இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மதுவந்தியின் தந்தை ஜெகன்நாதன் தன் மகளுக்கு திருமணம் செய்ய வரன் பார்க்கிறார் .ஆனால் மதுவந்தியும் ராஜஹம்சனும் ஒருவரில் ஒருவர் மனம் லயிக்கிறார்கள். மதுவுக்கு விடுமுறை முடிந்து கல்லூரி திறந்ததால் ஊட்டியில் இருந்து கோவைக்கு வருகிறாள் மது.
பொழுது எப்போதோ விடிந்து விட்டது. சூரியனும் வந்து விட்டான். ஆனால் ஜெகன்நாதனின் மனம் சுறுசுறுப்பு இல்லாமல் ஆழ்ந்த யோசனையில் கிடந்தது. ஆனால் யதார்த்த வாழ்க்கையை பார்க்க வேண்டுமே.
மதுவை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு உதயனுடன் கடைக்கு வந்தார் ஜெகன்நாதன். அங்கிருந்து உதயன் அவர்களின் குடோனுக்கு சென்று லாரியில் வந்த லோடுகளை இறக்குவதை மேற்பார்வையிடச் சென்று விட்டான்.
மகன் சென்றதும் ஜெகன்நாதன் பத்து நாட்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். போன் மணி அடித்ததும் போன் திரையைப் பார்த்து “அட மச்சான் தினா” என்று கூறியவர் ஃபோனை எடுத்து “ஹலோ தினா” என்றார்.
எதிர்ப்புறம் கனகாவின் தம்பி தினகர் “என்னங்க மாமா அக்கா என்னென்னமோ சொல்றா கார் ஆக்சிடென்ட்ன்னு, எங்ககிட்ட எல்லாம் ஒரு பேச்சு சொல்றதில்லையா” என்று கோபித்துக் கொண்டான்.
“ஆமா தினா ரொம்ப பயந்துட்டோம். குடும்பத்தோட போய்டுவோம்னு நினைச்சேன். கடவுள் புண்ணியம் தப்பிச்சுட்டோம்” என்றார் ஜகன்நாதன் சிலிர்த்தபடி. மனத்தில் அந்த காட்சி திரும்பவும் தெரிந்ததில் அவருக்கு படபடவென்று இருந்தது.
“சரி மாமா அந்த பேச்சு வேண்டாம் அன்னைக்கு எதுக்கு குன்னூர் கிளம்பி வந்தீங்க அதை சொல்லுங்க” என்றான் தினகர்.
“அது முக்கியமான விஷயம் தான் தினா. உன் வீட்டுக்கு எதிர் வீட்ல ஒரு பையன் கோவை நகராட்சியில் வேலையா இருக்கான்னு நீ சொன்ன இல்ல” என்றவரிடம்
“ஆமா சரவணன் சின்ன வயசிலேயே நல்ல பொசிஷன்ல இருக்கான் அந்த ஆபீஸ்ல” என்றான் தினகர் மகிழ்ச்சியாக.
“அவனை நம்ப மதுவுக்கு வரனா பார்க்கலாமா” என்று கேட்டார் ஜெகநாதன்.
“என்ன மாமா மதுவுக்கு இன்னும் படிப்பு முடியலையே” என்ற தினகரனை இடைமறித்து
“ஜாதகம் பார்க்க தொடங்கினா கல்யாணம் செய்ய ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடும் இல்ல. அதுக்குள்ள மது படிப்பை முடிச்சிடுவா. அதுவும் நீ அந்த பையன் ரொம்ப நல்ல மாதிரி அவங்க குடும்பத்துல எல்லாரும் நல்லா பழகுறாங்கன்னு சொன்னியா. அதான் மது ஜாதகத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு பையன் ஜாதகம் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தேன்” என்றார் ஜெகன்நாதன்.
“மதுவுக்கு இருவத்தோறு வயசு கூட இன்னும் முடியல அதுக்குள்ள கல்யாணம் செய்யணும்னு சொல்றீங்க அவ குழந்தை மாமா” என்றான் தினகர் செல்லமாக.
“டேய் பொம்பள புள்ளைய வீட்டுல வச்சி இருக்கிறது மடியில நெருப்பை கட்டிட்டு இருக்கிற மாதிரின்னு நம்ம பெரியவங்க சொல்லுவாங்க அதுவும் வெளியூர்ல படிக்கிறா மது. நாமதான் பார்த்து சீக்கிரம் ஒரு நல்லது நடத்தணும்” என்ற ஜெகன்நாதனிடம்
“என்ன மாமா பழைய பட்டிக்காட்டு வசனம் எல்லாம் பேசுறீங்க. இந்த காலத்துல பொம்பள பிள்ளைங்க பிளைட் ஓட்டறாங்க ராக்கெட்ல போறாங்க நீங்க என்னடான்னா” என்று கேலி பேசினான் தினகர்.
“உனக்கு இதெல்லாம் புரியாது.நான் மது ஜாதகம் வாட்ஸப்ல அனுப்புறேன் நீ அவங்க வீட்ல கொடுத்துட்டு பையனோடதை வாங்கி எனக்கு அனுப்பி வை” என்று கூறி போனை வைத்தார் ஜகன்நாதன். தினகருடன் பேசியதில் அவர் சற்று நிம்மதியானார்.
கல்லூரிக்குள் நுழைந்ததும் மதுவந்தியை சூழ்ந்து கொண்டனர் அவள் தோழிகள். மதுவும் அவர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாடினாள். “ரிசல்ட் வர இன்னும் பத்து நாளாகுமாம்” என்றாள் ஒருத்தி.
“அதை ஏண்டி இப்ப ஞாபகப்படுத்துற எனக்கெல்லாம் எத்தனை பேப்பர் போகுமோன்னு திகிலா இருக்குது” என்றாள் மற்றொருத்தி.
மதுவும் “ஆமாம் பா இந்த பத்து நாள் லீவுல நம்ம வீட்ல ஜாலியா இருந்தோம். அதைப்பத்தி பேசலாம்பா” என்றாள் அவர்களிடம்.
“அப்போ மதுவுக்கு இந்த லீவில ஏதோ சுவாரஸ்யமான விஷயம் நடந்திருக்கு. மேல சொல்லு, சொல்லுடி” என்று கூறி சிரித்தாள் மதுவின் நெருங்கிய தோழி நீலாம்பரி.
“அடி போடி எங்களுக்கு ஆக்சிடென்ட் தான் நடந்தது. கடவுள் அருளால் உயிர் பிழைச்சோம்” என்று மது கூறவும் தோழிகள் அனைவரும் அதிர்ச்சியில் மௌனமாகினர்.
அப்போதுதான் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த ப்ரியா தன் வகுப்பு தோழிகள் அனைவரும் மதுவைச் சுற்றி நிற்பதை பொறாமையோடு பார்த்தவள் அங்கு வந்தாள்.
“என்னப்பா எல்லாம் எப்படி இருக்கீங்க” என்று கேட்டவளை
“நாங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கோம் நீ எப்படி இருக்கேன்னு சொல்லு” என்றாள் ஒரு தோழி.
“நான் ஊட்டிக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அந்த கல்யாணத்துக்கு மது கூட வந்திருந்தா” என்று கூறிய ப்ரியா “மது ரகுவரன் உன்ன ரொம்ப விசாரிச்சாருப்பா நாம ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட்டானு கேட்டாரு” என்று மது முறைப்பதை சட்டை செய்யாமல் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கூறினாள்.
தோழிகள் அனைவரும் இருவரையும் மாறி மாறி பார்த்தனர். மது கோபத்தை அடக்கி கொண்டு “ரகுவரனை பற்றி மட்டும் என்கிட்ட பேசாத எனக்கு கெட்ட கோபம் வரும்” என்றாள் பல்லை கடித்தபடி.
“என்ன பத்தி பேசினாலே அவளுக்கு கோபம் வரும்னு சொன்னாரே” என்று ப்ரியா மேலும் பேச மதுவுக்கு அவளை அடிக்க கை பரபரத்தது.
நல்லவேளையாக வகுப்புகள் ஆரம்பிக்க போவதற்கான மணி அடித்ததும் அனைவரும் கலைந்து வகுப்புக்குச் சென்றனர். வகுப்பில் அன்று முழுவதுமே யாருடனும் பேசாமல் சற்று சோகமாக இருந்தாள் மதுவந்தி. ப்ரியாவும் மதுவின் முகத்தை அவ்வப்போது பார்த்தவள் இவளை வெறுப்பேத்தத் தான் நான் அப்படி பேசினேன். அது நல்லா வேலை செய்து போலவே என மனதுக்குள் மகிழ்ச்சியானாள்.
ஆனால் தோழிகளிடம் “நான் யதார்த்தமா அவர் கேட்டதைத் தான் சொன்னேன். இவ என்ன அதுக்கு இப்படி மூட் அவுட் ஆயிட்டா” என்று பேசி அலட்சியமாக தோள்களை குலுக்கினாள் ப்ரியா.
நீலாம்பரி ப்ரியாவிடம் “தாயே நீ எதுவும் பேசாமல் இருந்தாலே போதும் மது நார்மல் ஆயிடுவா” என்று எரிச்சலுடன் கூறினாள்.
“அப்புறம் அவ மட்டும் எங்க அத்தான் ராஜஹம்சனை மயக்க பார்த்தா. அதுக்கு தான் உங்க முன்னாடி இப்படி பத்த வச்சேன் ” என்று மனதுக்குள் கூறி பிரியா குதூகலித்தாள்.
ஹாஸ்டல் அறைக்கு வந்த மதுவந்தி உடையை கூட மாற்றாமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன மது உனக்கு என்ன ஆச்சு பிரியா சொன்னதுக்கு எதுக்கு அப்படி ரியாக்ட் பண்ணின” என்று கேட்ட நீலாம்பரியிடம் பதில் கூறாமல் கண்களில் நீருடன் அவளைப் பார்த்தாள் மது.
“அழறயா” எனக் கேட்டு அவளை அணைத்து கொண்டாள் நீலாம்பரி.
“ரகுவரன் மோசமானவன். அவனோட என்னை சேர்த்து வைக்கிற மாதிரி ப்ரியா பேசுறா பாருடி” என்று கேவினாள் மது. ‘ரகுவரனை உனக்கு தெரியுமா “என்று கேட்டாள் நீலாம்பரி.
“ம்… அவன் ஸ்கூல்ல எனக்கு சீனியர். அவனால எங்க பக்கத்து வீட்டு அக்கா ஷாலினியோட லைப்பே ஸ்பாயில் ஆயிடுச்சு. நான் அஞ்சாவது படிக்கும்போது அந்த அக்கா ஷாலினி எய்த் படிச்சுட்டு இருந்தாங்க ரகுவரனும் ஷாலினி அக்கா கிளாஸ் தான். அவங்க ஸ்கூலுக்கு வர போக பிரண்ட்ஸ்சோட சேர்ந்து கிண்டல் செய்வான் ரகு.
ஒரு நாள் ரகு லவ் லெட்டர் ஒண்ணு எழுதி ஷாலினி அக்காவுக்கு தெரியாம அவங்க நோட்டுக்குள்ள வச்சுட்டான். அதை அவங்க வீட்ல பாத்துட்டு அவங்கள நல்லா அடிச்சுட்டாங்க. ரகு பெரிய பணக்கார வீட்டு பையன்னு தெரிஞ்சு அக்காவோட அப்பா சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு குடும்பத்தோட வீட்டை காலி செய்துவிட்டு போயிட்டாங்க. இப்போ ஷாலினி அக்கா எப்படி இருக்காங்கன்னு தெரியாது. ஆனா அந்த சமயத்துல அவங்க வீடே கதி கலங்கி போயிடுச்சு” என்று கூறினாள் மது வருத்தமாக.
“ஏய் இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்பா. பொண்ணுங்க நாம இதெல்லாம் சர்வ சாதாரணம் என கடந்து வரோம். நீ என்ன இப்படி கலங்குற “என்று மதுவை தைரியப்படுத்தினாள் நீலாம்பரி.
“நீ சொல்றது சரிதான் நீலா ஆனா இன்னும் சில வீடுகளில் பெற்றோர் அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்க மாட்டேங்கறாங்களே, அதை அனுபவிச்சாத் தாண்டி தெரியும்” என்ற மதுவிடம் “அதுவும் சரிதான்” என்றாள் நீலாம்பரி யோசனையாக.
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்த கனகவல்லி ஓய்வாக அமர்ந்திருந்தார். அவருக்கு மகள் மதுவந்தியின் நினைவாகவே இருந்தது. அந்த ராஜன் ஸ்பேர் பார்ட்ஸ் வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு வந்த பின்னாடி மது சோர்வாவே இருந்தா.
இந்த பொண்ணு என்னோட மனசு விட்டு பேசினா பரவாயில்ல என நினைத்த கனகவல்லி அந்த தம்பி ராஜஹம்ஸன் கூட ரொம்ப பொறுப்பான பையனாயிருக்கிறான் என்று ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகள் அணிவகுத்ததில் அந்த விபத்தும் மனத்தில் படமாகியது.
அப்பா அன்னைக்கு அந்த தம்பி மட்டும் சமயோஜிதமா செய்யலைன்னா என்ன ஆகி இருக்குமோ என்றவரின் நினைவுகள் போன் அடித்ததில் கலைந்தது.
போன் ஸ்கிரீனில் தம்பி தினகரின் படத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாகப் போனை உயிர்ப்பித்தார். “சொல்லு தினா” என்றவரிடம் “அக்கா அத்தான் என்ன மதுவுக்கு வரன் பார்க்கச் சொல்றாரு” என்று கூறி மற்ற விபரங்களையும் சொன்னான்.
“பையன் பேரு சரவணனா” என்று கேட்ட கனகாவிடம்
“ஆமாங்க்கா கோயம்புத்தூர்ல தான் வேலையா இருக்கிறான் உனக்கும் அத்தானுக்கும் ஜாதகமும் போட்டோவும் அனுப்பி இருக்கிறேன் பாரு மது ஜாதகமும் போட்டோவும் அவங்க வீட்டுல கொடுத்துட்டேன். இனி கடவுள் சித்தம். ஜாதகம் பொருந்தி இருந்தால் மேற்கொண்டு பார்க்கலாம். அவங்க வீட்ல எல்லாம் நல்ல மாதிரி தான் பழகறாங்க” என்று முடித்தான் தினா.
“எதுக்கு மது போட்டோவை இப்பவே கொடுத்த ஜாதகம் பொருந்தின பின்னாடி கொடுத்திருக்கலாம் தானே” என்று குறைப்பட்டார் கனகா.
“அக்கா இப்பல்லாம் மேட்ரிமோனியல் ஆப்லேயே போட்டோ போடுறாங்க. இது சகஜம் அக்கா. இத பத்தி நீ கவலைப்படாதே” என்று கூறிவிட்டு போனை வைத்தான் தினா.
மறுநாள் முழுவதும் தன் மனமே தனக்கு புரிபடாமல் ராஜஹம்சனின் நினைவு மதுவை தொந்தரவு செய்தது. ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரியின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தியதால் மது இயல்பு நிலைக்கு வந்தாள்.
அன்று கல்லூரி முடியும் நேரம் தங்களின் துறைத் தலைவரை பார்த்து விரைவில் வரப் போகும் கலாச்சார விழா குறித்து பேசிவிட்டு வந்த மதுவும் நீலாம்பரியும் விடுதிக்குப் போக கல்லூரி முகப்புக்கு வந்த போது அங்கே தனது காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ராஜஹம்சனைப் பார்த்து மூச்சு அடைத்து நின்றாள் மதுவந்தி.
ஹம்சனும் அவளைப் பார்த்து புன்னகைத்தான். மதுவுக்கு ஒரு வாரம் கழித்து அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் பனித்தன. நெஞ்சத்தில் படபடவென பட்டாம்பூச்சி பறந்தது.
தோழி திடுமென நின்றதில் “மது ஏன் நின்னுட்ட” என்று கேட்ட நீலா மதுவை பார்த்து மதுவின் கண்கள் போன திசையில் நின்ற ஹம்சனைப் பார்த்தாள்.
அப்போது ஆபீஸ் ப்யூன் மதுவந்தியின் அருகில் வந்து “உங்களைப் பார்க்க சரவணன் என்று ஒருத்தர் வந்திருக்காரு கொஞ்சம் வாங்கம்மா” என்று அழைத்தார். மது எதுவும் புரியாமல் திகைத்து நின்றாள்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings