இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“தேடும் வேலை இருந்தாலும், அண்ணா நீ எனக்கு மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவரேலியா போன்ற முக்கியமான ஊர்களைச் சுற்றிக் காட்டுவதாய் பிராமிஸ் செய்திருக்கிறாய். அது ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் ரக்ஷிதா மிரட்டும் குரலில்.
“ஐயோ… உனக்குக்கொடுத்த வாக்குறுதியை மீற முடியாது. நாம் முதலில் என்ன பார்க்க வேண்டும், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை நாள் தங்க முடியும் என்பதை கணக்குப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்” என்றான்.
“அப்படியானால் முதலில் மிக அழகான திரிகோண மலையைப் பார்க்கலாம்” என்றாள் மாதவி.
“யாழ்ப்பாணத்தில் தானே இறங்கியிருக்கிறோம். முதலில் இங்கே சுற்றிப் பார்க்கலாம். இங்கிருந்து ஒரு வாரத்தில் நம்மால் எத்தனை இடங்கள் போகமுடியுமோ அங்கெல்லாம் போகலாம்“ என்றான் ராகுல்.
அங்குள்ள அவன் ஆபீஸ் மேனேஜர் மூலமாக, அவர்கள் அங்கே தங்கும் வரை அவர்களுடனே இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்கள் உபயோகத்திற்கென்று வாடகைக் காரும், டிரைவரும் ஏற்பாடு செய்து கொண்டான்.
யாழ்ப்பாணம் என்ற உடன் மாதவிக்கு ஏதோ யாழிசையைக் கேட்ட மாதிரி அவ்வளவு அழகான ஓர் ஊரை கற்பனை செய்து வைத்திருந்தாள். ஆனால் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் போது உண்மையில் அவளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருந்தது. மாதவியின் முகமும், ரக்ஷிதாவின் முகமும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
“ஹலோ ரக்ஷிதா, யாழ் நகரம் எப்படி இருக்கிறது?” என்றான் ராகுல் கிண்டலாக. “நீ எதிர்ப்பார்த்தது போல் இருக்கிறதா?” என்றான் மேலும்.
“ஒரு பையன், அவன் விரும்பிய காதலி அவனை விரும்ப வில்லையென்றால் உடனே அவள் மேல் ஆஸிட் ஊற்றினால், அவள் முகமும் உடலும் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஜாதி வெறியில் சீரழிந்த இந்த ஊர். சிறு வயதில் புத்தகங்களில் படிக்கும் போது, இந்த ஊரின் அழகைப்பற்றி அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பார்கள். எவ்வளவு அழகாக இருந்த ஊர் இப்படி ஒரு பரிதாபமான நிலையில் இருக்கிறது” என்றாள் ரக்ஷிதா பெருமூச்செறிந்தபடி.
“ஆம், ரக்ஷிதா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை” என்று தலையசைத்து மாதவியும் ஒத்து ஊதினாள்.
“இந்த ஊர் மட்டும் இல்லை, ஏறக்குறைய எல்லா ஊர்களின் நிலைமையும் அதுவேதான்” என்றான் ராகுல்.
திரிகோண மலை மட்டும் அதன் இயற்கை அழகால் அவ்வளவாக கெடவில்லை. நுவரெலியாவும் மலை வாசஸ்தலமாக இருந்ததால், அவ்வளவாக அழியவில்லை. ஒருவழியாக, அனுராதபுரம் முதல் ஏறக்குறைய நிறைய இடங்களைச் சுற்றிவிட்டு மீண்டும் யாழ்நகரத்திற்கே வந்த சேர்ந்தார்கள்.
ஒரு வார விடுமுறையில் ஐந்து நாட்கள் முடிந்திருந்தன. அடுத்த நாள் கிளம்பினால் தான் இந்தியா போய் சேர்ந்து ஒரு நாள் ஓய்வு எடுத்து விட்டு மாதவி பணியில் சேர முடியும். அன்று இரவு சில பேப்பர்களுடன் ராகுலைப் பார்க்க அவசரமாக வந்தாள் ஸ்வர்ணா.
ராகுல் அந்தப் பேப்பர்களை இவர்கள் எதிரிலேயே பிரித்தான். அதில் கல்லூரி ரெகார்ட்படி மதுமிதாவின் பெயர் சரயு என்று இருந்தது. கல்ச்சுரல் புரோகிரோமிற்கு வருவதற்காக மதுமிதா என்ற பெயரை பதிவு செய்திருக்கிறாள் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போதுதான் அவள் வலது தாடையில் உள்ள மச்சத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ஆபரேஷன் செய்திருக்கிறாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. லண்டனில் புரோக்கிராம் நடக்கும் போது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும், ஆகவே அடையாளத்தை மறைக்க அந்த பிளாஸ்டிக் சர்ஜரி போலும் என்று ராகுல் நினைத்துக் கொண்டான்.
எந்த சந்தேகமும் இல்லாமல் தன் தாயார் தான் மதுமிதா என்பது மாதவிக்கு புரிந்தது. ஆனால் மதுமிதாவை எப்படி அவள் தான் தன் தாய் என்று ஒத்துக் கொள்ளவைப்பது என ராகுலுக்கு புரியவில்லை.
“ராகுல், மயிலே மயிலே இறகு போடு என்றால் நடக்காது. அவர்களை எல்லா வழியிலும் ஒத்துக்கொள்ள முயற்சி செய்தாயிற்று, ஆனால் பலனில்லை. அதனால் இனிமேல் அதிரடி தான்“ என்றாள் மாதவி.
“அதிரடியா? பக்குவமாகக் கையாள வேண்டும் மாதவி, இல்லையென்றால் பலன் அட்வர்ஸாகப் போகும் பீ கேர்புல்” என்றான் ராகுல்.
“பலன் எப்படிப் போனாலும் சரி, இனி பொறுமையாக இருக்க முடியாது… அதிரடிதான்” என்றாள் மாதவி முடிவாக.
அன்று இரவுதான், வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினாள் மாதவி. ஆனால் ராகுலிற்கு சுத்தமாகத் தூக்கம் வரவில்லை. இவள் என்ன செய்யப் போகிறாளோ என்று உள்ளம் பதைபதைத்தது. அடுத்தநாள் காலையில் மிகவும் சீக்கிரமாகவே ஸ்வர்ணா வந்து இவர்களை அழைத்துச் சென்றாள்.
அங்கே கேன்டீனில், சமோசாவும் டீயும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தாள் மதுமிதா. எல்லோரும் அமைதியாக லேசான புன்முறுவலுடன் இருக்க, மாதவி மட்டும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்தாள்.
“மாதவி, எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க நீ மட்டும் ஏன் கோபமாக இருக்கிறாய்?” என்றாள் மதுமிதா.
“எல்லோருடைய அம்மாவும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என் அம்மாவைப்போல் யாரும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் ஒளிந்து விளையாடுவதில்லை. எல்லோருடைய அம்மாவும் அவர்களின் பிள்ளைகளின் திருமணத்தை முன்னின்று சந்தோஷமாக நடத்தி வைப்பார்கள். ஆனால் என் அம்மாவால் என் திருமணம் பாதிக்கப்படுகின்றது.
மாப்பிள்ளை வீட்டார்கள், ‘உன் அம்மா உங்கள் அப்பாவுடன் இல்லையாமே? உனக்கு சின்ன வயதிலேயே சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார்களாமே. நீயும் அப்படி ஓடி விட்டால் என்ன செய்வது? அதனால் நீ எங்கள் பிள்ளைக்கு வேண்டாம்’ என்று என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள். என் கோபத்திற்கு காரணம் போதுமா?” என்றாள் எரிச்சலோடு.
சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்த மதுமிதா, “நீ இத்தனை வருடம் உன் தந்தையுடனும் உறவினருடனும் தானே இருக்கின்றாய். உன் தாயின் பிரிவிற்கு அவர்கள் உண்மையான காரணம் சொல்லவில்லையா? உன் தந்தை நேர்மையானவராக இருந்தால் உன் தாயின் பிரிவிற்கு அவர் தானே உனக்கு உண்மையான காரணமும், உன் தாயின் குணத்தைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். நீயும் உன் தந்தையும் உட்கார்ந்து எதையும் டிஸ்கஸ் செய்ய மாட்டீர்களா?” என்றாள் ஏதோ ஒரு ஆதங்கத்துடனும் கோபத்துடனும்.
“என் தந்தைக்கு குற்றஉணர்ச்சி, பாதி உண்மையைத்தான் சொல்வார். மீதி பாதியை என் சித்தி மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்”
“சித்தி என்றால் யார், லதாவா?”.
அவளை வியப்புடன் பார்த்த மாதவி, “என் சித்தியின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டாள்.
திகைத்து ஒரு நிமிடம் முகம் வெளுத்த மதுமிதா, பின் சுதாரித்து… “எனக்கெப்படித் தெரியும்? நீதான் எப்போதோ சொன்னதாக ஞாபகம். இல்லையென்றால் உன் வீட்டு ஆட்கள் பெயர் எனக்கெப்படித் தெரியும்?” என்றாள் மழுப்பலாக.
மாதவிக்கு கோபம் பொங்கி விட்டது.
“இன்னும் எத்தனை காலத்திற்கு மறைத்து வாழப் போகிறீர்கள்? உண்மை எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கட்டாயம் வெளியில் வரும். அதை மறைக்க முடியாது” என்றாள் எரிச்சலாக.
அவளையே உறுத்துப் பார்த்த மதுமிதா, “நீ ஏன் என் மேல் தேவையில்லாமல் கோபப்படுகிறாய்? ஏதோ சின்னப்பெண் என்று பார்த்தால், என்னிடம் நீ ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறாய்” என்றாள் கோபமாக.
“நான் ஒன்றும் தேவையில்லாமல் கோபமும்படவில்லை, ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ளவுமில்லை. நீங்கள்தான் மறைத்து வாழ்கிறீர்கள், எங்களை மறந்தும் வாழ்கிறீர்கள். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நீங்கள்தான் என் தாய் சரயு என்பதை மறைத்து வாழப்போகிறீர்கள்?” என்றாள் மாதவி கோபமாக.
“நான் ஒன்றும் எதையும் மறைத்து வாழவில்லை. நீ தான் உளறுவதை லண்டனில் தொடங்கி, இங்கே இலங்கை வந்து இன்னும் தொடர்ச்சியாக அதே உளறலை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கிறாய். பைத்தியங்களோடு பேசினால் என் நேரம் தான் வீண்“ என்றவள் எழுந்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள்.
அதுவரையில் அமைதியாக இருந்த மாதவி, திடீரென்று எழுந்து நின்று, “ஏய் சரயு, யாரை ஏமாற்ற இந்த முகமூடி? நீ எங்களைப் பேச்சில்வென்று குதிரைபோல் எகிறிக் கொண்டு ஓடினால், நாங்கள் அப்படியே உன் பேச்சை நம்பி திரும்பிப் போய்விடுவோம் என்று நினைக்கிறாயா?” என்று கத்தினாள்.
“மாதவி, இது என்ன சிறு பிள்ளை போல் மரியாதை இல்லாமல்” என்றான் ராகுல் மிகவும் அடக்கமான குரலில்.
“ஆமாம், ஓரளவிற்குத்தான் பொறுத்துப் போகமுடியும். இந்தக் குதிரையை அடக்க குதிரைக்காரனால் தான் முடியும். குதிரைக்கு சொந்தக்காரன் அங்க அடையாளங்களைக் அடையாளம் காட்டிச் சொன்னால் அப்போதும் குதிரை சண்டித்தனம் செய்யமுடியாது அல்லவா?” என்றாள் எகத்தாளமாக.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
 
 

 
 
 
 
 


GIPHY App Key not set. Please check settings