எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பெரியவர் படுத்ததுதான் வீடு மருத்துவமனையாகிவிட்டது. பல கோடிக்கு அதிபதி தெருக்கோடியில் கிடக்கும் கிழிஞ்ச துணி போல நஞ்ச நாரா படுக்கையில் கிடந்தார்.. அவர் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே ஒரு பெரிய பெட்டி.. அதுவும் சவப்பெட்டி போல நீளமாக.. பெரியவர் தன் கண்முன்னே அந்த பெட்டி இருக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டதால் அதைத் தொடும் தைரியம் எவருக்கும் இல்லை.
உள்ள வந்த டாக்டர் சிடுசிடு “ரூபன்” கடுகடுத்தார்.. “இது என்ன பேஷன்ட் ரூம்ல இவ்வளவு பெரிய பெட்டி .. கொண்டு போய் ஓரமா வைங்க” என்றார் எரிச்சலில். காலையிலே தோசைக்கு தொட்டுக்க இட்லிபொடி கேட்டது தான்..
“கஷ்டப்பட்டு தேங்காய் சட்னி அரைச்சா அத வச்சு சாப்பிட முடியலையா உங்களுக்கு பொடி வேணுமா?” என்று சண்டை போட்ட பொண்டாட்டியால் மூடு அவுட்டாகிருந்தது.
கண்விழித்த பெரியவர் கர்ண கொடூர குரலில் “பெட்டி பத்திரம்” என்று அலற..
பயந்து போன டாக்டரின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள ஹார்ட் ரேட் 150க்கு போனது உடனடியாக பாக்கெட்டில் இருந்த மாத்திரை உரித்து போட்டு தண்ணியை குடித்தவர்.. நர்ஸ் மேரியிடம் இன்ஸ்ட்ரக்ஷனை கொடுத்துவிட்டு கிளம்பினார்.
மகன் ஷங்கரிடம் “உங்க அப்பா இந்த ரூம்ல இவ்வளவு பெரிய பெட்டியை வச்சுக்கிட்டு இருக்காரு.. தடுமாறி விழுந்தா கபால மோட்சம்தான்.. அப்புறம் அந்த பொட்டிக்குள்ளேயே வச்சு புதைக்க வேண்டியதுதான்” என்று சிடுசிடுத்தபடி கிளம்பினார்.
“அதை ஏன் கேக்குறீங்க டாக்டர்.. அந்த பெட்டி அவர் கண்ணு முன்னால இருக்கணும். அதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்ல மாட்டேங்குறாரு.. அந்தப் பெட்டிக்குள்ள சாவி செம அழகு.அத தல மாட்டில வைச்சருக்கிறாரு..”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டு மருமகள் மூவரும் ரஞ்சனி, அமிர்தா, நந்தினி மூவரும் கிச்சனில் ஒரு மீட்டிங் போட்டார்கள்.
“ஏன் ரஞ்சனி அக்கா அந்த பெட்டிக்குள அப்படி என்ன இருக்கும்? பெரியவர் படுத்துட்டாரு.. நாம நைசா சாவியை எடுத்து அந்த பெட்டியை திறந்து பார்க்கலாமா?”
“ஆமாம் அதான் சரி.. அத்த சீதனமா கொண்டு வந்த பெட்டி.. அவங்க நகை இருக்கலாம். நந்தினி தங்கத்துல குடம் கூட உண்டாம்.”
“ஆமாம்.. ரெண்டு நாள்ல அமெரிக்காவிலயிருந்து நாத்தனார் ரெண்டு பேரும் வந்துருவாங்க.. அவங்க வர்றதுக்குள்ள அத எடுத்துடனும்.
“அமிர்தாக்கா என்கிட்ட ஒட்டியாணம் கிடையாது.. அதனால ஒருவேளை ஒட்டியாணம் இருந்தால் எனக்கு வேணும்..”
“அம்மாடி இடை சிறுத்த அழகி.. உன் இடுப்பு சைசுக்கு ஆர்டர் கொடுத்து தாண்டி பண்ணனும். ஒருவேள மாமா ரெண்டு வச்சிருந்தா இரண்டையும் சேர்த்து நீ போட்டுக்கலாம்” என்று மூத்தவள் கிண்டல் பண்ண, நந்தினிக்கு முகம் அஷ்ட கோணலானது.
ராத்திரி நைசா அமிர்தாவும், ரஞ்சனியும் மாமா ரூமுக்கு போய் சாவியை மெதுவாக எடுப்பது என்று முடிவானது.
“அக்கா அந்த நர்ஸ மேரி பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்காளே அவளை என்ன செய்றது.”
“அவளுக்கு தினமும் ராத்திரி கொடுக்கிறேன்ல்ல அந்த பால்ல தூக்க மாத்திரையப் போட்டுடுவோம்”
“மேரி தூங்கிட்டானா ஒருவேளை மாமா கூப்பிட்டா..”
“அடி நந்தினி ரொம்ப யோசிக்காத.. மாமா தான் படுத்து கிடக்கிறாரே எப்படி கூப்பிடுவாரு.”
திட்டப்படி மேரிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து.. ராத்திரி அமிர்தாவும் ரஞ்சினியும் மாமா ரூமுக்குள் நுழைந்தனர்.. நந்தினி அவள் பருத்த சரீரம் ஒத்துழைக்காது என்பதால் வெளியே நின்று கொண்டாள்.
மாமா அருகில் போய் அமிர்தா லேசாக தலகாணியை தூக்க.. ரஞ்சினி துளாவ சாவி தென்பட்டது. சந்தோஷத்தில் மனம் துள்ளி குதிக்க சாவியை எடுத்த வேளையில் பெரியவர் தொண்டையிலிருந்து ஒரு வினோத சத்தத்தை எழுப்பினார் ” ஊ..ஊ..” என்று.. வார்த்தைகள் குளறி சத்தம் மட்டும் பெரிதாக வந்தது.
ரஞ்சனி எடுத்த சாவியை அப்படியே போட்டுவிட்டு கையை வெளியே எடுத்தாள்.. அவ்வளவுதான் அடுத்த 5 நிமிஷத்தில், அத்தனை பேரும் ஓடி வந்தார்கள்..
“என்னாச்சு என்னாச்சு.. அப்பா ஏன் திடீர்னு இப்படி கத்துனாரு? ஆமாம் ரஞ்சினி, அமிர்தா நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க”
“அட மாமா கத்துற குரல் கேட்டு நாங்களும் உங்கள மாதிரி தான் ஓடிவரோம்.. யாராவது திருடன் வந்திருப்பானோ”
“ஆமா இத்தனை நாள் வராத திருடனா இப்ப வர்றான்?”
“எலி ஒன்னு சுத்திகிட்டு இருக்கு அந்த எலிக்கு ரூமுக்குள்ள வந்திருக்குமோ?”
“மாமா கத்துனது ரெண்டு கால் எலிய பாத்து” என்று கிசுகிசுத்தாள் அமிர்தா. நல்லவேளை ஆபத்பாந்தவளாக மேரி கை கொடுத்தாள்.
கண்ணை உருட்டி மேரி “என்ன இங்க கலாட்டா.. பேஷண்ட ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க போங்க” என்றாள் தூக்க கலக்கத்தில்..
பெரியவர் “பொக்கிஷம் பொக்கிஷம்” என்றார்.
“அவரே போங்க போங்கங்கிறாரு..வாங்க போலாம” என்று கிளம்பினர்.
“என்னக்கா போட்ட பிளான் இப்படி சொதப்பிடிச்சு” என்றாள் நந்தினி.
“ராத்திரி பிளான் சரிபடாது. பகல்ல எப்படியாவது சாவியை எடுத்து விட வேண்டியது தான்.. ராத்திரி பெட்டியை திறந்து பார்த்திட வேண்டியது தான். தூக்கமாத்திரையை, மாமா, மேரி, இரண்டு பேருக்கும் கொடுத்துடுவோம்..
சாவி மட்டுமில்லாமல் பெட்டியே சிரமப்படாமலே அவர்கள் கைக்கு வந்து சேர்ந்தது. பெரியவர் மண்டைய போட.. அழுது தீர்த்த மகன்கள் சாவியை எடுத்து பெட்டியை திறந்து பார்த்தனர்.. உள்ளே இருந்தது நிறைய சரிகை வைத்த பழைய சேலை.. மிகப்பெரிய ஏமாற்றம்.
நர்ஸ் மேரி “அதுதான் பெரியவர் சேலை பத்திரம்ன்னு சொன்னாரா.. பொண்டாட்டி புடவை போல”
“என்ன சேலை பத்திரம்ன்னாரா? அந்தப் புடவை மேலேயே அவரை வைச்சு அடக்கம் பண்ணிடுவோம்.”
பெரியவர் உடல் பெட்டியிலே வைத்து அடக்கம் பண்ண பட, அவர் உடலுக்குக் கீழே இருந்த அவர் மனைவியின் சேலைக்கு கீழே இருந்த பத்திரமும் பத்திரமாக புதையுண்டது. அந்த பத்திரத்தில் அவர்கள் கம்பெனியின் சீக்ரெட் ஃபார்முலா அடங்கியிருந்தது யாருக்கும் தெரியவில்லை..
சேலை.. பத்திரம்.. என்ற இரண்டு வார்த்தையை சேலை பத்திரம் என்று நினைத்துக் கொண்டதால்..
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings