எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலிங்பெல் சத்தத்தில் காலை தூக்கம் கலைந்து எரிச்சலுற்ற பாண்டியன் “எருமை எருமை பொச கெட்டவளே வாசலை இன்னும் திறக்கலையா பொன்னம்மா பெல் அடிக்கா போல” என்று உறுமியவருக்கு அவர் மனைவி மல்லிகாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.
திரும்பவும் அழைத்த காலிங் பெல் சத்தத்தில் புரண்டு எழுந்தவருக்கு மனைவி வீட்டில் இல்லாதது உறைத்தது.
“இவ எங்க போய் தொலைஞ்சாளோ தெரியலையே” என பல்லை கடித்தபடி கூறிக் கொண்டே வந்து வாசல் கதவை திறந்தார்.
வாசலில் வந்தது வேலைக்காரி பொன்னம்மா “ஐயா, அம்மா எங்க, இன்னும் பால் கூட எடுக்காம இருக்குது வாசல்ல” என்று கூறி கதவில் மாட்டியிருந்த பால்பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் பொன்னம்மா.
“மல்லிகா அவங்க அக்கா வீட்டுக்கு குளித்தலை போய் இருக்கா” என்ற பாண்டியன் பொன்னம்மா மேலும் ஏதாவது கேட்க இடம் கொடுக்காமல் பெட்ரூமில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.
எரிச்சலுடன் காலை கடன்களை முடித்தவர் “கழுத கெட்டா குட்டிச் சுவரு இவ எங்க போயிருக்க போறா அவ அக்கா வீட்ட தவிர இவளுக்கு போக்கடம் ஏது?” என முணுமுணுத்தவரின் மனதில் முதல் நாள் சம்பவம் காட்சி ஆனது.
பாண்டியனுக்கு வீட்டில் எதுவும் அவர் எண்ணப்படி தான் நிகழ வேண்டும் அவரைப் பொறுத்தவரை பெண்கள் வீட்டு வேலை செய்யும் இயந்திரங்களே. மனைவி மல்லிகாவும் அவர் மகள் பூமிகாவும் அவரை திருத்த என்னென்னவோ முயற்சி எடுத்தும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகியது. அதுவும் கோபம் வந்தால் அவர் வாயில் வரும் வசவுகளை காது கொண்டு கேட்க முடியாது.
மல்லிகா அவரிடம் ஒரு வாரமாக பத்து நாட்களில் வரும் ஆடி பதினெட்டு பண்டிகைக்கு புது துணி எடுத்து உடுத்தி எல்லோரும் போவது போல் நாமும் ஸ்ரீரங்கம் காவிரி கரைக்கு போக வேண்டும் என ஆசையாக கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் பாண்டியனோ, “ஆமா எல்லாரும் அவுத்து போட்டு போனா நாமளும் போகணுமா” என அவளை திட்ட ஆரம்பித்தார். மல்லிகா காதை மூடிக்கொண்டு அங்கிருந்து போய் விட்டார்.
முதல் நாள் மதியம் பக்கத்து வீட்டுக்கு புடவைக்காரர் வந்திருப்பது தெரிந்து அங்கு போய் மல்லிகாவும் ஒரு புடவையை மாதத்தவணைக்கு எடுத்து வந்து விட்டார்.
மனைவியின் கையில் புதுப்புடவையை பார்த்தவர் “நான் வேணான்னு சொன்னா நீ எடுத்துட்டு வருவியா உடம்பு முழுக்க திமிரு ஜடம் ஜடம் போ நீ எங்க வேணா போ புது துணி கட்டு இல்ல துணியே கட்டாம அம்………போ அந்த புடவைக்காரனோடயே போயிடு என்கிட்ட காசு கேட்காத” என தலைக்கேறிய கோபத்துடன் வசை மாறி பொழிந்தார் பாண்டியன்.
மல்லிகா விக்கித்து நின்றார் திருமணம் ஆகி முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த மாதிரி வார்த்தைகளை கேட்கும் மல்லிகா அன்று மனம் மிகவும் காயப்பட்டு போனார். மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சிக்க முடியாத இவர்தான் ஜடம். இத்தனை வருஷமா அம்மா அப்பா கவலைப்படுவாங்க கூட பிறந்தவங்களுக்கு கல்யாணம் ஆகணும் வாழாவெட்டியா நான் பிறந்த வீட்டுக்கு போக கூடாதுன்னு இவரை சகிச்சுக்கிட்டாச்சு
இப்போ என் பொண்ணுக்கே கல்யாணம் முடிச்சாச்சு அப்பா அம்மாவும் கரை சேர்ந்தாச்சு. இனி எதுக்கு என் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு இங்கே இவர்கிட்ட ஏச்சும் பேச்சும் கேட்கணும் என நினைத்த மல்லிகா மனதிற்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் அமர்ந்திருந்தார்.
கண்கள் கலங்கி யோசனையாக அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை பார்த்தும் பாராதது போல் இருந்த பாண்டியன் மாலையில் வாக்கிங் போகக் கிளம்பினார். வாக்கிங் முடித்து வீட்டுக்கு வந்த பாண்டியனிடம் பக்கத்து வீட்டுப் பெண் வீட்டுச் சாவியை கொடுத்தாள்.
“இந்த நேரத்துல எங்க போயிருக்கா கழுதை” என மனதில் திட்டியபடி வீட்டை திறந்தார். மனைவி இல்லாமல் வெறுமையாக இருந்த வீடு அவருக்கு புதிதாக பயமுறுத்தியது.
கிச்சனில் இரவு உணவு ஹாட்பாக்கில் இருந்தது. மல்லிகா பக்கத்து ஊரில் இருக்கும் அவள் அக்கா ஊருக்குத்தான் சென்றிருப்பாள் என நினைத்தவர் மனம் கோபத்தில் கனன்றது.
“அப்படி என்ன உனக்கு ஆங்காரம் நான் உனக்கு என்ன குறை வச்சேன் குடி இருக்க வீடு உடுக்க துணிமணி நகைநட்டு வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு வீட்டு வேலை செய்ய ஆளுன்னு எல்லாம் தான் இருக்குது என்ன, என்னை கோபப்படுத்தினா நான் திட்டுவேன் அதை பொறுத்துக்க முடியாதா சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிருக்கிற”. இரவு முழுவதும் தூக்கம் வராமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
குளித்து வந்தவர் மல்லி இருந்தா சூடா காப்பிய கையில கொண்டாந்து கொடுப்பா என நினைத்தவருக்கு துக்கம் பொங்கியது. அப்போது ஹாலில் போன் மணி அடிக்கவும் போய் அதை எடுத்தார்.
காலர் ஐடியில் புது நம்பராக இருக்கவும் சிறிது தயங்கி பின் பேசினார். போனில் “மல்லிகா வீட்டுக்காரரா பேசுறது” என படபடப்பாக ஒரு பெண் குரல் பேசியது.
“ஆமா நீங்க” என்றார் பாண்டியன்.
“சார் நான் மல்லிகாவோட ஃபிரண்ட் சரோஜா பேசுறேன் நேத்து நைட்டு முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல கிளம்பி சென்னைக்கு எங்க வீட்டுக்கு வரேன்னு மல்லிகா போன் செய்து இருந்தா, ஆனா அந்த ட்ரெயின் விழுப்புரம் கிட்ட ஆக்சிடென்ட் ஆகிட்டதா டிவில நியூஸ் வருது எனக்கு ஒண்ணும் புரியல நீங்க கொஞ்சம் பாருங்க நானும் அங்க வரேன்” என்பதை முழுதாக கேட்க முடியாமல் “அய்யோ மல்லிகா” என அலறிய பாண்டியன் மயக்கமாகி விட்டார்.
முசிறியில் இருக்கும் பாண்டியனின் மகள் பூமிகா குளித்தலையில் இருந்து மல்லிகாவின் அக்கா செவ்வந்தி குடும்பத்துடன் காரில் விழுப்புரத்துக்கு விரைந்த பாண்டியன் பயணம் முழுவதும் மல்லிகா மல்லிகா என புலம்பிக்கொண்டே வந்தார்.
இத்தனை பிரியத்தை மனசுல வச்சுட்டு அவளை நிதமும் கடிச்சு கொதர வேண்டியது என்ன மனுசனோ மனதில் ஓடிய எண்ணம் மல்லிகாவின் அக்கா செவ்வந்தியின் முகத்தில் பிரதிபலித்தது.
“அப்பா, அம்மாவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது நீங்க பதறாதீங்க” என தந்தையை சமாதானப்படுத்திய படி வந்தாள் பூமிகா.
ஆக்சிடென்ட் ஆன இடத்தில் பதற்றத்துடன் உறவினர்கள் கூட்டம் நின்று இருந்தது. என்ஜினை தொடர்ந்து இருந்த இரு அன்ரிஸர்வ்ட் பெட்டிகள் சின்ன பின்னமாகி இருந்தன. அந்த இரு பெட்டிகளில் இருந்த எவரும் பிழைக்கவில்லை. தீயில் கருகி விட்டதாக அங்கு கூடி இருந்தவர்கள் கூறினர்.
திடீரென புறப்பட்டவ அன்ரிஸர்வ்ட் பெட்டியில் தானே ஏறி இருப்பா என நினைத்தவர் “ஐயோ என்னை விட்டுட்டு போக உனக்கு மனசு எப்படி வந்துச்சு மல்லிகா” என வாய் விட்டு அலறினார் பாண்டியன். பூமிகா பேச்சுறைந்து போனாள்.
“இப்ப புலம்புங்க… கல்யாணம் ஆன நாளிலிருந்து அவள்கிட்ட ஒரு நல்ல வார்த்தை பேசி இருப்பீங்களா. போ போனு சொன்னீங்களே அதான் இப்ப பலிச்சு இருக்குது அவ ஓரேடியா போயிட்டா” தங்கையே இழந்த ஆதங்கத்தில் மனதில் இருந்ததை பாண்டியனின் முகத்துக்கு நேராக கேட்டார் செவ்வந்தி.
இதற்கு பதில் கூற இயலாமல் விக்கி விக்கி அழுதார் பாண்டியன். பாண்டியனின் மனம் முழுவதும் மல்லிகாவின் சேவைகளே நிறைந்து இருந்தது.
“நான் உன்னை அத்தன ஏசியும் வீட்டை விட்டு போறதுக்கு முன்னாடி ராத்திரி டிபன் கூட செய்து வச்சுட்டு தான் போன”. துக்கம் தாங்க முடியாமல் முகத்தில் அறைந்து கொண்டு அழுதார் பாண்டியன்.
அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை தடுக்க இயலாது அழுதனர். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பூமிகாவிடம் விவரம் கேட்டனர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பூமிகாவுக்கு தூரத்தில் மல்லிகா நடந்து வருவது போல் தெரிந்தது.
இது பிரமை தான் என கண்களை தேய்த்துக் கொண்டாள். ஆனால் பக்கத்தில் வரவர அது மல்லிகா தான் என தெரிந்ததும் பூமிகா அம்மா என கூவினாள். மல்லிகாவும் ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டாள்.
பூமிகாவோ “அம்மா அம்மா “என தேம்பித் தேம்பி அழுதாள்.
கணவரின் சொற்களால் காயப்பட்ட மல்லிகா முத்துநகர் எக்ஸ்பிரஸிற்கு டிக்கெட் வாங்கி அந்த அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மெண்டில் தான் ஏறினார். ட்ரெயின் விருத்தாசலம் வரும் வரை வருத்தத்தில் அழுது கொண்டே வந்தவருக்கு இப்படி யாரிடமும் சொல்லாமல் திருடனைப் போல் வீட்டை விட்டு வந்தது தவறு தானே எனத் தோன்றியது.
ரயில் ஏதோ ஸ்டேஷனில் நிற்கவும் வேகமாக ரயிலை விட்டு கீழே இறங்கினார் மல்லிகா. அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த ரயில் விபத்துக்குள்ளானது. அதுவே அவர் உயிர் பிழைக்க காரணமாய் இருந்தது.
தொட்டியத்தில் குலதெய்வம் கோவிலில் கிடா விருந்து.
“மல்லிகா அய்யனார் பூஜைக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டேன் சரியா இருக்குதா பாரு” பாண்டியன் தன் மனைவியிடம் கேட்டார்.
“சகலை என்ன ஒரே முட்டா அண்ணி பக்கமே சாஞ்சுட்டீங்க “என செவ்வந்தி யின் கணவர் பாண்டியனிடம் கேலி பேசினார்.
“சகலை இனிமே எல்லாம் இப்படித்தான் இந்த டிரெயின் விபத்துக்கு அப்புறம் தான் எனக்கு பெண்களோடு அருமையும் அவங்க இல்லைனா நாம எல்லாம் வெறும் பூஜ்யம்னு புரிஞ்சது. மனசார சொல்றேன் சகலை இனி என் வாயில நல்ல வார்த்தை மட்டும் தான் வரும் மறந்தும் மத்தவங்க மனசு வருத்தப்படுற மாதிரி எதுவும் பேச மாட்டேன்” என உறுதிமொழி எடுப்பது போல் கூறினார் பாண்டியன்.
இந்த மாதிரி ஏதாவது சம்பவம் நடந்தா தான் இவங்க எல்லாம் திருந்து வாங்க போல என நினைத்தாள் கணவரின் வார்த்தைகளைக் கேட்ட மல்லிகா.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings