எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பெங்களூரின் ஹெச் எஸ் ஆர் லே அவுட்டில் இருந்த ஃப்ளாட்ஸின் இரண்டாவது தளத்தில் இருந்த அந்த வீட்டை சுற்றி பார்த்தனர் ஹரீஷும் ரூபாவும்.வீடு நம்ம ஆபீஸுக்கு பக்கம், மற்ற எல்லா வசதிகளும் இருக்கு.
இது ஓகேடா என்றாள் ரூபா ஹரீஷிடம். அப்போ இதையே முடிச்சுடலாம் என்று கூறிய ஹரீஷ் போனில் வீட்டுச் சொந்தக்காரரிடம் பேசி விட்டு அட்வான்ஸ் பணத்தையும் உடனடியாக ஜிபே செய்தான்.
எதிர் வீட்டிலிருந்து அவர்களைப் பார்த்த கெளரி புதுசா கல்யாணம் ஆனவங்க போல என நினைத்து புன்னகைத்தாள். மறுநாள் காலை இரண்டு சூட்கேஸுகளுடன் வந்த ஹரீஷும் ரூபாவும் ரிலாக்ஸாக அமர்ந்தனர்.
“ஹேய் ரூபா சீக்கிரம் குளிச்சுட்டு வா, வெளிய போய் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு மாலுக்கு போய் படம் பார்த்துட்டு லன்ச் முடிச்சுட்டு வந்துடலாம் ” என்றான் ஹரீஷ் உற்சாகமாக.
“அப்படிங்கற ஓகே “என்று துள்ளி எழுந்த ரூபா குளியலறைக்குச் சென்றாள்.
குளித்து முடித்து க்ராப் டாப்பும், பென்சில் ஃபிட் பேண்ட்டும் அணிந்து வந்த ரூபாவை பின்புறமிருந்து கட்டித் தழுவி கழுத்தில் முத்தமிட்டான் ஹரீஷ். நோ ஹரி முதல்ல குளிச்சுட்டு வா” என்று அவனை விலக்கி சிரித்தாள் ரூபா
“ஓகே” என்று குளியல் அறைக்குச் சென்றான் ஹரீஷ் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்த ரூபாவிற்கு பாவடை தாவணி அணிந்து தஞ்சாவூர் கல்லூரியில் படித்த ரூபா நினைவில் தோன்றினாள்.
தினசரி வீட்டிலிருந்து கல்லூரி சென்று என்ஜினியரிங் படித்து முடிக்கும் வரை பெற்றோரின் கண்டிப்பு கண்காணிப்பில் பயந்து உலகம் தெரியாமல் இருந்தவள் ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து பெங்களூரு வந்ததும் ஒரே மாதத்தில் கட்டவிழ்த்து விட்ட கன்றுக் குட்டியாக திரிந்தாள்.
வீட்டில் அப்பா வைத்தது தான் சட்டம். அம்மாவோ எல்லாம் நம்ம நல்லதுக்குத் தான் அவரு சொல்லுவார் என்று கண்ணை மூடிக் கொண்டு கணவனுக்கு அடி பணிந்தாள்.
“ஏம்மா உனக்குன்னு ஒரு விருப்பம் கிடையாதா நீ வெளில வந்து பாரு உலகம் எப்படி இருக்குன்னு” என்று சண்டை போடுவாள் ரூபா அவள் அம்மாவிடம்.
“நீ வேலைக்கு போனதும் அதிகமா பேசறடி, அப்பாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாரு” என்பாள் அம்மா பதிலுக்கு
அந்த அடக்குமுறை தான் தன்னை இந்த வாழ்க்கைக்குள் திணித்ததோ என்று நினைத்தவள் “நோ சென்டிமென்ட் ரூபா நிகழ்காலத்தை மட்டும் நீ பாரு” என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.
குளித்து முடித்து ஷார்ட்ஸ், டீசர்ட்டில் ஸ்மார்ட்டாக அங்கு வந்த ஹரீஷைப் பார்த்து ரூபா முகம் மலர்ந்தாள். ரூபாவின் வீடு அளவுக்கு மீறிய கவனிப்பும் அதிகார அடக்குமுறையும் என்றால் ஹரீஷின் வீட்டில் அதற்கு நேர் எதிர் அதீத செல்வ வளம். பெற்றோரின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்ததால் அன்பான குடும்ப உறவுகளைப் பற்றி அறியாதவன்.
தனக்கு பிடித்ததை மனதில் தோன்றியதை செய்பவன். அங்கே அவனை கேள்வி கேட்பார் யாரும் இல்லை. அப்பா தன் பிஸினஸுக்காக உலக நாடுகள் முழுவதும் சுற்றி வருபவர். அம்மாவோ சமூக சேவை லேடீஸ் க்ளப் என்று இயங்குபவள்.
ஹரீஷ் படிப்பை முடித்ததும் கொஞ்ச நாட்கள் வெளியில் வேலை பார்த்து உலக அறிவைப் பெற்ற பின் தந்தையின் பிஸினஸை பார்க்கிறேன் என வீட்டை துறந்தான். பெங்களூருவின் ஒரு உணவகத்தில் இருவரும் ஒரு மோதலில் சந்தித்தவர்கள் கடைசியில் காதலில் சங்கமித்தனர்.
ரூபா ஹரீஷ் இருவருக்கும் திருமணம் என்ற அந்த பந்தம் ஒவ்வாமையாகவே இருந்தது. தங்கள் சுயத்தை இழந்து மற்றவர்களுக்காக வாழும் வாழ்வு, ஒரு நிறைவான வாழ்க்கையில்லை என்றே எண்ணினர்.
ஒருவரை ஒருவர் சாராமல் மனதுக்கு பிடித்ததை செய்து கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து பார்த்தால் என்ன என்று ஹரீஷ் கேட்கவும் ரூபாவும் மனம் ஒப்பினாள். ஒத்து வந்தால் கடைசி வரை சேர்ந்து வாழ்வது இல்லையேல் அவரவர் வழி அவரவர்க்கு என்றும் முடிவு செய்தனர். உடனே அதை செயல்படுத்த இங்கு குடி வந்தனர்.
அடுத்த வாரம் முழுவதும் இருவருக்கும் ஆஃபீஸ் வேலை அதிகமிருந்ததால் காலையில் சாண்ட்விச் நூடுல்ஸ் என்றும் மதியம் ஆஃபீஸ் கேண்டீன் இரவு ஏதோவொரு ஹோட்டலில் உணவு என ஓடியது. அன்று விடுமுறை நாள் என்பதால் காலை பத்து மணிக்கு எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து வெளிவந்து எதிர் வீட்டைப் பார்த்த ஹரீஷ் அங்கு எதிர் வீட்டுக்காரர் பரபரப்பாக ஏதோ தேடுவதை பார்த்தவன் எதிர் வீட்டின் உள்ளே வந்து “அங்கிள் என்ன எதையாவது தேடறீங்களா” என்று கேட்டான்.
அவர் பதில் கூறாமல் திரும்பவும் கண்களால் தேடி கடைசியாக டிவியின் அருகில் இருந்த ஹியர்ங் எய்டை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு “இப்ப சொல்லுப்பா என்ன சொன்ன” என்று கேட்டார்.
“ஏதோ பரபரப்பா இருக்கீங்களே என்ன அங்கிள்?” என்று கேட்ட ஹரீஷிடம்
“என் மனைவிக்கு உடம்பு சரியில்லைப்பா வீட்டு வேலையெல்லாம் எனக்கு எதுவும் செய்யத் தெரியலை அவ என்னை குழந்தை மாதிரி பார்த்துக்குவா. அவளுக்கு ஒரு கஞ்சி வைச்சு தரத்தான் நான் இவ்வளவு பரபரப்பா இருக்கேன்” என்று கூறி சிரித்தார்.
“நான் வேணா ஹோட்டலில் இருந்து டிபன் வாங்கிட்டு வரவா?” என்றவனிடம்
“வேண்டாம் வீட்டில மாவு இருக்குது. நான் செய்துக்குவேன்” என்று மறுத்தார் ரமணன்.
“சரி பாருங்க” என்று கூறி தன் வீட்டுக்கு வந்த ஹரீஷ், தூங்கி எழுந்து கொட்டாவியுடன் அமர்ந்திருந்த ரூபாவைப் பார்த்தான்.
“ரூபா எதிர் வீட்டு ரமணன் அங்கிளுக்கு காது கேட்காது போல ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்லை அவரே ஏதோ சமைக்க ட்ரை பண்ணறாரு பார்க்க வேடிக்கையாயிருக்குது” என்றான்.
“எனக்கும் தெரியும்பா அவருக்கு காது கேட்காதுன்னு இரண்டு நாளைக்கு முன்னே நான் ஆஃபீஸில் இருந்து வந்த போது ஆண்ட்டி ரொம்ப கவலையோட கீழே வந்து தெருவையே பார்த்துட்டு இருந்தாங்க என்னன்னு கேட்டா ஹியரிங் எய்டை மாட்டாம அங்கிள் கடைக்கு போயிருக்காரு. அவருக்கு பின்னால் வண்டி வரும் சத்தம் கேட்காது ரோட்டில் நடக்கும் போது யாராவது இடிச்சுட போறாங்கன்னு புலம்பினாங்க . நான் போய் வண்டியில கூட்டிட்டு வந்தேன். அது கூட நான் உன்னை அனுப்பினதா சொல்லாத கோவிச்சுக்குவாருன்னு வேற சொன்னாங்க ஆண்ட்டி” என்று கூறினாள் ரூபா.
இருவர் மனதிலும் இது என்ன மாதிரியான உணர்வு திருமண பந்தத்தால் வந்த பதட்டமா என்ற கேள்வியும் எழுந்தது. எதுவானாலும் சரி இந்த மாதிரி சென்டிமென்ட் இடியட்ஸா நாம் இருக்கக் கூடாது என்றும் தோன்றியது.
ஆனால் அவர்கள் எப்படி இருந்தாலும் இருவரும் கெளரி ரமணனின் அன்புக்கு கட்டுப்பட்டார்கள். அன்று ஹரீஷின் பிறந்த நாள். தவிர்க்க முடியாத காரணத்தால் ஆஃபீஸ் கிளம்பிய ரூபா பிறந்த நாளை கொண்டாட மாலை ஐந்து மணிக்குள் வீட்டில் இருப்பேன் என ஹரீஷுக்கு உறுதியளித்து விட்டு சென்றாள். வீட்டிலிருந்த படி வேலை செய்த ஹரீஷிடம் பிறந்த நாள் பரிசாக ஸ்வீட்டும் டீஷர்ட்டும் கொடுத்தனர் ரமணன் தம்பதியர்.
நேரம் போவது தெரியாமல் லேப்டாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த ஹரீஷ் திடீரென போனை பார்த்தவன் அட மணி 6 ஆயிடுச்சு ரூபா ஏன் இன்னும் வரலை என நினைத்து அவளுக்கு போன் செய்ய கையில் எடுத்தவனின் போன் சிணுங்கியது.
போனில் ரூபாவின் பெயர் ஒளிர்ந்ததும் செல்ல கோபத்துடன் “ஹேய் இப்போ மணி என்ன தெரியுமா” என்று பேசிய ஹரீஷிடம்
“சார் நாங்க அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து பேசறோம்” என்றது ஒரு ஆண் குரல்.
போனில் செய்தி கேட்ட ஹரீஷின் ஒவ்வொரு செல்லிலும் படபடப்பும் பரபரப்பும் தொற்றிக் கொண்டன. வீட்டை பூட்டிக் கொண்டு வெளிவந்த ஹரீஷ் எதிரில் கெளரியைப் பார்த்ததும் உடைந்து போய் அழுதான். ரூபாவிற்கு ஆக்ஸிடன்ட் ஆன விபரம் அறிந்து கெளரி யும் ரமணனும் அவனுடன் மருத்துவமனைக்குச் சென்றனர்.
மருத்துவமனையில் நர்ஸ் ஹரீஷிடம் “சார் நீங்க பேஷண்ட்டோட கணவர் தானே இதுல ஒரு ஸைன் போடுங்க அவங்களுக்கு தலையில் உடனடியா ஆப்ரேஷன் செய்யணும்” என ஒரு பேப்பரை நீட்டினார்.
ஹரீஷ் பதில் சொல்லத் தெரியாது சற்று விழித்தவன் “இல்லை நான் அவங்களோட ஃபிரண்ட்” என்றான். ரமணன் தம்பதியர் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“இவங்களாவது அவங்க பேரண்ட்ஸா” என்று கேட்ட நர்ஸ், “ஹஸ்பெண்டோ இல்ல பேரண்ட்ஸோ தான் ஸைன் பண்ண முடியும். அப்புறம் ஏதாவது பிரச்சினைன்னா அதுக்கு ஹாஸ்பிடல் பொறுப்பெடுத்துக்க முடியாது. அதான் கேட்கிறேன்” என்றார் சற்று கண்டிப்புடன்.
“ஹரீஷ் நீ ஸைன் போடுப்பா இவர் அந்த பெண்ணுக்கு கணவராகப் போறவர்தான் சிஸ்டர்” என்று இருவரிடமும் கூறி அந்த பிரச்சனையை சமாளித்தாள் கெளரி.
இரண்டு பேரையும் புதுசா கல்யாணம் ஆனவங்கன்னு நினைச்சுட்டு இருந்தா இவங்க என்ன மாதிரி வாழ்க்கை வாழறாங்க என மனதில் புலம்பித் தீர்த்தாள் கெளரி.
ஒரு வார மருத்துவமனை வாசத்திற்கு பின் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தாள் ரூபா. வீட்டுக்கு வந்த அவளை தன் மகள் போல் கவனித்துக் கொண்டாள் கெளரி.
ரூபா சற்று உடல் தேறியதும் கெளரி அவர்களை அழைத்து “நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க கோபிக்க மாட்டீங்களே” என்று பீடிகையுடன் பேசினாள்.
“என்ன ஆண்ட்டி இப்படி கேட்கிறீங்க நீங்க சொல்லுங்க நாங்க செய்யறோம்” என்றனர் இருவரும்.
“நீங்க இரண்டு பேரும் திருமணம் செய்துக்காம சேர்ந்து வாழறீங்கன்னு நினைக்கிறேன்” என கெளரி பேச ஆரம்பித்ததும்
“ஆண்ட்டி அது வந்து” என்ற ரூபாவை
“இரும்மா நான் சொல்லி முடிச்சுடறேன்” என்றாள் கெளரி வேகமாக.
“உங்களுக்கு திருமணம் என்ற இந்த சமூக கட்டமைப்பு பிடிக்கலை. அதை விட புரியலை . ஆனா அது எவ்வளவு முக்கியம்னு மருத்துவ மனையில் அந்த நர்ஸ் கேட்டபோதே ஹரீஷுக்கு புரிந்து இருக்கும். வீடுன்னா என்னன்னு நினைச்சீங்க. பறவைகளும் விலங்குகளும் மாலை நேரத்தில் வந்து அடையும் கூடுன்னு நினைச்சீங்களா. வீடு உணர்வுகளோட குவியல். அதுல ஆசை கோபம் பாசம் அன்பு எல்லாம் கலந்து இருக்கும். அதெல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும்.
ஆஃபீஸில் வேலை செய்துவிட்டு மூணு நேரமும் உணவை வெளியே சாப்பிட்டு விட்டு தூங்க மட்டும் தான் வீடுன்னா நாமெல்லாம் விலங்குகள் இல்லையே. கணவன் மனைவி என்ற இந்த பந்தம் அடுத்து வரும் குழந்தை என்ற சொந்தம் ஒரு மனிதனை அடுத்தடுத்து நிலைக்கு எடுத்துட்டுப் போற விஷயம். அதை ஏதோ வியாபார ஒப்பந்தம் மாதிரி பிடிச்சு இருந்தா சேர்ந்து இருப்போம் இல்லைன்னா பிரிஞ்சுடலாம் என்பதா லிவிங் டுகெதர்.
எத்தனை மனவேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி அதை களைந்து ஒற்றுமையுடன் இருக்கத்தான் இந்த திருமண பந்தம். இது நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும் கொடுக்குது. குற்றம் குறைகளோட மனிதர்களை ஏத்துக்கிட்டு அதுல நல்லதை எடுத்துட்டு சேர்ந்து வாழறது தான் லிவிங் டுகெதர். இரண்டு பேரும் உங்க பெற்றோரிடம் உங்க காதலை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குங்க. அவங்க சம்மதம் கொடுக்கலைன்னா நாங்க உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம்” என்றாள் கெளரி முடிவாக.
இருவரும் மெளனமாக தலையை ஆட்டி கெளரியை ஆமோதித்தனர்.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings