இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜஹம்சனும் மதுவந்தியும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துகின்றனர். மதுவை அடிக்கடி சந்திக்க ஏதுவாக தங்கள் தொழிற்சாலையின் ஆண்டுவிழாவை பயன்படுத்திக் கொள்கிறான் ஹம்சன்.
வாழ்க்கை ஒவ்வோரு நிமிடமும் ஒளித்து வைத்திருக்கும் அதிசயத்தில் இன்பமும் இருக்கலாம் துன்பமும் இருக்கலாம், எதிர்பாராதது எல்லாம் நடப்பது தானே வாழ்க்கை. மதுவந்திக்கு தான் இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது. ராஜஹம்சன் தன் மனதை அவளிடம் வெளிப்படுத்திய அந்த தருணத்தை நினைத்து நினைத்து ரசித்தாள்.
“என்னடி ஒரு மார்க்கமாய் இருக்கிற?” என்று நீலாம்பரி கேட்டதற்கு கூட வகுப்பில் சிரித்து மழுப்பி விட்டாள் மது. ஆனால் விடுதி அறைக்கு வந்ததும் தோழியிடம் அந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டாள் மது.
“ஓ… அப்போ ரெண்டு பேருக்கும் காதல் நோய் ஸ்டார்ட் ஆயிடுச்சா” என்று கூறி சிரித்தாள் நீலாம்பரி. “ஆமாண்டி ஆனா அந்த வில்லி ப்ரியாவையும் வில்லன் சரவணனையும் நினைச்சா தான் பயமா இருக்குடி” என்றாள் மது கவலையுடன்.
“நீ தான் உங்க அம்மாகிட்ட சரவணன் வேண்டான்னு சொல்லிட்ட இல்ல. அப்புறம் எதுக்கு கவலை. ப்ரியாவை நாம பார்த்துக்கலாம். ஃப்ரீயா விடு. எல்லாம் நல்லா நடக்கும்” என்று ஆறுதலாக கூறினாள் நீலாம்பரி.
ஊட்டியில் இருக்கும் தன் அம்மா கனகாவுக்கு போன் செய்து, மதுவந்தி சரவணன் கல்லூரிக்கு அவளை பார்க்க வந்தது குறித்து சொன்னதும் கனகா குன்னூரில் இருக்கும் தன் தம்பி திவாகரை போனில் ஒரு பிடி பிடித்தாள்.
“நான்தான் மது போட்டோவ அனுப்பாதேன்னு சொன்னேன் இல்ல. இப்ப பாரு அந்த பையன் சரவணன் அவ படிக்கிற காலேஜுக்கே போய் இருக்கிறான். இது தெரிஞ்சா உங்க மாமா அவ்வளவுதான் டென்ஷன் ஆகிடுவாரு” என்று தம்பியை கடிந்து கொண்டாள்.
“அக்கா அக்கா ப்ளீஸ் அவன் ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல காலேஜுக்கு போயிட்டான். இனி அது மாதிரி நடக்காது நான் பார்த்துக்கிறேன் அக்கா நீ டென்ஷன் ஆகாத மாமாவுக்கும் தெரிய வேணாம் சரியா” என்று கெஞ்சினான் திவாகர்.
“என்னவோ போ மதுவுக்கு அந்த பையனை பிடிக்கவே இல்லை” என்று கூறிய கனகாவிடம், “சரிக்கா மதுவோட விருப்பம் தான் முக்கியம். அவளுக்கு பிடிக்கலைன்னா இதோட நிறுத்திக்கலாம் விடு அவங்களுக்கு ஜாதகம் சேரவில்லை என்று காரணம் சொல்லிக்கலாம் சரியா” என்று முடித்தான் திவாகர்
“சரி” என்று கூறி போனை வைத்த கனகா பெருமூச்செறிந்தார் கணவருக்கு இது விவரம் தெரிந்தால் தம்பிக்கு திட்டு கிடைக்குமே என்று நினைத்ததும் கனகவல்லி கலவரமானார்.
மதுவந்தியிடம் தன் காதலை கூறியது ஹம்சனுக்கு மிகுந்த நிம்மதியை தந்தது. அதைவிட வந்தியின் கண்கள் அவன் கண்களுடன் கலந்த அந்த தருணத்தை நினைத்ததும் அவன் மேனி சிலிர்த்தது. அவன் நினைப்பில் அவள் கண்களின் ஒளி அவன் நெஞ்சை துளைப்பது போல் இருந்தது. “கண்ணம்மா என் உயிரே” என்றவன் கண்களை மூடி கற்பனையில் மிதந்தான்.
“தம்பி” என்று கூப்பிட்டபடி அவனை பார்க்க அவன் அறைக்கு வந்த மீனாட்சி அவன் கண்களை மூடி ஒரு மோனை நிலையில் இருப்பதை பார்த்து சத்தம் இல்லாமல் திரும்பி விட்டார்.
“என்ன ஆச்சு இந்த பையனுக்கு, முதல்ல அவன் அக்கா உமையாளுக்கு போன் போட்டு அவளை அவனோடு பேச சொல்லணும். அவகிட்ட தான் அவன் உண்மையை சொல்லுவான்” என்று நினைத்தவர் தன்மகள் உமையாளுக்கு போன் செய்தார்.
“என்னம்மா எல்லாம் எப்படி இருக்கீங்க” என்று கேட்ட உமையாளிடம் “உன் தம்பிக்கு தான் ஏதோ ஆயிடுச்சு நீ என்னன்னு கேளு அவனை” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
உமையாளும் “அந்தப் பெண் மதுவந்தி நினைப்பாய் இருக்கும் நான் கேட்கிறேன் அவனிடம் சீக்கிரமே அவனுக்கு ஒரு நல்லது நடக்கணுமா” என்றாள் பாசத்துடன்.
ராஜஹம்சன் தன் காதலை வளர்த்துக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், தொழில் நிர்வாகத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சரியான ஆட்களிடம் வேலைகளை பகிர்ந்து அளித்து பொன்விழா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டான்.
அவ்வப்போது மதுவந்தியின் கல்லூரிக்கு வந்து கலை நிகழ்ச்சியில் நடனங்களை பார்வையிடும் சாக்கில் மதுவிடவும் தனியாக இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டு செல்வான்.
அதில் காதல் வார்த்தைகள் எதுவும் இராது. ஆனால் ஹம்சனின் ஆழமான அன்பும் அக்கறையும் அதில் வெளிப்படும். மதுவுக்கோ ஹம்சனை பார்த்தாலே மது உண்டது போல் கண்கள் கிறங்கி காதல் அருவியாய் பொங்கி வழியும். அவ்வப்போது நீலாம்பரி தான் அவள் கைகளை பற்றி அது கல்லூரி என நினைவுறுத்துவாள்.
ப்ரியாவுக்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க அவள் மனமும் உடலும் எரிந்தது. இது என்ன காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனது மாதிரி இல்லை இருக்கு.
என் அம்மா சரியாத்தான் சொல்றாங்க. அத்தானை நீ பிடிச்சுக்கோ மாளாத சொத்துடி அவங்களுக்கு, இலவு காத்த கிளி மாதிரி ஆகிவிடாதேன்னு புலம்புறாங்க. ஆனா இங்க நடக்குற விஷயத்தை எல்லாம் பார்த்தா நான் இலவு காத்த கிளி தான் போல.
ஐயோ இதை எப்படி தடுக்கிறது. அத்தையும் மாமாவும் கூட ஹம்சன் அத்தானுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. அவங்ககிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லை. ப்ரியாவின் மூளை கிரிமினலாக யோசிக்க தொடங்கியது.
ஊட்டியில் தன் பூக்கடை வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த மதுவந்தியின் தந்தை ஜெகன்நாதன் அன்று மாலை போனில் வந்த ஒரு செய்தியால் மிகுந்த பதட்டமும் கோபமும் ஆனார். உடனடியாக வேலை ஆட்களிடம் கடையை கவனிக்க சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
“கனகா, கனகா” என்று கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன். “இது என்ன புதுசா இருக்குது” கணவரின் செய்கையில் அதிர்ந்து போய் நின்றார் கனகவல்லி.
” என்ன நடக்குது மது காலேஜ்ல அவ என்ன நெனச்சிட்டு இருக்கா எனக்கு எதுவும் புரியல” என்று படபடப்புடன் பொரிந்தார் கணவரின் கோபத்தை அறிந்து “யார் என்ன சொன்னாங்க உங்ககிட்ட” என்று மெல்லிய குரலில் கேட்டார் கனகா.
“உன் தம்பி திவா வீட்டுக்கு எதிர் வீட்டு பையன் சரவணனுக்கு மதுவோட ஜாதகம் பொருந்தக்கூட இல்ல அதுக்குள்ள அந்த பையன் அவளை காலேஜுக்கு போய் பார்க்கிறானாம். இன்னும் யாரோ விசாகா மோட்டார்ஸ் வீட்டு பையனாம் அவன் அடிக்கடி வந்து நம்ம மகளை பார்த்து பேசுறானாம்” என்று கோபத்துடன் அடிக்குரலில் கூறினார் ஜகன்நாதன்.
“ஏங்க இதெல்லாம் யார் உங்களுக்கு சொன்னாங்க” என்று கேட்ட கனகாவிடம் “கொஞ்ச நேரத்துக்கு முன்ன போன்ல ஒரு பொண்ணு சொன்னா அவளும் அதே காலேஜ்ல தான் படிக்கிறாளாம்” என்று கடுகடுவென கூறினார் ஜகன் நாதன்.
“ஏங்க ஏதோ அனாமதேய போன் காலை நம்புவீங்க நம்ம மகளை நம்ப மாட்டீங்களா. என் தம்பி திவா அந்த சரவணன் வீட்டுக்கு ஜாதகத்தோட மது போட்டோவும் சேர்த்து கொடுத்துட்டான். அந்த பையன் போட்டோவில பார்த்த பொண்ணை நேர்ல பார்க்க காலேஜுக்கு வந்துட்டான் போல. மது போன வாரத்திலேயே ஒரு நாள் போன்ல சொல்லி அழுதா. நானும் திவாகிட்ட போட்டோவை ஏன்டா கொடுத்தேன்னு அவனை நல்லா திட்டினேன். அவனும் பாவம் அந்த பையன் ஏதோ ஆர்வக்கோளாறுல அப்படி செய்துவிட்டான். அவங்க வீட்ல சொல்லி கண்டிக்க சொல்றேனுட்டான்” என்றார் கனகா விபரமாக.
“இவ்வளவு நடந்து இருக்குது நீ ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல” என்று கூறி முறைத்தார் ஜெகன்நாதன். “உங்ககிட்ட சொன்னா நீங்க கோபப்படுவீங்க. நான் ஏற்கனவே திவாகிட்ட கேட்டு அவனை திட்டவும் செய்துட்டேன் அதான்” என்று கூறியவர் “சரி கை கால் முகம் கழுவிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம்” என்று கணவரை அழைத்தார் கனகா.
“இந்த பொம்பளைங்களுக்கு எல்லாம் சாதாரணமா தெரியுது. காலம் கெட்டு கிடக்குது. வெளியூருக்கு பெண்ணை படிக்க அனுப்பி வைச்சுட்டு நமக்கு தூக்கம் வர மாட்டேங்குது” என முன்னுமுணுத்தவர் கனகாவிடம் “இரு நான் கடைப்பையன் சோமுவுக்கு போன் செய்து கடை சாவியை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டு போகச் சொல்றேன்” என்றார் ஜகன்நாதன் சலிப்புடன்.
” உதயனை கடைக்கு போய் சாவியை வாங்கிட்டு வரச் சொல்றேன், நீங்க வாங்க. மாதவியும் சோமுவும் பஸ் பிடிச்சு வீட்டுக்கு போகணும் இல்ல அவங்களுக்கு ரொம்ப லேட் ஆயிடும்” என்றார் கனகவல்லி.
வேலை ஆட்களின் மேல் தன் மனைவிக்கு இருந்த அக்கறையை பார்த்து புன்னகைத்தார் ஜகன்நாதன். இந்த பரிவும் பாசமும் இருப்பதால்தான் அவர்கள் இருவரும் கடந்த பத்து வருடங்களாக நம்மிடம் வேலை செய்கின்றனர் என நினைத்துக் கொண்டார் ஜகன்நாதன்.
ஆபீஸில் வேலையாக இருந்தவனின் போன் ஸ்கிரீனில் தன் அக்கா உமையாளின் படத்தையும் பெயரையும் பார்த்த ஹம்சன் அதை உயிர்ப்பித்து “என்ன உமை அத்தான் வீட்டில் இல்லையா எனக்கு போன் செய்யற” என்றான் கேலியாக.
“டேய் போதும்டா கேலி நீதான் அப்பப்போ மோன நிலைக்கு போயிடுறேன்னு அம்மா புலம்புறாங்க, சரியா சாப்பிடறது இல்ல தூங்கறதில்லைன்னாங்க. என்ன விஷயம். ஜெயந்தி கல்யாணத்துல பார்த்த பொண்ணா நீ ப்ரொபோஸ் பண்ணிட்டயா அவகிட்ட” என்று தொடர்ந்து பேசினாள்.
” உமை உமை கொஞ்சம் மூச்சுவிட்டுக்கோ” என்று கூறி சிரித்தவன் “இப்பதான் நீ எனக்கு அக்கான்னு ப்ரூஃவ் பண்ற சூப்பர் எப்படி கண்டுபிடிச்ச “என்று கேட்டான் ராஜஹம்சன்.
“அதான் அன்னைக்கு அந்த பொண்ணை பார்த்த போதே உன் முகத்துல வழிஞ்சதே. மதுவந்தி தான் என் தம்பி பொண்டாட்டின்னு நானும் அத்தானும் அன்னைக்கே முடிவு செய்துட்டோம். அதனால இந்த விஷயத்தை பைசல் பண்ண நம்ம கம்பெனி விழாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே நான் கோயம்புத்தூர் வரலாம்னு இருக்கேன் சரியா” என்று கூறினாள் உமையாள்.
” யூ ஆர் மோஸ்ட் வெல்கம் உமை, அத்தான் எப்ப வருவார்” என்ற ஹம்சனிடம்
“அத்தான் விழாவுக்கு முதல் நாள் எல்லாரையும் கூட்டிட்டு அங்க வருவாரு” என்றாள் உமையாள். “ஓகே உமை” என்றான் ராஜஹம்சன்.
மனிதன் மனதில் திட்டம் போட்டு நடத்த நினைப்பது அனைத்தும் நடக்க கடவுளின் துணை வேண்டுமே. அது காலத்தின் கையில் தான் உள்ளது.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings