இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதுவந்தியின் தந்தை ஜெகன்நாதன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். அந்த வரன் சரவணன் கோவையில் மதுவந்தி படிக்கும் கல்லூரிக்கு அவளை சந்திக்க வருகிறான். மதுவந்தியிடம் தன் காதலை கூறாமல் அவளை காதலிக்கும் ராஜஹம்சன் சரவணனைப் பார்த்ததில் மதுவை தவறாக புரிந்து கொண்டு கோபமாக போய் விடுகிறான். ராஜஹம்சனை விரும்பும் மது மிகுந்த வருத்தமாகிறாள். தனியாக யோசித்த ராஜஹம்சன் மதுவிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான்.
காதல் இது செடியில் பூக்கும் அரும்பு. மெல்ல மெல்ல பெரிதாகி இதழ் விரித்து பூவாகி மணம் பரப்புவது போல் அந்த உணர்வு சின்ன சின்ன நிகழ்வுகளால் மனதை மெல்ல ஆக்கிரமித்து பின் முழுவதும் பரவி உடல் நெகிழ்ந்து கண்வழியே அன்பாய் மலர்ந்து அருவியாய் பாய்ந்தோடும்.
மதுவந்திக்கு தன் மனமும் ராஜஹம்சனின் நிலையும் புரிந்ததில் அவள் மனம் முழுவதும் ராஜஹம்சனின் மேல் காதலாய் பூரித்தது.
அதில் பானகத் துரும்பாய் சரவணனின் வருகை. அவளுக்கு கோபமும் தன் அப்பாவின் மேல் வருத்தமும் ஒன்று சேர வந்தது. போனில் தன் அம்மா கனகாவிடம் “அம்மா இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா அப்பாகிட்ட சொல்லுமா” என்று தேம்பினாள்.
கனகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஊட்டியில் நாங்கள் பேசுனது இவளுக்கு எப்படி தெரிஞ்சது என்று திகைத்தவளாய் “யார் என்ன சொன்னாங்க தங்கம் என்னென்னமோ பேசுற” என்று மகளிடம் சற்று கண்டிப்புடன் கேட்டார்.
“அம்மா எனக்கு எல்லாம் தெரியும். அந்த சரவணன் இங்க காலேஜுக்கே வந்துட்டான்” என்றாள் மது கோபத்துடன். “இது எப்ப நடந்தது” என்ற கனகாவிடம் “நேத்து சாயங்காலம்” என்றாள் மது.
“இதுக்கு தான் நான் மாப்பிள்ளை வீட்டுக்கு ஜாதகம் போதும் போட்டோ வேண்டாம்னு உன் மாமன்கிட்ட சொன்னேன். அவன் தான் மேட்ரிமோனி ஆப்ல எல்லாம் போடுறாங்க போட்டோ கொடுத்தா என்னன்னுட்டான்” என்றார் எரிச்சலுடன்.
“அம்மா ப்ளீஸ் அப்பாகிட்ட சொல்லுமா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். அதுவும் அந்த சரவணனோட வேண்டவே வேண்டாம். நான் முதல்ல படிப்பை முடிக்கிறேன். என் கல்யாணத்தை பத்தி அப்புறம் பாத்துக்கலாம் மா” என்றாள் மது மிகுந்த வருத்தத்துடன்.
“கண்ணா மதும்மா நான் அப்பாவோட பேசுறேன். நீ கவலைப்படாத. இப்போ படிக்கிற வேலையை மட்டும் பாரு சரியா. உங்க அப்பா எதுக்கு இப்போ உன் கல்யாணத்தை பத்தி ஆரம்பிச்சாருன்னு தெரியல பார்ப்போம்” என்றார் கனகா.
பின் பேச்சை மாற்றுவது போல் “மது உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு. போன வாரம் நீ காலேஜ் கிளம்பி போனதும், அப்பா தம்பியும் கூட கடைக்கு போயிட்டாங்க. அப்ப பார்த்து அந்த ஹம்சன் தம்பி வீட்டுக்கு வந்தாரு”.
ஹம்சன் வீட்டுக்கு வந்ததை அறிந்து மதுவின் மனத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகியது. ஆனால் தன் குரலில் மகிழ்ச்சியை காண்பிக்காமல் ஹம்சன் நினைவில் இல்லாதது போல் “யாரை சொல்றமா” என்று கேட்டாள். காதல் வந்து விட்டால் கள்ளத்தனமும் கூடவே வரும் போல.
கனகாவோ “அதான் மது நம்ம எல்லாரையும் கார் விபத்தில் இருந்து காப்பாத்தினாரே அந்த தம்பிம்மா” என்றார்.” ஓ.. அவரா… என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது போல் இழுத்தாள் மது.
மேலும் ஹம்சனைப் பற்றி அம்மாவிடம் கேட்க மதுவுக்கு பயமாக இருந்தது. அம்மா ஏதாவது நினைத்துக் கொண்டால் என்றிருந்தது. ஆனால் மதுவுக்கு சிரமம் கொடுக்காமல் கனகாவே “அந்த தம்பி உதயன்கிட்ட ஊருக்கு போயிட்டு வரேன்னு சொல்ல வந்தாராம்.”
“அவங்க அக்கா கல்யாண ஸ்வீட்ஸ் கொடுத்து விட்டாங்கன்னு பெரிய பாக்ஸ் நிறைய ஸ்வீட்ஸ் கொண்டு வந்து கொடுத்தாரு. அதுல உனக்கும் உதயனுக்கும் பிடிச்ச ஸ்வீட்ஸா இருந்துச்சு ட்ரை ஜாமூன் காஜுகத்லி பாதுஷான்னு நிறைய” என்று முடித்தார்.
மதுவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மையல் கொண்டவனின் வரவு மனத்தில் இத்தனை குளிர்ச்சியை ஏற்படுத்துமா? மதுவுக்கு தன் அம்மாவிடம் போனில் பேசிய பின் ஹம்சன் கொண்டு வந்த இனிப்புகளை சாப்பிட்டது போல் வாயெல்லாம் தித்தித்தது.
ஹம்சன் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு அருகில் இருக்கும் அத்லெட்டிக் க்ளப்புக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் ஷட்டில் காக் ஆடி விட்டு வருவான். ஆனால் அன்று எங்கும் வெளியில் செல்லாமல் யோசனையாகவே இருந்தான். மீனாட்சியும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தார்.
தினமும் காலை உணவை தந்தையும் மகனும் கம்பெனியில் செய்ய வேண்டிய வேலைகளை கலந்து ஆலோசித்தபடி சாப்பிடுவர். அதனால் கணவர் விசாகன் மகன் ஏன் காலை உணவை சாப்பிட வரவில்லை என்று விசாரித்த போதும் அவன் ஏதோ வேலையா இருக்கான் போல, அதான் நான் அவனை தொந்தரவு செய்யவில்லை என்றார் மீனாட்சி.
என்ன இது மாசக் கடைசி கூட இல்ல, கம்பெனியில டார்கெட் முடிக்க, அப்படி என்ன பெரிய வேலை, சரி கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வராமலா போகப் போகுது பார்த்துக்கலாம் என்று நினைத்து சாப்பிட்டு எழுந்தார் விசாகன்.
ஹம்சனுக்கு உடனடியாக மதுவை சந்தித்து தன் காதலை அவளிடம் கூற வேண்டும் என உடலும் மனமும் பரபரத்தது. ஆனால் அவளும் தன்னை காதலிக்கிறாளா என எப்படி தெரிந்து கொள்வது.
அன்று மாலை என்னை பார்த்ததும் அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவளும் என்னை விரும்புகிறாள் என்று தான் உறுதிப்படுத்தியது. அதுவும் சரவணனை நான் கோபமாக விசாரித்த போது அவள் என்னை பார்த்த பார்வை “அப்பப்பா “என்ற ஹம்சன் தன் கண்களை மூடிக்கொண்டான்.
மனம் முழுவதும் மதுவின் அழகிய மான் விழிகள் என் காதலை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா என குற்றம் சாட்டியது. ஹம்சனால் அந்த காதல் தவிப்பை தாங்க முடியவில்லை. சற்று நேரம் காரில் எங்காவது சென்று வரலாம் என அறையை விட்டு வெளியே வந்தான்.
ஹால் சோபாவில அமர்ந்திருந்த விசாகன் “ஹம்ஸா, ஒரு முக்கியமான விஷயம் உன்னிடம் கலந்து பேசணும் வாப்பா” என அழைத்தார். அவன் கையில் கார் சாவி வைத்திருந்ததைப் பார்த்த விசாகன் “தம்பி வெளிய போக போறியா நான் தொந்தரவு செய்துட்டேனா” என்று கேட்டார்.
“இல்லப்பா நீங்க சொல்லுங்க என்ன விஷயம்” என்றான் ஹம்சன் சிரித்தபடி. “தம்பி நம்ம கம்பெனி ஆண்டு விழா அடுத்த மாசம் வருது. இந்த வருஷம் பொன்விழா ஆண்டு அதை சிறப்பாக கொண்டாடணும் பா” என்றார் விசாகன் உற்சாகமாக.
“வாவ் சூப்பர் பா நானும் ஆண்டு விழா பத்தி யோசிச்சேன். ஆனா பொன்விழா ஆண்டுன்னு இப்ப நீங்க சொல்லவும் தான் தெரியுது. நல்லா சிறப்பா கொஞ்சம் புதுமையாகவும் கொண்டாடலாம் பா” என்றான் ஹம்சனும் மகிழ்ச்சியாக.
“அதெல்லாம் உன் பொறுப்பு, நீ எப்படி சிறப்பா செய்யணுமோ அப்படி செய்” என்றார் விசாகன். ராஜஹம்ஸனுக்கு மதுவந்தியை சந்திக்க ஒரு வழி பிறந்ததில் மனம் தெளிவானது. அவன் அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
“என்னப்பா யோசனை” என்று விசாகன் கேட்கவும் அவரிடம் “நாளையிலிருந்தே இந்த வேலையை ஆரம்பிச்சிடலாம் பா, அன்னைக்கு காலைல எப்போதும் போல ஹோமம் பூஜை முடிச்சு அன்னதானம் போட்டு விடலாம். ஈவினிங் வைக்கிற கல்ச்சுரல் ஃபங்ஷன் தான் கொஞ்சம் மாற்றலாம் என்று பார்க்கிறேன்” என்று விளக்கமாக கூறினான்.
“சரி தம்பி எல்லாம் உன் விருப்பம் போல பண்ணு செலவைப் பற்றி கவலைப்படாதே, இது நம்ம கம்பெனிக்கு ஒரு விளம்பரமாகவும் இருக்கணும்” என்றார் விசாகன் ஆர்வத்துடன்.
“கண்டிப்பா அப்பா அதுல செலவு கூட ஒரு சேரிட்டி நோக்கத்தோட செய்யலாம்னு இருக்கேன்” என்ற ஹம்சனிடம் “எக்ஸலண்ட் கோ ஹெட்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விசாகன். தந்தையுடனான உரையாடல் ஹம்சனுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது.
மறுநாள் காலை தந்தையும் மகனும் காலை உணவை சாப்பிட்டபடி அன்று கம்பெனியில் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி பேசிக் கொண்டனர்.
அவர்கள் கம்பெனியில் கார்களை அசெம்பிள் செய்வது மட்டுமல்லாது சில கார் கம்பெனிகளின் டீலர்ஷிப் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளையும் பார்த்துக் கொள்வதால் அடுத்தடுத்த வேலைகள் சென்ற வண்ணம் இருக்கும்.
ஹம்சனே கம்பெனி நிர்வாகத்தை முழுவதுமாக பார்த்துக் கொண்டாலும் விசாகன் தினமும் கம்பெனிக்கு வந்து தயாரிப்பு வேலைகளை மேற்பார்வை பார்ப்பார்.
அவ்வப்போது தொழிலாளர் நலன் குறித்த யோசனைகளையும் மகனுக்கு கூறுவார். அதனால் ஒரே காரில் இருவரும் கம்பெனிக்கு வந்து கார் அசெம்பிள் செய்யும் ஃபர்ஸ்ட் ஃபேஸில் விசாகனை இறக்கி விட்ட பின் ஹம்சன் செகண்ட் ஃபேஸில் இருக்கும் நிர்வாக அலுவலகத்திற்கு வந்து விடுவான்.
அன்று ஆபீஸுக்கு வந்தவுடன் மேனேஜரிடம் அன்றைய வேலைகளைப் பற்றி சொல்லிவிட்டு தான் ஆண்டுவிழா விஷயமாக வெளியே செல்வதால் தேவையென்றால் மட்டும் போன் செய்ய சொல்லிவிட்டு புறப்பட்டான் ஹம்சன்.
நேராக மதுவந்தி படிக்கும் கல்லூரிக்குள் நுழைந்தது அவன் கார்.அவன் காரை நிறுத்திய செக்யூரிட்டியிடம் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து கல்லூரி அலுவலகத்தில் கொடுக்குமாறு சொன்னான் ஹம்சன். கார்டை ஆபீஸில் கொடுத்த செக்யூரிட்டி உடனடியாக வந்து கல்லூரி வாசல் கதவை ஹம்சனின் காருக்காக திறந்தான் .
காரை நிறுத்திய ராஜஹம்சன் கல்லூரி அலுவலகத்துக்குள் நுழைந்ததும் கல்லூரி முதல்வரே அவனை வரவேற்றார்.” மகளிர் கல்லூரி என்பதால் சில கெடுபிடிகளை பின்பற்ற வேண்டியுள்ளது சார்” என்றார் சிறு சங்கடத்துடன். ” நோ ப்ராப்ளம் மேம் சில விஷயங்களை நாம் கண்டிப்பாக பின்பற்றத்தான் வேண்டும்” என்று கூறியவன் தான் அங்கு வந்ததற்கான காரணத்தை கூறினான் ஹம்சன்.
“ஆண்டு விழாவுக்கு பொதுவா சீரியல் ஆக்டர்ஸை கூப்பிட்டு நாடகம் நடத்துவோம். ஆனா இந்த முறை சற்று வித்தியாசமாக கல்லூரி மாணவிகளோட கலை நிகழ்ச்சிகள் சில நடத்தலாம்னு நினைக்கிறோம். அதற்கு நீங்க அனுமதி கொடுத்தா உங்க கல்லூரி மாணவிகளோட கலை நிகழ்ச்சியை நடத்தலாமான்னு கேட்க வந்தேன்” என்று மிகப் பணிவோடு கேட்டான்.
“அதற்காக உங்க சேரிட்டி பண்டுல எங்களோட பங்களிப்பா இரண்டு அல்லது மூன்று லட்சம் கொடுக்கலாமா என்று என் அப்பா கேட்கச் சொன்னார்”என்றும் கேட்டான் ஹம்சன். முதல்வர் முதலில் தயங்கினாலும் பின் ஒத்துக் கொண்டார்.
“இப்போ காலேஜ் ஃபைன்ஆர்ட்ஸ் இன்சார்ஜ் ப்ரொபசரை வரச் சொல்றேன்” என்று கூறி ப்யூனை அனுப்பினார். சற்று நேரத்தில் முதல்வரின் அறைக்கு அந்த ப்ரொபசருடன் அங்கு வந்த மதுவந்தியைப் பார்த்த ஹம்சனுக்கு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.
மதுவுக்கோ அவனைப் பார்த்ததும் உடலெல்லாம் சிலிர்த்து புதுவெள்ளம் பாய்ந்தது போல் இருந்தது. அவள் முகம் அன்றலர்ந்த ரோஜா போல் ஒளிர்ந்தது.
முதல்வரின் அறிமுக பேச்சுக்களுக்கு பின், முதல்வர் மதுவந்தியை குறித்து கேட்கவும், ப்ரொபசர் அவரிடம் “இவங்க பைன்ஆர்ட்ஸ் செகரட்டரி மேம்” என்றார். “ஓ.. ஓகே” என்ற முதல்வர் ராஜஹம்சனிடம் “நீங்க உங்க ஆலோசனைகளை சொல்லுங்க, இவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுவாங்க” என்று கூறினார்.
முதல்வரின் அறையில் இருந்து மூவரும் வெளி வந்தனர். ராஜஹம்சனை கல்லூரி கேன்டீனுக்கு அழைத்துச் சென்ற ப்ரொபசர் அவனிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அடுத்த வகுப்பிற்கான மணி அடிக்கவும் “சார் நீங்க செகரட்டரிகிட்ட பேசிட்டு இருங்க. என்னோட வகுப்புக்கு ஒரு வேலை கொடுத்துட்டு வந்துடறேன்” என்று ஹம்சனிடம் கூறிய ப்ரொபசர் “மது எங்கே என்ன தேதி எல்லாம் விவரமா கேட்டுக்கோ நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று கூறி கிளம்பினார்.
ஹம்சனுக்கோ பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. மருண்டு விழித்த மதுவிடம் “வந்திமா” என்று அழைத்த ஹம்சனை கண்கள் பனிக்க பார்த்தாள் மது.
“சாரி இப்படி பார்க்காத.என் மனசை பத்தி சொல்லாமலே உன்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். கண்மணி உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னையும் உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறிய ஹம்சன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
மதுவின் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்தது. “வந்திமா உனக்கு என்னை பிடிக்கலையா” என்று கேட்ட ஹம்சனிடம் “இல்லை” என்பது போல் தலையை ஆட்டினாள் மது.
திடுக்கிட்டவன் “பிடிச்சிருக்கா” என்று கேட்க “ஆம்” என தலை அசைத்தவள் “பிடிச்சிருக்கு” என்றாள் மது மெல்லிய குரலில்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings