in ,

பூ பூக்கும் ஓசை (சிறுகதை) – பவானி உமாசங்கர்

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்         

ரசத்துக்கு சீரகம் தாளித்து விட்டு அடுப்பை அணைத்தாள் அகிலா. ஹாலில் போன் அடிக்கவும் அதை எடுக்க வந்தவள் அங்கே கணவர் ராஜதுரை சுவாரசியமாக பேப்பர் படித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“போன் அடிச்சா எடுக்கவே மாட்டார்” என சலித்தபடி போனில் யார் என பார்த்தாள். சத்யா என நாத்தானாரின் பெயரைப் பார்த்து யோசனையாக போனை ஆன் செய்தாள். 

“அண்ணி எப்படி இருக்கீங்க அண்ணன் ஹரீஷ் மானஸி எல்லாம் எப்படி இருக்காங்க” என்று சத்யா கேட்டாள் பாசமாக.

“எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா” என்ற அகிலா, “அங்க நீ மாப்பிள்ளை குழந்தைங்க எல்லாம் நல்லாயிருக்கீங்க தானே” என பதிலுக்கு நலம் விசாரித்தாள்.

“அண்ணி அண்ணன் வீட்டில் தானே இருக்காரு, அவருகிட்ட போனை கொடுங்க கொஞ்சம் பேசணும்” என்றாள் சத்யா

“இதோ தரேன்” என்று போனை ராஜதுரையிடம் கொடுத்தாள். ‘போனில் யார்?’ என கேள்வியாக அவளை பார்த்தவரிடம் “சத்யாங்க” என்றாள் அகிலா. 

“சொல்லும்மா ம், ம் எப்போ பெங்களூர் கிளம்புறீங்க? நாளைக்கா? ஒரு வாரமா, ரொம்ப நல்லது, சரி சரி அண்ணிட்ட சொல்லிடறேன்” என போனை வைத்தார்.

அவர் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்த அகிலா,, “சத்யா பெங்களூர் போறாளா எதுக்கு என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“சத்யா வீட்டுக்காரர் எல்.டி.சி போட்டுட்டு குடும்பமா ஹரீஷ் வீட்டில் தங்கி மைசூர் பெங்களூர் எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரப் போறாங்களாம்” என்றார் இயல்பாக.

“ஏங்க உங்களுக்கு ஏதாவது தெரியுதா சத்யா ஹரீஷ் வீட்டுக்கு போறான்னு கூலா சொல்றீங்க” என்று அவரை கடிந்தவள், “ஹரீஷையும் மானஸியையும் குடித்தனம் வைச்சு இரண்டு மாசம் தான் ஆகுது. அந்த பொண்ணுக்கு சமைக்கவும் தெரியலை ஒண்ணும் தெரியலை, இப்ப இவங்க நாலு பேரும் அங்க போய் நின்னா அவளால் சமாளிக்க முடியுமா?” என்றாள் கோபமாக.

“அதெல்லாம் ஹரீஷ் பார்த்துக்குவான். கல்யாணம் ஆன புதுசுல உனக்கு மட்டும் என்ன தெரிஞ்சது, அந்தப் பொண்ணும் எல்லாம் கத்துக்குவா” என்றார் ராஜதுரை சிரித்தபடி. 

“ஆமா ஆனா ஊனா என்னைச் சொல்லுங்க” என்று சிடுசிடுத்தபடி போனை வாங்கிக் கொண்டாள் அகிலா.

சற்று நேரம் யோசனையாக இருந்த அகிலா மகன் ஹரீஷுக்கு போன் செய்தாள். ஹரீஷ் கொட்டாவி விட்டபடி என்னம்மா என்றான்.

“ஏண்டா மதிய நேர தூக்கமா இல்லை இப்பதான் எந்திரிச்சிங்களா” என்று கேட்டவளிடம்

“ஏம்மா நீ வேற மதியம் ஒரு குட்டித் தூக்கம் அவ்வளவுதான் இப்பதான் சத்யா அத்தை போன் செய்தாங்க அவங்க ஃபேமிலி நாளைக்கு மாலை இண்டர்ஸிட்டியில் இங்க வராங்க” என்றான் அயர்ச்சியாக.

“டேய் ஹரீஷ் இந்த விஷயம் மானஸிக்குத் தெரியுமா இரண்டு பேரும் எப்படி சமாளிப்பீங்க” என்றாள் அகிலா கலவரமாக. 

“எனக்கும் ஒண்ணும் புரியலைம்மா இந்தா மானஸிகிட்ட பேசு பக்கத்தில் தான் இருக்கா” என போனை மனைவியிடம் கொடுத்தான் ஹரீஷ்.

“அத்தை இப்பதான் இவர் சொன்னாரு எனக்கும் பயமாத்தான் இருக்குதுங்க அத்தை ” என்றாள் மானஸி குழப்பமாக.

“கண்ணு, சத்யா அத்தை நல்லவதான் உனக்கு அவளே சமையல்ல உதவி செய்துடுவா . ஆனா மாமா தான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் . பார்க்கற வரைக்கும் பார்த்துட்டு அந்த பொண்ணுக்கு வீட்டு வேலையே செய்யத் தெரியலை ஐ.டில வேலை பார்க்கும் பொண்ணுங்களே இப்படித்தான்னு எதையாவது சொல்லுவாரு” என்றாள் அகிலா கவலையாக. 

“நான் யூடியூப் பார்த்து சமையல் செய்துக்கறேன் அத்தை நீங்க கவலைப்படாதீங்க” என்றாள் மானஸி ஆறுதலாக.

“அது சரி சமையல் மட்டுமில்ல காலைல சீக்கிரம் எழுந்திரிக்கணும். வீட்டில் எல்லாம் சுத்தமா வைச்சிருக்கணும். அவங்க வீட்டில புள்ளைங்க முதல் கொண்டு சீக்கிரம் எழுந்திரிச்சு வேலை செய்யுங்க அதான்” என்றவள் “சரி இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒப்பேத்துங்க ” என்ற அகிலா போனை நிறுத்தினாள். 

பெங்களூரின் டிராஃபிக்கில் நீந்தி ஒரு வழியாக ராஜாஜி நகரில் இருந்த ஹரீஷின் வீட்டுக்கு வந்தனர் சத்யா குடும்பத்தினர்.

அவர்களை சற்று பயத்துடன் வரவேற்ற ஹரீஷையும் மானஸியையும் பார்த்து சத்யாவின் கணவன் சேகர், “டேய் ஹரீஷ் இயல்பா இருங்க இரண்டு பேரும் நாங்க என்ன அந்நியமா” என்று கூறி அவனை அணைத்து கொண்டான். இரவு உணவை ரயிலிலேயே முடித்திருந்ததால் சற்று நேரம் கலகலப்பாக பேசி விட்டு அனைவரும் உறங்கச் சென்றனர். 

மறுநாள் காலை 5.30மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொண்டாள் மானஸி சமையல் அறையில் விளக்கு எரிவதைப் பார்த்து பதறி அடித்துக் கொண்டு அங்கு வந்தாள்.

அங்கே காப்பி கலந்து கொண்டிருந்த சத்யா “மானஸி போ பல் விளக்கிட்டு வா காப்பி குடிக்கலாம்” என்றாள் புன்னகையுடன்.

“அத்தை நீங்க போய்” என இழுத்தவளை “அட பால், மாவு ஃப்ரிட்ஜில பார்த்தேன். ஷெல்பில காப்பிப்பவுடர் சர்க்கரை இருக்குது. காஃபி போட்டேன் தேங்காய் சட்னி செய்துட்டேன். இட்லி ஊத்த வேண்டியது தான் பாக்கி” என்றாள் சத்யா சிரித்தபடி.

“எதுக்கு இந்த நேரத்திலேயே அத்தை” என்று வினவினாள் மானஸி.

“பெங்களூரு முழுவதும் சுற்றி காட்டும் கர்நாடக அரசு பஸ்ஸில் தான் நாங்க புக் செய்து இருக்கோம் அது காலை 6.30மணிக்கு ராஜாஜி நகர் வந்துடும்னு சொன்னாங்க மானஸி.  மதிய சாப்பாடு வெளியே சாப்பிட்டுக்கறோம். இரவு டின்னர் மட்டும் நீ ப்ளான் பண்ணிக்கோ. நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்துக்கலாம்” என்றாள் சத்யா.

பேசிக் கொண்டிருக்கும் போதே சேகரும் பிள்ளைகளும் எழ மானஸி பரபரவென இயங்கினாள். சத்யாவுக்கு காத்திராமல் சேகர் பிள்ளைகளுக்கு உதவுவதைப் பார்த்து மானஸி வியந்து போனாள். 

சத்யாவின் குடும்பம் பெங்களூருவை சுற்றி பார்க்க கிளம்பியதும் ஹரீஷ் மானஸிக்கு போரடித்தது. இருவரும் இவ்வளவு காலையில் எழுந்ததேயில்லை துணிகளை வாஷிங் மிஷினில் போட்ட மானஸி, “ஹரீஷ் நாம வேணா ஒரு வாக் போகலாமா டிபனும் ரெடி ஆயிடுச்சு” என்றாள் உற்சாகமாக.

இருவருக்கும் பெங்களூரின் காலைக் குளிரில் சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு வாக் போவது சுகானுபவமாக இருந்தது. இருவர் மனதிலும் அட இத்தனை நாள் இதை என்ஜாய் பண்ணாம இருந்திருக்கிறோமே என்று தோன்றியது. 

இரவு எட்டு மணியளவில் வீடு வந்தனர் சத்யா குடும்பத்தினர். பெங்களூரில் சுற்றி பார்த்த லால் பார்க் கப்பன் பார்க் விதான் செளதா பசவங்குடி நந்தி போன்றவற்றை பற்றி பிள்ளைகள் இருவரும் ஹரீஷ் மானஸியிடம் வளவளத்துக் கொண்டிருந்தனர்.

இரவு உணவாக சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா யூடியூபில் பார்த்து ஹரீஷின் உதவியுடன் மானஸி தயார் செய்திருந்தாள். மானஸிக்கு பெருமை தாளவில்லை.

“அத்தை இது தான் முதல் முறையாக நான் இத்தனை பேருக்கு சமைத்தது” என்றவளிடம்

சத்யா, “சமையல் என்ன கை வராத கலையா கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் இருந்தா போதும். நீ எல்லாம் நல்லா செய்யலாம்” என அவளை ஊக்குவித்தாள். 

அடுத்த இரண்டு நாட்கள் சத்யா குடும்பத்தினர் மைசூரில் தங்கி அங்கு சுற்றிப் பார்க்க சென்றனர். அவர்கள் அங்கு இல்லாவிட்டாலும் ஹரீஷ் மானஸிக்கு காலை நடைபயிற்சியை விட மனமில்லை. இரவு சீக்கிரம் தூங்கி விடியற்காலையில் எழுவது இருவரின் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது.

அடுத்து வந்த இருநாட்களும் விடுமுறை என்பதால் சத்யா குடும்பத்துடன் ஹரீஷ் மானஸியும் வெளியே சென்று வந்தனர். சனியன்று பெங்களூர் வொண்டர்லா வெய்ன் யார்ட் போய் விட்டு ஞாயிறு முடிவாக கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் ஷாப்பிங் அல்சூர் நடைபாதை கடைகளில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினர். 

மறுநாள் சத்யா குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பிய போது “அத்தை உங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க, சமையல் செய்ய வீட்டை சுத்தமா வைக்க வீட்டுக்கு தேவையானதை மட்டும் பார்த்து பார்த்து வாங்கறது இப்படி எவ்வளவோ நானே புதுசா மாறின மாதிரி இருக்கு” என்ற மானஸியிடம்

சத்யா, “இது எல்லாம் நம்ம ஜீன்லேயே இருக்கும்மா. கண் பார்த்ததை கை செய்யுனுவாங்க பெரியவங்க கொஞ்சம் நம்மை யாராவது ஊக்குவிச்சா போதும் நாம் எல்லாமே சரியா செய்வோம். சின்ன வயசுல நான் உன்னை மாதிரி தான் இருப்பேன். என் அண்ணி அதான் உன் மாமியார் அவங்க கல்யாணம் முடிஞ்சு எங்க வீட்டுக்கு வரும் போது எனக்கு ஒரு பத்து வயசு இருக்கும். அகிலா அண்ணி வீட்டு வேலையெல்லாம் நல்லா செய்வாங்க. ஆனா ஏதாவது ஒரு வேலை தவறா செய்தா உங்க அம்மா இப்படி தான் உனக்கு சொல்லி கொடுத்தாங்களானு என் அம்மா கேட்பாங்க. நாம சரியா செய்யலைன்னா நம்ம பெற்றோர்களைத் தான் குறை சொல்லுவாங்கனு புரிஞ்சுக்கிட்டேன் . அதுதான் என்னை மாற்றியது” என்ற சத்யாவிடம்

“நீங்களும் என்னை மாதிரியா இருந்தீங்க அத்தை” என ஆச்சரியமாக கேட்டாள் மானஸி . 

சத்யா சிரித்தபடி “உங்க அம்மா சொல்லிக் கொடுக்காததையா நான் புதுசா கத்துக் கொடுத்திருக்கேன். பூ பூக்கும் ஓசை யாருக்காவது கேட்குமா அது போலத்தான் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் கூட, அது தானே வரும். கால மாற்றத்தால் உங்க பணியின் தன்மை வேறு மாதிரி அமைந்தாலும் சில அடிப்படை பழக்கங்களை நாம் பின் பற்றித்தான் ஆகணும். அதுதான் நம்ம ஆரோக்கியத்துக்கும் குடும்பத்துக்கும் நல்லது” என முடித்தாள்.

அனைவரும் ஹரீஷ் மானஸியிடம் பிரியா விடை பெற்று கோவை திரும்பினர். 

அகிலா மகன் ஹரீஷுக்கு போன் செய்தாள். “அம்மா நானே உனக்கு போன் செய்ய நினைச்சேன். அத்தை இங்கு வந்துட்டு போனதுல எங்க இரண்டு பேருக்குள்ளும் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும்மா. காலையில் சீக்கிரம் எழுந்து வாக் போறோம் வீட்டில் சமையல் செய்து சாப்பிடறோம். எல்லா வேலைகளையும் இரண்டு பேரும் சேர்ந்து செய்யறோம்”

ஹரீஷின் குரலில் இருந்த உற்சாகம் அகிலாவையும் தொற்றிக் கொள்ள, “ஐயோ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என மனம் விட்டு சிரித்தாள் அகிலா

இந்த மாற்றம் வர காரணமான ராஜதுரையை போனில் சத்யா அழைக்க எடுத்துப் பேசினார். “ஆமாம்மா நாங்க பெங்களூர் போன போது உன் அண்ணி கொஞ்சம் மாமியார் தோரணையில இருந்தா, அந்த பொண்ணு மானஸியும் இறுக்கமாவே இருந்தா. அதான் நான் உன்னை அங்கே போயிட்டு வர சொன்னேன். இப்போ நல்ல மாற்றம்னு உங்க அண்ணி சந்தோஷம் ஆயிட்டா” என கலகலவென சிரித்தார் ராஜதுரை. 

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 1) – பவானி உமாசங்கர்