதில் தான் அதிக லாபம் இருக்கிற மாதிரி தெரிந்தது!… அதான் அடியாட்களை திசை திருப்பி விட்டேன்!… பலன் கிடைச்சிடுச்சு பார்த்தியா?… நினைச்ச மாதிரியே ஆளுங்கட்சி அரண்டு போய் தலைவரை ரிலீஸ் பண்ணிட்டுது”.

எம்.எல்.ஏ. சொல்லி முடிக்க, கையெடுத்து கும்பிட்ட மாவட்ட செயலாளர்,  “அண்ணே… நீங்க சொன்னாலும்… சொல்லாட்டியும் நீங்க தானே அரசியல் சாணக்கியர்” என்றார்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 2) – சுஶ்ரீ